சுள்ளி என்பதும் பேரியாறு என்பதும் ஓர் யாற்றின் பெயர்களே
1. சொல் பொருள்
(பெ) 1. ஒரு மரம், பூ, 2. சேரநாட்டிலுள்ள ஓர் ஆறு, பேரியாறு
(பெ) 1. சுள்ளி என்பது சிறுவிறகு; குச்சி
(பெ) அதன் சிறுமை கருதிச் சிறுமியைச் சுள்ளி என்பது மதுரை வட்டார மிதி இழுவையர், குதிரை வண்டியர் வழக்காக உள்ளது
2. சொல் பொருள் விளக்கம்
சுள்ளியம் பேரியாற்று – பொ. வே. சோமசுந்தரனார் உரை – சுள்ளி என்பதும் பேரியாறு என்பதும் ஓர் யாற்றின் பெயர்களே என்க, இதனை இக்காலத்தார் பெரியாறு என்று வழங்குவர், வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை – சுள்ளி பேரியாறு என்பன சேரநாட்டு முசிறி மருங்கு கடலிற் கலக்கும் ஓர் யாற்றின் பெயர்கள்
அயிரிமலைமேல் தோன்றி , அம்மலைமேல் அயிரியாறு என்று பெயர் பெற்ற ஆறு , தரையில் இழிந்து மேற்கு நோக்கிப் பாய்ந்து அரபிக் கடலில் விழுந்தது . தரையில் பாய்ந்தபோது அந்த ஆற்றுக்குப் பேரியாறு என்று பெயர் . இதைப் பெரியாறு என்றும் வழங்குவர் . பெரியாற்றுக்குச் சுள்ளி ஆறு என்னும் பெயர் உண்டு. பெரியாறு வரலாற்றுச் சிறப்புடையது . பெரியாறு மலைமேலிருந்து தரையில் இழிந்து சம நிலத்தில் பாய்கிற இடத்தில் , சேரன் செங்குட்டுவன் ஆண்டுதோறும் வேனிற்காலத்தில் பாசறை அமைத்து , சுற்றத்தோடு அங்குத் தங்கியிருந்து வேனிற் காலத்தைக் கழித்தான் .
பெரியாற்றுக்குச் சுள்ளியாறு என்று தமிழில் வேறு பெயர் இருந்ததையறிவோம் . சூர்ண்ணி ஆறு என்னும் வடமொழிப் பெயர் , சுள்ளி என்னும் சொல்லிலிருந்து உண்டானது போலும். சுள்ளி என்னும் பேரியாறு கடலில் கலந்த புகர் முகத்தில் ஆற்றின் வடகரைமேல் கடற்கரைப் பக்கத்தில் முசிறி என்னும் பேர்போன துறைமுகப்பட்டினம் இருந்தது . கிரேக்க யவனர் இந்தத் துறைமுகப்பட்டினத்தை முசிரிஸ் என்றும், வட மொழிக்காரர் மரீசிபட்டணம் என்றும் கூறினார்கள் .
சுள்ளிப்பேரியாறு கடலில் கலந்த புகர்முகத்தில் முத்துச் சிப்பிகள் விளைந்தன . அந்தச் சிப்பிகளிலிருந்து முத்துக்கள் எடுக்கப்பட்டன. இந்தச் சேரநாட்டு முத்தினைக் கௌர்ணெயம் என்று கௌடல்லியரின் அர்த்தசாத்திரம் கூறுகிறது
முசிறியை மிரிசி என்று கூறியது போலவே வடமொழியாளர் சுள்ளி ( பேரியாறு ) யாற்றைச் சூர்ணி என்று கூறினார்கள் . சூர்ணி ஆற்றில் உண்டான முத்து சௌர்ணெயம் என்று பெயர் பெற்று , பிறகு அந்தச் சொல் கௌர்ணெயம் என்றாயிற்று .
இருந்த முசிறித் துறைமுகமும் பட்டினமும் அழிந்து போயின. பிறகு , பிற்காலத்தில் வஞ்சிமா நகரத்தின் பெரும்பகுதி ஊர்கள் மறைந்து போயின. இந்த நகரங்களின் அழிவுக்குக் காரணமாக இருந்தது சுள்ளி ஆறாகிய பேரியாறுதான் . மேற்குத் தொடர்ச்சி மலையில் அயிரிமலை மேல் தோன்றி , தரையில் இழிந்து நாட்டில் பாய்ந்து , கடலில் புகுந்த பேரியாறு , பல நூற்றாண்டுகளாக மணலை அடித்துக் கொண்டு போய் கடலுக்கு அருகில் இருந்த துறைமுகத்தைத் தூர்த்துக்கொண்டு வந்தது . துறைமுகத்தைத் தூர்த்துக் கொண்டிருந்தது மட்டுமல்லாமல் , இந்த ஆறே தூர்ந்து கொண்டு ஆழமில்லாமற் போயிற்று . முசிறித்துறைமுகம் மணல் தூர்ந்து ஆழமில்லாமற் போனபடியால் , யவனரின் பெரிய கப்பல்கள் துறைமுகத்துக்குள் வரமுடியாமற் போனதை முன்னமே கண்டோம்
சுள்ளி என்பது சிறுவிறகு; குச்சி. அதன் சிறுமை கருதிச் சிறுமியைச் சுள்ளி என்பது மதுரை வட்டார மிதி இழுவையர், குதிரை வண்டியர் வழக்காக உள்ளது.
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
- Periyar River, 2. Ceylon ebony, Disopyros ebenum; 3. Porcupine flower, Barieria Prionitis
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
எரி புரை எறுழம் சுள்ளி கூவிரம் – குறி 66
சேரலர்
சுள்ளி அம் பேரியாற்று வெண் நுரை கலங்க
யவனர் தந்த வினை மாண் நன் கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும் – அகம் 149/8
சேர அரசர்களின்
சுள்ளி என்னும் அழகிய பெரிய ஆற்றின் வெண்மையான நுரை கலங்கும்படி
யவனர் ஓட்டிவந்த தொழில் திறத்தால் மாட்சிமைப்பட்ட நல்ல மரக்கலம்
பொன்னுடன் வந்து மிளகோடு மீண்டு செல்லும்
இதை அவர் நிகழ்காலத்தில் கூறியிருக்கிறபடியால் ,அவருடைய காலத்தில் தாம் நேரில் கண்டதையே கூறியுள்ளார் என்பது தெரிகின்றது .
சுள்ளி என்று பெயர்பெற்றிருந்த பெரியாறு கடலில் கலக்கிற இடத்தில் முசிறித் துறைமுகம் இருந்தது . சுள்ளியாற்றின் வெள்ளத்தில் அடித்துக் கொண்டுபோன மண், துறைமுகத்தில் படிந்து தூர்ந்துவிட்டபடியால், முசிறித் துறைமுகத்தில் யவனரின் பெரிய நாவாய்க் கப்பல்கள் வந்து தங்குவதற்கு ஏற்ற ஆழம் இல்லாமலிருந்தது . ஆகவே , யவனக் கப்பல்கள் துறைமுகத்துக்கு அப்பால் கடலில் நின்றன . சிறிய படகுகளில் மிளகை ஏற்றிக்கொண்டு போய் யவனக் கப்பல்களில் இறக்கி அதற்கு ஈடாகப் பொன் நாணயங்களை அந்தக் கப்பல்கள் கொண்டு வந்தன என்று அக்காலத்தில் பேர் பெற்றிருந்த பரணர் என்னும் புலவர் கூறுகிறார் .
‘மீன் நொடுத்து நெல் குவைஇ,
மிசை அம்பியின் மனை மறுக்குந்து,
மனைக் குவைஇய கறி மூடையால்,
கலிச் சும்மைய கரை கலக்குறுந்து;
கலம் தந்த பொற் பரிசம் 5
கழித் தோணியான், கரை சேர்க்குந்து;
மலைத் தாரமும் கடல் தாரமும்
தலைப் பெய்து, வருநர்க்கு ஈயும்
புனல்அம் கள்ளின் பொலந் தார்க் குட்டுவன்
முழங்கு கடல் முழவின் முசிறி அன்ன – புறநானூறு 343
இந்தப் புலவரும் இந்த வாணிபத்தை நிகழ்காலத்தில் கூறுவது காண்க.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்
அருமை, நன்றி.