Skip to content

சொல் பொருள் விளக்கம்

(வி) 1. மெலிவடை, 2. காய்ந்துபோ, 3. அசை,  4. சாய், 5. ஒதுங்கு, 6. தளர்வடை, 7. நட, 8. குழை, 9. காயமடை, கெட்டுப்போ, 10. நடுங்கி வளைந்துகொடு, 11. பின்வாங்கு

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

become thin, become dry, shake, move, incline, move to a side, be disheartened, walk, become soft, be injured, be spoilt, bend with trembling

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

ஒல்கு பசி உழந்த ஒடுங்கு நுண் மருங்குல் – சிறு 135

மெலிவடையச்செய்யும் பசியால் வருந்திய, ஒடுங்கி ஒட்டிப்போன, வயிற்றினையும்

உலவை ஓமை ஒல்கு நிலை ஒடுங்கி – நற் 252/1

கிளைகள் பரந்த ஓமை மரத்தின் காய்ந்த நிலையில் அதனை ஒட்டிக்கொண்டு

மல்கு திரை உழந்த ஒல்கு நிலை புன்னை – அகம் 250/2

மிக்க அலைகளால் வருந்திய அசையும் நிலையினையுடைய புன்னைமரத்தின்

பூ கண் புதல்வன் உறங்குவயின் ஒல்கி
வந்தீக எந்தை என்னும்
அம் தீம் கிளவி கேட்கம் நாமே – நற் 221/11-13

பூப்போன்ற கண்களையும் உடைய புதல்வன் உறங்கும்போது அவன் முன் சாய்ந்து,
“வருவாய், என் அப்பனே!” என்று கூறும்
அந்த இனிய சொற்களைக் கேட்டு மகிழ்வோம் நாம்

உறு கால் ஒற்ற ஒல்கி ஆம்பல்
தாமரைக்கு இறைஞ்சும் தண் துறை ஊரன் – நற் 300/3,4

பெரிய காற்று தள்ளுவதால் ஒதுங்கி, ஆம்பல் மலர்கள்
தாமரையின் எதிரில் சாய்ந்துநிற்கும் குளிர்ந்த துறையினையுடைய தலைமகன்

சேண் உற சென்று வறும் சுனைக்கு ஒல்கி
புறவு குயின்று உண்ட புன் காய் நெல்லி – அகம் 315/9,10

நெடுந்தூரம் சென்று நீர் அற்ற சுனைக்கண் நீர்பெறாது தளர்ந்து
புறா துளைத்து உண்ட புல்லிய காய்களையுடைய நெல்லி

பூ கரை நீலம் தழீஇ தளர்பு ஒல்கி
பாங்கு அரும் கானத்து ஒளித்தேன் – கலி 115/14,15

பூ வேலைப்பாடுடைய கரையினையுடைய நீல ஆடையைக் கையில் தூக்கிக்கொண்டு தளர்வாக நடந்து
பக்கத்திலுள்ள அழகான பூஞ்சோலைக்குள் ஒளிந்துகொண்டேன்”

நின்னை நின் பெண்டிர் புலந்தனவும் நீ அவர்
முன் அடி ஒல்கி உணர்த்தினவும் – கலி 92/55,56

“உன்னிடம் உன் பரத்தையர் ஊடல்கொண்டதனையும், நீ அவரின்
அடி முன்னே குழைந்து அவரின் ஊடலைத் தீர்த்ததனையும்

ஞாயிறு
கடுகுபு கதிர் மூட்டி காய் சினம் தெறுதலின்
உறல் ஊறு கமழ் கடாத்து ஒல்கிய எழில் வேழம்
வறன் உழு நாஞ்சில் போல் மருப்பு ஊன்றி நிலம் சேர – கலி 8/2-5

ஞாயிறு
மிகுந்த அனல் பரக்கும் கதிர்களைச் செலுத்திக் காய்கின்ற வெப்பத்தால் சுடுதலால்
வண்டுகள் நெருங்கிச் சேர, ஒழுகுகின்ற கமழும் மதநீரையுடைய, இப்பொழுது கெட்டுப்போன அழகையுடைய யானை,
வறண்ட நிலத்தை உழுகின்ற கலப்பையைப் போல் தன் கொம்புகளை ஊன்றி நிலத்தில் கிடக்க,

நிறப்படைக்கு ஒல்கா யானை மேலோன்
குறும்பர்க்கு எறியும் ஏவல் தண்ணுமை – புறம் 293/1,2

குத்துக்கோலுக்கு நடுங்கி வளையாத யானையின் மேலிருப்போன்
பகைவருக்காக முழக்கும் ஏவுதலையுடைய பறை ஒலி

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *