சொல் பொருள்
(வி) 1. அணிவகு, 2. முடை, பின்னு, சேர்த்துக்கட்டு, 3. நெருங்கு, செறி, 4. கல,
2. (பெ) 1. இடம், 2. பரண்,
சொல் பொருள் விளக்கம்
அணிவகு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
draw up in an array, braid, tie together, be close together, dense, be mingled, mixed, place, raised platform
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நீர் ஒலித்து அன்ன நிலவு வேல் தானையொடு புலவு பட கொன்று மிடை தோல் ஓட்டி – மது 369,370 கடல் ஒலித்ததைப் போன்ற நிலைபெற்ற வேல் படையோடே(பகைவரை) புலால் நாற்றம் உண்டாகக் கொன்று, பின்னர் அணியாய் நின்ற யானைத் திரளையும் கெடுத்து மிடை தோல் – அணிவகுக்கப்பட்ட யானை – பொ.வே.சோ.உரை ஒலி கா ஓலை முள் மிடை வேலி – நற் 38/8 ஒலிக்கின்ற காய்ந்த பனையோலையும், முள்ளும் சேர்த்துக்கட்டிய வேலியை ஒட்டி பின்னத்தூரார் உரை, முடை < மிடை – பின்னுதல் – தமிழ்ப்பேரகராதி கடவுள் மரத்த முள் மிடை குடம்பை – அகம் 270/12 தெய்வத்தினையுடைய மரத்திடத்தவாகிய முள்ளால் மிடையப்பெற்ற கூட்டில் ந.மு.வே.நாட்டார் உரை மென் கழை கரும்பின் நன் பல மிடைந்து பெரும் செய் நெல்லின் பாசவல் பொத்தி – அகம் 346/7,8 மெல்லிய தண்டினையுடைய கரும்பின் சிறந்த பல கழிகளைக் கட்டிக் குறுக்கேவைத்து அடைத்து பெரிய நெற்பயிரையுடைய செய்யாகிய பசிய பள்ளங்களில் நீரைத் தேக்கி ந.மு.வே.நாட்டார் உரை மடலே காமம் தந்தது அலரே மிடை பூ எருக்கின் அலர் தந்தன்றே – நற் 152/1,2 பனைமடலால் செய்யப்பட குதிரையைக் காமம் தந்தது; ஊரார் பேசும் பழிச்சொற்களோ நெருங்கிய இதழ்களையுடைய எருக்கம்பூமாலையைத் தந்தது; – ஔவை.சு.து.உரை கோட்டவும் கொடியவும் விரைஇ காட்ட பல் பூ மிடைந்த படலை கண்ணி – பெரும் 173,174 கொம்புகளில் உள்ளனவும், கொடிகளில் உள்ளனவும் கலந்து, காட்டிடத்துள்ளவாகிய பல்வேறு பூக்களையும் நெருங்கிச்சேர்த்த கலம்பகமாகிய மாலையினையும், மடலே காமம் தந்தது அலரே மிடை பூ எருக்கின் அலர் தந்தன்றே – நற் 152/1,2 பனைமடலால் செய்யப்பட குதிரையைக் காமம் தந்தது; ஊரார் பேசும் பழிச்சொற்களோ பல பூக்களைக் கலந்து கட்டிய எருக்கம்பூமாலையைத் தந்தது; – பின்னத்தூரார் உரை நெடு நிமிர் தெருவில் கை புகு கொடு மிடை நொதுமலாளன் கதுமென தாக்கலின் – நற் 50/4,5 நெடிய நிமிர்ந்த தெருவில் வேறொரு வழியில் வந்து புகுந்து அந்த வளைந்த இடத்தில் நமக்கு அயலானாகிய அவன் திடீரென எதிர்ப்பட கொடு மிடை – வளைந்த இடம் – பின்னத்தூரார் உரை நாள்_மீன் வாய் சூழ்ந்த மதி போல் மிடை மிசை பேணி நிறுத்தார் அணி – கலி 104/27,28 அன்றைக்குரிய விண்மீன்கள் அருகே சூழ்ந்திருக்கும் திங்களைப் போல, பரண் மீது விரும்பி நிறுத்தினர் அழகாக;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்