Skip to content

சொல் பொருள்

(வி) வருந்து, வருத்து

(பெ) வருத்தம், வருந்துதல், வருத்தும் தெய்வம், இல்லுறை தெய்வம்

(1) அணங் கென்பன, பேயும் பூதமும் பாம்பும் ஈறாகிய பதினெண் கணனும், நிரயப் பாலரும், பிறரும் அணங்குதல் தொழிலராகிய சவந்தின் பெண்டிர் முதலாயினாரும், உருமிசைத் தொடக்கத்தனவும் எனப்படும். (தொல். பொருள். 256. பேரா)

(2) அணங்கு – பிறரால் உண்டாகும் வருத்தம். பிணி – தன்பால் தோன்றும் நோய். (குறுந்தொகை. 136. உ.வே.சா.)

சொல் பொருள் விளக்கம்

வருந்து

கிராமப்புறங்களில் சில வீடுகளில் ‘சாமி’ இருப்பதாகச் சொல்வர். அது வீட்டின் ஏதாவது ஓரிடத்தில் இருப்பதாகவும் சொல்வர். இதுவே இல்லுறை தெய்வம் எனப்படும். இது பொதுவாக வருத்தும் தெய்வமாக இருக்கும். தீய கனா, காரணமின்றி நோய் வருதல், விபத்து நேரிடல் போன்று இந்தத் தெய்வம் வீட்டிலுள்ளோரை வருத்தும். இதற்கான வழிபாடுகளைச் செய்து இந்த வருத்தத்தினின்றும் தம்மைக் காத்துக்கொள்வர். எனவே ஒருவன் பித்துப்பிடித்ததைப் போலிருந்தால் அவனை அணங்கு தாக்கியதாகச் சொல்வர். ஒருவருக்குத் துன்பம் நேரிட்டால் அவர் அணங்கியதாகவும் சொல்வர்.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

suffer

afflict

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

ஆர் உயிர் அணங்கும் தெள் இசை – அகம் 214/14

அரிய உயிர்களை வருத்தும் தெள்ளிய ஓசை

அனையேன் ஆயின் அணங்குக என் என – அகம் 166/9

நான் அப்படிப்பட்டவனாயின் வருத்துவதாக என்னை என

என்ற அடிகள் அணங்கு என்பது வினையாக வருவதைக் குறிக்கும்.

அணங்கு என்பது இல்லுறை தெய்வம் என்பதைக் கீழ்க்கண்ட அடிகள் உணர்த்தும்.

அணங்கு வழங்கும் அகல் ஆங்கண் – மது 164

இல்லுறை தெய்வங்கள் உலாவும் அகன்ற உள்ளிடங்களில்

மணம் புணர்ந்து ஓங்கிய அணங்கு உடை நல் இல் – மது 578

புதிய திருமணத்தால் உயர்ந்து நின்ற அணங்கு உடைய நல்ல இல்லங்கள்

இந்த அணங்கு மகளிர்மேல் ஏறி அவரைத் துன்புறுத்தும்.

அணங்கு உறு மகளிர் ஆடுகளம் கடுப்ப – குறி 175

அணங்கு ஏறிய மகளிர் வெறியாடும் களத்தைப் போன்று

திறந்த வெளிகளில் இந்த அணங்குகள் இருக்கும்.

அலமரல் ஆயமொடு யாங்கணும் படாஅல்
மூப்பு உடை முது பதி தாக்கு அணங்கு உடைய – அகம் 7/4

சுற்றித்திரியும் தோழியருடன் எங்கேயும் போகவேண்டாம்
தொன்மைவாய்ந்த இந்த இடங்கள் தாக்கி வருத்தும் தெய்வங்களை உடையன

இந்த இல்லுறை தெய்வங்கள் மிக அழகுள்ளதாக இருக்கும்.

தெள்ளரிப் பொற்சிலம்பு ஒலிப்ப ஒள்ளழல்
தா அற விளங்கிய ஆய்பொன் அவிரிழை
அணங்கு வீழ்வு அன்ன பூந் தொடி மகளிர் – மது 444-446

தெள்ளிய உள்பரல்களையுடைய பொற் சிலம்புகள் ஒலிக்க, ஒள்ளிய நெருப்பில் இட்டு குற்றம் இன்றி விளங்கிய அழகிய பொன் அணிகலன்களையுடைய
தெய்வ மகளிர் இறங்கி வந்ததைப் போன்ற அழகிய வளையல் அணிந்த மகளிர் –

இந்த அணங்குகள் நள்ளிரவில் சுற்றித்திரியும்.

அணங்கு கால்கிளரும் மயங்கு இருள் நடுநாள் – நற் 319/6

அணங்கு வெளிக்கிளம்பும் மயங்கிய இருளையுடைய நள்ளிரவு

இருப்பினும் இந்த அணங்கு பேய்களினின்றும் வேறுபட்டது.

பேயும் அணங்கும் உருவு கொண்டு ஆய் கோல்
கூற்றக் கொல் தேர் கழுதொடு கொட்ப – மது 632,633

பேய்களும் அணங்குகளும் உருவங்களைக் கொண்டு, ஆராயும் செங்கோன்மையுள்ள
கூற்றம் கொல்லுகின்ற தேராகிய கழுதுடன் சுற்ற

வருத்துகின்ற தெய்வத்துக்கான அணங்கு என்ற சொல், பின்னர் எவ்வித வருத்தத்தையும்
குறிக்கும் சொல் ஆயிற்று.

அணங்கு என நினையும் என் அணங்கு உறு நெஞ்சே – ஐங் 363/4

வருத்தும் தெய்வம் என்று எண்ணும் என் வருந்துகின்ற என் மனம்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *