Skip to content

சொல் பொருள்

(வி.எ) 1. மனம் தடுமாறி, 2. மனம் வருந்து, 3. மருண்டு

சொல் பொருள் விளக்கம்

1. மனம் தடுமாறி,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

be distressed

bewildered

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

ஊறு நீர் அமிழ்து ஏய்க்கும் எயிற்றாய் நீ உணல் வேட்பின்
ஆறு நீர் இல என அறன் நோக்கி கூறுவீர்
யாறு நீர் கழிந்து அன்ன இளமை நும் நெஞ்சு என்னும்
தேறு நீர் உடையேன் யான் தெருமந்து ஈங்கு ஒழிவலோ – கலி 20/11-14

“வாயில் ஊறுகின்ற நீர் அமிழ்தைப் போல் இனிக்கும் பற்களைக் கொண்டவளே! நீ குடிப்பதற்கு விரும்பினால்
அங்கே ஆற்றில் நீர் இருக்காது என்று தாகத்துக்குத் தண்ணீர் தருகின்ற அறத்தைச் செய்யமுடியாதே என்று கூறுகிறீர்,
ஆற்று நீர் சென்றுவிட்டால் அதனை மீண்டும் பெறமுடியாதது போன்ற இந்த இளமைக்காலத்தில், உம் நிலைத்த அன்பு என்னும் தெளிவான தன்மையைக் கொண்டுள்ள நான் மனத்தடுமாறி மாண்டுபோகவோ?

– தெருமந்து – சுழன்று – நச்.உரை

– தெருமந்து – தடுமாறி – மா.இராச.உரை விளக்கம்

அறத்தொடு நின்றேனை கண்டு திறப்பட
என் ஐயர்க்கு உய்த்து உரைத்தாள் யாய்
அவரும் தெரி கணை நோக்கி சிலை நோக்கி கண் சேந்து
ஒரு பகல் எல்லாம் உருத்து எழுந்து ஆறி
இருவர் கண் குற்றமும் இல்லையால் என்று
தெருமந்து சாய்த்தார் தலை – கலி 39/21-26

நான் உண்மையை உரைத்ததைக் கேட்டு, நெறிப்பட
நம் தந்தைக்கும், தமையர்க்கும் எடுத்துரைத்தாள் தாய்;
அவரும் அம்புகளைத் தெரிந்தெடுத்துப் பார்ப்பார், வில்லைப் பார்ப்பார், கண் சிவந்து
ஒரு பகல் முழுதும் சினங்கொண்டு, பின்பு தணிந்து
இருவர் மீதும் ஒரு குற்றமும் இல்லை என்று
மனம் வருந்தித் தம் தலையை ஆட்டி ஒப்புதலைத் தெரிவித்தனர்;

– தெருமந்து – அலமந்து – நச்.உரை

– தெருமந்து – மனம் கவன்று – மா.இராச்.உரை விளக்கம்; – கவல் – மனம் வருந்து – பால்ஸ் தமிழ் அகராதி

மேல் ஓர் நாள்
அன்னையும் யானும் இருந்தேமா இல்லிரே
உண்ணு நீர் வேட்டேன் என வந்தாற்கு அன்னை
அடர் பொன் சிரகத்தால் வாக்கி சுடர்_இழாய்
உண்ணு நீர் ஊட்டி வா என்றாள் என யானும்
தன்னை அறியாது சென்றேன் மற்று என்னை
வளை முன்கை பற்றி நலிய தெருமந்திட்டு
அன்னாய் இவன் ஒருவன் செய்தது காண் என்றேனா – கலி 51/4-11

முன்னொருநாள்
அன்னையும் நானுமாக வீட்டில் இருந்தபோது, “வீட்டிலுள்ளோரே!
உண்பதற்கு நீர் வேண்டிவந்துள்ளேன்” என்று சொல்லி வந்தவனுக்கு, அன்னை
“பொன்னாலான கலத்தில் ஊற்றிக்கொடுத்து, சுடர்விடும் அணிகலன்கள் அணிந்தவளே!
உண்பதற்கு நீரை அருந்தச் செய்து வா” என்று சொன்னாள் என்பதற்காக, நானும்
அவன் இன்னான் என்பதை அறியாமல் சென்றேன். ஆனால் அவன் எனது
வளையணிந்த முன்கையைப் பற்றி அழுத்த, மருண்டுபோய்
அன்னையே! இவன் செய்வதைப் பாரேன்” என்று கூவிவிட

– தெருமந்திட்டு – அலமந்து – நச்.உரை

– தெருமந்திட்டு – மருண்டு – மா.இராச்.உரை விளக்கம்;

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *