Skip to content

சொல் பொருள்

(பெ) 1. கோயில், 2. வீடு, மாளிகை, 3. அரண்மனை, 4. நகரம், 5. சடங்கு செய்யும் இடம், 6. குடும்பம், மனைவி, மக்கள்,

சொல் பொருள் விளக்கம்

கோயில்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

temple, sacred shrine, house, mansion, palace, town, city, Dais for performing ceremonies;, family, wife and children

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

முருகு ஆற்றுப்படுத்த உரு கெழு வியல் நகர்
ஆடுகளம் சிலம்ப பாடி – திரு 244,245

முருகக்கடவுள் வரும்படி வழிப்படுத்தின அச்சம் பொருந்தின அகன்ற கோயிலின்கண்ணே –
வெறியாடுகளம் ஆரவாரிப்பப் பாடி

தொடர் நாய் யாத்த துன் அரும் கடி நகர் – பெரும் 125

சங்கிலிகளால் நாயைக் கட்டிவைத்துள்ள கிட்டுதற்கரிய காவலையும் உடைய வீட்டினையும்;

வென்று எழு கொடியொடு வேழம் சென்று புக
குன்று குயின்று அன்ன ஓங்கு நிலை வாயில்
திரு நிலைபெற்ற தீது தீர் சிறப்பின்
தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்து – நெடு 87-90

வெற்றிகொண்டு உயரும் கொடிகளோடு யானைகள் போய் நுழையும்படி (உயர்ந்த),
பாறைக்குன்றைச் செதுக்கியதைப் போன்ற கோபுரத்தை (மேலே)உடைய வாயில்களையும்;
செல்வம் நிலைபெற்ற குற்றமற்ற சிறப்பினையுடைய,
கொண்டுவந்த மணலைப் பாவி இறுக்கமாக்கப்பட்ட, அழகிய அரண்மனையின் — முற்றத்தில்

உலகம் ஒரு நிறையா தான் ஓர் நிறையா
புலவர் புல கோலால் தூக்க உலகு அனைத்தும்
தான் வாட வாடாத தன்மைத்தே தென்னவன்
நான்மாடக்கூடல் நகர் – பரி 29/1-4

இந்த உலகத்தின் அனைத்து நகர்களின் பெருமையையும் ஒரு பக்கமும்,. மதுரை நகரை ஒரு பக்கமும்
புலவர்கள் தம் அறிவாகிய துலாக்கோலில் இட்டு சீர்தூக்கும்போது, அந்த அனைத்து நகர்களின் பெருமையும்
தாம் வாடிப்போக, வாடிப்போகாத தன்மையையுடையது, பாண்டியனின்
நான்மாடக் கூடலாகிய மதுரை நகரம்.

திங்கள்
சகடம் மண்டிய துகள் தீர் கூட்டத்து
கடி நகர் புனைந்து கடவுள் பேணி
படு மண முழவொடு பரூஉ பணை இமிழ
வதுவை மண்ணிய மகளிர் – அகம் 36/4-8

திங்களை உரோகிணி கூடிய குற்றமற்ற நன்னாள் சேர்க்கையில்
மண மேடையை அழகுறுத்தி, கடவுளை வழிபட்டு
ஒலிக்கும் மண முழவுடன் பெரிய முரசம் ஒலிக்க
தலைவிக்கு மணநீராட்டிய மகளிர்

மன்னவன் புறந்தர வரு விருந்து ஓம்பி
தன் நகர் விழைய கூடின்
இன் உறல் வியன் மார்ப அது மனும் பொருளே – கலி 8/21-23

மன்னவன் பேணிப்பாதுகாக்க, வீட்டுக்கு வரும் விருந்தினரை உபசரித்து,
தன் மனைவி மக்கள் விரும்பும்படி, அவருடன் சேர்ந்திருப்பது,
இனிய நெருக்கமான உறவினுக்குரிய அகன்ற மார்பினையுடையவனே! அதுவே நிலைத்த பொருளும் ஆகும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *