சொல் பொருள்
1. (வி) 1. துண்டி, துண்டித்து நீக்கு, 2. பிடுங்கு, 3. கூசவை,
2. (பெ) 1. மீன் பிடிக்கும் கூடை, 2. தலையிலிருந்து முதுகுப்பக்கம் (மழைக்கு) மறைத்துக்கொள்ளும் பனையோலையால்
ஆன மறைப்பு
3. பறி – பொன், மீன் பறி போடல்
சொல் பொருள் விளக்கம்
பொற்கொல்லர்கள் பொன்னைப் பறி என்பர் என்பது இலக்கண உரைகளில் வரும் செய்தி. தொழில் வழி வழக்கு அது. திருடர் பறிப்பதற்குத் தங்கம் இடமாக இருத்தலின் அப்பெயர் பெற்றதாகலாம். மகளிர் மனத்தைப் பறிப்பது என்பது உண்மையாயினும் உயிரே பறிபோதற்கும் இடமாம். திருட்டுக்குக் காரணமாக இருப்பதே பெரிதும் பொருந்தியதாம். மீன் பிடிப்பதற்காக பறி போடுவது உண்டு. நீரோட்டத்திற்கு எதிரோட்டம் ஓடுவது. ஆதலின் அவ்வாறு மேலேறும் மீன் துள்ளி விழ அமைக்கப்படுவதும் பறியாம். மீன் பறி போடல் என்பது வழக்கு. மீனின் உயிரைப் பறிக்க இடமாவது மீன்பறி தானே!
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
pluck (as flowers), pull out, be dazzled (as eyes bythe brilliance of light), basket like contrivance for catching fish, a covering made of palm leaf to cover head and the back during rain
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கோவலர் வீ ததை முல்லை பூ பறிக்குந்து – புறம் 339/2,3 கோவலர்கள் பூக்கள் நெருங்கிய முல்லையினுடைய பூவைப் பறிப்பர் ஏனல் காவலர் மா வீழ்த்து பறித்த பகழி அன்ன சே அரி மழை கண் – நற் 13/3,4 தினைப் புனக் காவலர் காட்டுப்பன்றியை வீழ்த்திவிட்டுப் பிடுங்கிய அம்பினைப் போன்ற சிவந்த வரிகளையுடைய குளிர்ச்சியான கண்களையும் வெண் பரல் இமைக்கும் கண் பறி கவலை – அகம் 337/16 வெள்ளிய பரல்கற்கள் மின்னும் கண்களைக் கூசவைக்கும் கவர்த்த நெறியின்கண் குறி இறை குரம்பை பறி உடை முன்றில் – பெரும் 265 குறுகிய இறப்பையுடைய குடிலின், (மீன்பிடிக்கும்)பறியினையுடைய முற்றத்தில் வான் இகுபு சொரிந்த வயங்கு பெயல் கடை நாள் பாணி கொண்ட பல் கால் மெல் உறி ஞெலி_கோல் கல பை அதளொடு சுருக்கி பறி புறத்து இட்ட பால் நொடை இடையன் – நற் 142/1-4 வானமே இறங்கியதைப் போன்று பொழிந்த மின்னுகின்ற மழையின் கடைசி நாளில் கையில் கொண்ட பல கால்களைக் கொண்ட மென்மையான உறியுடன், தீக்கடைகோல் வைக்கும் பையினைத் தோலுடன் சுருட்டி, பனையோலைப் பாயை முதுகுப்பக்கம் போட்டிருக்கும் பால் விற்கும் இடையனை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்