சொல் பொருள்
1. (வி) 1. ஒரு குச்சியை மரப்பரப்பின் மீது சுழற்றித் தீ உண்டாக்கு, 2. தயிரிலிட்டு மத்தைச் சுழற்று, 3. மரம் முதலியன சுழலவிட்டுச் செதுக்கி உருவாக்கு, 4. மிகுதியாகு,
2. (பெ) 1. கடைசிப்பகுதி, 2. கைப்பிடி 3. தலைவாயில், 4. எல்லை,
சொல் பொருள் விளக்கம்
பார்க்க மான்று
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
produce fire by fire drill, churn with a churning rod, turn in a lathe; form, as moulds on a wheel, increase, end termination, handle, hilt, entrance, gate, boundary, limit
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கடை_கோல் சிறு தீ அடைய மாட்டி – அகம் 274/5 கடையும் கோலினின்று எழுந்த சிறு தீயை அது வளர்ந்திட விறகில் சேர்த்து நெய் கடை பாலின் பயன் யாதும் இன்று ஆகி – கலி 110/17 நெய்யைக் கடைந்து எடுத்துவிட்ட பாலைப் போலப் பயனொன்றும் இல்லையாகி பால் கடை நுரையின் பரூஉ மிதப்பு அன்ன – அகம் 224/6 பால் கடையுங்கால் எழும் வெண்ணெயின் பெரிய மிதப்பினை ஒத்த தீம் தயிர் கடைந்த திரள் கால் மத்தம் – அகம் 87/1 இனிய தயிரைக் கடைந்த திரண்ட தண்டினையுடைய மத்து. அறை வாய் குறும் துணி அயில் உளி பொருத கை புனை செப்பம் கடைந்த மார்பின் செய் பூ கண்ணி செவி முதல் திருத்தி நோன் பகட்டு உமணர் ஒழுகையொடு வந்த மகாஅர் அன்ன மந்தி – சிறு 52-56 வெட்டுண்ட வாயையுடைய குறிய மரக்கட்டையை கூர்மையான உளிகள் (உள்ளேசென்று)குடைந்த கைத்தொழில் திறத்தால் செம்மைசெய்து கடைந்த (மாலையணிந்த)மார்பினையுடையதும் (நெட்டி என்ற தாவரத்தின் தண்டால்)செய்த பூவின் மாலையை செவியடியில் (நெற்றிமாலையாகச்) சூட்டப்பட்டதும், வலிமையுள்ள எருதுகளையுடைய உப்பு வாணிகரின் வண்டி ஒழுங்கோடு வந்ததும், (அவர்களின்)பிள்ளைகளைப் போன்றதும் ஆன மந்தி காமம் கடையின் காதலர் படர்ந்து – குறு 340/1 காதல் மிக்கதாயின் காதலரை நினைத்துச் சென்று மா இதழ் ஏந்திய மலிந்து வீழ் அரி பனி செ விரல் கடை கண் சேர்த்தி சில தெறியா – நெடு 164,165 கறுத்த கண்ணிமைகள் சுமந்த, (அவ்விமைகள்)நிரம்பி வழியும் நிலையிலுள்ள முத்து(ப்போன்ற) நீரை, (தன்)சிவந்த விரலால் கண்ணின் கடைசியில் கொண்டு சேர்த்து (விரலில் மீந்த)சிலவற்றைச் சுண்டிவிட்டு, கொலை வில் புருவத்து கொழும் கடை மழை கண் – பொரு 26 கொலை செய்யும் வில் (போன்ற)புருவத்தினையும், அழகிய கடைசிப் பகுதியையுடைய குளிர்ச்சியுள்ள கண் மயிர்_குறை_கருவி மாண் கடை அன்ன பூ குழை ஊசல் பொறை சால் காதின் – பொரு 29,30 மயிரைக் குறைக்கின்ற கத்தரிகையின் சிறப்பாயமைந்த கடைப்பகுதியை ஒத்ததும், பொலிவினையுடைய மகரக்குழையின் அசைவினைப் பொறுத்தல் அமைந்ததும் ஆகிய காதினையும், 30 குப்பை வேளை உப்பு இலி வெந்ததை மடவோர் காட்சி நாணி கடை அடைத்து இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன் மிசையும் – சிறு 137-139 குப்பை(யில் முளைத்த) கீரை உப்பில்லாமல் வெந்ததை, புறங்கூறுவோர் காணுதற்கு நாணி, தலை வாயிலை அடைத்து, கரிய பெரிய சுற்றத்துடன் ஒன்றாக இருந்து தின்னும் அடையா வாயில் அவன் அரும் கடை குறுகி – சிறு 206 மூடப்படாத வாயிலையுடைய அவனுடைய (ஏனையோர் புகுதற்கு)அரிய தலைவாயிலை அணுகி படை தொலைபு அறியா மைந்து மலி பெரும் புகழ் கடை கால்யாத்த பல் குடி கெழீஇ – பெரும் 398,399 (பகைவரின்)படையின்கண் தோல்வியடையாத வலிமை மிகுகின்ற பெரிய புகழின் எல்லையை மறைத்த, பலவாகிய மறவர் குடியிருப்புகளைச் சேர்ந்து பணிலம் கலி அவிந்து அடங்க காழ் சாய்த்து நொடை நவில் நெடும் கடை அடைத்து – மது 621,622 சங்குகள் ஆரவாரம் ஒழிந்து அடங்கிக் கிடக்க, சட்டக்காலை வாங்கிப் பண்டங்களுக்கு விலைகூறும் நெடிய கடையை அடைத்து, பல் வேறு பண்ணிய கடை மெழுக்கு_உறுப்ப – மது 661 பலவாய் வேறுபட்ட பண்டங்களையுடைய கடைகள் மெழுகுதல் செய்யப்பட,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்