Skip to content

சொல் பொருள்

(பெ) – மலைச்சரிவு, பக்கமலை,

சொல் பொருள் விளக்கம்

மலைச்சரிவு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

mountain slope

smaller mountain adjacent to a larger one

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

அடுக்கம் என்பது பக்கமலை எனப்படுகிறது.

அடுக்கம் என்ற பக்கமலை என்பது, ஒரு பெரிய மலைக்கு அருகில் அமைந்த சிறிய மலை என பால்ஸ் தமிழ் அகராதி கூறுகிறது. தமிழ்ப் பேரகராதியும் அவ்வாறே கூறுகிறது. அடுக்கம் என்ற சொல் சங்க இலக்கியங்களில் வரும் பெரும்பாலான இடங்களில், அங்கு மரங்கள் அடர்ந்து வளர்ந்திருக்கும் என்ற
குறிப்பு கிடைக்கிறது.

பலா அமல் அடுக்கம் புலாவ ஈர்க்கும் – அகம் 8/7

கழை வளர் அடுக்கத்து இயலி ஆடு மயில் – அகம் 82/9

தேக்கு அமல் அடுக்கத்து ஆங்கண் மேக்கு எழுபு – அகம் 143/5

வேய் பயில் அடுக்கம் புதைய கால்வீழ்த்து – அகம் 312/9

வழை அமல் அடுக்கத்து வலன் ஏர்பு வயிரியர் – அகம் 328/1

என்ற அடிகளால் இதனை அறியலாம். மரங்கள் அடர்ந்து வளரும் மலைப்பகுதி, ஓரளவுக்குச் சமதளப் பகுதியாக இருக்கவேண்டும்.
மேலும்,

இரும் கல் அடுக்கத்து என் ஐயர் உழுத
கரும்பு எனக் கவினிய பெருங்குரல் ஏனல் – அகம் 302/9,10

என்ற அடிகள் அடுக்கத்தில் தினைப்புனங்கள் இருந்தன என்று கூறுகின்றன. எனவே அடுக்கம் என்பது, உயரமான மலைகளுக்கு இடையே இருக்கும் அகன்ற வெளி என்பது பெறப்படுகிறது. இத்தகைய பகுதிகளில் மனிதக் குடியிருப்புகள் இருக்கும். கொடைக்கானல் மலையில், உச்சியில் இருக்கும் கொடைக்கானல் ஊருக்கும், அடிவாரப் பகுதியில் இருக்கும் கும்பக்கரை என்ற ஊருக்கும் இடையே அடுக்கம் என்ற ஊர் இருக்கிறது. கொடைக்கானல் மலையின் உயரம் சுமார் 7000 அடி. இந்த அடுக்கம் கிராமம் 4000 அடியில் அமைந்துள்ளது. இது இரண்டு பக்கங்களிலும் அமைந்த மலைச்சரிவுகளுக்கு இடையில் உள்ள சமதளப்பகுதியாக உள்ளது. (கீழே உள்ள பெரிய படம் அடுக்கம் மலைச் சரிவையும், அதன் உள் இடப்பட்டிருக்கும் சிறிய படம் அடுக்கம் என்ற ஊரையும் காட்டும்)

இதைப்போன்றே, நாமக்கல் மாவட்டப்பகுதியில் கொல்லிமலையில் அடுக்கம் என்ற ஊர் அமைந்துள்ளது. எனவே, அடுக்கம் என்பது பெரிய மலைத்தொடர்ப் பகுதியில், மலைகளுக்கு இடையே அமைந்துள்ள மனிதர் வசிக்கக்கூடிய சமதளப் பகுதி என்பது தெளிவாகிறது.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

1 thought on “அடுக்கம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *