Skip to content
செந்நாய்

செந்நாய் என்பது சிவப்பு நிற உடலைக் கொண்ட காட்டுநாய்

1. சொல் பொருள்

(பெ) சிவப்பு நிற உடலைக் கொண்ட காட்டுநாய்

2. சொல் பொருள் விளக்கம்

சங்க இலக்கியத்தில் செந்நாயைப் பற்றிச் சில செய்திகள் காணப்படுகின்றன . அச்செய்திகள் விலங்கு நூலார் கண்டறிந்த செய்திகளோடு ஒத்திருப்பது மிகவும் வியப்பைத் தருகின்றது . செந்நாய் என்ற சொற்பெயரே இதன் நிறத்தைக் குறித்துத் தோன்றியது . செந்நாயின் மேல்தோல் சிவப்பு நிறமாக ( Distinctive Red Coat ) இருப்பதாக விலங்கு நூலார் கூறுவர் . செந்நாய் உருவில் வீட்டு நாயைப்போல இருக்கும் . இதன் பற்கள் மிகவும் கூர்மையானவை என்று கூறுவர். இந்தக் கூர்மையான பற்களால் மான் முதலிய விலங்குகளின் சதையை அப்படியே கவ்விக் கிழித்து விடுமாம் . இதன் கூரிய பற்களைப்பற்றிச் சங்க நூல்களில் சில செய்திகளைக் காணலாம் .

அரந்தின் ஊசித் திரள் நுதி அன்ன
திண் நிலை எயிற்ற செந்நாய் எடுத்தலின் (அகம் , 199 )

பொன்வார்ந் தன்ன வைவால் எயிற்றுச்
செந்நாய் வெரீஇய புகருழை ஒருத்தல் ( அகம் , 219 )

செந்நாய்
செந்நாய்

அரத்தால் தீட்டப்பட்ட இரும்பு ஊசிகளைத் திர வைத்தாற் போன்ற திண்மையான நிலையையுடைய பற்களைக்கொண்ட செந்நாய் என்று கூறுவதை நோக்குக . மற்றும் ” வள்ளெயிற்றுச் செந்நாய் , ( அகம் . 53) , வையெயிற்றுப் பிணவு ( ஐங்குறுநூறு, 323 ) என்றும் இதன் கூரிய பற்கள் விளக்கப்பட்டுள்ளன. செந்நாய்களுக்கு மிகவும் வலிமை பொருந்திய பற்கள் ( Powerful equipment of teeth ) உண்டென்று விலங்கு நூலார் கூறுவர் . செந்நாய் பொதுவாகக் காடுகளில் தான் காணப்படும் . அதனால் இதைக் காட்டுநாய் என்றழைப்பர் . தற்காலத்தில் மைசூர்ப் பகுதிகளில் காணப்படும் காடுகளில் செந்தாய் வாழ்கின்றது . அரிய சுரத்தில் காணப்பட்டதாகவும் ( ஐங்குறு நூறு , 297 , 354 ; நற்றிணை ,43) , கானகத்தில் காணப்பட்டதாகவும் ( அகம் . 199) , காட்டில் ( நற்றிணை , 103 ; ஐங்குறு நூறு, 354 ) இருப்பதாகவும் சங்க நூல்களில் செந்நாயைப்பற்றிச் செய்திகள் வருகின்றன . செந்நாயைப்பற்றிய ஒரு முக்கியமான செய்தி சங்க நூலொன்றில் வருவது மிகுந்த வியப்பை அளிக்கின்ஈறது . இச்செய்தி பெரும்பாணாற்றுப்படையில் வருகின்றது. செந்நாய் , புலி , சிறுத்தையைப்போன்ற பெரிய விலங்கு அன்று . சிறியதாக இருப்பதால் எளிதாகப் பிற விலங்குகளைக் கொன்று உண்ண முடியாது .

செந்நாய்கள் கூட்டமாகச் சேர்ந்து ஒற்றுமையாகக் கூடிப் பிற விலங்குகளை வேட்டையாடுகின்றன . இம்முறையாகக் கூட்டமாகக் வேட்டையாடுவதை விலங்கினங்களிலே செந்நாயின் தனித்த , அரிய தன்மையாக விலங்கு நூலார் கூறுவர் . கூட்டமாகச் சேர்ந்து வேட்டையாடுவதால் செந்நாய்க்கு அதன் வன்மை மிகுகின்றது . பசியுடன் வேட்டையாடக் கிளம்பிய செந்நாய்க் கூட்டத்தைக் காட்டில் எந்த வன்மை பொருந்திய கொடிய விலங்கும் எதிர்க்க முடியாது . புலி , சிறுத்தை , கரடியைக்கூடச் செந்நாய்க் கூட்டங்கள் கொன்று தின்று விடும் . ( Panther and bear and even tigers have been attacked and killed by wild dogs ). தனித்த புலி தனித்த செந்நாயைவிட மிக வலிமை வாய்ந்ததாக இருப்பினும் செந்நாய்க் கூட்டத்தின் ஒற்றுமையான வலிமையின் முன் பயனற்றதாகி விடுகின்றது. செந்நாய்கள் கூட்டம் கூட்டமாக ( hunting in packs ) வேட்டையாடும் தன்மையுடையவை என்பது பற்றிய குறிப்பான செய்தி பெரும்பாணாற்றுப்படையில் வருகின்றது .

