Skip to content

சொல் பொருள்

(பெ) வீட்டின் முன்பகுதி,

சொல் பொருள் விளக்கம்

வீட்டின் முன்பகுதி,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

the front of a house

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

இது வீட்டுக்கு முன்பக்கம் தெருவரையில் உள்ள திறந்த வெளி.

முன்றில் = முன் + இல்

முன் என் கிளவி முன்னர்த் தோன்றும்
இல் என் கிளவி மிசை றகரம் ஒற்றல்! (தொல்-எழுத். புள்.மயங்:60)

‘முன்’ என்ற சொல்லுக்குப் பக்கத்தில் ‘இல்’ என்ற சொல் சேர்ந்தால், அங்கே றகரம் தோன்றும்.

இந்தத் திறந்த வெளியில் பந்தல் போட்டிருக்கும் அல்லது மரநிழல் இருக்கும்.

குறி இறை குரம்பை பறி உடை முன்றில்
கொடும் கால் புன்னை கோடு துமித்து இயற்றிய
பைம் காய் தூங்கும் பாய் மணல் பந்தர் – பெரும் 265-267

வண் தோட்டு தெங்கின் வாடு மடல் வேய்ந்த
மஞ்சள் முன்றில் மணம் நாறு படப்பை – பெரும் 353,354

வளவிய தோட்டினையுடைய தென்னை மரத்தின் வற்றிய மடலினை வேய்ந்த,
மஞ்சளையுடைய முன்றிலையும் மணல் கமழ்கின்ற சுற்றுப்புறங்களையும் உடைய

பலவித மரங்கள் இருக்கும்.

மன்ற புன்னை மா சினை நறு வீ
முன்றில் தாழையொடு கமழும் – நற் 49/8,9

மன்றத்துப் புன்னையின் பெரிய கிளையில் உள்ள நறு மலர்கள்
வீட்டு முன்றிலில் இருக்கும் தாழையோடு சேர்ந்து மணங்கமழும்

வளி சீத்து வரித்த புன்னை முன்றில் – நற் 159/6

காற்று துடைத்துத் தூய்மையாக்கிய வரிவரியான புன்னை மரம் உள்ள முன்றிலில்

சினை-தொறும் தூங்கும் பயம் கெழு பலவின்
சுளை உடை முன்றில் – நற் 77/5,6

கிளைகள்தோறும் தொங்கும் பழங்களையுடைய பலாவின்
சுளைகளை உடைய முன்றிலில்

தூங்கல் ஓலை ஓங்கு மடல் பெண்ணை
மா அரை புதைத்த மணல் மலி முன்றில் – நற் 135/1,2

தொங்குகின்ற ஓலைகளையும், உயர்ந்து நீண்ட மடல்களையும் கொண்ட பனைமரத்தின்
கரிய அடிமரத்தைப் புதைத்த மணல் மிகுந்துகிடக்கும் வீட்டு முன்றிலில்

வேங்கை
வீ உக வரிந்த முன்றில் – நற் 232/7,8

வேங்கையின்
மலர்கள் உதிரும்படி வரிக்கப்பட்ட முன்றில் உள்ள

நெல்லி, மரை_இனம் ஆரும் முன்றில்
புல் வேய் குரம்பை நல்லோள் ஊரே – குறு 235/3-5

நெல்லிக்காயை
மரைக் கூட்டங்கள் உண்ணும் முன்றிலையுடைய
புல் வேய்ந்த குடிசைகளையுடைய நல்லவளின் ஊர்

தேம் பிழி நறவின் குறவர் முன்றில்
முந்தூழ் ஆய் மலர் உதிர – அகம் 78/7,8

இனிமையுறப் பிழிந்த கள்ளினையுடைய குறவர்களின் முன்றிலில்
மூங்கிலின் அழகிய மலர்கள் உதிரவும்

முன்றில்
தேன் தேர் சுவைய திரள் அரை மாஅத்து
கோடைக்கு ஊழ்த்த கமழ் நறும் தீம் கனி – அகம் 348/1-3

முன்றிலின்கண்ணுள்ள
தேன் எனத்தகும் சுவையினவாகிய திரண்ட அடியினையுடைய மாமரத்தின்
கோடைக்காலத்தே முதிர்ந்த நன்மணங்கமழும் இனிய கனிகளுடன்

வீட்டு முன்றிலில் மகளிர் கள் காய்ச்சுவர்.

பைம் கொடி நுடங்கும் பலர் புகு வாயில்
செம் பூ தூய செதுக்கு உடை முன்றில்
கள் அடு மகளிர் வள்ளம் நுடக்கிய
வார்ந்து உகு சில் நீர் வழிந்த குழம்பின் – பெரும் 337-340

முன்றிலில் நிலத்தில் உரலைப் பதித்துவைத்திருப்பர். அதில் அரிசி, அவல் போன்றவற்றை உலக்கையால் குற்றுவர்.

நுண் புல் அடக்கிய வெண் பல் எயிற்றியர்
——————————— ——————
நீழல் முன்றில் நில உரல் பெய்து
குறும் காழ் உலக்கை ஓச்சி – பெரும் 94-97

மெல்லிய புல்லரிசியை வாரியெடுத்துக்கொண்ட வெண்மையான பல்லையுடைய எயிற்றியர்
———————————————- ———————————
நிழலையுடைய முன்றிலில் நில(த்தில் குழிக்கப்பட்ட) உரலில் இட்டு,
குறிய வயிரம் பாய்ந்த உலக்கையால் குற்றி,

புது வை வேய்ந்த கவி குடில் முன்றில்
அவல் எறி உலக்கை பாடு விறந்து – பெரும் 225,226

புதிய வைக்கோலால் வேய்ந்த கவிந்த குடிலின் முன்றிலில்
அவலை இடிக்கும் உலக்கையின் ஓசை செறிகையினால்,

முன்றிலில் முளையினை அறைந்து அதில் ஆட்டுக்குட்டிகளைக் கட்டிவைத்திருப்பர்.

நெடும் தாம்பு தொடுத்த குறும் தறி முன்றில்
கொடு முக துருவையொடு வெள்ளை சேக்கும் – பெரும் 152,153

நெடிய தாம்புகள் கட்டப்பட்ட குறிய முளைகளையும் உடைய முன்றிலில்,
வளைந்த முகத்தையுடைய செம்மறியாட்டுடன் வெள்ளாடும் கிடக்கும்

முன்றிலில் தானியங்களைச் சேர்த்துவைக்கும் குதிர்கள் கட்டியிருப்பர். முன்றிலில் பந்தலிட்டு அதன் நிழலில்
தானியங்களை அரைக்கும் திரிகையை வைத்திருப்பர்.

பிடி கணத்து அன்ன குதிர் உடை முன்றில்
களிற்று தாள் புரையும் திரி மர பந்தர் – பெரும் 186,187

பிடித்திரள் நின்றாற்போன்று (தானியங்கள் சேமிக்கும்)குதிர்களையுடைய முன்றிலையும்,
யானையினது காலை ஒக்கும் (தானியங்கள் திரிக்கும்)திரிகை மரம் நிற்கும் பந்தலினையும்,

முன்றிலில் மஞ்சள் கிழங்கு நட்டுவைத்திருப்பர்.

வண் தோட்டு தெங்கின் வாடு மடல் வேய்ந்த
மஞ்சள் முன்றில் மணம் நாறு படப்பை – பெரும் 353,354

வளவிய தோட்டினையுடைய தென்னை மரத்தின் வற்றிய மடலினை வேய்ந்த,
மஞ்சளையுடைய முன்றிலினையும் மணல் கமழ்கின்ற சுற்றுப்புறங்களையும் உடைய

அரசனுடைய அரண்மனை முன்றிலில் மந்திகள் செத்தைகளை அகற்றும், விலங்குகள் துயிலும், முனிவர்கள்
வேள்வி செய்வர்.

மந்தி சீக்கும் மா துஞ்சு முன்றில்
செம் தீ பேணிய முனிவர் வெண் கோட்டு
களிறு தரு விறகின் வேட்கும்
ஒளிறு இலங்கு அருவிய மலை கிழவோனே – பெரும் 497-500

மந்திகள் செத்தைகளை அகற்றும் விலங்குகள் துயில்கொள்ளும் முன்றிலில்,
சிவந்த தீயைக் கைவிடாமல் காத்துப்போந்த முனிவர்கள், வெண்மையான கொம்பினையுடைய
eகளிறுகள் முறித்துக் கொண்டுவந்த விறகால் வேள்வியைச் செய்யும்,
ஒளிறுகின்ற விளங்கும் அருவிகளையுடையவாகிய மலையை ஆளும் உரிமையுடையோன்

பரதவர் குடிசைகளின் முன்புள்ள முன்றிலில் மீன் பிடிக்கும் வலையைக் காயப்போட்டிருப்பர்.

குறும் கூரை குடி நாப்பண்
நிலவு அடைந்த இருள் போல
வலை உணங்கும் மணல் முன்றில் – பட் 81-83

குறுகிய கூரைச்சரிவுகளையுடைய குடியிருப்புகளின் நடுவில்,
நிலவின் நடுவே சேர்ந்த இருளைப் போல
வலைகிடந்து உலரும் மணலையுடைய முன்றிலைக்கொண்ட இல்லங்களில்

பண்டகசாலைகளின் முன்றிலில் பொதிமூட்டைகளின் மீதேறி நாயும் ஆட்டுக்கிடாயும் விளையாடும்.

மதி நிறைந்த மலி பண்டம்
பொதி மூடை போர் ஏறி
மழை ஆடு சிமைய மால் வரை கவாஅன்
வரை ஆடு வருடை தோற்றம் போல
கூர் உகிர் ஞமலி கொடும் தாள் ஏற்றை
ஏழக தகரோடு உகளும் முன்றில் – பட் 136-141

மதிப்பு மிக்க ஏராளமான பண்டங்கள்
பொதிந்த பொதிகளை அடுக்கிவைத்த குவியலின்மீது ஏறி,
மழை விளையாடும் சிகரத்தையுடைய உயர்ந்த மூங்கில்கள் வளர்ந்த சரிவுகள் உள்ள
மலையில் துள்ளி விளையாடும் வருடைமானின் காட்சி போல,
கூரிய நகங்களையுடைய நாயின் வளைந்த பாதங்களையுடைய ஆணானது
ஆட்டுக் கிடாயுடன் குதிக்கும் (பண்டசாலையின்)முன்றிலினையும் – (கொண்ட பட்டினம்),

மீனவர் சேரிகளில் முன்றிலில் மீனை அறுத்து வெடுக்கு நீக்கி, அதனை எண்ணெயில் பொரிப்பர்.

மீன் தடிந்து விடக்கு அறுத்து
ஊன் பொரிக்கும் ஒலி முன்றில் – பட் 176,177

மீனை வெட்டி, (அதனுள் இருக்கும்)வேண்டாத பகுதிகளை நீக்கி,
(அதன்)தசையினைப் பொரிக்கும் ஓசையெழும்பும் முன்றிலினையும்

மீன் பிடிப்பவர் பிடித்த மீனை முன்றிலில் கூடையில் வைத்திருப்பர்.

வலைஞர் முன்றில் மீன் பிறழவும் – பட் 197

வலைஞர் முன்றிலில் மீன் பிறழ்ந்து திரியும்படியாகவும்,

மலைவாழ் மக்களின் தினைப்புனத்தில் கதிர் அறுக்க வரும் குறவர், இரவில் தம் குடும்பத்துடன் முன்றிலில்
படுத்திருப்பர்.

புனத்த
நீடு இலை விளை தினை கொடும் கால் நிமிர
கொழும் குரல் கோடல் கண்ணி செழும் பல
பல் கிளை குறவர் அல்கு அயர் முன்றில் – நற் 44/5-8

தினைப்புனத்தில்
நீண்ட இலையையுடைய நன்கு விளைந்த தினையின் வளைந்த தாள் நிமிரும்படி
கொழுமையான கதிர்களைக் கொய்வதைக் கருதி, திரண்ட பல
பெருத்த கூட்டமான குறவர்கள் இராத்தங்கி இன்பமாய்ப் பொழுதுபோக்கும் முன்றிலிலுள்ள

வீட்டுக்குள் புழுக்கம் மிகுந்திருந்தால், முன்றிலில் காற்றாட அமர்ந்திருப்பர்.

நோயும் கைம்மிக பெரிதே மெய்யும்
தீ உமிழ் தெறலின் வெய்து ஆகின்றே
ஒய்யென சிறிது ஆங்கு உயிரியர் பையென
முன்றில் கொளினே நந்துவள் பெரிது என
நிரைய நெஞ்சத்து அன்னைக்கு உய்த்து ஆண்டு
உரை இனி வாழி தோழி புரை இல்
நுண் நேர் எல் வளை நெகிழ்த்தோன் குன்றத்து
அண்ணல் நெடு வரை ஆடி தண்ணென
வியல் அறை மூழ்கிய வளி என்
பயலை ஆகம் தீண்டிய சிறிதே – நற் 236

என் காதல் நோயும் கைமீறிப் பெரிதாகிவிட்டது; உடம்பும்
நெருப்பு வெளிவிடும் வெம்மையைக்காட்டிலும் சூடானதாய் உள்ளது;
விரைவாக, நான் சிறிதாகிலும் உயிர்த்திருக்க, “மெல்ல
முன்றிலில் இவளை இருத்தினால் நலம்பெறுவாள் பெரிதும்” என்று
உள்ளிருப்போரை வெளிவிடாத நரகக் காவலர் போன்ற நெஞ்சத்தையுடைய அன்னைக்கு அறிவுறுத்தி, அங்கு
உரைப்பாயாக இனியே, வாழ்க தோழி நீ! குற்றமற்ற
நுண்ணிய நேரிய ஒளிபொருந்திய வளைகளை நெகிழச்செய்தவனின் குன்றத்து
மிகப்பெரிய உயர்ந்த கொடுமுடியில் தவழ்ந்து, குளிர்ச்சியுடன்
நம் மலையின் அகன்ற பாறைகளில் நிரம்பியுள்ள காற்று எனது
பசலை பாய்ந்த மார்பினைத் தீண்டுவதற்காக, சிறிதேனும்

பரதவர் வீட்டு முன்றிலில் நண்டுகள் ஓடித்திரியும்.

அலவன் ஆடிய புலவு மணல் முன்றில்
காமர் சிறுகுடி செல் நெறி வழியின் – நற் 239/4,5

நண்டுகள் ஓடித்திரிந்த புலால்நாறும் மணல் பரப்பிய முன்றிலையுடைய
கண்டோர் விரும்பும் சிறுகுடிக்குச் செல்லும் ஒழுங்குபட்ட வழியில்

வீட்டு முன்றிலில் பெண்கள் கள்ளுண்டு குரவைக்கூத்து ஆடுவர்.

சேந்தனை செல்-மதி நீயே பெரு மலை
வாங்கு அமை பழுனிய நறவு உண்டு
வேங்கை முன்றில் குரவையும் கண்டே – நற் 276/8-10

எம் ஊரில் தங்கிச் செல்வாயாக நீயே! பெரிய மலையில் உண்டான
வளைந்த மூங்கிலாலான குப்பிகளில் விளைந்த கள்ளினை உண்டு
வேங்கை மரங்கள் இருக்கும் முன்றிலில் நாங்கள் ஆடும் குரவைக்கூத்தையும் கண்டுவிட்டு

வேங்கை முன்றில் குரவை அயரும் – புறம் 129/3

வீட்டு முன்றிலில் தானியங்களைக் காயப்போட்டிருப்பர்.

கூம்பிய சிறகர் மனை உறை குரீஇ
முன்றில் உணங்கல் மாந்தி – குறு 46/2,3

கூம்பிய சிறகையுடைய வீட்டில் வாழும் குருவி
முன்றிலில் காயும் தானியங்களை வயிறார உண்டு

முன்றிலின் எல்லையிலுள்ள குத்துக்கல்லில் தெருவில் செல்லும் விலங்குகள் முதுகைத்தேய்த்துச் செல்லும்.

குறவர் முன்றில் மா தீண்டு துறுகல் – ஐங் 277/1

குறவரின் வீட்டு முன்றிலில் இருக்கும் விலங்குகள் தம் முதுகைத் தேய்த்துக்கொள்ளும் குத்துக்கல்லில்

மாலை நேரத்தில் முன்றிலில் கட்டில் போட்டு கணவனும் மனைவியும் குழந்தையுடன் இனிமையாகப் பொழுதைக்
கழிப்பர்

மாலை முன்றில் குறும் கால் கட்டில்
மனையோள் துணைவி ஆக புதல்வன்
மார்பின் ஊரும் மகிழ் நகை இன்ப
பொழுதிற்கு ஒத்தன்று-மன்னே
மென் பிணித்து அம்ம பாணனது யாழே – ஐங் 410

மாலைநேரத்தில், வீட்டு முன்றிலில், குட்டையான கால்களையுடைய கட்டிலில்,
மனைவியானவள் பக்கத்தில் இருக்க, புதல்வன்
மார்பினில் தவழும் மகிழ்ந்த சிரிப்பின் இன்பமான
நேரத்திற்கு ஒப்பானது –
மென்மையாக உள்ளத்தைப் பிணிக்கும் பாணனது யாழிசை

இடையர்கள் முன்றிலில் தயிர் கடைந்து, மத்தினை அங்குத் தொங்கவைத்திட, அங்குக் கட்டியிருக்கும் கன்றுக்குட்டி
அதனை வாயால் நக்கும்.

தீம் தயிர் கடைந்த திரள் கால் மத்தம்
கன்று வாய் சுவைப்ப முன்றில் தூங்கும் – அகம் 87/1,2

இனிய தயிரைக் கடைந்த திரண்ட தண்டினையுடைய மத்து
கன்று தன் வாயால் சுவைத்திட முன்றிலில் தொங்கும்

முல்லை நில வீடுகளுக்கு வெளியேயுள்ள புலத்தில் மேய்ந்த முயல்கள், வீட்டு முன்றிலுள்ள சிறிய கலங்களிலுள்ள
நீரைப் பருகும்.

குறு விழி கண்ண கூரல் அம் குறு முயல்
முடந்தை வரகின் வீங்கு பீள் அருந்துபு
குடந்தை அம் செவிய கோள் பவர் ஒடுங்கி
இன் துயில் எழுந்து துணையொடு போகி
முன்றில் சிறு நிறை நீர் கண்டு உண்ணும் – அகம் 284/2-6

குறிய விழி பொருந்திய கண்களையும், கூரிய மயிரினையுமுடைய குறிய முயல்கள்
வளைந்து கிடக்கும் வரகினது பருத்த குருத்தினைத் தின்று
வளைந்த அழகிய செவியினவாகி, காய்களைக் கொண்ட கொடிகளுள் புகுந்து
இனிய துயிலினின்றும் எழுந்து, தம் துணையோடு போகி
வீட்டு முன்றிலிலுள்ள சிறிய சால்களிலுள்ள நீரைக் கண்டு பருகும்

பாலை நிலத்துச் சீறூர்களில் வீட்டு முன்றிலில் பூனை குட்டியுடன் படுத்திருக்கும்.

ஈர் முள் வேலி புலவு நாறு முன்றில்
எழுதி அன்ன கொடி படு வெருகின்
பூளை அன்ன பொங்கு மயிர் பிள்ளை
மதி சூழ் மீனில் தாய்வழிப்படூஉம், சிறுகுடி – அகம் 297/12-16

ஈர்கின்ற முள்வேலியினையுடைய புலால் நாறும் முன்றிலில்
ஓவியத்து எழுதினாற் போன்று மெலிந்து நீண்ட பூனையின்
பூளைப் பூவினைப் போன்ற விளங்குகின்ற மயிரினையுடைய குட்டிகள்
திங்களைச் சூழ்ந்துள்ள விண்மீன்கள் போலத் தம் தாயின் பின் சூழ்ந்திருக்கும், சீறூர்

பாலை நிலத்துச் சீறூர்களில் வீட்டு முன்றிலில் புழுக்கிய ஊனைத் தேக்கிலையில் குவித்து உண்ணுவர்

சேக்குவள்-கொல்லோ தானே தேக்கின்
அகல் இலை கவித்த புதல் போல் குரம்பை
ஊன் புழுக்கு அயரும் முன்றில்
கான் கெழு வாழ்நர் சிறுகுடியானே – அகம் 315/15-18

தங்கியிருப்பாளோ அவள், தேக்கமரத்தின்
அகன்ற இலையில் குவிக்கப்பெற்ற, புதர் போலும் குடிசையின்
முன்றிலில் புழுக்கிய ஊனினை உண்ணும்
காட்டில்பொருந்திய வாழ்க்கையினையுடையாரது சீறூரின்கண்

எளியோரின் வீட்டு முன்றிலில் பசுமாடு கட்டிக்கிடக்கும்.

நல்கூர் பெண்டின் புல்வேய் குரம்பை
ஓர் ஆ யாத்த ஒரு தூண் முன்றில் – அகம் 369/23,24

வறுமையுற்ற பெண்டினது புல்வேய்ந்த குடிலாய
ஒரு பசு கட்டியுள்ள ஒற்றைத் தூண் கொண்ட முன்றிலில்

முன்றில் முள்வேலியால் அடைக்கப்பட்டிருக்கும்.

முள் மிடை வேலி
பஞ்சி முன்றில் சிற்றில் ஆங்கண் – புறம் 116/4-6

முள்ளால் நெருங்கிய வேலியையும்
பஞ்சு பரந்த முன்றிலையுமுடைய சிறிய மனையிடத்தின்கண்

முன்றிலைச் சுற்றியுள்ள நெல்லி மரங்களே அதற்கு வேலியாக இருக்கும்.

மரை பிரித்து உண்ட நெல்லி வேலி
பரல் உடை முன்றில் அம் குடி சீறூர் – புறம் 170/1,2

மரையாவால் பிரித்துண்ணப்பட்ட நெல்லியாகிய வேலியையுடைத்தாய்
அதனது விதையாகிய பரல் உடைத்தாகிய முன்றிலினையுடைய அழகிய குடியையுடைய சிறிய ஊரின்கண்

மரத்தின் கழிகளாலும், இலைதழைகளாலும் செய்யப்பட்ட படல் முன்றிலைச் சுற்றி இருக்கும்.

உடும்பு இழுது அறுத்த ஒடுங்காழ் படலை
சீறில் முன்றில் கூறுசெய்திடும்-மார் – புறம் 325/7,8

அறுத்தெடுத்த உடும்பின் தசையை, ஒடு மரத்தின் வலிய கழிகளால் செய்யப்பட்ட படல் சார்த்தப்பட்ட
சிறிய மனை முன்றிலில் பகுத்தளித்தற்பொருட்டு

படலை முன்றில் சிறுதினை உணங்கல் – புறம் 319/5

மேற்கண்ட கூற்றுகளினின்றும் நாம் பெறுவது : முன்றில் என்ற வீட்டு முன் பகுதி வீட்டுப் புழக்கத்தில் உள்ள பகுதி.
எனவே, வீட்டின் பல அன்றாடச் செயல்கள் அங்கு நடைபெறும். வீட்டுப் பொருள்களும் அங்கு இருக்கும். எனவே,
இப்பகுதி பாதுகாப்பான ஒரு வேலியைக் கொண்டிருக்கும் என்பது உறுதி. மேலே காணப்படும் எடுத்துக்காட்டுகள் இதனை உறுதிப்படுத்தும். இதுவே முன்றிலை, வீட்டு முற்றத்தினின்றும் வேறுபடுத்திக் காட்டுவதாகும்.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *