Skip to content

மரந்தை என்பது சேரநாட்டுக் கடற்கரைப் பட்டினம்

1. சொல் பொருள்

(பெ) சங்ககாலத்துச் சேரநாட்டுக் கடற்கரைப் பட்டினம்,

2. சொல் பொருள் விளக்கம்

சங்ககாலத்துச் சேரநாட்டுக் கடற்கரைப் பட்டினம்,

இந்த ஊர் மாந்தை என்னும் பாடமும் கொண்டுள்ளது. (நெடிலுக்குக் கால் வாங்கும் எழுத்தை ‘ர’ என்றும் படித்தனர்.
இதனால் நேர்ந்த வேறுபாடுகளே இவை).

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

a port city in chera country during sangam period

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

இரங்கு நீர் பரப்பின் மரந்தையோர் பொருந – பதி 90/28

ஒலிக்கின்ற கடற்பரப்பின் கரையிடத்தேயுள்ள மரந்தை நகரில் உள்ளார்க்குத் தலைவனே

இரங்கு நீர் பரப்பின் மரந்தை

என்பதால் இது கடற்கரை நகரமாகிறது. இந்தப் பதிற்றுப்பத்துப்பாடல் குடக்கோ
இளஞ்சேரலிரும்பொறை என்ற சேர மன்னனைப் பெருங்குன்றூர்க்கிழார் பாடிய பாடல் என்பதால், இது சேர நாட்டுப்
பட்டினமாகிறது.

யானையங்குருகின் கானல் அம் பெரும் தோடு
அட்ட மள்ளர் ஆர்ப்பு இசை வெரூஉம்
குட்டுவன் மரந்தை அன்ன எம்
குழை விளங்கு ஆய்_நுதல் கிழவனும் அவனே – குறு 34/5-8

யானைக்கொக்கு எனப்படும் பறவைகளின் கடற்கரையின் பெருங்கூட்டம்
பகைவரைக் கொன்ற மறவரின் ஆரவார ஓசைக்கு அஞ்சியோடும்
குட்டுவனின் மாந்தை நகரத்தைப் போன்ற எனது
கூந்தல் புரண்டு விளங்கும் ஆய்ந்து நன்றெனக்கண்ட நெற்றியையுடையவளின் தலைவனும் அவனே!

இது

குட்டுவன் மரந்தை

என்பதாலும், கடற்கரைப்பறவைகள் அங்கிருப்பதாலும் மேற்கூறிய கூற்றுகள்
உறுதிப்படுகின்றன.

தண் கடல் படு திரை பெயர்த்தலின் வெண் பறை
நாரை நிரை பெயர்த்து அயிரை ஆரும்
ஊரோ நன்று-மன் மரந்தை – குறு 166/1-3

குளிர்ந்த கடலில் உண்டான அலைகள் மோதித்தள்ளியதால், வெள்ளைச் சிறகுகளைக் கொண்ட
நாரைக்கூடம் இடம்பெயர்ந்து வேறிடத்தில் அயிரை மீனை நிறைய உண்ணும்
ஊராகிய மரந்தை இனியது;

இந்நகர் செல்வச் செழிப்புடன் விளங்கியது.

வலம் படு முரசின் சேரலாதன்
முந்நீர் ஓட்டி கடம்பு அறுத்து இமயத்து
முன்னோர் மருள வணங்கு வில் பொறித்து
நன் நகர் மரந்தை முற்றத்து ஒன்னார்
பணி திறை தந்த பாடு சால் நன் கலம்
பொன் செய் பாவை வயிரமொடு ஆம்பல்
ஒன்று வாய் நிறைய குவைஇ – அகம் 127/3-9

வெற்றி தங்கிய முரசினையுடைய சேரலாதன் என்னும் அரசன்
கடல் நாப்பணுள்ள பகைவர்களைபுறக்கிடச் செய்து அவர் காவல் மரமாகிய கடம்பினை வெட்டி, இமையமலையில்
தனது முன்னோரை ஒப்ப வளைந்த வில் இலச்சினையைப் பொறித்து
மரந்தை என்னும் ஊரிலுள்ள தனது நல்ல மனையின் முற்றத்தில், பகைவர்
பணிந்து திறையாகத் தந்த பெருமை சான்ற நல்ல அணிகலங்களுடன்
பொன்னானியன்ற பாவையினையும் வயிரங்களையும் ஆம்பலென்னும்
எண்ணளவு இடம் நிறையக் குவித்து

செல்லல் மகிழ்ந நின் செய் கடன் உடையென்-மன்
—————– ————————- —————–
குரங்கு உளை புரவி குட்டுவன்
மரந்தை அன்ன என் நலம் தந்து சென்மே – அகம் 376/1-18

செல்லாதே, தலைவனே! நின்பால் செய்யும் கடமைகலை மிகவுமுடையேன்
—————– ———————- ———————-
வளைந்த பிடரிமயிரினையுடைய குதிரைகளையுடைய குட்டுவனது
மரந்தை என்னும் ஊர் போன்ற என் அழகினைத் தந்து செல்க.

கடல் கெழு மாந்தை அன்ன எம்
வேட்டனையல்லையால் நலம் தந்து சென்மே – நற் 395/9,10

கடற்கரையில் உள்ள மாந்தை என்னும் நகரத்தைப் போன்ற எம்மை
விரும்பினாயல்லையாகலான் நின்பொருட்டால் இழந்த எம் நலத்தைத் தந்து செல்வாயாக

இங்கு வரும் மாந்தை என்ற சொல்லை, மரந்தை என்று கொள்வார் ஔவை.சு.து. அவ்வாறு கொண்டு,
மரந்தை, சேரநாட்டுக் கடற்கரை ஊர்களுள் ஒன்று. இது மருண்டா (Marunda) என யவனர் குறிப்புக்களுள்
காணப்படுகிறது என்பார்.

குட்டுவன் மரந்தை அன்ன எம் - குறு 34/7
ஊரோ நன்று-மன் மரந்தை/ஒரு தனி வைகின் புலம்பு ஆகின்றே - குறு 166/3,4
நன் நகர் மரந்தை முற்றத்து ஒன்னார் - அகம் 127/6
மரந்தை அன்ன என் நலம் தந்து சென்மே - அகம் 376/18
இரங்கு நீர் பரப்பின் மரந்தையோர் பொருந - பதி 90/28

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *