Skip to content

சொல் பொருள்

அரி : (கள்) பன்னாடையால் அரிக்கப்பட்டது. (அகம். 157. வேங்கட விளக்கு.)

1. (வி) 1. கறையான் போன்றவை ஒரு பொருளைச் சிறிது சிறிதாகத் தின், 2. அறுத்தறுத்து ஒலி, , 3. (கதிர்களை) அறு, 4. சல்லடை போன்றவற்றில் வடிகட்டு, 5. நீக்கு, 6. நீர் அறுத்துச் செல், 7. வெடிக்கப்பெறு, 

2. (பெ) 1. அரியப்பட்ட நெற்கதிர், 2. குழம்பினின்றும் அரித்தெடுக்கப்பட்ட மீன்துண்டங்கள்,  3. நார்க்கூடையால் வடிகட்டப்பட்ட கள், 4. வண்டு, 5. மென்மை, 6. கண் வரி, 7. பரல், 8. பொன், செல்வம், 9. அழகு, 10. சிங்கம்,  11. அரிசி, 12. காளை, 13. தவளை, 

நெற்பயிரை அரிந்து வரிசை வரிசையாகப் போடுதல் அரி, அரிசி

சொல் பொருள் விளக்கம்

பண்டைத் தமிழ் நாட்டினின்றும் அரிசியை ஏற்றுமதி செய்த கிரேக்கர்கள் அதனை ‘அருஸா’ என்றார்கள். அதுவே ஆங்கிலத்தில் ரயிஸ் (சiஉந) என்று ஆயிற்று. அரிசி என்னும் சொல் இவ்வளவு பழைமை வாய்ந்ததாயினும் பிங்கலந்தை என்ற பழைய தமிழ் நிகண்டில் அரி என்ற வடிவம் காணப்படுகின்றது. திராவிட மொழிகளுள் ஒன்றாகிய துளுவத்திலும் ‘அரி’ என்ற சொல் வழங்குகின்றது. மலையாளத்தில் இன்றும் அரிசியை ‘அரி’ என்றே குறிக்கின்றார்கள். ஆதலால் அரி என்பதே அரிசியின் ஆதிவடிவம் போலும். (தமிழ் விருந்து. 96.)

அரி; நெற்பயிரை அரிந்து வரிசை வரிசையாகப் போடுதல் அரி எனப்படும்; பின்னர் நெல்லுக்கும், நெல்லின் அரிசிக்கும் ஆகியது. அரியப்பட்டது அரி; அரிய அமைந்த வாள் கருவி அரிவாள்; அரிவாளும் கட்டையும் அமைந்தது அரிவாள்மணை. அரி = அரிசி (குமரிநாட்டு வழக்கு)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

eat away by insects like white ants, make intermittent noise; to reverberate; cut away ears of paddy, grains etc., filter by a sieve like object, remove, water flowing intermittently, be split, cut off ears of paddy, pieces of fish sieved from porridge, toddy filtered by a sieve like object, beetle, humming insect, softness, (red)lines inthe white of the eye, pebbles or gems put inside an anklet, gold, wealth,  beauty, lion, rice, bull, frog

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

காழ் சோர் முது சுவர் கண சிதல் அரித்த
பூழி பூத்த புழல் காளாம்பி – சிறு 133,134

(ஊடு)கழிகள் (ஆக்கையற்று)விழுகின்ற பழைய சுவரிடத்தெழுந்த திரளான கறையான் அரித்துக் குவித்த
மண்துகள்களில் பூத்தன – உட்துளை(கொண்ட) காளான்

நடுவு நின்று இசைக்கும் அரி குரல் தட்டை – மலை 9

கண்களுக்கு நடுவே நின்று ஒலிக்கும் அரித்தெழுகின்ற ஓசையையுடைய கரடிகையும்
– அரிக்குரல் தட்டை என்பதற்கு தவளையினது குரலையுடைய தட்டைப்பறை எனினுமாம்.
– பகுவாய்த் தேரை, தட்டைப்பறையில் ஒலிக்கும் நாடன் – குறு 193/2,2

அரி கூடு இன் இயம் கறங்க – மது 612

அரித்தெழும் ஓசையையுடைய இனிய இசைக்கருவிகள் முழங்க,

அறை கரும்பின் அரி நெல்லின் – பொரு 193

அறைத்தலைச் செய்யும் கரும்புக் கழனிகளிடத்தும், அரிதலைச் செய்யும் நெற் கழனிகளிடத்தும்

அரி புகு பொழுதின் இரியல்_போகி – பெரும் 202

(கதிர்களை)அறுப்பதற்குச் செல்லும்போது, (ஆட்களின் அரவத்தால்)நிலைகெட்டு ஓடி

நெல் அரி தொழுவர் கூர் வாள்_உற்று என – நற் 195/6

நெற்கதிர் அறுக்கும் உழவருடைய கூரிய அரிவாளால் அறுபட்டதனால்

கயிறு அரி எருத்தின் கதழும் துறைவன் – குறு 117/4

கயிற்றினை அறுத்துச் செல்லும் எருதைப் போல விரையும் கடற்கரைத் தலைவன்

அருவி ஆம்பல் நெய்தலொடு அரிந்து
செறு வினை மகளிர் மலிந்த வெக்கை – பதி 71/2,3

நிறைந்து இருக்கும் ஆம்பல், நெய்தல் ஆகிய பூக்களை நெற்கதிர்களோடு அறுத்து, வயல்வேலை செய்யும் மகளிர் மிகுந்திருக்கும் நெற்களத்தில்

நார் அரி நறவின் ஆர மார்பின் – பதி 11/15

நார்க்கூடையால் அரித்து வடிக்கப்பட்ட கள்ளினையும், ஆரங்கள் அணிந்த மார்பினையும்

கண் மடல் கொண்ட தீம் தேன் இரிய
கள் அரிக்கும் குயம் – புறம் 348/2,3

கணுவிடத்தே தோன்றும் மடலிற் கட்டப்பட்டிருந்த இனிய தேன்கூட்டிலிருந்தும் தேனீக்கள் நீங்கியதால் தேனடையிலுள்ள தேனை வடித்துக்கொள்ளும் குயவர் சேரியும்

முள் அரித்து இயற்றிய வெள் அரி வெண் சோறு – மலை 465

முள்ளை நீக்கிச் சமைத்த(குழம்பினின்றும்) அரித்தெடுத்த வெண்மையான (மீன்துண்டங்களோடு)வெண்மையான சோற்றை

மா இதழ் ஏந்திய மலிந்து வீழ் அரி பனி – நெடு 164

கறுத்த கண்ணிமைகள் சுமந்த, (அவ்விமைகள்)நிரம்பி வழியும் நிலையிலுள்ள அரித்துச்செல்லும் நீரை அரிப்பனி – அரித்து வீழும் கண்ணீர்

கயல் புரை உண்கண் அரிப்ப அரி வார – கலி 145/5

கயல் போன்ற, மைதீட்டிய கண்களிலிருந்து ஒழுகும் நீர் முகத்தில் வடிய

புண் அரிந்து
அரலை உக்கன நெடும் தாள் ஆசினி – மலை 138,139

புண்ணாம்படி வெடிக்கப்பெற்று உள்ளே உள்ள விதைகள் சிந்தப்பெற்றன நெடிய அடியையுடைய ஆசினிப்பலா மரங்கள்

அரி செத்து உணங்கிய பெரும் செந்நெல்லின் – பெரும் 473

அரியப்பட்ட கதிர்க்குவியல்கள் ஈரமற்றுப்போக உலரவிட்ட பெரிய செந்நெல்லினுடைய

முள் அரித்து இயற்றிய வெள் அரி வெண் சோறு – மலை 465

முள்ளை நீக்கிச் சமைத்த(குழம்பினின்றும்) அரித்தெடுத்த வெண்மையான (மீன்துண்டங்களோடு)வெண்மையான சோற்றை

நடுங்கு பனி களைஇயர் நார் அரி பருகி – புறம் 304/2

நடுக்கத்தைச் செய்யும் குளிரைப் போக்குவதற்காக நாரால் வடிக்கப்பட்ட நறவை உண்டு

மெல் இலை அரி ஆம்பலொடு – மது 252

மெல்லிய இலையினையும் வண்டுகளையும் உடைய ஆம்பல்பூவோடு,

ஆடு அமை பணை தோள் அரி மயிர் முன்கை – பொரு 32

அசைகின்ற மூங்கில் (போன்ற)பெருத்த தோளினையும், ஐம்மை மயிரினையுடைய முன்கையினையும்,

அரி நரை கூந்தல் செம் முது செவிலியர் – நற் 110/6

மென்மையான நரைக்கூந்தலையுடைய செவ்விய முதுமையையுடைய செவிலியர்

அரி ஏர் உண்கண் அரிவையர் ஏத்த – சிறு 215

செவ்வரி பொருந்தின அழகிய மையுண்ட கண்ணினையுடைய மகளிர் புகழ

தெள் அரி பொன் சிலம்பு ஒலிப்ப – மது 444

தெள்ளிய உள்மணிகளையுடைய பொன்னாற் செய்த சிலம்புகள் ஒலிக்கும்படி,

அரி தேர் நல்கியும் அமையான் செரு தொலைத்து – பெரும் 490

பொன் (வேய்ந்த)தேரைத் தந்தும் மனநிறைவு கொள்ளானாய், போர்களை மாளப்பண்ணி

அம் சிறை வண்டின் அரி கணம் ஒலிக்கும் – திரு 76

அழகிய சிறகையுடைய வண்டின் அழகிய திரள் ஆரவாரிக்கும்

அரி மான் வழங்கும் சாரல் பிற மான் – பதி 12/5

சிங்கங்கள் நடமாடும் மலைச்சாரலில், பிற விலங்குகளின்

கழை வளர் நெல்லின் அரி உலை ஊழ்த்து – மலை 180

மூங்கிலில் வளர்ந்த நெல்லின் அரிசியை உலையில் உதிர்த்து

பகர் விரவு நெல்லின் பல அரி அன்ன – மலை 413

(பண்டங்களை)விற்றுப் (பண்டமாற்றாகப்)பெற்ற கலப்பு நெல்லின் பலவாறான அரிசியைப் போல,

ஏற்றின் அரி பரிபு அறுப்பன சுற்றி – கலி 103/24

காளைகள் தமக்குப் பகையான காளைகளை விரும்பித் தாக்கின அரி – பகையான காளை – நச்.உரை, பொ.விளக்கம்

நடுவு நின்று இசைக்கும் அரி குரல் தட்டை – மலை 9

கண்களுக்கு நடுவே நின்று ஒலிக்கும் அரித்தெழுகின்ற ஓசையையுடைய கரடிகையும் – அரிக்குரல் தட்டை என்பதற்கு தவளையினது குரலையுடைய தட்டைப்பறை எனினுமாம்.

– பகுவாய்த் தேரை, தட்டைப்பறையில் ஒலிக்கும் நாடன் – குறு 193/2,2

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

இது ஒரு வழக்குச் சொல்

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *