சொல் பொருள்
(வி) 1. வழியுண்டாக்கு, 2. நெறிப்படுத்து, 3. போக்கு, 4. கொண்டு போ, நடத்திச்செல்லு, போக்கு, 5. வரவழை, வரும்படி வழிப்படுத்து
சொல் பொருள் விளக்கம்
1. வழியுண்டாக்கு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
make a path, channelize, get rid of, drive, perform rituals to bring the presence of God
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நாவல் அம் தண் பொழில் வட பொழில் ஆயிடை குருகொடு பெயர் பெற்ற மால் வரை உடைத்து மலை ஆற்றுப்படுத்த மூ_இரு கயந்தலை – பரி 5/8-10 இந்த நாவலந்தீவு எனப்பட்ட குளிர்ந்த சோலைகளைக் கொண்ட நிலப்பகுதியின் வடக்கிலிருக்கும் பொழிலில் உள்ள கிரவுஞ்சம் என்கிற பறவையின் பெயர்கொண்ட பெரிய மலையை உடைத்து அந்த மலையினில் வழிகளை அமைத்த ஆறு மெல்லிய தலைகளை உடையவனே! கன்று ஆற்றுப்படுத்த புன் தலை சிறாஅர் மன்ற வேங்கை மலர் பதம் நோக்கி ஏறாது இட்ட ஏம பூசல் – குறு 241/3-5 கன்றுகளை நெறிப்படுத்திச் செல்லும் புல்லிய தலையையுடைய சிறுவர்கள் ஊர்மன்றத்திலுள்ள வேங்கைமரத்தின் மலர்ந்த நிலை நோக்கி மரத்தில் ஏறாமல் எழுப்பிய இன்ப ஆரவாரம் ஐந்து இருள் அற நீக்கி நான்கினுள் துடைத்து தம் ஒன்று ஆற்றுப்படுத்த நின் ஆர்வலர் தொழுது ஏத்தி நின் புகழ் விரித்தனர் – – பரி 4/1-3 ஐந்து பொறிகளால் உண்டாகும் மயக்கமாகிய இருளை முற்றிலும் நீக்கி, நான்கு குணங்களால் உள்ளத்தைத் தூயதாக்கி தம்மைத் தியானமாகிய ஒரே நெறியில் செலுத்திய உன் அன்பர்கள் உன்னைத் தொழுது போற்றி உன்னுடைய புகழை விரித்துக் கூறினர், பகல் ஆற்றுப்படுத்த பழங்கண் மாலை – அகம் 71/9 ஞாயிற்றைப் போக்கிய துன்பத்தினைத்தரும் மாலைக் காலமானது சுரும்பு ஆர் கண்ணிக்கு சூழ் நூலாக அரும்பு அவிழ் நீலத்து ஆய் இதழ் நாண சுரும்பு ஆற்றுப்படுத்த மணி மருள் மாலை – கலி 85/14-16 வண்டுகள் மொய்க்கும் தலைமாலைக்குச் சுற்றியமைந்த நூலாக, அரும்புகள் மலர்ந்த நீல மலரின் அழகிய இதழ்கள் நாணும்படியான சுரும்புகளைப் போக்கின நீலமணியாற் செய்த கண்டோர் மருளும் மாலை இயங்கா வையத்து வள்ளியோர் நசைஇ துனி கூர் எவ்வமொடு துயர் ஆற்றுப்படுப்ப முனிவு இகந்திருந்த முது வாய் இரவல – சிறு 38-40 (புரவலர் இல்லாததால் பரிசிலர்)இயங்காத உலகத்தில் புரவலரை விரும்பி, (தன்னை)வெறுத்தல் மிக்க வருத்தத்தோடு கூடின வறுமை உன்னைக் கொண்டு போகையால், (வழி)வருத்தம் தீர்ந்திருந்த பேரறிவு வாய்க்கப்பெற்ற இரவலனே, துயர் உழந்து நெஞ்சு ஆற்றுப்படுத்த நிறை தபு புலம்பொடு நீடு நினைந்து தேற்றியும் ஓடு வளை திருத்தியும் – முல் 80-82 வருத்தமுற்று அவன்பால் தன் நெஞ்சைப் போக்கின (தன்)உறுதியைக் கெடுத்த தனிமையோடு, நீண்ட பிரிவினை நினைந்து தேற்றியும், கழலுகின்ற வளையை(க் கழலாமற்)செறித்தும் களம் நன்கு இழைத்து கண்ணி சூட்டி வள நகர் சிலம்ப பாடி பலிகொடுத்து உருவ செந்தினை குருதியொடு தூஉய் முருகு ஆற்றுப்படுத்த உரு கெழு நடுநாள் – அகம் 22/8-11 வெறியாடும் களம் நன்கு அமைத்து, வேலிற்குக் கண்ணி சூட்டி வளம் பொருந்திய கோயிலில் ஒலியுண்டாகப் பலிகொடுத்து அழகிய செந்தினையைக் குருதியுடன் கலந்து தூவி முருகனை வரவழைத்த அச்சம் பொருந்திய நடு இரவில் – நாட்டார் உரை கல்லென கவின் பெற்ற விழவு ஆற்றுப்படுத்த பின் புல்லென்ற களம் போல புலம்பு கொண்டு அமைவாளோ – கலி 5/10,11 ‘கல்’லென்ற பேரொலியுடன் அழகுபெற்ற திருநாளை வழிப்படுத்திவிட்ட பிற்றைநாள் ‘புல்’லென்று பொலிவிழந்து போன களம் போல தனிமைத் துயர்கொண்டு வாழ்வாளோ – நச்.உரை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்