சொல் பொருள்
(பெ) முழங்கால்,
சொல் பொருள் விளக்கம்
முழங்கால்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
knee
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முழந்தாளைப் பற்றிச் சங்க இலக்கியங்களில் வரும் நான்கு குறிப்புகளிலும், அது பெண்யானையின் முழந்தாளைப் பற்றியதாகவே காணப்படுகிறது. இது ஆய்வுக்குரியதாகும். முளை எயிற்று இரும் பிடி முழந்தாள் ஏய்க்கும் துளை அரை சீறுரல் – பெரும் 53,54 (மூங்கில்)முளை(போன்ற) கொம்பினையுடைய கரிய பிடியின் முழந்தாளை ஒக்கும், துளையைத் தன்னிடத்தேயுடைய சிறிய உரலை வயவு பிடி முழந்தாள் கடுப்ப குழி-தொறும் விழுமிதின் வீழ்ந்தன கொழும் கொடி கவலை – மலை 127,128 வலிமையுள்ள பெண்யானையின் முழங்காலைப் போன்று, குழிகள்தோறும், சிறந்த நிலையில் (நிலத்தடியில்)வளர்ந்தன, செழுமையான கொடியையுடைய கவலை எனும் கிழங்கு; முழந்தாள் இரும் பிடி கயம் தலை குழவி – குறு 394/1 முழந்தாளையுடைய கரிய பெண்யானையின் மெல்லிய தலையையுடைய கன்று வாங்கு கோல் நெல்லொடு வாங்கி வரு_வைகல் மூங்கில் மிசைந்த முழந்தாள் இரும் பிடி – கலி 50/1,2 மூங்கிலின் வளைகின்ற கழையை நெல்லோடு வளைத்து, விடியற்காலத்தில், அதனைத் தின்ற முழந்தாளையுடைய கரிய பெண்யானை இங்கு வரும் முதலிரண்டு குறிப்புகள், பெண்யானையின் முழந்தாளை உவமைகளாகக் கையாள்கின்றன. ஆனால் அடுத்துவரும் இரண்டு குறிப்புகளும், முழந்தாள் இரும்பிடி என்று முழந்தாளைப் பெண்யானைக்கு அடைச்சொல்லாகக் கொள்கின்றன. முழந்தாளையுடைய இரும்பிடி என்றால், மற்ற விலங்குகளுக்கு முழந்தாள் இல்லையா? அல்லது ஆண்யானைக்கு முழந்தாள் இல்லையா என்ற கேள்வி எழும். கலித்தொகையில் வரும் முழந்தாள் இரும்பிடி என்ற சொல்லுக்கு, உரையாசிரியர் இராசமாணிக்கனார், முழவு போல் பருத்த கால்களையுடைய பெண்யானை என்று பொருள் கொள்வார். இங்கு இவர் முழந்தாள் என்பதை முழ தாள் என்ற இருசொற்களின் சேர்க்கையாகக் கொள்வார். முழ எனில் முழவு என்ற பொருளுண்டு.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்