சொல் பொருள்
(பெ) பெரிய யாழ், 21 நரம்புகளைக்கொண்டது,
சொல் பொருள் விளக்கம்
பெரிய யாழ், 21 நரம்புகளைக்கொண்டது,
குறைந்த எண்ணிக்கையில் நரம்புகளைக் கொண்ட யாழ் சிறிய யாழ் அல்லது சீறியாழ் எனப்படும்.
மலைபடுகடாம் ஒரு பேரியாழை நம் மனக்கண் முன் கொணர்ந்து நிறுத்துகிறது.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
A lute of 21 strings
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தொடி திரிவு அன்ன தொண்டு படு திவவின் கடிப்பகை அனைத்தும் கேள்வி போகா குரல் ஓர்த்து தொடுத்த சுகிர் புரி நரம்பின் அரலை தீர உரீஇ வரகின் குரல் வார்ந்து அன்ன நுண் துளை இரீஇ சிலம்பு அமை பத்தல் பசையொடு சேர்த்தி இலங்கு துளை செறிய ஆணி முடுக்கி புதுவது புனைந்த வெண்கை யாப்பு அமைத்து புதுவது போர்த்த பொன் போல் பச்சை வதுவை நாறும் வண்டு கமழ் ஐம்பால் மடந்தை மாண்ட நுடங்கு எழில் ஆகத்து அடங்கு மயிர் ஒழுகிய அம் வாய் கடுப்ப அகடு சேர்பு பொருந்தி அளவினில் திரியாது கவடு பட கவைஇய சென்று வாங்கு உந்தி நுணங்கு அரம் நுவறிய நுண் நீர் மாமை களங்கனி அன்ன கதழ்ந்து கிளர் உருவின் வணர்ந்து ஏந்து மருப்பின் வள் உயிர் பேரியாழ் – மலை 21-37 (கையில் சுற்றியுள்ள)தொடியின் திருக்கினைப்போன்ற ஒன்பது என்னும் எண் உண்டான வார்க்கட்டினையும், (பேய்க்குப் பகையாகிய)வெண்சிறுகடுகளவும்(=சிறிதளவும்) இசைச் சுருதியில் தவறு இல்லாது ஒலிநயத்தைக் கூர்ந்து கேட்டுக்கேட்டுக் கட்டிய வகிர்ந்து முறுக்கேற்றப்பட்ட நரம்பினில் கழலைகள் முற்றிலும் அகலுமாறு சிம்பெடுத்து, வரகின் கதிர்(மணிகள்) ஒவ்வொன்றாக உதிர்ந்ததைப்போல நுண்ணிய துளைகளை இட்டு, ஒலியை எதிரொலித்துப் பெரிதாக்கும் தன்மை அமைந்த (கூடு போன்ற)பத்தலினைப் பசையினால் சேர்த்து, மின்னுகின்ற துளைகள் முற்றிலும் அடையுமாறு ஆணிகளை இறுகப் பதித்து, புதுமையான உருவாக்கமாக தந்தத்தை யாப்பாக(பத்தரின் மேல் குறுக்குக்கட்டையாக) அமைத்து, புதியதாகப் போர்த்திய பொன்னின் நிறம் போன்ற (நிறமுடைய) தோல்போர்வையை உடையதாய்; மணமாலை (இன்னும்)மணக்கும்(புதுமணம் மாறாத), (மொய்க்கும்)வண்டுகளும் மணம்வீசும் கூந்தலினையுடைய இளம்பெண்ணின் அழகுநிறைந்த, மெல்லிதாக அசையும் அழகிய மார்பகத்தே சென்று முடிவுறும் மயிர் முறைமையோடு அமைந்திருக்கும் அழகிய அமைப்பு போன்று, (இரண்டு ஓரங்களையும் இணைத்து)நடுவினில் சேர்வதுபோல் சீராக அமைத்து, தனக்குரிய அளவினில் மாறாது, இரண்டாகப் பிரிவுபட உள்ளிருத்தப்பட்ட நீண்டு வளைந்த உந்தியெனும் வயிற்றுப்பகுதியையும்; நுட்பமான அரத்தால் அராவின நுண்ணிய தன்மையும், கரிய நிறத்தில் களாப்பழத்தை ஒத்த, சீறியெழுந்து நிற்கும் தோற்றத்தையும், வளைந்து உயர்ந்த கொம்பினையும் உடைய பெரிதாய் ஒலிக்கும் பேரியாழ் என்ற பெரிய யாழை தொடை படு பேரியாழ் பாலை பண்ணி – பதி 46/5 விரல் கவர் பேரியாழ் பாலை பண்ணி – பதி 57/8 இடன் உடை பேரியாழ் பாலை பண்ணி – பதி 66/2 என்ற பதிற்றுப்பத்து அடிகளால், பேரியாழில் பெரும்பாலும் பாலை என்ற பண் இசைக்கப்படும் எனத் தெரிகிறது
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்