செந்நாய்
செந்நாய்


யானை தாக்கினு மரவுமேற் செலினு
நீனிற விசும்பின் வல்லேறு சிலைப்பினுஞ்
சூன்மகள் மாறா மறம்பூண் வாழ்க்கை
வலிக்கூட் டுணவின் வாட்குடிப் பிறந்த
புலிப்போத் தன்ன புல்லணற் காளை
செந்நா யன்ன கருவிற் சுற்றமொடு
கேளா மன்னர் கடிபுலம் புக்கு
நாளா தந்து நறவு நொடை தொலைச்சி – வரிகள்.134-141

தமது வலிமையால் கூட்டமாகக் கொள்ளை கொண்டு செல்லும் குடியிற் பிறந்த , செந்நாய்க் கூட்டம் போன்ற சுற்றமொடு பகைவர்களுடைய நிரையைக் கவர்ந்த காளையைப்பற்றிப் பெரும்பாணாற்றுப்படை கூறுகின்றது . யானையே இடையில் தாக்கினும் , பாம்பு மேலே ஏறினும், இடிவிழுந்தாலும் மறத்தைவிடாத வாழ்க்கையையுடைய வலிமையாகக் கூடி உணவைக் கைக்கொள்ளும் குடியில் பிறந்த அக்குடியின் தலைவன் புலிப்போத்திற்கு உவமிக்கப்பட்டிருகின்றான் . தலைவ னுடைய தனித்த வலிமையை நோக்கி அவனைப் புலிப்போத்திற்கு உவமித்த புலவர் , தலைவன் பிறந்த குடியை ” மறம்பூண் வாழ்க்கை வலிக்கூட் டுணவின் வாட்குடி ” என்று விளக்குகிறார் . இக்குடியில் வந்த காளையின் சுற்றத்தாரையே , காளையைத் தலைமையாகக் கொண்டு பகைவரின் நாட்டில் புகுந்து நிரை கவரும் சுற்றத்தாரையே , செந்நாய்க் கூட்டத்திற்கு ஒப்பிட்டு செந்நாயன்ன கருவிற் சுற்றமொடு என்று விளக்குகிறார் . தான் குறித்த விலங்கின் மேலே செல்கின்ற நாய் அதனைத் தப்பாமற் கொள்ளுமாறு போன்ற ” என்று இங்கு உரையாசிரியர் நச்சினார்க்கினியர் விளக்கம் கூறியிருக்கின்றார் . கூட்டமாக வேட்டையாடும் செந்நாய்க் கூட்டத்திற்கு வலிமையாக , கூட்டமாக உணவைக் கவரும் குடியில் பிறந்த காளை யின் சுற்றத்தாரை ஒப்பிட்டது மிக மிகப்பொருத்தமே .

அறிவும் பொருட் செறிவும் வாய்ந்த உவமை . செந்நாய் கூட்டமாக வேட்டையாடும்போது எந்தத் தடையும் அதன்முன் நில்லாது . புலி , கரடி முதலிய கொடிய விலங்குகளும் செந்நாய்க் கூட்டத்துக்கு அஞ்சும் . இத்தகைய செந்நாய்க் கூட்டம் மிகப் பயங்கரமானதும் கொடுமை வாய்ந்ததுமாகும் . இத்தகைய செந்நாய்க் கூட்டத்திற்கு யானை தாக்கினும் , பாம்பு மேலேறினும் , இடி மேலே விழுந்தாலும் அஞ்சாது மறம் பூண்ட வாழ்க்கையையுடைய வலிக்கூட்டுணவின் வாட்குடிச் சுற்றத்தை ஒப்பிட்டுக்கூறிய நுண்ணிய , செறிந்த புல மையைப் போற்றாமல் இருக்கமுடியாது . தான் குறித்த விலங்கின் மேல் தப்பாமற் சென்று அதைத் தட்டாமல் கொள்ளும் விலங்கு விலங்கினத்தில் செந்நாய்க் கூட்டமன்றி வேறில்லை என்பது விலங்கு நூலார் கண்ட உண்மை . அதுபோல் காளையைத் தலைமையாகக் கொண்ட சுற்றத்தாரும் கூட்டு வலிமையால் குறித் ததைத் தப்பாமல் எந்த இடையூறு வரினும் அஞ்சாது கொள்வர் .

செந்நாய்
செந்நாய்

செந்நாயும் தன் உணவைக் கூட்டுவலிமையினால் பெறுகின்றது என்பது ங்கு நூலார் கண்ட அரிய உண்மை . செந்நாய் பெறுவதும் வலிக் கூட்டுணவு . காளையின் சுற்றத்தார் பெறுவதும் வலிக் கூட்டுணவு . எவ்வளவு பொருத்தமான ஒப்புமை ! இங்குச் செந்நாயின் அரிய குணத்தை உணர்ந்து சங்கப் புலவர் கையாண்ட அழகிய பொருத்தமான ஒப்பு உணராதபடி செந்நாய் என்ற சிறந்த பாடத்தை விடுத்து நச்சினார்க்கினியர் சென்னாய் என்று கொண்டு செல் + நாய் என்று பொருட்சிறப்பின்றி , பொருத்தமின்றி உரை யெழுதினார் . செந்நாய் என்ற சிறந்த பாடம் அடிக்குறிப்பில் காணப்படுகின்றது . செந்நாயன்ன கருவிற் சுற்றம் என்று கொள்ளுங்கால் , பெறப்படும் பொருட் பொருத்தமும் சென்னாயன்ன கருவிற் சுற்றம் என்று கொள்ளுங்கால் வெளியாவ தில்லை . வலிக்கூட்டுணவின் ‘ வாட்குடி என்பது சென் னாய்க்குப் பொருந்தாது . வீட்டு நாய்கள் வேட்டையாடுவது தங்களுடைய உணவிற்கு அன்று . இயற்கையில் அவை கூட்டமாக வேட்டையாடும் குணமுடையனவும் அல்ல . வேட்டைச் செந்நாய் என்றே சங்க நூல்களில்

அடைமொழி கொடுத்துச் செந்நாயை அழைப்பதைக் கவனிக்க வேண்டும் . இந்த அடை மொழி வீட்டு நாய்க்கு வழங்கவில்லை . செந்நாய் வேட்டையாடுவதைச் சங்கப் புலவர்கள் நன்கு அறிந்திருந்தனர் என்று தெரிகின்றது . செந்தாயைப்பற்றி வேறு செய்திகளையும் சங்க நூல்களில் பாடிய புலவர்கள் செந்நாயைப் பற்றிய இச்செய்தியை அறிந்திருக்க முடியாது என்று எவரும் கூறமுடியாது . இயற்கைச் செய்திகளைப் பற்றிய அறிவு மிகவும் குறைந்த பிற்காலத்தில் உண்மையான பொருளை உணரமுடியாததால் அக்கால அறிவிற்கேற்பச் சென்னாய் என்ற பாடத்தைச் சிறப்பாகக் கொண்டு உரை கண்டனர் . செந்நாய்கள் கூட்டமாக வேட்டையாடும்போது புலி முதலிய கொடிய விலங்கிற்கும் அஞ்சாது . புலி தனது முயற்சியால் கொன்று உண்ண விருக்கும் விலங்குணவைக் கூடச் சில சமயங்களில் செந்நாய்கள் பறித்துக் கொள்வதுண்டு என்று விலங்கு நூலார் கூறுகின்றனர் . சில சமயங்களில் புலிக்கும் செந்நாய்க்கும் பூசலேற்பட்டு , புலியைச் செந்நாய்கள் கொன்று உண்பதுண்டு என்றும் விலங்கு நூலறிஞர் சிலர் கூறுகின்றனர் . புலியைக் கொன்று செந்நாய்கள் உண்பதுண்டு என்பதைத் தமிழர் அறிந்திருந்தனர் என்பது அரிதாக வழங்கும் ஒரு பழமொழியிலிருந்து தெளிவாகின்றது . ” புல்லைத் தின்னும் மாடு உதவுகிறதுபோலப் புலியைத் தின்னும் செந்நா யுதவுமோ” என்ற பழமொழியிலிருந்து செந்நாய் புலியையும் தின்னும் என்பதை உணர்ந்தனர் என்பது தெளிவு . * திராவிடப் பழங்குடி மக்களான பைகர்கள், பார்வதி முதலில் புலியைப் படைத்தாள் , பின்னர் அதைத் துரத்த மகாதேவன் செந்நாய்களைப் படைத்தார் என்று கதை கூறுவர் . புலி செந்நாய்களுக்கு அஞ்சிப் பார்வதியிடம் தஞ்சம் புகுந்தன வென்பர் .

செந்நாய்
செந்நாய்

நெடுங்கை வன்மான் கடும்பகை யுழந்த
குறுங்கை யிரும்புலிக் கோள்வ லேற்றை
பைங்கட் செந்நாய் படுபதம் பார்க்கும்
ஆரிரு ணடுநாள் வருதி – குறுந்தொகை , 141

யானையுடன் போரிட்ட ஆண்புலியின் படுபதத்தைப் பசியுடைய செந்நாய் பார்க்கும் என்று குறுந்தொகை கூறுவதைக் கவனிக்கவும் . புலி தனக்காக அடித்த விலங்குணவைச் செந்நாய்கள் புலியிடமிருந்து கைப் பற்றும் தன்மை விலங்கு நூலார் கூறியதேயுடன் போரிட்ட புலியைச் செந்நாய்கள் பார்த்திருந்தன என்று கூறுவதைக் கவனிக்க வேண்டும் . இது விலங்கு நூலறிஞர் கூறும் செய்தியோடு ஒத்திருப்பது வியப்பிலாழ்த்துகிறது . புலி தான் கொன்ற விலங்கை உண்ணப் போகும்போது செந்நாய்கள் கூட்டமாக நெருங்குவதையும் புலி அக் கூட்டத்தின் வலிமைக்குப் பயந்து கொன்ற விலங்கை விட்டுவிட்டு ஓடுவதையும் சில விலங்கு நூலறிஞர்கள் கண்டறிந்து கூறியிருக்கின் றனர் . சங்க காலத்திலேயே செந்நாயின் , புலியையும் கொல்லக்கூடிய கொடிய வலிமையை உணர்ந்தனர் என்பது தெரிகின்றது .

இது பிற்காலத்துப் பழமொழி யில் வழங்குவது வியப்பினும் வியப்பே .செந்நாய்கள் வேட்டையாடும்போது மிகக்கொடிய தன்மை வாய்ந்தவை என்று விலங்கு நூலார் கூறுவர். செந்நாய்கள் வேட்டையாடும்போது தம்முடைய தேவைக்கு மிகுதியாக மான் முதலிய விலங்குகளைக் கொன்று அழித்துவிடும் . மற்றும் புலியைப் போன்று தாம் கொன்ற விலங்கை மறைத்து வைத்து மிச்சப் படுத்திச் சில நாட்களுக்கு உணவாக உண்பதில்லை . செந்நாய்கள் காட்டிலுள்ள மான் முதலிய விலங்குகளை வீணாக அழிப்பதினால் செந்நாய்களின் எண்ணிக்கை காடுகளில் மிகாதபடி கானப் பாதுகாவலர் கவனித்துக் கொள்வர் . செந்நாய்களைச் சுட்டுக்கொல்வர் . செந் நாய்கள் உண்ணும் தேவைக்குமேல் அளவு மீறிப் பிற விலங்குகளைக் கொல்வதால் அவைகள் உண்ணாமல் ஒழித்த விலங்குத் தசைகள் காட்டில் கிடக்கும் . இதைச் சங்க நூல்கள் குறிப்பிடுகின்றன .

செந்நாய்
செந்நாய்

என்றூழ் நீடிய குன்றத்துக் கவாஅன்
ஓய்பசிச் செந்நா யுயங்குமரை தொலைச்சி
யார்த்தன வொழித்த மிச்சில் சேய்நாட்
டருஞ்சுரம் செல்வோர்க்கு வல்சி யாகும் ( நற்றிணை , 43)

வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சில்
குளவி மொய்த்த அழுகற் சின்னீர்
வளையுடைக் கைய ளெம்மொடு உணீஇயர் ( குறுந்தொகை , 56 )

வேட்டச் செந்நாய் வேண்டா தொழித்த
காட்டுமா வல்சியர் கரந்தை பாழ்பட
( பெருங்கதை , உஞ்சைக் காண்டம் , காதை 52 : 75 – 76 வரிகள் )

மேலே காட்டிய பாடல்களில் வேட்டையாடிய செந்நாய்கள் வேண்டாமல் விட்ட மிச்சத்தைச் சிலர் உண்பர் என்று கூறுவதைக் கவனிக்க வேண்டும் . இன்றும் காட்டிலே வாழும் சில பழங்குடி மக்கள் செந்நாய்கள் கழித்த மிச்சத்தை உண்ணும் வழக்கமுடையவர் என்று அறிஞர்கள் கூறுவர் . செந்நாய்கள் வேட்டையாடும்போது மானையோ பன்றியையோ பின் பற்றித் துரத்திச் செல்லும் . அச்சமயத்தில் எப் பொழுதும் ஒரு நாய் முன்னிருந்து தலைமையாகச் சென்று ( Leading ) பின்னால் வரும் நாய்களுக்கு எப்படி , எங்கு மடக்குவது , எப்படித் தாக்குவது என்பதற்குரிய வழிகளைக் காட்டும் . இறுதியில் மடக்கினவுடன் அந்த மானையோ, பன்றியையோ அரைவட்டமாகச் ( Semi – Circle ) சூழ்ந்து மேலே பாய்ந்து வாயில் அகப்பட்ட தசைப்பாகத்தைக் கிழித்துப் பிய்த்துவிடும் .

ஆதலின் செந்நாயிடம் அகப்பட்ட விலங்கு உயிரோடு இருக்கும் போதே கழுத்தோ, தொடையோ அப்படியே சதையோடு பிடுங்கப்பட்டுக் குற்றுயிரும் குலையுயிருமாகச்சாகும் . புலி முதலிய விலங்குகள் பிற விலங்குகளைக் கொன்று சாகடித்துப் பின்னர் உண்ணும் . ஆனால் செந்நாய்கள் மான் முதலிய விலங்குகளை உயிருடன் உண்ணும் கொடுமை மிகுந்தவை . பெரும்பாலும் தண்ணீர் திட்டாக ( Pool of water ) இருக்கும் இடத்தில் மான் முதலிய விலங்குகளை மடக்கித் தாக்குவது செந்நாய்கள் கையாளும் வேட்டை முறையாகும் . குறுந்தொகைப் பாடலில் செந்நாய்கள் வேட்டையாடிய மிச்சம் சின்னீரில் அழுகிக் கிடந்ததாகக் கூறுவதை நோக்குக .

செந் நாய்
செந்நாய்

வையெயிற்று
ஊனசைப் பிணவின் உறுபசி களை இயர்
காடுதேர் மடப் பிணை யலறக் கலையின்
ஒடுகுறங்கு அறுத்த செந்நா யேற்றை
வெயில்புலந் திளைக்கும் வெம்மைய பயில்வரி ( அகம். 285 )

ஓடும் கலைமானின் தொடையை அறுத்த செந்நாய் என்று கூறுவதைக் கவனிக்கவும் . செந்நாய்கள் கலை மானை மடக்கிக் கொண்டு அதன் தசையைக் கடித்து , பிய்த்துத் தின்றுவிடும் தன்மையுடையவை என்று விலங்கு நூலார் கூறுவர் . ( I have heard of instances when a sambur, followed relentlessly by a pack for several hours has at length succumbed when its entrails were trai ling in the ground ) குடல்தொங்கி ஓடிய கடமானைச் செந் நாய்கள் கொன் றதை விலங்கு நூலாசிரியர் ஒருவர் ( Augustus Somerville in the passing of Forest Gods ) கூறியிருப்பதைக் கவனிக்கலாம் . தொடையை அறுத்தால் குடல் தொங்குவது இயற்கையே . அகப்பாடல் கூறுவது அரிய உண்மைச் செய்தியே யாகும் . செந்நாய்கள் பெரும்பாலும் விரும்பி வேட்டை யாடி உண்பது மான்களும் காட்டுப் பன்றிகளுமே என்று விலங்கு நூலார் கூறுவர் .

செந்நாய்கள் ஒரு காட்டில் மிகுந்து விட்டால் மான்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிடும் என்று கூறுவர் . செந்நாய்கள் காட்டுப் பன்றியையும் , புள்ளிமானையும் , மரையினத்தையும் ( நற்றிணை , 43 ) கடமானையும் கொல்வதாகச் சங்கப் பாடல்களில் கூறப்பட்டிருக்கின்றது . விலங்கு நூலாரும் இவ் விலங்குகளையே பெரும்பாலும் செந் நாய்கள் கொன்று உண்பதாகக் கூறுகின் றனர் . தென்னிந்தியாவில் செந்நாய்கள் வறட்சியான வெயில் காலத்தில் மான் முதலிய விலங்குகள் போதிய அளவு கிடைக்கா விட்டால் பசியால் வாடும் . அக் காலத்தில் விலங்குணவிற்கு வழியின்றி வில்வமரத்தின் , கருவிளாமரத்தின் உருண்டையான கீழே விழுந்து கிடக்கும் பழங்களை விரும்பி உண்பதாக விலங்கு நூலார் கண்டு பிடித்திருக்கின்றனர் . அகநானூற்றில் வரும் ஒரு செய்தி இது சார்பாக ஆராயத்தக்கது . செந்நாய்களுக்குப் பயந்த கலைமான் கருவிளாவின் பழத்தில் இருக்கும் துளைவழியாகச் சென்ற காற்றின் ஓசையைக் கேட்டுக் கோவலரின் இசையென்று நினைத்ததாகக் கூறுகின்றது .

பொன்வார்ந் தன்ன வைவால் எயிற்றுச்
செந்நாய் வெரீஇய புகருழை ஒரு தல்
பொரியரை விளவின் புன்புற விளை பழம்
அழலெறி கோடை தூக்கலிற் கோவலர்
குழலென நினையும் நீரில் நீளிடை ( அகம் , 218 )

இதில் கூர்ந்து கவனிக்க வேண்டியது செந்நாயையும் கலைமானையும் விளாம்பழத்தையும் இணைத்துப் பாடியது . நீரில்லா நீளிடையில் விளாமரத்தின் பழத்தின் துளைவழியாக வரும் ஓசையைக் கேட்டுக் கோவலர் ஊதும் இசையென்று செந்நாய்க்குப் பயந்த கலைமான் பாதுகாப்புக்காக அங்கு வருகின்றது . ஆனால் அவ்விடம் பாதுகாவலாக அமையவில்லை . காரணம் செந்நாய் இருத்தலின் . இதிலிருந்து செந்நாய்க்கும் விளாமரத்தின் பழங்கள் விழுந்த இடத்திற்கும் இருந்த நெருங்கிய தொடர்பைச் சங்ககாலப் புலவர்கள் அறிந்திருந்தனரோ என்ற ஐயம் எழுகின்றது . செந்நாய் களுக்குப் பயந்து ஓடும் மான்கள் மனிதர் இருக்கும் இடத்தில் தஞ்சம் புகுவதுண்டு என்பதையும் விலங்கு
நூலார் கண்டுள்ளனர் . மான்களையும் பன்றிகளையும் செந்நாய்கள் வேட்டையாடும் செய்திகள் சங்க நூல்களில் வருமிடங்களை ஆராய்வோம் :

செந் நாய்
செந்நாய்

சிலம்பி வலந்த வறுஞ்சினை வற்றல்
அலங்கல் உலவை அரிநிழல் அசைஇத்
திரங்குமரல் கவ்விய கையறு தொகுநிலை
அரந்தின் ஊசித் திரள் நுதி அன்ன
திண்ணிலை எயிற்ற செந்நாய் எடுத்தலின்
வளிமுனைப் பூளையின் ஓய்யென்று அலறிய
கெடுமான் இனநிரை தரீஇய கலையே
கதிர்மாய் மாலை ஆண்குரல் விளிக்குங்
கடல்போல் கானம் பிற்படப் பிறர் போல் ( அகம் , 199 )

மேற்காட்டிய பாடலில் ஒரு பெருங் காட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியைப் படம் பிடித்தாற்போன்று புலவர் கூறியிருக்கின்றார் . தொகுதியாக இருந்த புள்ளி மான்கள் அலறி அங்குமிங்குமாக ஓடிச் சிதறுகின்றன . பூளைப்பஞ்சு காற்றடித்துச் சிதறுவதுபோல் சிதறி ஓடின . அந்தச் சிதறிய மந்தையைக் கூட்டுவதற்காக மந்தையிலிருந்த கலைமான் குரல் விளித்து அழைக்கின்றது . இக் காட்சியை விலங்கு நூலறிஞர் உண்மைச்
செய்தியென்று ஒப்புக் கொள்வர் .

இருங்கல் விடரகத் தீன்றிளைப் பட்ட
மென்புனிற் றம்பிணவு பசித்தெனப் பைங்கண்
செந்நாய் ஏற்றை கேழல் தாக்க
இரியல் பிணவல் தீண்டலின் பரீ இச்
செங்காய் உதிர்த்த பைங்குலை ஈந்தின்
பரல் மண் சுவல முரணிலம் உடைத்த (அகம் , 21 )

அகப்பாடல் 21 பன்றியைச் செந்நாயின் ஏற்றைத் தாக்குவதாகவும் பன்றி ஓடுவதையும் கூறுகிறது .

” வள்ளெயிற்றுச் செந்நாய் வயவுறு பிணவிற்குக்
கள்ளியங் கடத்திடைக் கேழல் பார்க்கும்
வெஞ்சுரக் கவலை நீந்தி ….. ( ஐங்குறு நூறு , 323 )

” கவிழ்மயிர் எருத்தின் செந்நாய் ஏற்றை
குருளைப் பன்றி கொள்ளாது கழியும்
சுரம்நனி வாரா நின்றனள் ” ( ஐங்குறு நூறு, 397 )

சர்ம்பிணவு புணர்ந்த செந்நா யேற்றை
மறியுடை மான்பிணை கொள்ளாது கழியும்
அரிய சுரன்வந் தனரே ” ( ஐங்குறு நூறு, 854 )

ஐங்குறு நூற்றுப் பாடல்களில் செந்நாய் பன்றியை வேட்டையாடக் கவனிக்கும் செய்தியையும் வேட்டையாடாது விட்டுவிடும் செய்தியையும் கூறியிருப்பதைப் பார்க்கும்போது முரண்பாடாகத் தோன்றுகிறது . ஐங்குறுநூறு 323 ஆம் பாடலில் காட்டுப்பன்றி அகப் படுமா என்று செந்நாய் பார்த்ததாகக் கூறப்பட்டிருக்கின்றது . ஆனால் ஐங்குறுநூறு 354 , 397 ஆம் பாடல்களில் பன்றியையும் மானையும் கொள்ளாது விடுவதாகக் கூறப்பட்டிருப்பது வியப்பான செய்தியாகும் . இச் செய்தியைச் சங்கப் புலவர்கள் உண்மையிலேயே நேரில் கண்கூடாகக் கண்டு கூறியதாகத் தெரிகின்றது. இதன் விளக்கம் விலங்கு நூல் படித்தவருக்கு விளங்கும் .

செந்நாய்களுக்குப் பசியெடுக்கும்போது வேட்டையாடும் குறிப்பும் பசியின்றிப் பழகும்போது வேட்டை யாடாத குறிப்பும் பிற விலங்குகளுக்குச் செந்நாய்களைக் காட்டில் காணுங்கால் நன்கு தெரியுமாம் . செந்நாய்களிடம் வேட்டையாடாக் குறிப்பைக் கண்டால் மான் முதலிய விலங்குகள் செந்நாய்களைக் கண்டாலும் கவனிப்பதில்லை . அஞ்சி ஓடுவதும் இல்லை . இதனால் புல் மேயும் கடமான் கூட்டத்தில் செந்நாய்கள் காணப்படுவதும் அவைகளைக் கண்டும் கடமான்கள் கவனிக்காது மேய்வதுமான காட்சியை விலங்கு நூலறிஞர்கள் கண்டு வியப்படைந்திருக்கின்றனர் . ஐங்குறு நூற்றில் இந்தச் செய்தியே கூறப்பட்டிருக்கின்றது கருதலாம் .

ஈர்ம்பிணவு புணர்ந்த செந்நாயேற்றை மான் பிணையைக் கொள்ளாது விட்டுவிடக் காரணம் அதற்குப் பசியில்லாமல் பிணவைப் புணர்ந்த திருப்தி இருக்கும் . ஐங்குறு நூற்றில் கொள்ளாது கழியும் என்று இரு இடங்களில் கூறப்பட்ட செய்தி செந்நாயின் வியப்புக்குரிய இச்செய்தியை எடுத்துக் காட்டவேயாகும் என்பது தெளிவு . செந்நாயின் மற்றொரு முக்கிய குணம் , கடும் வெயிலில் அடிக்கடி தண்ணீர் இருக்கும் இடத்தில் , ஈரத்தில் தன் வயிற்றைப் பொருத்தி , ஓய்வெடுத்த லென்று ( Lie in water ) விலங்கு நூலறிஞர் கண்டுள் ளனர் .

களிறு நின்று இறந்த நீரல் ஈரத்துப்
பால்வீ தோல்முலை அகடுநிலஞ் சேர்த்திப்
பசியட முடங்கிய பைங்கண் செந்நாய்
மாயா வேட்டம் போகிய கணவன்
பொய்யா மரபிற் பிணவு கினைந் திரங்கும்
விருந்தின்வெங் காட்டு வருந்துதும் யாமே ( நற்றிணை . 108 )

நற்றிணைப் பாடலில் வெம்மையான காட்டில் தண்ணீர் இல்லாததால் செந்நாயின் பெண் துணை , யானைபெய்த சிறுநீரின் ஈரத்தில் தன்னுடைய பால் மடியையுடைய வயிற்றைப் பொருத்தி ஆண் துணையை இருந்ததாகக் கூறியிருக்கிறதைக் கவனிக்க வேண்டும் . இது சங்கப்புலவர் கண்டு கூறிய மிக வியப்புக்குரிய உண்மைச் செய்தியாகும் . செந்நாய்கள் கூட்டம் கூட்டமாக ( Packs ) வாழ்ந்தாலும் பருவ உணர்ச்சி உண்டாகும் காலத்தில் ஆணும் பெண்ணுமாகக் கூடிக் கூட்டத்தை விட்டுப் பிரிந்து போய்த் தனியாக வாழ்க்கை நடத்துகின்றன என்று விலங்கு நூலார் கூறுவர் . செந்நாய்கள் இணையாக வாழ்ந்து குட்டிகள் ஈன்றதும் திரும்பவும் கூட்டத்தில் சேர்ந்து விடுகின்றன . செந்நாய்கள் கூட்டம் கூட்டமாகவும் , சில காலங்களில் ஆண் , பெண் இணையாகவும் காணப்பட்டதைக் கண்ட விலங்கு நூலறிஞர்கள் முதலில் செந்நாய்களில் இரு இனங்கள் உண்டு என்று கருதினர் . ஓர் இனம் கூட்டமாக வாழும் , மற்றோர் இனம் இணையாக வாழும் இயல்புடையன என்று கருதினார்கள் . ஆனால் மேலும் ஆராய்ந்ததில் பருவ காலத்தில் ஏற்படும் மாற்றமே யொழியச் செந்நாய்களில் இரு இனங்கள் கிடையா என்று முடிவு கண்டனர் . சங்க – நூல்களில் செந்நாய் இணையாக வாழ்வதைப் பற்றியே மிகுதியாகக் கூறப்பட்டிருக்கின்றது .

” அத்தக் கேழல் அட்ட நற்கோள்
செந்நாய் ஏற்றை கம்மென ஈர்ப்பக்
குருதி யாரும் எருவைச் செஞ்செவி ” ( அகம் , 111 )

நீரற வறந்த நிரம்பா நீளிடை
வள் ளெயிற்றுச் செந்நாய் வருந்துபசிப் பிணவொடு
கள்ளியங் காட்ட கடத்திடை ” ( அகம் , 53 )

மேற்காட்டிய அகநானூற்றுப் பாடல்களிலும் , ஐங்குறு நூறு, நற்றிணைப் பாடல்களிலும் ( ஐங்குறு நூறு 323 , 354 , 397 ; நற்றிணை 103 ; அகம் 21 , 285 ) செந்நாயின் ஏற்றையைப் பற்றியும் பிணவைப் பற்றியும் செய்திகள் வருவதால் சங்கப் புலவர்கள் செந்நாய்கள் பருவகாலத்தில் இணையாக வாழ்வதை நன்கு உணர்ந்தனரென்பது தெரிகின்றது .செந்நாய்கள் இணையாக வாழும்போது தனியாக வேட்டையாடுவதும் உண்மையே . ” ஈர்ம் பிணவு புணர்ந்த செந்நா யேற்றை ” என்று ஐங்குறு நூறு செந்நாய்கள் பருவகாலத்தில் இணைவதைக் குறிப் பிட்டிருக்கின்றது .

இருங்கல் விடரகத் தீன்றிளைப் பட்ட
மென்புனிற் றம்பிணவு பசித்தெனப் பைங்கண்
செந்நாய் ஏற்றை கேழல் தாக்க

என்று வரும் அகநானூற்றுப் பாடல் செந்நாயின் பெண் துணையானது பாறைப் பிளப்பில் குட்டிகளை ஈன்பதும் , பசித்திருக்கும் பெண் நாய்க்கு ஆண் நாய் இரை தேடுவதும் பற்றிக் கூறுவதைக் கவனிக்க வேண்டும் . செந்நாய்கள் இணையாக வாழ்வதன் பழக் கத்தை உணர்ந்தே செந்நாயின் ஏற்றையானது ” மாய வேட்டம் போகிய கணவன் ” என்று வரும் நற்றிணைப் பாடல் வரியில் கணவன் என்றே அழைக்கப்படுகின்றது . குட்டி ஈன்ற பின்னர்க் காணப்படும் பால் மடியைக்கூட ஒரு சங்கப் புலவர் ” பால்வீ தோல்முலை ” என்று அழகாகக் கூறிச்சென்றார் . செந்நாயை “Cuon alpinus என்று விலங்கு நூலார் அழைப்பர் . காட்டில் வாழும் செந்நாயைப்பற்றிச் சங்கப்புலவர்கள் தெரிந்திருந்த செய்திகள் தற்காலம் விலங்கு நூலறிஞர்கள் கண்ட செய்திகளோடு ஒத்திருப்பதைக் கண்ட எவரும் சங்கப்புலவர்களின் நுண்ணிய அறிவையும் அதை எடுத்துக் கூறிய திறத்தையும் போற்றாதிருக்க முடியாது .

பார்க்க நாய், ஞமலி, ஞாளிசெல்நாய்

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

dhole, Cuon alpinus, canis dukhunensis

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

வேட்ட செந்நாய் கிளைத்து ஊண் மிச்சில்
குளவி மொய்த்த அழுகல் சில் நீர் – குறு 56/1,2

வேட்டையாடும் செந்நாய்கள் தோண்டி உண்ட மிச்சமாகிய
காட்டு மல்லிகை இலைகள் மூடியதால் அழுகிப்போன சிறிதளவு நீரை

ஓய் பசி செந்நாய் உயங்கு மரை தொலைச்சி – நற் 43/3

பசி அட முடங்கிய பைம் கண் செந்நாய்/மாயா வேட்டம் போகிய கணவன் – நற் 103/6,7

பைம் கண் செந்நாய் படு பதம் பார்க்கும் – குறு 141/6

வள் எயிற்று செந்நாய் வயவு உறு பிணவிற்கு – ஐங் 323/1

ஈர்ம் பிணவு புணர்ந்த செந்நாய் ஏற்றை – ஐங் 354/1

கவிழ் மயிர் எருத்தின் செந்நாய் ஏற்றை – ஐங் 397/1

செந்நாய் ஏற்றை கேழல் தாக்க – அகம் 21/18

வள் எயிற்று செந்நாய் வருந்து பசி பிணவொடு – அகம் 53/6

செந்நாய் ஏற்றை கம்மென ஈர்ப்ப – அகம் 111/11

திண் நிலை எயிற்ற செந்நாய் எடுத்தலின் – அகம் 199/9

செந்நாய் வெரீஇய புகர் உழை ஒருத்தல் – அகம் 219/13

ஓடு குறங்கு அறுத்த செந்நாய் ஏற்றை – அகம் 285/6

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *