Skip to content

சொல் பொருள்

(வி) 1. கலக்கப்படு, 2. மயங்கச்செய், குழம்பச்செய், 3. தடுமாற்றமடை, குழம்பு, 4. போரிடு, . கிறக்கு, பரவசப்படுத்து,

சொல் பொருள் விளக்கம்

கலக்கப்படு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

get mixed up, confuse, confound, get baffled, perplexed, fight, captivate, delight, enthral

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

தண் புன கருவிளை கண் போல் மா மலர்
ஆடு மயில் பீலியின் வாடையொடு துயல்வர
உறை மயக்கு_உற்ற ஊர் துஞ்சு யாமத்து – நற் 262/1-3

குளிர்ச்சியான கொல்லையில் வளர்ந்த கருவிளம்பூவின், கண் போல மலர்ந்த, பெரிய பூவானது
ஆடுகின்ற மயிலின் தோகை போல வாடைக்காற்றில் முன்னும்பின்னும் அசைய,
அத்துடன் சேர்ந்து தூறல்மழையும் கலக்கப்பட்ட, ஊரே துயில்கொள்ளும் நடுயாமத்தில்,

பூவொடு புரையும் கண்ணும் வேய் என
விறல் வனப்பு எய்திய தோளும் பிறை என
மதி மயக்கு_உறூஉம் நுதலும் – குறு 226/1-3

பூவினை ஒத்திருந்தன கண்கள்; மூங்கிலோ என
ஈடில்லா அழகை எய்தியிருந்தன தோள்கள்; இளம்பிறை என்னும்படி
அறிவினை மயங்கச்செய்தது நெற்றி;

வையை வரு புனல் ஆடல் இனிது-கொல்
செவ்வேள் கோ குன்றம் நுகர்தல் இனிது-கொல்
வை வேல் நுதி அன்ன கண்ணார் துணை ஆக
எவ்வாறு செய்வாம்-கொல் யாம் என நாளும்
வழி மயக்கு_உற்று மருடல் நெடியான்
நெடு மாட கூடற்கு இயல்பு – பரி 35/1-5

வையையில் புதிதாக வருகின்ற நீரில் புனலாடுவது இனியதா?
முருகப்பிரான் இருக்கும் தலைமைப் பண்புள்ள திருப்பரங்குன்றத்தினை வணங்கி இன்புறுதல் இனியதா?
கூர்மையான வேலின் நுனி போன்ற கண்களையுடைய பெண்கள் துணையாக வர
இவ்விரண்டினில் எதனைச் செய்வோம் நாம் என்று எந்நாளும்
வழியில் தடுமாற்றமடைந்து மருளுதல், பாண்டியனின்
நெடிய மாடங்களையுடைய மதுரை மக்களுக்கு இயல்பு.

பெரும் களிற்று இனத்தொடு வீங்கு எருத்து எறுழ் முன்பின்
இரும் புலி மயக்கு_உற்ற இகல் மலை நன் நாட – கலி 48/6,7

பெரிய யானைக் கூட்டத்தோடு, பருத்த கழுத்தும் பெரிய உடல்வன்மையும் கொண்ட
பெரிய புலி போரிடுகின்ற மலையினையுடைய நல்ல நாடனே!

குறுகுறு நடந்து சிறு கை நீட்டி
இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
நெய் உடை அடிசில் மெய்பட விதிர்த்தும்
மயக்கு_உறு மக்களை இல்லோர்க்கு
பய குறை இல்லை தாம் வாழும் நாளே – புறம் 188/3-7

குறுகக் குறுக நடந்து சென்று, சிறிய கையை நீட்டி
கலத்தின்கண் கிடந்ததைத் தரையிலே இட்டும், கூடப்பிசைந்து தோண்டியும், வாயாற்கவ்வியும், கையால் துழந்தும்
நெய்யையுடைய சோற்றை உடம்பின்கண் படச் சிதறியும்
இங்ஙனம் அறிவை இன்பத்தான் மயக்கும் மக்களை இல்லாதவர்க்கு
பயனாக முடிக்கப்படும் பொருளில்லை தாம் உயிர்வாழும் நாளின்கண்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *