Skip to content

சொல் பொருள்

(வி) 1. காய்ந்துபோ, உலர்ந்துபோ, 2. வாட்டமுறு, வருந்து, 3. வற்றிச்சுருங்கு, 4. வதங்கு, மெலி,  5. தேய், 6. அழி, 7. களையிழ, 8. குறை, குன்று,

2. (பெ) வாடிய பூ,

சொல் பொருள் விளக்கம்

காய்ந்துபோ, உலர்ந்துபோ,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

dry up, pine away, grieve, dry up and wrinkle, wither, wilt, grow weak, perish, lose lustre, be diminished, decrease, faded flower

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வண் தோட்டு தெங்கின் வாடு மடல் வேய்ந்த
மஞ்சள் முன்றில் மணம் நாறு படப்பை – பெரும் 353,354

வளவிய தோட்டினையுடைய தென்னை மரத்தின் காய்ந்துபோன மடலினை வேய்ந்த,
மஞ்சளையுடைய முற்றத்தினையும் மணல் கமழ்கின்ற சுற்றுப்புறங்களையும் உடைய

கேள் அலன் நமக்கு அவன் குறுகன்-மின் என மற்று எம்
தோளொடு பகைபட்டு நினை வாடு நெஞ்சத்தேம் – கலி 68/10,11

அவன் நமக்கு உறவு அல்லன், அவனை அணுகாதீர்கள் என்று சொல்லிவிட்டு, அவனை அடையத் துடிக்கும்
தோள்களொடு பகைகொண்டு நினைவிழந்து வாட்டமுறும் நெஞ்சினையுடைய நாங்கள்

வரு படை போழ்ந்து வாய்ப்பட விலங்கி
இடைப்படை அழுவத்து சிதைந்து வேறாகிய
சிறப்புடையாளன் மாண்பு கண்டு அருளி
வாடு முலை ஊறி சுரந்தன
ஓடா பூட்கை விடலை தாய்க்கே – புறம் 295/4-8

மேல்வரும் பகைவர் படையைப் பிளந்து இடமுண்டாகக் குறுக்கிட்டுத் தடுத்து
படைகளுக்கு நடுவே நடுக்களத்தில் வெட்டுண்டு சிதைந்து வேறுபட்டுக்கிடந்த
சிறப்புடையாளனாகிய தன் மகனின் மாண்பைக் கண்டு அன்பு மிக்கு
வற்றிய முலைகள்மீண்டும் பாலூறிச் சுரந்தன
பின்னிடாத கொள்கையினையுடைய காளைக்குத்தாயாகிய இவளுக்கு

நின், வாடு பசி அருத்திய பழி தீர் ஆற்றல் – புறம் 227/7

நினது, மெய் வாடுதற்கேதுவாகிய பசி தீர்தற்கு ஊட்டிய வசையற்ற வலியையுடைய

வடவர் வாட குடவர் கூம்ப – பட் 276

வடநாட்டவர் தேய, குடநாட்டவர் (மனவெழுச்சி)குன்றிப்போக

அடங்கார் ஆர் அரண் வாட செல்லும்
காலன் அனைய கடும் சின முன்ப – பதி 39/7,8

அடங்காதாரின் கடத்தற்கரிய அரண் அழியும்படியாக முன்னோக்கிச் செல்லும்
காலனைப் போன்றவன் நீ, கடும் சினத்தோடுகூடிய வலிமையுடையவனே!

கிளி புரை கிளவியாய் எம்மொடு நீ வரின்
தளி பொழி தளிர் அன்ன எழில் மேனி தகை வாட
முளி அரில் பொத்திய முழங்கு அழல் இடை போழ்ந்த
வளி உறின் அ எழில் வாடுவை அல்லையோ – கலி 13/18-21

கிளியைப் போன்ற இனிமையான மொழியினை உடையவளே! என்னோடு நீ வந்தால்,
மழைத்துளிகள் பொழிவதால் வளர்ந்த மென் தளிர் போன்ற அழகு மிக்க உன் மேனி அழகிழந்து போகும்படி,
காய்ந்துபோன புதரில் பற்றிச் ‘சடசட’வென்று எரியும் காட்டுத்தீயினிடையே புகுந்து வந்த
அனல் காற்று உன் மேனியில் பட்டால், அந்த அழகு பொலிவிழந்துபோய்விடும் அல்லவா

வாள் வென்று வருபவர் வனப்பு ஆர விடுவதோ
நீள் கழை நிவந்த பூ நிறம் வாட தூற்றுபு
தோள் அதிர்பு அகம் சேர துவற்றும் இ சில் மழை – கலி 31/14-16

தன் வாள் திறத்தால் வெற்றியை ஈட்டிவரும் நம் தலைவரின் வனப்பினைக் காண விடுமோ,
நீண்ட கரும்பில் உயர்ந்து நிற்கும் பூவின் நிறம் குன்றிப்போக, தூறிக்கொண்டு
தோள்கள் நடுங்கி மார்பில் குறுக்காக அணைத்துக்கொள்ள தூவுகின்ற இந்தத் தூறல்

கடும் புனல் கால் பட்டு கலுழ் தேறி கவின் பெற
நெடும் கயத்து அயல்_அயல் அயிர் தோன்ற அம் மணல்
வடுத்து ஊர வரிப்ப போல் ஈங்கை வாடு உதிர்பு உக – கலி 31/1-3

முன்பு பெருகி வந்த வெள்ளம் வற்றிப்போய் வாய்க்காலளவாய் மாறி, கலங்கல் தெளிந்து, அழகுடன்
நெடிய குளங்களின் அயல்புறமெல்லாம் நுண்மணல் படிந்திருக்க, அம் மணலின்
அறல் மறையும்படி, கோலம்செய்வன போல் ஈங்கையின் வாடிய பூக்கள் கழன்று கீழே விழ

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *