Skip to content

சொல் பொருள்

(வி) 1. விலகு, நீங்கு, போ, 2. இடம் மாறு,  3. மீள், 4. மாறு, 5. பின்வாங்கு, 6. இருக்குமிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செல், 7. பிரி, 8. அசைபோடு, 9. அகற்று, நீக்கு, போக்கு, 10. எடுத்துச்செல், கொண்டுசெல், 11, செலுத்து, 12, பின்வாங்கச்செய், 13. எழுப்பு, 14. மீள், 15, ஓட்டு, ஓடச்செய், 16. செல்லவிடு, 17. அளி, கொடு, 18, பாய்ச்சு 19. வெளிக்கொணர், துப்பு, கக்கு, 20. இடம் மாறச்செய், 21. கூறு, மொழி, 22. துரத்து, அப்புறப்படுத்து, 23. தன்னுள் அடக்கு, உள்வாங்க்கொள், ஒடுக்கு, 24. பறி, வலிந்து கொள், 25. மாற்று 26. போக்கு, நீக்கு, 27. உருட்டிவிடு, 28. இடம் மாற்று, 29. திருப்பிக்கொடு,

2. (பெ) 1. ஒருவரை அல்லது ஒன்றை அடையாளப்படுத்த இடப்படுவது, 2. புகழ், 3. சிறப்பு, 4. பொருள், 5. சூள், வஞ்சினம்

சொல் பொருள் விளக்கம்

(வி) 1. விலகு, நீங்கு, போ, 

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

leave, depart, move, shift one’s place, return, go back, change, vary, retreat, withdraw, migrate, be separated, chew the cud, remove, displace, dislodge, unseat, take away, lead, drive, make retreat, raise, redeem, drive away, let go, give away, make to flow, eject outside, spit, make one shift residence, say, utter, drive away, gather into oneself, absorb, uproot, pull off, take with force, change, cause to go, remove, eliminate, toss, roll, shift one’s place, return, name, reputation, fame, pre-eminence, superiority, property, substance, vow

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

ஏனல் அம் சிறுதினை காக்கும் சேணோன்
ஞெகிழியின் பெயர்ந்த நெடு நல் யானை – குறு 357/5,6

ஏனல் என்ற அழகிய சிறுதினையின் பயிரைக் காக்கும் பரண்மீதிருப்பவன்
தீக்கடைகோலில் எழுப்பிய தீயினால் விலகிச்சென்ற நெடிய நல்ல யானை

மீன் ஆரம் பூத்த வியன் கங்கை நந்திய
வானம் பெயர்ந்த மருங்கு ஒத்தல் எஞ்ஞான்றும் – பரி 16/36,37

விண்மீன்கள் முத்தாரமாய்ப் பூத்துக்கிடக்கும் அகன்ற ஆகாய கங்கை பெருக்கெடுத்தோடும்
வானம் பெயர்ந்து இங்கே பக்கத்தில் வந்தது போன்றிருப்பது எந்நாளுமே

நுங்கை ஆகுவென் நினக்கு என தன் கை
தொடு மணி மெல் விரல் தெண்ணென தைவர
நுதலும் கூந்தலும் நீவி
பகல் வந்து பெயர்ந்த வாள்_நுதல் கண்டே – அகம் 386/12-15

உனக்குத் தங்கை ஆவேன் என்று கூறி, தன் கையின்
மோதிரம் அணிந்த மெல்லிய விரலால் தண்ணென்று பொருந்த
நெற்றியினையும் கூந்தலையும் தடவி
பகற்போதில் வந்து மீண்ட ஒள்ளிய நெற்றியினையுடைய பரத்தையைக் கண்டு

அணங்கு உடை முந்நீர் பரந்த செறுவின்
உணங்கு திறம் பெயர்ந்த வெண் கல் அமிழ்தம் – அகம் 207/1,2

தெய்வத்தையுடைய கடலின் நீர் பரவிய உப்பு விளையும் வயலில்
நீர் காய்ந்த தன்மையால் மாறிப்போன வெள்ளிய உப்பாகிய அமிழ்தினை

கடல் பெயர்ந்து அனைய ஆகி
புலர் பதம் கொண்டன ஏனல் குரலே – நற் 259/9,10

கடல் பின்வாங்கிக் காய்ந்தநிலம் ஆகியது போல ஆகி
காய்ந்து புலரும் பருவத்தை எய்தின தினையின் கதிர்கள்.

பல் களிற்று இன நிரை புலம் பெயர்ந்து இயல்வர – பதி 67/7

பலவான களிறுகளின் கூட்டம் வரிசை வரிசையாக தமக்குரிய இடத்தைவிட்டுப் பெயர்ந்து நடக்க

பிறந்த தமரின் பெயர்ந்து ஒரு பேதை
பிறங்கல் இடையிடை புக்கு பிறழ்ந்து யான்
வந்த நெறியும் மறந்தேன் சிறந்தவர்
ஏஎ ஓஒ என விளி ஏற்பிக்க – பரி 19/58-61

தான் பிறந்த சுற்றத்தாரினின்றும் பிரிந்து ஓர் அறியா இளம்பெண்
செறிவான பாறைக்கற்களுக்கு இடையிடையே புகுந்து, வழிதவறி, நான்
வந்த வழியை மறந்துவிட்டேன் என்று தன் பெற்றோரை,
“ஏஎ ஓஒ” என்று தன் அவர் கேட்கும்படி செய்ய,

கழுநீர் மேய்ந்த கய வாய் எருமை
பைம் கறி நிவந்த பலவின் நீழல்
மஞ்சள் மெல் இலை மயிர் புறம் தைவர
விளையா இளம் கள் நாற மெல்குபு பெயரா
குளவி பள்ளி பாயல்கொள்ளும் – சிறு 42-46

செங்கழுநீர்ப்பூவைத் தின்ற பெரிய வாயையுடைய எருமை
பசிய மிளகுக் கொடி படர்ந்த பலாமரத்தின் நிழலில்,
மஞ்சளின் மெல்லிய இலை தனது மயிரையுடைய முதுகினைத் தடவிநிற்ப,
முற்றாத இளைய தேன் மணக்கும்படி, மென்று அசைபோட்டு
காட்டு மல்லிகையாகிய பள்ளியில் துயில்கொள்ளும்

அள்ளல் தங்கிய பகடு உறு விழுமம்
கள் ஆர் களமர் பெயர்க்கும் ஆர்ப்பே – மது 259,260

சேற்றில் மாட்டிக்கொண்ட எருதுகள் படும் வருத்தத்தை
கள்ளை உண்ணும் களமர் நீக்கும் ஆரவாரமும்,

அமர் வரின் அஞ்சேன் பெயர்க்குவென்
நுமர் வரின் மறைகுவென் மாஅயோளே – நற் 362/9,10

யாரும் போரிடுவதற்கு வருவாராயின் அஞ்சாமல் அவரை விரட்டுவேன்;
உன் வீட்டார் யாரும் வந்தால் மறைந்துகொள்வேன், மாமை நிறத்தவளே!

கோள் நாய் கொண்ட கொள்ளை
கானவர் பெயர்க்கும் சிறுகுடியானே – நற் 82/10,11

வேட்டை நாய்கள் கொன்ற கொள்ளைப்பொருளை
கானவர் எடுத்துக்கொண்டு செல்லும் சிறுகுடியில்

தண் அடை தழீஇய கொடி நுடங்கு ஆர் எயில்
அரும் திறை கொடுப்பவும் கொள்ளான் சினம் சிறந்து
வினை வயின் பெயர்க்கும் தானை
புனை தார் வேந்தன் பாசறையேமே – அகம் 84/14-17

மருதநிலம் சூழ்ந்த கொடிகள் அசையும் இந்த அரிய எயிலை
பகைவர் வணங்கி அரிய திறையாகக் கொடுப்பவும் ஏற்றுக்கொள்ளானாகி, சினம் மிக்கு
மேஎன்மேலும்போரின்கண் செலுத்தும் சேனையினையுடைய
மாலையை அணிந்த அரசனது பாசறையிடத்தே உள்ளோம்

இரு பெரு வேந்தர் மாறுகொள் வியன் களத்து
ஒரு படை கொண்டு வரு படை பெயர்க்கும்
செல்வம் உடையோர்க்கு நின்றன்று விறல் என – அகம் 174/1-3

பேரரசர் இருவர் மாறுபாடு கொண்டு பொரும் பெரிய போர்க்களத்தே
தமது ஒப்பற்ற படைக்கலத்தைக் கொண்டு எதிர்வரும் படைகளைப் பிறக்கிடச் செய்யும்
வெற்றியாகிய செல்வம் உடையோர்க்கு இப்பெருமை நிலைபெற்றது என்று கூறி

எருவை சேவல் இரும் சிறை பெயர்க்கும்
வெரு வரு கானம் நம்மொடு
வருவல் என்றோள் மகிழ் மட நோக்கே – அகம் 297/17-19

ஆண்பருந்து தனது பெரிய சிறகினை எழுப்பிப்பறக்கும்
அச்சம்தரும் காட்டிற்கு நம்முடன்
வருவேன் என்று கூறிய நம் தலைவியின் மகிழ்ச்சியைத்தரும் மடப்பம் வாய்ந்த நோக்கம்

நிறை அரும் தானை வேந்தரை
திறை கொண்டு பெயர்க்கும் செம்மலும் உடைத்தே – புறம் 156/5,6

நிறுத்தற்கரிய படையையுடைய அரசரை
திறை கொண்டு அவரை மீட்கும் தலைமையும் உடைத்து

இரும் பனை அன்ன பெரும் கை யானை
கரந்தை அம் செறுவின் பெயர்க்கும்
பெரும் தகை மன்னர்க்கு வரைந்திருந்தனனே – புறம் 340/7-9

கரிய பனைமரத்தைப் போன்ற பெரிய கையையுடைய யானைகளை
கரந்தைப்பூடு வளர்ந்துள்ள வயல்களில் தோற்றோடுமாறு செய்கின்ற
பெரிய தகுதியையுடைய மன்னர்களுக்குத் தன் மகளை மணம்செய்துகொடுக்க வரைந்துள்ளான்

அரைசு தலைவரினும் அடங்கல் ஆனா
நிரை காழ் எஃகம் நீரின் மூழ்க
புரையோர் சேர்ந்து என தந்தையும் பெயர்க்கும் – புறம் 354/1-3

முடிவேந்தர் நேர்நின்று பொர வரினும் அடங்குதல் அமையாத
நிரைத்த காம்பு அணிந்த வேல்படையை நீர்ப்படை செய்யும்பொருட்டு
சான்றோர்களாகிய உயர்ந்த வீரர்கள் வந்து கூடினராக தந்தையாகிய தலைவன் நீர்நிலைக்குச் செல்ல விடுக்கின்றான்.

நுண்ணூல் தடக்கையின் நா மருப்பாக
வெல்லும் வாய்மொழிப் புல்லுடை விளைநிலம்
பெயர்க்கும் பண்ணன் கேட்டிரோ – புறம் 388/8-10

நுண்ணிய நூல்களைத் துதிக்கையாகவும், நாவைக் கொம்பாகவும் உடைய யானைகளாகிய
வெல்லும் பாடல்களை இயற்றும் புலவர்களுக்கு, நெல் விளையும் நிலங்களை
அவன் பரிசாக அளிப்பதை நான் கூறக் கேட்பீராக…

போர் வேட்டு எழுந்த மள்ளர் கையதை
கூர் வாள் குவி முகம் சிதைய நூறி
மான் அடி மருங்கில் பெயர்த்த குருதி
வான மீனின் வயின் வயின் இமைப்ப – அகம் 144/14-17

போர் விரும்பி கிளர்ந்தெழும் வீரர்தம் கையிடத்ததாகிய
கூரிய வாளின் குவிந்த முனை சிதைந்திட மாற்றார் படையை வீசிக்கொன்று
குதிரைக் குளம்புகள் பதிந்த பள்ளங்களில் பாய்ச்சிய உதிரம்
வானின்கண் மீன் போல் இடங்கள்தோறும் மின்ன

குமிழ் உண் வெள்ளை பகு வாய் பெயர்த்த
வெண் காழ் தாய வண் கால் பந்தர் – புறம் 324/9,10

குமிழம் பழங்களை உண்ட வெள்ளாடுகள் தம்முடைய பிளந்த வாயினின்றும் வெளிப்படுத்தித்துப்பிய
வெண்மையான விதைகள் யாண்டும்படவிக் காணப்படும் வளவிய கால்களையுடைய பந்தலில்

முனை புலம் பெயர்த்த புல்லென் மன்றத்து – அகம் 157/11

போர் நிகழ்ச்சி குடிகளை இடத்தினின்றும் பெயரச்செய்தமையின் பொலிவற்றிருக்கும் மன்றிடத்தே

ஆடு வரி அலவன் ஓடு_வயின் ஆற்றாது
அசைஇ உள் ஒழிந்த வசை தீர் குறு_மகட்கு
உயவினென் சென்று யான் உள் நோய் உரைப்ப
மறுமொழி பெயர்த்தல் ஆற்றாள் நறு மலர் – நற் 106/3-6

அங்குமிங்கும் அலைந்துதிரியும் புள்ளிகளைக் கொண்ட நண்டுகள் ஓடுவனவற்றைப் பிடிக்க மாட்டாது
சோர்வுற்று அதன் மீது விருப்பம் நீங்கிய குற்றமற்ற சிறுமகளுக்காக
வருத்தமுற்றவனாய் அவளிடம் சென்று நான் எனது உள்ளத்துக் காமநோயைப் பற்றிக் கூற
அதற்கு மறுமொழி சொல்வதற்கும் முடியாதவளாய்

அவனை
நாண் அட பெயர்த்தல் நமக்கும் ஆங்கு ஒல்லாது – கலி 47/19,20

அவனை,
நாணம் நம்மை வருத்துவதால், துரத்திவிடுவது நமக்கும் இங்கு இயலாது,

தெருவின்-கண் காரணம் இன்றி கலங்குவார் கண்டு நீ
வாரணவாசி பதம் பெயர்த்தல் ஏதில – கலி 60/12,13

தெருவில் காரணமில்லாமல் கலங்குகிறவர்களைப் பார்த்து
மாற்றார் துயரத்தைத் தம் துயராகக்கொள்ளும் வாரணவாசிக்காரர்களின் குணத்தைப் பெறுதல் நமக்கு அயலானது,

பெயர்த்தனென் முயங்க யான் வியர்த்தனென் என்றனள் – குறு 84/1

முதுகோடு பெயர்த்தெடுத்துத் தழுவினேன், எனக்கு வியர்க்கிறது என்றாள்

நல் யாழ்
பண்ணு பெயர்த்து அன்ன காவும் பள்ளியும் – மலை 450,451

நல்ல யாழின்
பண்களை மாற்றிமாற்றி வாசிப்பதைப்போல, (பலவித இன்பம் தரும்)சோலைகளிலும், துயிலிடங்களிலும்

செம் கோல் வாளி கொடு வில் ஆடவர்
வம்ப மாக்கள் உயிர் திறம் பெயர்த்து என – நற் 164/6,7

செம்மையான கோல் வடிவிலான அம்புகளையும், வளைந்த வில்லையும் உடைய ஆடவர்
புதிதான வழிப்போக்கரின் உயிராற்றலைப் போக்கியதால்

கவறு பெயர்த்து அன்ன நில்லா வாழ்க்கை இட்டு
அகறல் ஓம்பு-மின் அறிவுடையீர் என – நற் 243/5,6

“சூதாடுகருவியை உருட்டிவிட்டாற்போன்ற நிலையில்லாத வாழ்க்கையை முன்னிட்டுப்
பிரிந்து செல்வதைத் தவிர்ப்பீர்! அறிவுள்ளவர்களே!” என்று
கைவினை மாக்கள் தம் செய்வினை முடி-மார்

சுரும்பு உண மலர்ந்த வாசம் கீழ்ப்பட
நீடிய வரம்பின் வாடிய விடினும்
கொடியோர் நிலம் பெயர்ந்து உறைவேம் என்னாது
பெயர்த்தும் கடிந்த செறுவில் பூக்கும்
நின் ஊர் நெய்தல் அனையேம் பெரும – குறு 309/1-6

களையெடுக்கும் மாந்தர் தாம் செய்யும் தொழிலை முடிப்பதற்காக
வண்டுகள் மொய்ப்பதினால் மலர்ந்த மலரின் மணம் நிலத்தில் படும்படி
நீண்ட வரப்பில் வாடும்படி போட்டுவைத்தாலும்
கொடியவரின் நிலத்தைவிட்டு வேறு நிலத்துக்குப்போய் வாழ்வோம் என்னாமல்
எடுத்துப்போட்டும் தம்மைக் களைந்த கழனியில் பூக்கும்
உனது ஊரின் நெய்தலைப் போன்றவள் நான், தலைவனே!

வாடா வஞ்சி பாடினேன் ஆக
அகம் மலி உவகையொடு அணுகல் வேண்டி
கொன்று சினம் தணியா புலவு நாறு மருப்பின்
வெம் சின வேழம் நல்கினன் அஞ்சி
யான் அது பெயர்த்தனென் ஆக தான் அது
சிறிது என உணர்ந்தமை நாணி பிறிதும் ஓர்
பெரும் களிறு நல்கியோனே – புறம் 394/9-15

வஞ்சித்துறைப் பாட்டஒன்றைப் பாடினேனாக
மனம் நிறைந்த உவகையினால் தன்பால் அன்புடன் நெருங்கி உறையவேண்டும் என விரும்பி
பகைவரைக் கொன்றும் சீற்றம் குன்றாத புலால் நாறும் கொம்புகளையுடைய
வெவ்விய சினத்தையுடைய யானை ஒன்றைத் தந்தான், அது கண்டு அச்சமுற்று
யான் அந்த யானையைத் திருப்பித்தந்தேனாக, அவன் தான் அது
என் வரிசைக்குச் சிறிது என உணர்ந்தமை எண்ணி நாணமுற்று, மேலும் வேறே ஒரு
பெரிய களிற்றை நல்கினான்

தன் பெயர் கிளக்கும்_காலை என் பெயர்
பேதை சோழன் என்னும் – புறம் 216/8,9

தனது பெயரைப் பிறர்க்கு அறிவிக்கும்போது
என்னுடைய பெயர் பேதைமையுடைய சோழன் என்று சொல்லும்

செல்லும் தேஎத்து பெயர் மருங்கு அறி-மார்
கல் எறிந்து எழுதிய நல் அரை மராஅத்த – மலை 394,395

போகும் இடத்தின் பெயரும் எல்லையும் அறியும்படி,
கல்லைக் கொத்தி எழுதிய, நல்ல அடிப்பகுதியையுடைய மரா மரத்தடிகளில்

பொருந்தி யான் தான் வேட்ட பொருள்_வயின் நினைந்த சொல்
திருந்திய யாக்கையுள் மருத்துவன் ஊட்டிய
மருந்து போல் மருந்து ஆகி மனன் உவப்ப
பெரும் பெயர் மீளி பெயர்ந்தனன் செலவே – கலி 17/18-21

பொருத்தமாக, நான் அவன் விரும்பிய செயல் ஆர்வத்தினால் விளையும் கேடுகளை நினைந்து கூறிய சொற்கள்,
சீர்படுத்தும் நிலையிலுள்ள உடம்பிற்கு மருத்துவன் ஊட்டிய
மருந்தினைப் போல் நல்ல மருந்தாக வேலைசெய்ய, உன் மனம் களிக்கும்படி,
பெரும் புகழ் கொண்ட நம் தலைவன் கைவிட்டுவிட்டான் தன் பயணத்தை

மிக்கு புகழ் எய்திய பெரும் பெயர் மதுரை – மது 699

மிகுத்துப் புகழைப் பெற்ற பெரிய சிறப்பையுடைய மதுரையின்கண்

மலையவும் நிலத்தவும் அருப்பம் வௌவி
பெற்ற பெரும் பெயர் பலர் கை இரீஇய – பதி 90/22,23

மலையிலும், நிலத்திலும் பகைவரின் அரண்களைக் கைப்பற்றி,
அங்குப் பெற்ற பெருமளவு பொருளைப் பலருக்கும் வழங்கியும்

பொருவேம் என பெயர் கொடுத்து – பட் 289

போரிடுவோம் எனச் சூள் உரைத்து

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *