Skip to content

சொல் பொருள்

(வி) 1. அணி, தரி, உடுத்து, 2. மூடு, மறை, 

2. (பெ) 1. யுத்தம், சண்டை, 2. சிறுசண்டை,  3. பொருதல், இயைந்து பொருந்துதல் 4. குவியல்,  5. வைக்கோல் போர், 6. சங்ககாலத்துச் சோழநாட்டு ஊர், 

சொல் பொருள் விளக்கம்

அணி, தரி, உடுத்து, 

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

put on, wrap oneself in, envelope, cover, hide, fight, war, battle, quarrel, joining fast together, heap, accumulation, haystack, a city in chozha country during sangam period

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

துகில் முடித்து போர்த்த தூங்கல் ஓங்கு நடை – முல் 53

(தலைமயிரைத்)துணியால் கட்டிச் சட்டை அணிந்த, தூக்கக்கலக்கத்திலும் விரைப்பான நடையுடைய

கொல் ஏற்று பைம் தோல் சீவாது போர்த்த
மா கண் முரசம் ஓவு இல கறங்க – மது 732,733

கொல்லும் (தன்மையுள்ள முரட்டுக்)காளையின் பதப்படுத்திய தோலை (மயிர்)சீவாமல் மூடிய
பெரிய கண்ணையுடைய முரசம் விடாமல் ஒலிக்க,

போர் வல் யானை பொலம் பூண் எழினி – அகம் 36/16

யுத்தத்தில் வல்ல யானையை உடைய பொன் அணிகள் அணிந்த எழினி,

குப்பை கோழி தனி போர் போல – குறு 305/6

குப்பைக்கோழிகள் தாமாகச் சண்டைபோட்டுக்கொள்வது போல

நெய் பட கரிந்த திண் போர் கதவின் – மது 354

நெய் பலகாலும் இடுதலால் கருகின திண்ணிய வாய் பொருதலையுடைய கதவினையும்,

போர் வாய் கதவம் தாழொடு துறப்ப – நெடு 63

பொருதல் வாய்த்த (இரட்டைக்)கதவுகள் தாழிட்டுக் கிடக்க;

பொதி மூடை போர் ஏறி – பட் 137

பொதிந்த பொதிகளை அடுக்கிவைத்த குவியலின்மீது ஏறி,

போன நிலம் எல்லாம் போர் ஆர் வயல் புகுத – பரி 22/11

அந் நாட்டில் சென்ற நிலம் எங்கும் நெற்போர் நிரம்பிய வயல்களில் புகுந்தது;

போர் என்ற ஊர் சங்ககாலத்துச் சோழநாட்டில் இருந்த ஓர் ஊர்.
அது போர்வை, போஒர், திருப்போர்ப்புறம் என்னும் பெயர்களால் குறிப்பிடப்பட்டு வந்தது.
இப்போது அவ்வூர் குழித்தலைக்கும் கருவூருக்கும் இடையில் உள்ள பெட்டவாய்த்தலை என்னும் ஊர் ஆகும்.
இதனைப் போஒர் கிழவோன் பழையன் என்ற சங்க காலத்திய சோழநாட்டுச் சிற்றரசன் ஆண்டான்.
இவன் வில்லாண்மையில் சிறப்புற்று விளங்கினான்.
இவனது தலைநகருக்கு அருகிலிருந்த கட்டூர் என்னுமிடத்தில் நடந்த போரில் ஏழுபேர் சேர்ந்து தாக்கி
இவனைக் கொன்றனர்.

வெண் கோட்டு யானை போஒர் கிழவோன்
பழையன் வேல் வாய்த்து அன்ன நின்
பிழையா நன் மொழி தேறிய இவட்கே – நற் 10/7-9

வெண்மையான கொம்புகளையுடைய யானைகளைக் கொண்ட போர் என்ற ஊருக்குரியவனான
பழையன் என்பானை ஏவ, அவனது வேற்படை பொய்க்காமல் வெற்றிபெற்றதுபோல உன்னுடைய
பொய்க்காத நல்ல சொற்களை நம்பிய இவளை 

வென் வேல்
மாரி அம்பின் மழை தோல் பழையன்
காவிரி வைப்பின் போஒர் அன்ன – அகம் 186/14-16

வெற்றி பொருந்திய வேலையும்
மழைத்துளி போன்ற மிக்க அம்பினையும் மேகம் போலும் கரிய கேடகத்தினையும் உடைய பழையன் என்பானது
காவிரி நாட்டிலுள்ள போர் என்னும் ஊரினை ஒத்த

கழை அளந்து அறியா காவிரி படப்பை
புனல் மலி புதவின் போஒர் கிழவோன்
பழையன் ஓக்கிய வேல் போல் – அகம் 326/10-12

ஓடக்கோலால் ஆழம் அளந்தறியப்படாத காவிரியின் கரையினைச் சார்ந்த தோட்டங்களையும்
நீர் நிறைந்து ஓடும் மதகுகளையும் உடைய போர் என்னுமூருக்குத் தலைவனுமாகிய
பழையன் என்பான் பகைவர் மீது செலுத்திய வேல் போல

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *