Skip to content

சொல் பொருள்

(பெ) சேரமன்னர்களின் பெயர், சேரமான் பெருஞ் சேரலாதன்

சொல் பொருள் விளக்கம்

சேரமன்னர்களின் பெயர். சேரலாதன் என்னும் பெயர் கொண்ட அரசர்கள் மூவர். அவர்கள்,
1. இமையவரம்பன் நெடுஞ் சேரலாதன்
– இவன் இரண்டாம் பதிற்றுப்பத்து பாடல் தலைவன். இவனைப் பாடியவர் குமட்டூர்க் கண்ணனார்
2. ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் –
– ஆறாம் பதிற்றுப்பத்து பாடல் தலைவன். இவனைப் பாடிய புலவர் காக்கை பாடினியார் நச்செள்ளையார்
3. பெருஞ் சேரலாதன் –
– இவன் சோழன் கரிகாற் பெருவளத்தானோடு போரிட்டுப் புறப்புண் நாணி வடக்கிருந்தான்

வளவன் செலுத்திய நெடுவேல் இச் சேரமான் மார்பிற் பட்டு முதுகின் புறத்தே உருவிச் சென்று புண் செய்தது. மார்பினும்
முகத்தினும் பட்ட புண்ணையே வீரர் விழுப்புண் ணென விரும்புவர். மார்பிற்பட்ட கருவியால் முதுகிடத்தும் இச் சேரமானுக்குப் புண்ணாயினமையின், இவன் அதனால் பெரு நாணம் கொண்டு மானம் பொறாது வடக்கிருப் பானாயினன்.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

the name of chEra kings

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மண் உடை ஞாலம் புரவு எதிர்கொண்ட
தண் இயல் எழிலி தலையாது மாறி
மாரி பொய்க்குவது ஆயினும்
சேரலாதன் பொய்யலன் நசையே – பதி 18/9-12

மண் திணிந்த நிலவுலகத்தைக் காப்பதை மேற்கொண்ட குளிர்ந்த இயல்பினையுடைய மேகங்கள் மழைபெய்யாமல் மாறிப்போய், மாரிக்காலத்தில் பொய்த்துவிட்டாலும் சேரலாதன் பொய்க்கமாட்டான் உமது விருப்பத்தை இவன் பதிற்றுப்பத்து இரண்டாம் பத்துக்குரிய இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்.

வலம் படு முரசின் சேரலாதன்
முந்நீர் ஓட்டி கடம்பு அறுத்து இமயத்து
முன்னோர் மருள வனங்கு வில் பொறித்து – அகம் 127/3-5

வெற்றிதங்கிய முரசினையுடைய சேரலாதன் என்னும் அரசன் கடல் நாப்பணுள்ள பகைவர்களைப் புறக்கிடச் செய்து அவர் காவல் மரமாகிய கடம்பினை வெட்டி இமையமலையில் தமது முன்னோரை ஒப்ப வளைந்த வில் இலச்சினையைப் பொறித்து

சால் பெரும் தானை சேரலாதன்
மால் கடல் ஓட்டி கடம்பு அறுத்து இயற்றிய
பண் அமை முரசின் கண் அதிர்ந்து அன்ன – அகம் 347/3-5

நிறைந்த பெரிய சேனையினையுடைய நெடுஞ்சேரலாதன் என்பான் பெரிய கடலின்கண் பகைவர்களை ஓட்டி அவரின் காவல் மரமான கடம்பினை அறுத்துச் செய்த பண்ணுதல் அமைந்த முரசினது கண் முழங்கினாற் போன்று

இங்குக் குறிப்பிடப்படுபவனும் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனே.

கரிகால் வளவனொடு வெண்ணிப்பறந்தலை
பொருது புண் நாணிய சேரலாதன்
அழி கள மருங்கின் வாள் வடக்கிருந்து என – அகம் 55/10-12

கரிகால்வளவனோடு வெண்ணிப் போர்க்களத்தே போர்செய்து புறப்புண் பட்டமைக்கு நாணின பெருஞ் சேரலாதன் பொருதழிந்த களத்தின் புறத்தேவாளோடு வடக்கிருந்தானான

இவன் சேரமான் பெருஞ்சேரலாதன். இவனைக் கழாத்தலையார் பாடியுள்ளார் (புறம் 65)

கடந்து அடு தானை சேரலாதனை
யாங்கனம் ஒத்தியோ வீங்கு செலல் மண்டிலம் – புறம் 8/5,6

எதிர்நின்று கொல்லும் படையையுடைய சேரலாதனை எவ்வாறு ஒப்பை, மிக்க செலவையுடைய மண்டிலமே!

இங்குக் குறிப்பிடப்படுபவன் சேரமான் கடுங்கோ வாழியாதன். இவனைக் கபிலர் பாடியுள்ளார்.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *