Skip to content

சொல் பொருள்

1. (வி) 1. மிகு, பெருகு, 2. செழி, 3. மலர்ச்சியுறு, விளங்கு,  4. சிற

உழவர் சூடடித்துத் தூற்றிய தவசக் குவியலைப் பொலி என்பர்

சொல் பொருள் விளக்கம்

உழவர் சூடடித்துத் தூற்றிய தவசக் குவியலைப் பொலி என்பர். வாழ்வின் பொலிவுக்கு மூலமாக இருப்பது அது. அதனால் பெற்ற பெயர் அது. கழனியில் போட்ட வித்து களத்தில் மணிக்குவியலாகக் குவிந்தால் தான் களஞ்சியத்தில் சேர்ந்து காலந்தள்ள உதவும். ஆதலால் “பொலி பொலி” எனக் கூவி அள்ளுதல் பொலி எனப்பட்டது. அதில் இருந்து பொலிவு என்னும் சொல் ஆயது.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

abound, increase, flourish, prosper, bloom, shine, excel, be lofty, great, be celebrated

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

ஓங்கி தோன்றும் உமண் பொலி சிறுகுடி – நற் 374/2

உயர்ந்து தோன்றும் உமணர்கள் மிகுந்திருக்கும் சிறிய ஊரினரின்

நெல் பல பொலிக பொன் பெரிது சிறக்க – ஐங் 1/2

நெல் பலவாக விளைந்து பெருகுக; பொன்வளம் பெரிதும் சிறப்பதாக

புலவு வில் பொலி கூவை – மது 142

புலால் நாறும் வில்லினையும், செழித்து வளர்ந்த கூவைக்கிழங்கையும்

நத்தொடு நள்ளி நடை இறவு வய வாளை
வித்தி அலையில் விளைக பொலிக என்பார் – பரி 10/85,86

சங்கு, நண்டு, நடக்கின்ற இறால், வலிய வாளைமீன் ஆகியவற்றின் பொன்னாற்செய்த உருவங்களை அலைகளோடு வரும் நீரிலிட்டு, ‘கழனிகள் விளைக, வளம் செழிக்க’ என்பார் சிலர்;

வண்டு ஊது பொலி தார் திரு ஞெமர் அகலத்து – பதி 31/7

வண்டுகள் சுற்றிவரும் மலர்ச்சியுற்ற மாலையணிந்த, திருமகள் நிறைந்த மார்பினையும்,

புலவு புனிறு தீர்ந்து பொலிந்த சுற்றமொடு – மது 602

புலால் நாற்றமுள்ள ஈன்றணிமை தீர்ந்து மலர்ச்சியுற்ற சுற்றத்தாரோடு

நீள் நெடும் பந்தர் ஊண்முறை ஊட்டும்
இல் பொலி மகடூஉ போல – புறம் 331/8,9

நீண்ட நெடிய பந்தர்க் கீழே இருத்தி உணவை முறைமுறையாகத் தந்து உண்பிக்கும் இல வாழ்க்கையில் சிறந்த மகளைப் போல

ஈன்றேன் யானே பொலிக நும் பெயரே – நற் 198/12

அவளைப் பெற்றவள் நான்; சிறந்து விளங்குக உமது பெயர்.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

இது ஒரு வழக்குச் சொல்

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *