மூவன் சங்ககால மன்னர்களில் ஒருவன்
1. சொல் பொருள்
(பெ) சேரநாட்டுச் சிற்றரசன்
2. சொல் பொருள் விளக்கம்
மூவன் சங்ககால மன்னர்களில் ஒருவன். இவனது நாடு நெல்வளம் மிக்கது. பெருந்தலைச்சாத்தனார் இவனை நேரில் கண்டு பாடியுள்ளார் (புறம் 209). பொய்கையார் இவனைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார் (நற்.18). தொண்டி அரசன் பொறையன் இவனைப் போரில் வென்று, இவனது பல்லைப் பிடுங்கி, தன் கோட்டைக் கதவில் பதித்துக்கொண்டான்.
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
a chieftain of Chera country
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
பொய்கை நாரை போர்வில் சேக்கும்
நெய்தல்அம் கழனி நெல்அரி தொழுவர்
கூம்புவிடு மென்பிணி அவிழ்ந்த ஆம்பல்
அகல் அடை அரியல் மாந்தித் தெண்கடல்
படுதிரை இன்சீர்ப் பாணி தூங்கும்
மென்புல வைப்பின் நன்னாட்டுப் பொருந!
பல்கனி நசைஇ அல்கு விசும்பு உகந்து
பெருமலை விடர்அகம் சிலம்ப முன்னிப்
பழனுடைப் பெருமரம் தீர்ந்தெனக் கையற்றுப்
பெறாது பெயரும் புள்ளினம் போல, நின்
நசைதர வந்து நின்இசை நுவல் பரிசிலேன்
வறுவியேன் பெயர்கோ? வாள்மேம் படுந!
ஈயாய் ஆயினும் இரங்குவென் அல்லேன்;
நோயிலை ஆகுமதி; பெரும, நம்முள்
குறுநணி காண்குவ தாக; நாளும்
நறும்பல் ஒலிவரும் கதுப்பின் தேமொழித்
தெரியிழை மகளிர் பாணி பார்க்கும்
பெருவரை அன்ன மார்பின்
செருவெம் சேஎய் நின் மகிழ்இரு க்கையே. – புறம் 209
குளத்தில் மேய்ந்த நாரை வைக்கோற் போரில் உறங்கும் நெய்தல் நிலத்தில் உள்ள வயல்களில் நெல்லை அறுவடை செய்யும் உழவர், நன்கு மலர்ந்த ஆம்பலின் அகன்ற இலைகளில் மதுவை உண்டு, தெளிந்த கடல் அலைகளின் இனிய சீரான ஒலிக்கேற்ப ஆடுகின்றனர். இத்தகைய வளமான நெய்தல் மற்றும் மருத நிலங்களையுடைய நல்ல நாட்டுக்குத் தலைவனே! பழங்களை விரும்பி, தாம் வாழும் ஆகாயத்தில் உயரப் பறந்து, பெரிய மலைக் குகையில் எதிரொலி முழங்கச் சென்று, பழமரத்தில் பழங்கள் இல்லாததால் வருந்தி மீளும் பறவைகளைப் போல், உன் மீதுள்ள விருப்பத்தினால் உன் புகழைக் கூற வந்த நான் பரிசு பெறாமல் வெறுங்கையோடு செல்லப் போகிறேனா? வாட்போரில் சிறந்த வீரனே! நீ எனக்குப் பரிசளிக்காவிட்டாலும் நான் வருந்தமாட்டேன். நீ நோயில்லாமல் வாழ்வாயாக! தலைவ! நாள்தோறும், மணமுடைய, நீண்ட, தழைத்த கூந்தலோடு, ஆராய்ந்த ஆபரணங்களை அணிந்து, தேன்போன்ற இனிய மொழி பேசும் பெண்கள் உன்னுடைய மலைபோன்ற மார்பைத் தழுவும் நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நீ போரை விரும்பும் முருகனுக்கு ஒப்பானவன். நான் பரிசு பெறாமல் செல்வது உன் அரசவையில் உன்னோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர்களுக்கு மட்டுமே தெரிந்ததாக இருக்கட்டும் .
பருவரல் நெஞ்சமொடு பல் படர் அகல
வருவர் வாழி தோழி! மூவன்
முழு வலி முள் எயிறு அழுத்திய கதவின்,
கானல் அம் தொண்டிப் பொருநன், வென் வேல்
தெறல் அருந் தானைப் பொறையன், பாசறை,
நெஞ்சம் நடுக்குறூஉம் துஞ்சா மறவர்
திரை தபு கடலின் இனிது கண் படுப்ப,
கடாஅம் கழீஇய கதன் அடங்கு யானைத்
தடாஅ நிலை ஒரு கோட்டன்ன,
ஒன்று இலங்கு அருவிய குன்று இறந்தோரே. – நற் 18/2
மூவன் என்பானின்
முழு வலிமை கொண்ட முள் போன்ற பற்களைப் பிடுங்கி அழுத்திவைத்த கதவினைக் கொண்ட
கடற்கரைச் சோலையைக் கொண்ட தொண்டியின் தலைவனான, வெல்லும் வேற்படையையுடைய
கடத்தற்கரிய சேனையையுடைய பொறையன் என்பானின் பாசறையில் இருக்கும்
நெஞ்சு நடுக்கங்கொண்டதினால் தூங்காத வீரர்கள்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது