Skip to content

சொல் பொருள்

1. (வி) 1 உடுத்து, பூணு, தரி, சூடு, 2. பூசு, 3. சரிசெய், ஒழுங்குபடுத்து, 4. பர, படர், 5. அழகுறு, 6. அழகூட்டு, அலங்கரி, 7. சூழ், 8. அருகில் இரு

 2. (பெ) 1. அழகு, 2. படை வகுப்பு,  3. அலங்காரம் 4. அணிகலன், நகை, 5. வரிசை,

சொல் பொருள் விளக்கம்

அணியப் பெறும் காரணம் பற்றி வந்த பெயர். இது சட்டை அணிதல், ஆடை அணிதல் போல எளிய முறையில் மாலைபோல அணியப் பெறும் கழுத்தணிகளைக் குறிக்க வந்ததாகலாம்; பின்னர்க் காலப் போக்கில் இவ்வொரு குறிப்பை ஒழித்து எல்லா நகைகட்கும் பொதுவான பெயராய் அமைந்திருக்கலாம். (பத்துப்பாட்டு ஆராய்ச்சி. 526.)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

wear, put on, smear, position, arrange, smooth out, spread over, be beautified, decorate, adorn, surround, be close, be near, beauty, array of army, adornment, decoration, ornament, jewel, order, row

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

1.1 பலவிதமான அணிதல்கள்.

நறு மலர் அணிந்த நாறு இரு முச்சி
குறமகள் ஆக்கிய வால் அவிழ் வல்சி – மலை 182,183

நல்ல வாசனையுள்ள மலர்களைச் சூடிய இனிய மணம் வீசும் கரிய உச்சிக்கொண்டையையுடைய
குறமகள், (தான்)ஆக்கிய அருமையாக மலர்ந்து உதிரிஉதிரியான சோற்றை

வினை வல் யானை புகர் முகத்து அணிந்த
பொன் செய் ஓடை புனை நலம் கடுப்ப – நற் 296/2,3

போர்த்தொழிலில் வல்லமையுள்ள யானையின் புள்ளிகள் நிறைந்த முகத்தில் அணிந்த பொன்னால் செய்யப்பட்ட முகபடாத்தின் வேலைப்பாட்டின் சிறப்பைப் போன்று

ஐயவி அன்ன சிறு வீ ஞாழல்
செவ்வி மருதின் செம்மலொடு தாஅய்
துறை அணிந்தன்று அவர் ஊரே இறை இறந்து
இலங்கு வளை நெகிழ சாஅய்
புலம்பு அணிந்தன்று அவர் மணந்த தோளே – குறு 50

வெண்சிறு கடுகுபோன்ற சிறிய பூக்களைக்கொண்ட ஞாழல்
செம்மையான மருதமரத்தின் வாடி உதிர்ந்த மலரோடு பரவிக்கிடந்து
தலைவனின் ஊரின் நீர்த்துறையை அழகுசெய்கிறது; இறங்கும் தோள்களை விட்டு நீங்கி ஒளிரும் தோள்வளைகள் கழலும்படி மெலிந்து தனிமைத் துயரைப் பூண்டுநிற்கின்றன அவர் தழுவிய தோள்க

பூண் அணிந்து எழிலிய வனைந்துவரல் இள முலை – பதி 65/6

பூண்கள் அணியப்பெற்று அழகு பெற்ற, வடிவமைக்கப்பட்டதைப் போன்ற இளமையான முலைகளையுடைய

அருவி ஆர்ப்ப முத்து அணிந்தன வரை – பரி 18/46

அருவி ஆரவாரத்துடன் விழுவதால் முத்துமாலை அணிந்தது போல் இருக்கிறது உன் மலை;

மழை இல் வானம் மீன் அணிந்து அன்ன – அகம் 264/1

மேகம் இல்லாத வானம் விண்மீன்களை அணிந்து விளங்கினாற் போல

கோடு ஏந்து அல்குல் தழை அணிந்து – நற் 368/3

வளைந்து உயர்ந்த அல்குலில் தழையாடை உடுத்திக்கொண்டு

புலத்தோடு அளவிய புகழ் அணிந்தோரும்
நலத்தோடு அளவிய நாண் அணிந்தோரும் – பரி 23/38,39

அறிவோடு கூடிய புகழை அணிகலனாகக் கொண்டோரும்,
கற்புடைமையோடு பொருந்திய நாணத்தை அணிகலனாகக் கொண்டோரும்

வடவர் தந்த வான் கேழ் வட்டம்
குட புல உறுப்பின் கூட்டுபு நிகழ்த்திய
வண்டு இமிர் நறும் சாந்து அணிகுவம் – அகம் 340/16-18

வடநாட்டிலுள்ளார் கொணர்ந்த வெள்ளிய நிறத்தையுடைய வட்டக்கல்லில்
குடமலையாய பொதியில்சந்தனக் கட்டையால் பிற மணப்பொருள்கலையும் கூட்டிஉண்டாக்கிய வண்டுகள் ஒலிக்கும் நறிய சாந்தினைப் பூசுவோம்

தாழ் கதுப்பு அணிகுவர் காதலர் – கலி 4/11

அவிழ்ந்துவிழுந்த கூந்தலைச் சரிசெய்வார் காதலர்

சுணங்கு அணிந்து எழிலிய அணந்து ஏந்து இள முலை – புறம் 354/8

தேமல் பரந்து உயர்ந்த அண்ணாந்து நிற்கும் இளமுலையும்

சுடர் பூ கொன்றை தாஅய நீழல்
பாஅய் அன்ன பாறை அணிந்து – மது 277,278

ஒளிவிடும் பூக்களுடைய கொன்றை பரந்த நிழலில்,
பரப்பினாற் போன்ற பாறை அழகுபெற்று,
– அணிந்து – அழகுற்று – பொ.வே.சோ உரை விளக்கம்

களைநர் இல் நோய் செய்யும் கவின் அறிந்து அணிந்து தம்
வளமையான் போத்தந்த நுமர் தவறு இல் என்பாய் – கலி 58/9,10

யாராலும் களையமுடியாத நோயைச் செய்யும் உன் அழகினை அறிந்தும், அதற்கு அழகூட்டி, தம்முடைய
செல்வச் சிறப்பின் செருக்கால் உன்னைத் தெருவில் போகவிட்ட உன் வீட்டாரின் தவறு இல்லை என்பாயோ?

கரும் கால் குறிஞ்சி சான்ற வெற்பு அணிந்து
அரும் கடி மா மலை தழீஇ – மது 300,301

கரிய காலையுடைய குறிஞ்சியின் ஒழுக்கம் அமைந்த பக்கமலைகள் சூழ்ந்து,
பெறுதற்கரிய சிறப்பினையுடைய பெரிய மலைகள் தழுவி(நிற்கும் குறிஞ்சி நிலம்),

கானல் நண்ணிய சிறுகுடி முன்றில்
திரை வந்து பெயரும் என்ப நம் துறந்து
நெடும் சேண் நாட்டார் ஆயினும்
நெஞ்சிற்கு அணியரோ தண் கடல் நாட்டே – குறு 228/2-5

கடற்கரையை ஒட்டிய சிறுகுடியின் முற்றத்தில் அலைகள் வந்து மீண்டு செல்லும் ; நம்மைப் பிரிந்து மிகவும் தொலைவிலுள்ள நாட்டில் இருந்தாலும் நம் நெஞ்சிற்கு மிகவும் அருகில் உள்ளவரின் குளிர்ந்த கடலையுடைய நாட்டுக்கு

ஊர்க்கும் அணித்தே பொய்கை – குறு 113/1

ஊருக்கு அருகில் உள்ளது பொய்கை;

அணி முலை துயல்வரூஉம் ஆரம் போல – சிறு 2

அழகிய முலையின்கண் கிடந்து அசைந்துநிற்கும் முத்துமாலை போல

அஞ்சினர்க்கு அளித்தலும் வெம் சினம் இன்மையும்
ஆண் அணி புகுதலும் அழி படை தாங்கலும் – சிறு 210,211

(தனக்கு)அஞ்சியவர்க்கு அருள்செய்தலையும், கொடிய வெகுளி இல்லாமையையும், (பகை)மறவரின் அணியில் (அச்சமின்றிப்)புகுதலையும், தோற்ற படையினரைப் பொறுத்தலையும்

வால் இழை மகளிர் விழவு அணி கூட்டும் – குறு 386/3

தூய அணிகலன்களையுடைய மகளிர் விழாவுக்குரிய அலங்காரங்களைத் தொகுக்கின்ற

வலன் உயர் மருப்பின் பழி தீர் யானை
பொலன் அணி எருத்தம் மேல்கொண்டு பொலிந்த நின்
பலர் புகழ் செல்வம் இனிது கண்டிகுமே – பதி 11/18-20

வெற்றியால் உயர்ந்த கொம்புகளையுடைய குற்றம் தீர்ந்த யானையின்
பொன்னாற் செய்த அணிகலன்களையுடைய பிடரியின் மேல் ஏறியிருந்து சிறந்து விளங்கும் உன் பலரும் புகழும் செல்வத்தை இனிதே காண்கிறோம்

அணி அணி ஆகிய தாரர் கருவியர்
அடு புனலது செல அவற்றை இழிவர் – – பரி 6/31,32

வரிசைவரிசையான போரின் முன்னணிப்படையினரைப் போல, தேவையான கருவிகளுடன், கரையை இடிக்கும் வெள்ளத்தினூடே செல்ல, தம் அணிகலன்களைக் களைவர்;

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *