சொல் பொருள்
(வி) சிறந்திரு
(பெ) 1. முன்பான நிலை, முதல் நிலை, முன்னிலை, முன்னர், பண்டைக் காலம்
சொல் பொருள் விளக்கம்
சிறந்திரு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
surpass, excel, front position, first position, being ahead, olden days
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வாய் பறை அசாஅம் வலி முந்து கூகை – நற் 83/4 ஓயாது ஒலிக்கும் வாயினால் பிறரை வருத்தும், வலிமையிற் சிறந்த கூகையே! முந்து நீ கண்டு_உழி முகன் அமர்ந்து ஏத்தி முன் அப்பெருமானைக் கண்ட பொழுது, முகத்தால் விரும்பி நோக்கி, வாயால் வாழ்த்தி, கையால் தொழுது, புகழ்ந்து, அவன் அடிகளில் வீழ்ந்து வணங்கி, கொடிச்சி காக்கும் அடுக்கல் பைம் தினை முந்து விளை பெரும் குரல் கொண்ட மந்தி – நற் 22/1,2 குறமகள் காக்கும் மலைச் சரிவிலுள்ள பசிய தினையின் முதலில் விளைந்த பெரிய கதிரினைக் கவர்ந்துகொண்ட பெண்குரங்கு நேரார் ஆர் எயில் முற்றி வாய் மடித்து உரறி நீ முந்து என்னானே – புறம் 298/4,5 பகைவருடைய கொள்ளற்கரிய அரனைச் சூழ்ந்து வாயிதழைக் கடித்து உரப்பி நீ முற்படச் செல் ஏவானாதலால் தண் பனி வடந்தை அச்சிரம் முந்து வந்தனர் நம் காதலோரே – ஐங் 223/4,5 குளிர்ந்த பனியோடே சேர்ந்த வாடையுடன் கூடிய முன்பனிக்காலத்தையும் முந்திக்கொண்டு வந்துவிட்டார் நம் காதலர். அரும் பனி அளைஇய கூதிர் பெரும் தண் வாடையின் முந்து வந்தனனே – ஐங் 252/4,5 பொறுத்தற்கரிய குளிரையும் கலந்து, கூதிர்காலத்தின் பெரிதான குளிர்ந்த வாடைக் காற்று வருவதற்கு முன்னர் திரும்பி வந்துவிட்டான். மன்பதை மருள அரசு பட கடந்து முந்து வினை எதிர்வர பெறுதல் காணியர் – பதி 42/16,17 மக்களெல்லாம் வியப்படையுமாறு அரசர்கள் பலரை வென்று, முன்னால் செய்த போரை, அடுத்தும் எதிர்வரப் பெறுவதைக் காணும்பொருட்டாக முந்து யாம் கூறிய ஐந்தனுள்ளும் ஒன்றனில் போற்றிய விசும்பும் நீயே – பரி 13/17,18 முன்னர் நாம் கூறிய ஐந்தனுள்ளும் முதற்புலனாகிய ஓசையினால் உணரப்படும் வானமும் நீயே!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்