Skip to content

யவனர் என்று குறிக்கப்படுபவர்கள் கிரேக்கர், உரோமர், யூதர், சீரியர்

1. சொல் பொருள்

(பெ) பண்டைத் தமிழகத்துடன் கப்பல் வணிகம் செய்த மேல்நாட்டவர்,

கிரேக்கர், உரோமர், யூதர், சீரியர்

2. சொல் பொருள் விளக்கம்

பண்டைத் தமிழகத்துடன் கப்பல் வணிகம் செய்த மேல்நாட்டவர்.,

இவர்கள் கிரேக்கர், ரோமர், யூதர், சீரியர் ஆகியோராய் இருக்கலாம் என்பர் ஆய்வாளர்.

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

Greeks, Romans, Jews, Syrians, western maritime traders with sangam people.

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

இவர்கள் நன்கு கட்டகமைக்கப்பெற்ற அழகிய மரக்கலங்களில் பொன்னோடு வந்து, அதை விலையாகக் கொடுத்து
தமிழ்நாட்டு மிளகைப் பெற்றுச் சென்றனர்.

யவனர் தந்த வினை மாண் நன் கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும். – அகம் 149/9,10

யவனர்கள் கொண்டுவந்த தொழில் மாட்சிமைப்பட்ட நல்ல மரக்கலம்
பொன்னோடு வந்து மிளகுடன் மீளும்

அன்னத்தைத் தலையிலே கொண்ட ஓதிம விளக்கு யவனர் விற்பனை செய்த பொருள்களில் ஒன்று

புனல் ஆடு மகளிர் இட்ட பொலம் குழை
இரை தேர் மணி சிரல் இரை செத்து எறிந்தென
புள் ஆர் பெண்ணை புலம்பு மடல் செல்லாது
கேள்வி அந்தணர் அரும் கடன் இறுத்த
வேள்வி தூணத்து அசைஇ யவனர்
ஓதிம விளக்கின் உயர் மிசை கொண்ட
வைகுறு மீனின் பைபய தோன்றும் – பெரும் 312-318

நீராடுகின்ற மகளிர் (நீரில்)நழுவவிட்டுச்சென்ற பொன்னாற் செய்த மகரக்குழையினை,
இரையைத் தேடுகின்ற (நீல)மணி(போலும்) மீன்கொத்தி (தனக்கு)இரை என எண்ணிப் பாய்ந்தெடுத்து,
பறவைகள் நிறைந்திருக்கின்ற பனை மரத்தின் தனித்த மடலுக்குச் செல்லாமல்,
நூற்கேள்வியையுடைய அந்தணர் செய்தற்கரிய கடனாகச் செய்து முடித்த
வேள்விச்சாலையின் வேள்வித்தூணின்மேல் இருக்க, (அப்பறவை)யவனரி
அன்ன(த்தைப்போன்ற தொங்கு) விளக்கைப்போலவும், (மகரக்குழை, விளக்கின் தீச்சுடர்)உயர்ந்த வானில் இடங்கொண்ட
வைகறை வெள்ளிமீன் போலவும் மினுக்மினுக் என்று ஒளிவிட்டும் தோன்றும்

பாவை விளக்கு அரண்மனைக்கு ஒளி ஊட்டிய விளக்குகளில் ஒன்று இதுவும் யவனர் விற்பனை செய்த விளக்குகளில் ஒன்று. பாவை ஒருத்தி அகல்விளக்கைக் கையில் ஏந்தி நிற்பது போலவும், அந்த அகல் விளக்கில் திரிகள் போட்டு எரியவிட்டனர் என்றும், அது பாண்டிநாட்டு அரண்மனைப் பள்ளியறையில் எரிந்துகொண்டிருந்தது என்றும் நக்கீரர் குறிப்பிடுகிறார்

யவனர் இயற்றிய வினை மாண் பாவை
கை ஏந்து ஐ அகல் நிறைய நெய் சொரிந்து
பரூஉ திரி கொளீஇய குரூஉ தலை நிமிர் எரி
அறுஅறு காலைதோறு அமைவர பண்ணி – நெடு 101-104

யவனர் செய்த தொழில் திறத்தில் உயர்ந்த பெண்சிலையின்
கைகளில் ஏந்தியிருக்கின்ற வியப்பைத்தரும் அழகுடைய தகளி நிறைய நெய் சொரிந்து,
பருத்த திரிகளைக் கொளுத்தி, (செந்)நிறமான தழல் மேல்நோக்கி எரிகின்ற சுடரை,
(நெய்)வற்றிப்போகும்போதெல்லாம் (நெய்வார்த்துத் திரிகளைத்) தூண்டி(ச் சரிப்படுத்தி

யவனர் மெய்ப்பை என்று சொல்லப்பட்ட சட்டை அணிந்திருந்தனர். ஆடைகளைச் செறித்து இறுக்கமாகக் கட்டியிருந்தனர்.
அதன் மேல் மத்திகை என்னும் அரைக்கச்சை அணிந்திருந்தனர். அவர்கள் வலிமை மிக்க யாக்கையைப் பெற்றிருந்தனர்.
அவர்களின் தோற்றம் பிறருக்கு அச்சம் தருவதாக அமைந்திருந்தது. அவர்கள் வன்கண் என்னும் முரட்டுக் குணம்
உடையவர்களாக விளங்கினர். அரசனது பாசறையில் இவர்களுக்கும் தனி இடம் இருந்தது. போர்க்குச் செல்லுமிடத்தில்
பாசறை அமைக்கும்போது அரசனுக்குரிய அழகிய தங்குமிடம் அமைப்பதை ஏற்றுக்கொண்டிருந்தார்கள்.
தாங்கள் போருக்குச் செல்லும்போது நற்சகுனமாக எடுத்து செல்லும் புலிக்கண் சங்கிலியைப் பாண்டியனின் பாசறையில்
தொங்கவிட்டிருந்தனர்,

மத்திகை வளைஇய மறிந்து வீங்கு செறிவு உடை
மெய்ப்பை புக்க வெருவரும் தோற்றத்து
வலி புணர் யாக்கை வன்கண் யவனர்
புலி தொடர் விட்ட புனை மாண் நல் இல் – முல் 59-62

கசை வளைந்துகிடக்கின்ற, (அக் கசை)மடங்கிப் புடைக்குமாறு நெருங்கக் கட்டின உடையையும்,
சட்டையிட்ட அச்சம் வரும் தோற்றத்தையும்,
வலிமை கூடின உடம்பினையும் உடைய கடுமையான யவனர்,
புலிச் சங்கிலி விடப்பட்ட, அலங்கரித்தல் நிறைவான அழகிய நல்ல இல்லில்

புலித்தொடர் விட்ட புனை மாண் நல் இல்

என்ற அடிக்குப் புதுவிளக்கம் தரும் கட்டுரையைப் படிக்க இங்கே சொடுக்கவும்

http://sangacholai.in/Essays-4.7.html

யவனர் விற்பனை செய்த பொருள்களில் அழகிய சாடிகளில் நிறைக்கப்பெற்ற மதுவும் ஒன்று. இலவந்திகைப் பள்ளித்
துஞ்சிய நன்மாறன் என்னும் பாண்டிய மன்னன் யவனர் அன்பளிப்பாகத் தந்த பொன்னால் செய்யப்பட்டதும், அதிக
வேலைப்பாடுகள் கொண்டதுமான கிண்ணத்தில் மகளிர் தேறல் கள்ளை ஊற்றித் தர உண்டு மகிழ்ந்தான் என்று
கூறப்படுகிறது.

யவனர் நன் கலம் தந்த தண் கமழ் தேறல்
பொன் செய் புனை கலத்து ஏந்தி நாளும்
ஒண் தொடி மகளிர் மடுப்ப மகிழ் சிறந்து
ஆங்கு இனிது ஒழுகு-மதி ஓங்கு வாள் மாற – புறம் 56/18-21

யவனர் நல்ல் குப்பியில் கொடுவரப்பட்ட குளிர்ந்த நறுநாற்றத்தையுடைய தேறலை
பொன்னாற் செய்யப்பட்ட புனைந்த கலத்தின்கண்ணே ஏந்தி நாடோறும்
ஒள்ளிய வளையை அணிந்த மகளிர் ஊட்ட மகிழ்ச்சி மிக்கு
இனிதாக நடப்பாயாக, வென்றியால் உயர்ந்த வாளையுடைய மாறனே!

அவந்தி கொல்லரும் யவன தச்சரும் – மணி:19/108

பயன் அறவு அறியா யவனர் இருக்கையும் – புகார்:5/10

வன் சொல் யவனர் வள நாடு ஆண்டு – வஞ்சி:28/141

வன் சொல் யவனர் வள நாடு வன் பெருங்கல் – வஞ்சி:29/172

அடல் வாள் யவனர்க்கு அயிராது புக்கு ஆங்கு – மது:14/67

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

1 thought on “யவனர்”

  1. chellamuthu periyasamy

    அருமை அருமை ஐயா! யவனர்கள் பற்றியும் அவர்கள் கொண்டிருந்த வியாபாரத் தொடர்பு பற்றியும் சங்க இலக்கியங்கள் கூறும் தகவல்களைத் திரட்டித்தந்துள்ளீர்கள்! மிகச்சிறப்பு! வாழ்த்துகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *