சொல் பொருள்
(பெ) 1. தாமரை அல்லது கோங்கின் பூவிலுள்ள கொட்டை, 2. கலங்கல் நீரில் எழும் குமிழி, 3. இலுப்பை போன்ற சில மரங்களின் நடுப்பகுதியில் காணப்படும் கட்டி போன்ற வீக்கம், 4. நீர்க்குமிழி போன்ற உருவம் உடையது,
சொல் பொருள் விளக்கம்
தாமரை அல்லது கோங்கின் பூவிலுள்ள கொட்டை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Pericarp of the lotus or common caung flower, Bubble formed in turbid water, a lump formed on the trunk of trees like South Indian mahua (Bassia longifolia), a form similar to a bubble
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நீல் நிற உருவின் நெடியோன் கொப்பூழ் நான்முக ஒருவர் பயந்த பல் இதழ் தாமரை பொகுட்டின் காண்வர தோன்றி – பெரும் 402-404 நீல நிறத்தையுடைய வடிவினையுடைய திருமாலின் உந்தியாகிய நான்முகனாகிய ஒருவனைப் பெற்ற பல இதழ்களையுடைய தாமரையின் பொகுட்டைப் போன்று அழகுவிளங்கத் தோன்றி, வேனில் கோங்கின் பூ பொகுட்டு அன்ன – புறம் 321/4 அரி மலர் மீ போர்வை ஆரம் தாழ் மார்பின் திரை நுரை மென் பொகுட்டு தேம் மண சாந்தின் அரிவையது தானை என்கோ – பரி 11/26-28 அழகிய மலர்களான மேற்போர்வையினையும், முத்தாரம் தொங்கும் மார்பினைப் போன்று விளங்கும் அலைகளின் நுரைகளாகிய மென்மையாகிய குமிழ்களையும், இனிய மணத்தோடு சேர்ந்த சந்தனக் குழம்பினையும் உடைய வையைப் பெண்ணின் முன்தானை என்று கூறவா? பொரி கால் பொகுட்டு அரை இருப்பை குவி குலை கழன்ற ஆலி ஒப்பின் தூம்பு உடை திரள் வீ – அகம் 95/5-7 பொரிந்த அடியினையும் கொட்டைகளையுடைய அரையினையுமுடைய இருப்பையினது குவிந்த குலையினின்றும் கழன்ற ஆலங்கட்டி போலும் உள்துளையினையுடைய திரண்ட பூக்களை இருப்பை எனப்படும் இலுப்பை மரத்தின் நடுப்பகுதியில் (trunk) கொட்டைகள் போன்ற கட்டிகள் காணப்படும். அவையே இங்கு பொகுட்டு எனப்படுகின்றன. நீருள் பட்ட மாரி பேர் உறை மொக்குள் அன்ன பொகுட்டு விழி கண்ண கரும் பிடர் தலைய பெரும் செவி குறு முயல் – புறம் 333/1-3 நீர்க்குள் வீழ்ந்த மழையினையுடைய பெரிய தாரையினால் உண்டாகிய குமிழி போல கொட்டை போன்ற விழி பொருந்திய கண்ணையும் கரிய பிடரி பொருந்திய தலையையும் பெரிய செவியையுமுடைய குறுமுயல்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்