சொல் பொருள்
(வி) இனிதாக முழங்கு
சொல் பொருள் விளக்கம்
இனிதாக முழங்கு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
hum, roar sweetly
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இமிழ் என்பதற்கு இனிமை என்ற ஒரு பொருள் உண்டு. எனவே இமிழ் என்னும் ஓசைக்குறிப்பு இனிமையான ஒலிக்குறிப்பைக் குறிக்கும். தோற்கருவிகளில் முரசு, முழவு ஆகியவை இமிழும் என்கின்றன இலக்கியங்கள். ஒரு முரசை ஒரு கோல் கொண்டு ஓங்கி அறைந்தால் ‘டம்’ என்ற பேரொலி எழும்பும். மாறாக, இரு கைகளிலும் கோல்களை வைத்துக்கொண்டு மாறி மாறி ‘டம, டம, டம, டம’-வென்று உரக்கவும் இல்லாமல், மிக மெதுவாகவும் இல்லாமல் ஓசை எழுப்புவதே இமிழ்தல். இமிழ் குரல் முரசம் மூன்று உடன் ஆளும் – புறம் 58/12 இமிழ் குரல் முரசின் எழுவரொடு முரணி – புறம் 99/9 பாடு இமிழ் முரசின் இயல் தேர் தந்தை – புறம் 394/8 என்ற அடிகள் முரசு இமிழ்வதைக் கூறும். மாலை நேரத்தில் ஒரு பெரிய ஆலமரத்தில் வந்து அடையும் பலவகைப் பறவைகள் ஒலி எழுப்புவதைக் கேட்டிருக்கிறீர்களா? அதுவும் இமிழ்தலே. பொன் இணர் மரீஇய புள் இமிழ் பொங்கர் – குறு 320/6 எக்கர் ஞாழல் புள் இமிழ் அகன் துறை – ஐங் 143/1 யாணர் பழு மரம் புள் இமிழ்ந்து அன்ன – புறம் 173/3 ஆகிய அடிகள் கூட்டமான பறவைகள் ஒலி எழுப்புதலை இமிழ்தல் என்று குறிப்பிடுவதைக் காணலாம். அருவியின் பெருவெள்ளம் உயரத்திலிருந்து ‘சல்’- என்ற இரைச்சலுடன் விழுவதைக் கேட்டிருக்கிறிர்களா? அதுவும் இமிழ்தலே. இமிழ் இசை அருவியொடு இன் இயம் கறங்க – திரு 240 பாடு இமிழ் அருவி பாறை மருங்கின் – அகம் 352/3 எழிலி தோயும் இமிழ் இசை அருவி – புறம் 369/23 என்ற அடிகள் இதனை உணர்த்தும். அமைதியான நள்ளிரவில் கடற்கரையில் அமர்ந்து அந்தக் கடல் ஓசை எழுப்பதைக் கேட்டிருக்கிறீர்களா? மிகப் பெரும்பாலான இடங்களில் சங்க இலக்கியங்கள் இமிழ் என்ற குரலுக்குக் கடலையே குறிப்பிடுகின்றன. பாடு இமிழ் பனி கடல் பருகி வலன் ஏர்பு – முல் 4 பாடு இமிழ் கடலின் எழுந்த சும்மையொடு – அகம் 334/4 தெண் நீர் பரப்பின் இமிழ் திரை பெரும் கடல் – புறம் 204/5 கடலின் அலைகள் எழுப்பும் அந்தக் காதுக்கினிய இரைச்சலைக் கேட்கும்போது அது இமிழ்கின்றது என்று உணர்வீர்! யாழின் ஒரு நரம்பை இழுத்துவிட்டால் எழுவது இமிர் இசை என்று கண்டோம். ஆனால் யாழ் என்பது நரம்புகளின் தொகுதி அல்லவா? அது எழுப்பும் ஓசையும் சில நேரங்களில் இமிழ்கிறது என்கின்றன பரிபாடலும் கலித்தொகையும். கவர் தொடை நல் யாழ் இமிழ காவில் – பரி 22/38 யாழ் கொண்ட இமிழ் இசை இயல் மாலை அலைத்தரூஉம் – கலி 29/17 என்ற அடிகளில் யாழ் இமிழ்வதைக் காண்கிறோம். இனிய ஓசை எழுப்பும் இசைக்கருவிகளை இன்னியம் என்பர். இவை எழுப்பும் ஒலிகளும் இமிழ்தலே. கயம் குடைந்து அன்ன இயம் தொட்டு இமிழ் இசை – மது 363 மத்து உரறிய மனை இன் இயம் இமிழா – பதி 26/3 என்ற அடிகள் மத்தளம் போன்ற இன்னியங்கள் இமிழ்கின்றன என உரைக்கின்றன. கீழ்க்கண்ட பலவித ஓசைகளை உற்றுக்கேளுங்கள். கம்புள் சேவல் இன் துயில் இரிய, வள்ளை நீக்கி வய மீன் முகந்து கொள்ளை சாற்றிய கொடு முடி வலைஞர் வேழ பழனத்து நூழிலாட்டு கரும்பின் எந்திரம் கட்பின் ஓதை அள்ளல் தங்கிய பகடு உறு விழுமம் கள் ஆர் களமர் பெயர்க்கும் ஆர்ப்பே ஒலிந்த பகன்றை விளைந்த கழனி வன் கை வினைஞர் அரி பறை இன் குரல் தளி மழை பொழியும் தண் பரங்குன்றில் கலி கொள் சும்மை ஒலி கொள் ஆயம் ததைந்த கோதை தாரொடு பொலிய புணர்ந்து உடன் ஆடும் இசையே அனைத்தும் அகல் இரு வானத்து இமிழ்ந்து இனிது இசைப்ப – மது. 254 – 267 கம்புட்கோழி (தன்)இனிய உறக்கம் கெட்டோட, வள்ளைக்கொடிகளை ஒதுக்கிவிட்டு வலிமையுடைய மீன்களை முகந்துகொண்டு, (தாம்)கொண்டவற்றைக் கூவிவிற்கும் கொடிய முடிச்சுக்களையுடைய வலைகளையுடையோர், கொறுக்கைச்சிப் புல்லையுடைய வயல்மீன்களைக் கொன்றுகுவிக்கும் ஓசையும், கரும்பு ஆட்டும் ஆலைகளின் ஓசையும், களை பறிக்கும் ஓசையும், சேற்றில் மாட்டிக்கொண்ட எருதுகள் படும் வருத்தத்தை கள்ளை உண்ணும் களமர் பெயர்க்கும் ஆரவாரமும், தழைத்த பகன்றையின் (நெல்)முற்றிய வயல்களில் வலிய கைகளைக் கொண்ட நெல்லறுப்போரின் அரிபறை ஓசையும், இனிய ஓசையுடைய துளிகளையுடைய முகில்கள் பெய்யும் குளிர்ந்த திருப்பரங்குன்றத்தில் விழாக்கொண்டாடும் ஆரவாரமும், ஆரவாரத்தையுடைய மகளிர் திரள் (தம்மிடத்து)தாழ வீழ்ந்த கோதை (தம் கணவர் மார்பின்)மாலையொடு அழகுபெறக் கூட அவர்களுடன் சேர்ந்து நீராடும் ஆரவாரமும் ஆகிய அனைத்தும் அகன்ற பெரிய வானத்தில் முழங்கி, இனிதாக இசைக்க, ஆக, மீன்விற்போர் கூவிவிற்கும் ஓசை, கரும்பு ஆட்டும் ஓசை, வண்டியோட்டுபவர்கள் காளைகளை ஓட்டும் ஓசை, நெல்லறுப்போருக்கான பறையோசை, நகரின் விழாக்கொண்டாடும் ஆரவார ஓசை, மகளிர் கணவன்மாரொடு சேர்ந்து நீராடும் ஓசை என ஆகிய அனைத்து ஓசைகளும் அகன்ற பெரிய வானத்தில் எழுந்து ஆங்கு வாழ்வாருக்கு இனிதாகச் சேர்ந்து ஒலித்தன என்கிறது மதுரைக்காஞ்சி. எனவே பலவித இனிமையான ஒலிகள் ஒன்றுசேர்ந்து கேட்போரை மகிழ்விக்கும் வகையில் ஒலிப்பதே இமிழ்தல் என இதனால் பெறப்படுகிறது.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்
இமிழ் என்ற சொல்லிற்கு தாங்கள் அளித்த விளக்கம் சிறப்பு