அமிழ்தம் என்பது பிணியை அகற்றுவது
1. சொல் பொருள்
அவிழ்தம், அமிழ்தம் என்று ஆயது.
நோய் என்பது பிணி; பிணியாவது கட்டு; அக்கட்டை அகற்றுவது அதாவது அவிழ்ப்பது அவிழ்தம் எனப்பட்டது. அதாவது மருந்து.
2. சொல் பொருள் விளக்கம்
(1) எல்லாரையும் இன்பத்தில் அமிழ்த்தலின் அமிழ்தம். (சாமி வேலாயுதனார்) (திருக்குறள். மணிவிளக்கவுரை ஐ. 408.)
(2) அமிழ்தம் மரண நோயைத் தீர்த்தலினாலே மருந்து எனவும், உண்ணப்படுதலின் உணவு எனவும், இன்சுவைத்தாதலின் இனியது எனவும் கொள்ளப்படுகின்றது. இம் மூவகைப் பண்புகளும் அதற்குளவாதல்,
“ விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று” (குறள் 32)
“அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்” (குறள் 64)
என்னும் குறள்களிலே நன்குணரக் கிடக்கின்றது. அமிழ்தம் என்னும் சொல்லொடு ஒற்றுமையுடைய அவிழ்தம், அவிழ், தமிழ் என்னும் தூய தமிழ்ச் சொற்கள் மூன்றும் அம் முப்பண்புகளையும் முறையே உணர்த்துவனவாம். நோய் என்பது பிணி; பிணியாவது கட்டு; அக்கட்டை அகற்றுவது அதாவது அவிழ்ப்பது அவிழ்தம் எனப்பட்டது. அதாவது மருந்து.
மகரமும் வகரமும் ஒத்து நடப்பதுண்டு, ‘மிஞ்சுதல் – விஞ்சுதல்’, ‘மேய்தல் – வேய்தல்’, ‘மீறுதல் – வீறுதல்’ என்பவற்றிற்போல; அவ்வாறே ஈண்டும் அவிழ்தம், அமிழ்தம் என்று ஆயது.
இனி, அவிழ் என்னும் சொல் உணவுப் பொருளாகிய சோற்றைக் குறித்தல்
‘குறமகள் ஆக்கிய வால் அவிழ் வல்சி’
(மலைபடு. 183) என்னும் பத்துப் பாட்டடியிலும் பிறாண்டும் காணலாகும். இச்சொல் வகரம் மகரமாகி விகுதி புணர்ந்து அமிழ்தம் என்றாயது. அவிழ்தம் என்பதின் திரிபாகிய அமுது என்பது உணவைக் குறித்தல் பெருவரவிற்றாதலும் உணர்க.
இனி, தமிழ் என்பது இனிமைப் பொருட்டாதல் சிந்தாமணி முதலிய நூல்களிற் காணலாம்.
மலர் – அலர், தாய் – ஆய், புலர் – உலர்,
என்பவற்றிற்போல மொழி முதல் ஒற்றொழிந்து தமிழ்ச் சொற்கள் உண்டாதலால் இனிமை என்னும் பொருட்டாய தமிழ்மொழி முதல் ஒற்றழிந்து அமிழ் என்றாய் விகுதி புணர்ந்து அமிழ்தம் என்றாயது. இவ்வாறு அமிழ்தம் என்னும் சொல் தனக்குரிய முப்பண்புகளையும் தமிழ்ச் சொற்களால் தானே காட்டி நின்றது. (திருக்குறள். தண்ட. 11.)
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்