Skip to content

சொல் பொருள்

1. (வி) கட்டு, பிணி,

2. (பெ) ஒரு மரம், ஆச்சா மரம், சால் மரம்,

3. (வி.பெ) யாவை,

சொல் பொருள் விளக்கம்

கட்டு, பிணி,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

bind, tie, fasten

a tree, Shorea robusta

what, which things

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

செழும் செய் நெல்லின் சேய் அரி புனிற்று கதிர்
மூதா தின்றல் அஞ்சி காவலர்
பாகல் ஆய் கொடி பகன்றையொடு பரீஇ
காஞ்சியின் அகத்து கரும்பு அருத்தி யாக்கும்
தீம் புனல் ஊர திறவிது ஆக – அகம் 156/3-7

செழுமை வாய்ந்த வயலிலுள்ள நெல்லின் சிவந்த அரிகளையுடைய இளங்கதிரை
முதிய பசு தின்பதைக் கண்டு அஞ்சி, வயற்காவலர்
பாகலின் சிறந்த கொடியைப் பகன்றையின் கொடியுடன் அறுத்து (அவற்றால் அந்தப் பசுவைக்)
காஞ்சி மரத்திடத்துக் கரும்பினை உணவாக இட்டுக் கட்டிவைக்கும்
நீர்வளம் பொருந்திய ஊரையுடைய தலைவனே

வலம்புரி வளையொடு கடிகை_நூல் யாத்து – நெடு 142

வலம்புரிச் சங்கு வளையல்களோடு காப்புக்கயிறைக் கட்டி,

பிணித்தல் வேறு, யாத்தல் வேறு என்பதை அடியிற்காணும் அடிகள் உணர்த்தும்.

மணி பீலி சூட்டிய நூலொடு மற்றை
அணி பூளை ஆவிரை எருக்கொடு பிணித்து யாத்து – கலி 138/8,9

நீலமணி போன்ற பீலியைக் கட்டிய நூலில், ஏனைய
அழகிய பூளைப்பூ, ஆவிரம்பூ, எருக்கம்பூ ஆகியவற்றைச் சேர்த்துக் கட்டி,

இந்த யாத்தல் உள்ளங்களைக் கட்டுவதற்கும் ஆகிவரும்.

பெரும் கடல் கரையது சிறு_வெண்_காக்கை
நீத்து நீர் இரும் கழி இரை தேர்ந்து உண்டு
பூ கமழ் பொதும்பர் சேக்கும் துறைவனோடு
யாத்தேம் யாத்தன்று நட்பே
அவிழ்த்தற்கு அரிது அது முடிந்து அமைந்தன்றே – குறு 313

பெரிய கடற்கரையில் இருக்கும் சிறிய வெள்ளைக் கடற்காக்கை
நீந்தக் கூடிய நீரையுடைய பெரிய கழியில் இரையைத் தேடி உண்டு
பூ மணக்கும் சோலையில் தங்கும் துறையைச் சேர்ந்த தலைவனோடு
எம்மைச் இணைத்துக்கொண்டோம், இணைந்த நட்பினை
அவிழ்த்துவிட முடியாது; அது முடிச்சிடப்பட்டு நன்றாக அமைந்துள்ளது

இகழ்வு இலன் இனியன் யாத்த நண்பினன் – புறம் 216/6

அவன் என்னை என்றும் இகழ்ச்சியிலனாய இனிய குணங்களையுடையவன், பிணித்த நட்பினையுடையவன்

யா என்ற மரம் இன்னது என்று அகராதிகள் குறிப்பிடவில்லை. எனவே இது பற்றிய ஆய்வுகள் தொடர்கின்றன.
சிலர், இது ஆச்சாஅல்லது சால் எனப்படும் shorea robusta மரம் என்பர். இந்த ‘யா’மரம் யாஅம், விளாம், மரா,
சாலம், குங்கிலியம், ஆச்சா எனவும் அறியப்படுகிறது என்றும் கூறுவர்.
இந்த யாமரம் கூந்தற்பனை என்றும் கூறுவர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ‘உலத்தி’ என்ற பெயரில் அழைக்கப்படும் இம்மரம் மற்ற இடங்களில் கூந்தற்பனை
என்று அழைக்கப்படுகிறது. இதன் தாவரவியல் பெயர் Caryota urens. ‘யா மரம்’ என்று குறுந்தொகையிலும்
குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த மரத்தின் இலைகளும் தண்டும் யானைகளுக்கு மிகவும் விருப்பமான ஸ்னாக்ஸ்
-சாந்தி மாரியப்பன், http://image-thf.blogspot.com/2013/07/blog-post_19.html

யா மரங்கள் மிக்க உயரமானவை.

யா உயர்ந்து
ஓமை நீடிய கான் இடை அத்தம் – நற் 198/1,2

யா மரங்கள் உயர்ந்து
ஓமை மரங்கள் நெடுகிலும் காணப்படும் பாலைக்காட்டு வழியில்

யாஅ உயர் நனம் தலை – அகம் 65/13
யா மரங்களுயர்ந்துள்ள அகன்ற இடத்தில்

யா மரங்கள் இடையில் கிளைகளை விடாமல் செங்குத்தாக ஓங்கி உயர்ந்து மேலே கிளைவிடுபவை

கவை முறி இழந்த செம் நிலை யாஅத்து
ஒன்று ஓங்கு உயர் சினை இருந்த வன் பறை
வீளை பருந்தின் கோள் வல் சேவல் – அகம் 33/3-5

கவடுகளில் முளைவிடும் தளிர்களும் இல்லாத, செங்குத்தாக நிற்கும் யாமரத்தின்
ஒரே தண்டாக ஓங்கி உயர்ந்த மரத்தின் (உச்சிக்) கிளையில் இருக்கும், வலிய பறத்தலையுடைய
சீட்டி ஒலி எழுப்பும் பருந்தின் (இரையைக் குறிபார்த்துக்)கவர்வதில் திறமைமிக்க ஆண் பறவை

யா மரங்கள் பாலை நிலத்தில் வளர்பவை.

பருந்து இருந்து
உயா விளி பயிற்றும் யா உயர் நனம் தலை – அகம் 19/2,3

(பாலைத்திணைப் பாடல்)
பருந்து இருந்து
வருந்தும் குரலில் பலமுறை அழைக்கும் யாமரங்களின் உயர்ந்த அகன்ற இடத்தில்

இதன் இலை யானைகளின் விருப்பமான உணவு. இது நிழல் தரும் அளவுக்குப் பரந்த கிளைகளைக் கொண்டது.

மரல் புகா அருந்திய மா எருத்து இரலை
உரல் கால் யானை ஒடித்து உண்டு எஞ்சிய
யாஅ வரி நிழல் துஞ்சும் – குறு 232/3-5

மரல்கொடியை உணவாக அருந்திய பெரிய கழுத்தைக் கொண்ட இரலை மான்
உரலைப் போன்ற காலைக் கொண்ட யானை ஒடித்து உண்டு எஞ்சிய
யாமரத்தின் வரிவரியான நிழலில் துயிலும்

புன் தலை மட பிடி உணீஇயர் அம் குழை
நெடு நிலை யாஅம் ஒற்றி நனை கவுள்
படி ஞிமிறு கடியும் களிறே – அகம் 59/7-9

புல்லிய தலையையுடைய இளைய பெண்யானை உண்பதற்காக, அழகிய குழைகளை
உயர்ந்து நிற்கும் யா மரத்தினை வளைத்துத் தந்து, (தன்) நனைந்த கன்னத்தில்
படியும் வண்டுகளை ஓட்டும் ஆண்யானை

யா மரத்தின் இளம் தளிர்கள் மங்கையரின் மேனி நிறத்தவை. இது மாரிக்காலத்தில் தளிர்விடும்.

யாஅ ஒண் தளிர் அரக்கு விதிர்த்து அன்ன நின்
ஆகம் மேனி அம் பசப்பு ஊர – அகம் 333/1,2

யா மரத்தின் ஒள்ளிய தளிரில் அரக்குப்பொடியிபைச் சிதறினாற் போன்ற நின்
உடம்பினது மேனியின்கண் அழகிய பசலை பரக்க

சாரல் யாஅத்து உயர் சினை குழைத்த
மாரி ஈந்தளிர் அன்ன மேனி – அகம் 337/1,2

பக்க மலையின்கண் யா மரத்தின் உயர்ந்த கிளையில் தளிர்த்த
மாரிக்காலத்து குளிர்ந்த தளிரை ஒத்த மேனியையும்

யா மரத்தின் அடிமரம் வைரம்பாய்ந்து கெட்டியாக இருக்கும். இதன் மேலுள்ள பட்டை பொரிந்துபோய் இருக்கும்.
இந்தப் பட்டையை யானைகள் விரும்பி உண்ணும்.

பொத்து இல் காழ அத்த யாஅத்து
பொரி அரை முழுமுதல் உருவ குத்தி
மறம் கெழு தட கையின் வாங்கி உயங்கு நடை
சிறு கண் பெரு நிரை உறு பசி தீர்க்கும்
தட மருப்பு யானை கண்டனர் தோழி – குறு 255/1,2

பொந்துகள் இல்லாத வயிரம்பாய்ந்த, பாலைவழியில் உள்ள யாமரத்தின்
பொரிந்த அடிமரத்தை முற்றவும் உருவிச் செல்லக் குத்தி
வலிமையுள்ள தன் அகன்ற கையினால் வளைத்து, வருத்தமிக்க நடையையும்,
சிறுத்த கண்களையும் கொண்ட பெருங் கூட்டத்தின் மிகுந்த பசியைத் தீர்க்கும்
அகன்ற கொம்புகளைக் கொண்ட யானையைக் கண்டனர் தோழி!

பிடி பசி களைஇய பெரும் கை வேழம்
மென் சினை யாஅம் பொளிக்கும் – குறு 37/2,3

(தன்)பெண்யானையின் பசியைப் போக்க ,பெரிய கையையுடைய களிறுகள்
மெல்லிய கிளைகளையுடைய யா மரத்தின் பட்டையை உரிக்கும்

யாமரத்துப் பட்டை நீர்ப்பசையுள்ளதாக இருக்கும். இதனை யானைகள் உரித்துச் சப்பிப்போடும்.

கவை முறி யாஅத்து
நார் அரை மருங்கின் நீர் வர பொளித்து
களிறு சுவைத்திட்ட கோதுடைத் ததரல்
கல்லா உமணர்க்கு தீமூட்டு ஆகும் – அகம் 257/14-17

கவர்த்த தளிர்களையுடைய யா மரத்தின்
நாரினையுடைய அடிமரத்தில் நீர்வரும்படி உரித்து
களிற்றியானை சுவைத்துப்போட்ட சக்கையான சுள்ளிகள்
கல்லாத உப்பு வணிகர்க்குத் தீமூட்டப் பயன்படும்

கோடையில் இதன் இலைகள் உதிர்ந்துவிட, உச்சிக்கிளைகளில் கழுகுகள் கூடுகட்டும்.

மன் உயிர் மடிந்த மழை மாறு அமையத்து
இலை இல ஓங்கிய நிலை உயர் யாஅத்து
மேல் கவட்டு இருந்த பார்ப்பு_இனங்கட்கு
கல் உடை குறும்பின் வயவர் வில் இட
நிண வரி குறைந்த நிறத்த அதர்-தொறும்
கணவிர மாலை இடூஉ கழிந்து அன்ன
புண் உமிழ் குருதி பரிப்ப கிடந்தோர்
கண் உமிழ் கழுகின் கானம் நீந்தி – அகம் 31/4-11

உலகத்து உயிர்கள் மடிந்துபோக மழை அற்றுப்போன இக் காலத்தில்
இலைகள் இல்லாதுபோய், நிமிர்ந்த நிலையில் உயர்ந்து நிற்கும் யா மரத்தின்
உச்சிக் கவட்டில் இருந்த தன் குஞ்சுகளுக்கு
கல்லை உடைய சிற்றரணில் இருக்கும் மறவர்கள் வில்லால் (அம்பினை) எய்ய
நிணம் ஒழுகும் பொலிவற்ற நிறமுள்ள வழிகள்தோறும்
செவ்வலரி மாலை இட்டவாறு இறந்துகிடந்தாற் போல
புண் சொரியும் குருதி சூழ்ந்து பரவக் கிடந்தோரின்
கண்களை (க் கொத்திச் சென்று) ஊட்டிவிடும் கழூகுகளையுடைய காட்டைக் கடந்து

யா மரத்தின் அடிமரம் கருமையாக இருக்கும். வேனில் காலத்திலும் கிளைகளின் கவட்டில் தளிர் விடும்.

கவை ஒண் தளிர கரும் கால் யாஅத்து
வேனில் வெற்பின் கானம் காய – அகம் 187/15,16

கவர்ந்த ஒள்ளிய தளிரினையும், கரிய அடியினையும் உடைய யா மரங்களுடைய
வேனில் வெப்பம் வாய்ந்த மலையை அடுத்த காடு காய்ந்திட

2.10
இதன் அடிமரம் வெகு உயரமாக இருப்பதால், இதில் ஏறி உச்சிக்கிளையில் அமர்ந்தவாறு வழிப்பறி செய்வோர்
வழிப்போக்கர் வரவினை எதிர்பார்த்துக் காத்துக்கிடப்பர்.

வேறு பல் கவலைய வெருவரு வியன் காட்டு
ஆறு செல் வம்பலர் வருதிறம் காண்-மார்
வில் வல் ஆடவர் மேல் ஆள் ஒற்றி
நீடு நிலை யாஅத்து கோடு கொள் அரும் சுரம் – அகம் 263/5-8

பலவகைப்பட்ட வழிகளையுடைய அச்சம் பொருந்திய பெரிய காட்டில்
வழிப்போக்கர்கள் வருவதைப் பார்த்துத் தெரிந்துகொள்ள
வில்வன்மையுடைய ஆறலைக் கள்வர் மேலிடத்தில் மறைந்து
நீண்ட நிலையுடைய யா மரத்தின் கொம்பை இடமாகக் கொள்ளும் அரிய பாலைநில வழியில்

வேனிற்காலத்தில் இலைகளை உதிர்ப்பதற்கு முன்னர் இதன் இலைகள் வெகு அடர்த்தியாக நல்ல நிழலைத்
தருவனவாக இருக்கும்

நனம் தலை யாஅத்து அம் தளிர் பெரும் சினை
இல் போல் நீழல் செல் வெயில் ஒழிமார் – அகம் 343/10,11

அகன்ற இடத்தின்கண்ணே யா மரத்தின் அழகிய தளிர்களையுடைய பெரிய கிளைகளின்
இல்லின்கண் இருப்பது போன்ற நிழலில் தாம்வந்த வெயிலின் வெப்பம் ஒழிதற்கு

யா மரங்கள் குறிஞ்சி நிலப் பகுதியிலும் வளரும். இவற்றை வெட்டி, நிலத்தைச் சீர்திருத்திக் குறவர்கள்
தினைப்புனம் அமைப்பர்.
யாஅம் கொன்ற மரம் சுட்ட இயவில்

கரும்பு மருள் முதல பைம் தாள் செந்தினை
மட பிடி தட கை அன்ன பால் வார்பு
கரி குறட்டு இறைஞ்சிய செறி கோள் பைம் குரல்
படு கிளி கடிகம் சேறும் – குறு 198/1-5

யா மரத்தை வெட்டிய மரங்களைச் சுட்ட வழியில்
கரும்பைப் போன்ற அடியைக் கொண்ட பசிய தாளைக் கொண்ட செந்தினையின்
இளமையான பெண்யானையின் அகன்றுருண்ட கையைப்போன்றனவாகி, பால் நிரம்பி
கரியை எடுக்கும் குறடுபோல வளைந்த, செறிந்த குலைகளையுடைய பசிய கதிரில்
வீழ்கின்ற கிளிகளை ஓட்டுவதற்கு அங்குச் செல்வோம்;

இந்த அடிகளைக் காணும்போது யா என்பது கூந்தல்பனையாக இருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.
எனவே, இது சால் எனப்படும் ஆச்சா மரமாக (shorea robusta) இருக்க அதிக வாய்ப்புண்டு.

நீயே
——————— ————————
கேள்விக்கு இனியை காட்சிக்கு இன்னாயே
அவரே
——————————— —————
கண்ணுக்கு இனியர் செவிக்கு இன்னாரே
அதனால்
————- ————————–
ஒவ்வா யா உள மற்றே – புறம் 167/1-9

நீதான்
————————– ——————
கேட்ட செவிக்கு இனியை, கண்ணுக்கு இன்னாய்
பகைவராகிய அவர்தாம்
——————- —————————
கண்ணுக்கு இனியர், செவிக்கு இனியர் அல்லர்
அதனால்,
—————- ———————-
அவர் ஒவ்வாதன வேறு யாவை உள

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *