Skip to content
கழனி

கழனி என்பதன் பொருள்வயல்வெளி, களம், மருதநிலம்.

1. சொல் பொருள்

(பெ) வயல்வெளி, களம், மருதநிலம்

2. சொல் பொருள் விளக்கம்

கழ என்றால் ஒழுகு, கீழ்நோக்கி செல் என்று பொருள். கழநீர் என்பது நீர் ஒருவயலில் பாய்ந்து நிரம்பி பின் கீழுள்ள வயலுக்கு செல்லும் வண்ணம் கழுத்துக்கள் ( வரப்பு மடைகள் ) உள்ள அமைப்பு. கழநீர் வயல் என்பது திரிந்து கழனி ஆயிற்று,

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

paddy field, farmland, agricultural tract, an area containing fields,

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

வள வயல்
அழல் நுதி அன்ன தோகை ஈன்ற
கழனி நெல் ஈன் கவை முதல் அலங்கல்
நிரம்பு அகன் செறுவில் வரம்பு அணையா துயல்வர – அகம் 13/17-20

என்ற அகநானூற்று அடிகளில் வயல், கழனி, செறு ஆகிய மூன்று சொற்களும் கையாளப்பட்டுள்ளன, இதற்கு

வளம் மிக்க வயலில்
தீயின் கொழுந்தினை ஒத்த தோடுகளை ஈன்ற
வயல் நெல்லின் பலவாகக் கிளைத்த முதலிலிருந்து தோன்றிய நெற்கதிர்
நிரம்பிய அகன்ற வயலினிடத்து வரப்புகளை அணையாகக் கொண்டு கிடந்து அசைய

என்பது வே.நாட்டார் உரை. இங்கே வயல், கழனி, செறு ஆகிய மூன்று சொற்களுக்கும் வயல் என்றே பொருள்
கொள்ளப்பட்டிருக்கிறது. இவற்றுக்குள்ள நுட்பமான வேறுபாடு ஆய்விற்குரியது.

பொதுவாக, கழனி என்பதும் வயல் என்பதும் ஒன்றாகவே கருதப்படுகின்றன. வயல் என்பது நான்கு வரப்புகளுக்கு உட்பட்ட விளைநிலம். இவ்வாறான பல வயல்களைக் கொண்ட ஒரு பரந்த வெளியே கழனி எனப்படும்.

வயல் அமர் கழனி வாயில் பொய்கை – புறம் 354/4

வயல்கள் பொருந்திய கழனியின் வாயிலாகிய பொய்கைக்கண்

என்பதன் மூலம் இது பெறப்படும்.

விளைவு அறா வியன் கழனி
கார் கரும்பின் கமழ் ஆலை – பட் 8,9

என்ற அடிகளில் கழனி என்பது ஒரு வயலைமட்டுமா குறிக்கும்?

பல் ஊர் சுற்றிய கழனி
எல்லாம் விளையும் நெல்லினும் பலவே – புறம் 387/35,36

என்பதற்கு
பல ஊர்களைச் சுற்றியுள்ள வயல்கள்
எல்லாவற்றிலும் விளையும் நெல்லினும் பலவாகிய
என்பது ஔவை.சு.து.உரை.
எனவே, கழனி என்பது பல வயல்களைக் கொண்ட ஒரு வெளி என்று இதனின்றும் பெறப்படும்.

கழனி காவலர் சுரி நந்து உடைக்கும் – நற் 280/7

வயல்வெளியைக் காப்பவர்கள் சுருக்கம் விழுந்த நத்தையை உடைக்கும்

ஒரு தனித்த வயலுக்குக் காவலர் இரார். காவலர்கள் ஒரு பரந்த வயல்வெளிக்குக் காவல் இருப்பர்.

நெல் விளை கழனி நேர் கண் செறுவின் – நற் 400/2,3

அரிவனர் இட்ட சூட்டு அயல் பெரிய

என்ற அடிகளால், செறு என்பது கழனி என்பதின் ஒரு பகுதி என்று பெறப்படும். அதாவது பல செறுக்களைக் கொண்டது கழனி. எனவே, கழனி என்பதை வயல்பரப்பு அல்லது வயல்வெளி என்று கொள்வதே பொருத்தமுடையது என்று தோன்றுகிறது.

செறு, வயல் ஆகியவை அந்தச் சொற்களுக்குரிய இடங்களில் விளக்கப்படும்.
அவற்றைப் பார்க்க . செறு, வயல்

நீங்கா யாணர் வாங்கு கதிர் கழனி/கடுப்புஉடை_பறவை சாதி அன்ன - பெரும் 228,229

களிறு மாய்க்கும் கதிர் கழனி/ஒளிறு இலஞ்சி அடை நிவந்த - மது 247,248

ஒலிந்த பகன்றை விளைந்த கழனி/வன் கை வினைஞர் அரி_பறை இன் குரல் - மது 261,262

விளைவு அறா வியன் கழனி/கார் கரும்பின் கமழ் ஆலை - பட் 8,9

மணல் மடுத்து உரறும் ஓசை கழனி/கரும் கால் வெண்_குருகு வெரூஉம் - நற் 4/10,11

கழனி நல் ஊர் மகிழ்நர்க்கு என் - நற் 70/8

கழனி நாரை உரைத்தலின் செந்நெல் - நற் 180/2

அரியல் அம் கழனி ஆர்க்காடு அன்ன - நற் 190/6

கழனி ஒழிந்த கொடு வாய் பேடைக்கு - நற் 263/6

கழனி காவலர் சுரி நந்து உடைக்கும் - நற் 280/7

அள்ளல் அம் கழனி உள்வாய் ஓடி - நற் 340/5

பழன பல் புள் இரிய கழனி/வாங்கு சினை மருத தூங்கு துணர் உதிரும் - நற் 350/2,3

நெல் விளை கழனி நேர் கண் செறுவின் - நற் 400/2

கழனி மாஅத்து விளைந்து உகு தீம் பழம் - குறு 8/1

கழனி அம் படப்பை காஞ்சி ஊர - குறு 127/3

உப்பு விளை கழனி சென்றனள் அதனால் - குறு 269/6

கழனி ஊரன் மார்பு - ஐங் 4/5

கரும்பின் அலமரும் கழனி ஊரன் - ஐங் 18/2

கழனி ஊரன் மார்பு பலர்க்கு - ஐங் 25/3

கழனி ஊரன் மார்பு உற மரீஇ - ஐங் 29/3

கழனி தாமரை மலரும் - ஐங் 53/3

கழனி ஊர நின் மொழிவல் என்றும் - ஐங் 60/2

கழனி மருதின் சென்னி சேக்கும் - ஐங் 70/2

கழனி ஊரன் மகள் இவள் - ஐங் 91/3

கழனி தாமரை மலரும் - ஐங் 94/4

கழனி ஊரன் மகள் இவள் - ஐங் 96/3

கழனி எருமை கதிரொடு மயக்கும் - ஐங் 99/2

விரி பூ கரும்பின் கழனி புல்லென - பதி 13/13

கழனி வாயில் பழன படப்பை - பதி 23/22

முடந்தை நெல்லின் கழை அமல் கழனி/பிழையா விளையுள் நாடு அகப்படுத்து - பதி 32/13,14

கழனி உழவர் தண்ணுமை இசைப்பின் - பதி 90/41

கழனி வந்து கால் கோத்து என - பரி 7/33

தகைபெறு கழனி அம் தண் துறை ஊர கேள் - கலி 79/6

கழனி நெல் ஈன் கவை முதல் அலங்கல் - அகம் 13/19

வாரற்க தில்ல தோழி கழனி/வெண்ணெல் அரிநர் பின்றை ததும்பும் - அகம் 40/12,13

நெடு நெல் அடைச்சிய கழனி ஏர் புகுத்து - அகம் 41/4

கழனி அம் படப்பை காஞ்சி ஊர - அகம் 96/8

கழனி ஆம்பல் முழு_நெறி பைம் தழை - அகம் 156/9

கழனி உழவர் குற்ற குவளையும் - அகம் 216/9

நெடும் கதிர் கழனி தண் சாய்க்கானத்து - அகம் 220/18

பழன பைம் சாய் கொழுதி கழனி/கரந்தை அம் செறுவின் வெண்_குருகு ஓப்பும் - அகம் 226/5,6

பனி படு சாய் புறம் பரிப்ப கழனி/கரும் கோட்டு மாஅத்து அலங்கு சினை புது பூ - அகம் 236/6,7

இரும் கதிர் அலமரும் கழனி கரும்பின் - அகம் 237/11

பீள் விரிந்து இறைஞ்சிய பிறங்கு கதிர் கழனி/நெல் ஒலி பாசவல் துழைஇ கல்லென - அகம் 243/6,7

தொல் புகழ் நிறைந்த பல் பூ கழனி/கரும்பு அமல் படப்பை பெரும் பெயர் கள்ளூர் - அகம் 256/14,15

கழனி உழவர் கலி சிறந்து எடுத்த - அகம் 266/17

கழனி கரும்பின் சாய் புறம் ஊர்ந்து - அகம் 306/6

இரும் கதிர் கழனி பெரும் கவின் அன்ன - அகம் 326/6

கழனி உழவரொடு மாறு எதிர்ந்து மயங்கி - அகம் 366/8

ஒலி கதிர் கழனி கழாஅர் முன்துறை - அகம் 376/4

கழனி உழவர் சூட்டொடு தொகுக்கும் - புறம் 13/11

புனல் அம் புதவின் மிழலையொடு கழனி/கயல் ஆர் நாரை போர்வில் சேக்கும் - புறம் 24/19,20

நெல் விளை கழனி படு புள் ஓப்புநர் - புறம் 29/13

இறங்கு கதிர் கழனி நின் இளையரும் கவர்க - புறம் 57/6

நீடு கதிர் கழனி சூடு தடுமாறும் - புறம் 61/7

என் ஆவது-கொல் தானே கழனி/ஆம்பல் வள்ளி தொடி கை மகளிர் - புறம் 63/11,12

இறங்கு கதிர் அலம்வரு கழனி/பெரும் புனல் படப்பை அவர் அகன் தலை நாடே - புறம் 98/19,20

நெய்தல் அம் கழனி நெல் அரி தொழுவர் - புறம் 209/2

நீர் திகழ் கழனி நாடு கெழு பெரு விறல் - புறம் 266/6

அலமரும் கழனி தண்ணடை ஒழிய - புறம் 285/15

பிணங்கு கதிர் கழனி நாப்பண் ஏமுற்று - புறம் 338/10

வயல் அமர் கழனி வாயில் பொய்கை - புறம் 354/4

நெல் விளை கழனி அம்பர் கிழவோன் - புறம் 385/9

பல் ஊர் சுற்றிய கழனி/எல்லாம் விளையும் நெல்லினும் பலவே - புறம் 387/35,36

ஒலி கதிர் கழனி வெண்குடை கிழவோன் - புறம் 394/2

கழி சுற்றிய விளை கழனி/அரி_பறையான் புள் ஓப்புந்து - புறம் 396/3,4

கழனி வினைஞர்க்கு எறிந்த பறை கேட்டு - திணை50:31/2

கரும் கோட்டு செம் கண் எருமை கழனி
இரும் கோட்டு மென் கரும்பு சாடி வரும் கோட்டால் - திணை150:137/1,2

அங்கண் கழனி பழனம் பாய்ந்து அங்கண் - திணை150:147/2

கழனி உழவர் கலி அஞ்சி ஓடி - கைந்:37/1

கயல் இனம் பாயும் கழனி நல் ஊர - கைந்:38/1

கழனி செந்நெல் கரும்பு சூழ் மருங்கின் - சிலப்.புகார் 10/112

நெல் உடை களனே புள் உடை கழனி
வாணிக பீடிகை நீள் நிழல் காஞ்சி - சிலப்.மது 22/76,77

தடம் புனல் கழனி தங்கால்-தன்னுடன் - சிலப்.மது 23/118

முத்து விளை கழனி முரி செம் பவளமொடு - மணி 8/4
கழனி
கழனி Photo by Nandhu Kumar on Unsplash

4. பயன்பாடு

கழனி வாழ… காடு காப்போம்!

காடு கழனி உண்டா

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *