சொல் பொருள்
(வி) 1. கொண்டாடு, அனுசரி, 2. மற, 3. செலுத்து
சொல் பொருள் விளக்கம்
1. கொண்டாடு, அனுசரி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
celebrate, observe, forget, drive
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கிராமத்துப் பூசாரி, முருகன்போல் வேடமணிந்து, ஒரு திறந்த வெளியில் களம் அமைத்து, பலியுணவு செலுத்தி, தெய்வம் தன்மீது வந்து ஏற, ஆட்டமிட்டுக் குறிசொல்லுவது வெறி அயர்தல், முருகு அயர்தல் அல்லது அணங்கு அயர்தல் எனப்படும் வேலன் தைஇய வெறி அயர் களனும் – திரு 222 முருகு அயர்ந்து வந்த முது வாய் வேல – குறு 362/1 அணங்கு அயர் வியன் களம் பொலிய பைய – அகம் 382/6 ஊர்முழுக்கத் திருவிழா எடுத்து, பொங்கல் வைத்து, தெய்வ வழிபாடு செய்வர். அது சாறு அயர்தல் அல்லது விழவு அயர்தல் எனப்படும். நீறு அடங்கு தெருவின் அவன் சாறு அயர் மூதூர் – சிறு 201 விழவு அயர் துணங்கை தழூஉகம் செல்ல – நற் 50/3 மகளிர் தோழியரோடு நீரில் விளையாடுவர். இது விளையாட்டயர்தல் அல்லது ஓரை அயர்தல் எனப்படும் மடக்குறு மாக்களோடு ஓரை அயரும் – கலித். 82. ஒரு வீட்டுக்கு விருந்தினர் வருவதாக இருந்தால், அந்த இல்லத்தலைவியும், ஏனையோரும் பரபரப்புடன் இயங்கி விருந்துணவு சமைப்பதில் ஈடுபடுவர். இது விருந்து அயர்தல் எனப்படும். விருந்து அயர் விருப்பினள் திருந்து இழையோளே – நற் 361/9 ஒரு வீட்டிலுள்ளோர் முற்றத்தில் அமர்ந்து இரவில் நிலாவெளிச்சத்தில் சில மகிச்சியான பொழுதுபோக்குகளில் ஈடுபடுவர். அதுவும் அயர்தலே பல் கிளைக் குறவர் அல்கு அயர் முன்றில் – நற் 44/8 மாலைவேளியில் இளம்பெண்கள் நகருக்கு வேளியில் வந்து நெல்லும் மலரும் தூவி மேற்குத்திசைநோக்கிக் கைதொழுது இறைவனைத் தொழுவர். இது மாலை அயர்தல் எனப்படும். மடவரல் மகளிர் பிடகைப் பெய்த செவ்வி அரும்பின் பைங்கால் பித்திகத்து அவ்விதழ் அவிழ்பதம் கமழப் பொழுதறிந்து இரும்புசெய் விளக்கின் ஈர்ந்திரிக் கொளீஇ நெல்லும் மலரும் தூஉய்க் கைதொழுது மல்லல் ஆவணம் மாலை அயர – நெடு. 39-44 மேலும் குறவர்கள் ஆடுவது – குரவை அயர்தல் மணம் நிகழ்த்துவது – மணம் அயர்தல், வதுவை அயர்தல் பயணம் மேற்கொள்ளல் – செலவு அயர்தல் கார் என்று அயர்ந்த உள்ளமொடு தேர்வு இல பிடவும் கொன்றையும் கோடலும் மடவ ஆகலின் மலர்ந்தன பலவே – நற் 99/8-10 கார்காலம் என்று மறந்துபோன உள்ளத்துடனே அறியாதனவாய் பிடவும், கொன்றையும் காந்தளும் அறிவில்லாப்பொருளவாதலின் பலவாய் மலர்ந்துவிட்டன. அணி கிளர் நெடும் திண் தேர் அயர்மதி – கலி 30/19 அழகு பொலிந்த நெடிய திண்ணிய தேரைச் செலுத்துவாயாக
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்