Skip to content

சொல் பொருள்

(பெ) 1. தெளிவு, 2. தெளிந்த மது, 3. கள்ளின் தெளிவு, 4. நொதித்துப்போன பழச்சாறு,

சொல் பொருள் விளக்கம்

தெளிவு

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

clearness and transparency by settling of sediments, pure and clarified liquor, clarified toddy, fermented fruit juice

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கடும் கள் தேறல் மகிழ் சிறந்து திரிதர – மது 599

கடிய கள்ளினது தெளிவை உண்டு களிப்பு மிக்குத் திரிதலைச் செய்ய

யவனர் நன் கலம் தந்த தண் கமழ் தேறல் – புறம் 56/18

யவனர் நல்ல மரக்கலத்தில் கொணர்ந்த குளிர்ந்த நறு நாற்றத்தையுடைய மதுவை

தேம் பிழி தேறல் மாந்தி மகிழ் சிறந்து – குறி 155

இனிமையான, பனை மடலைப் பிழிந்தெடுத்த தெளிவான கள்ளை நிறையக் குடித்து, மகிழ்ச்சி மிக்கு

முழு முதல் கொக்கின் தீம் கனி உதிர்ந்தென
புள் எறி பிரசமொடு ஈண்டி பலவின்
நெகிழ்ந்து உகு நறும் பழம் விளைந்த தேறல்
நீர் செத்து அயின்ற தோகை – குறி 188-191

பருத்த அடிமரத்தைக்கொண்ட மாமரத்தின் இனிய பழங்கள் உதிர்ந்தனவாக,
(அது கேட்ட)வண்டுகள் (திடுக்கிட்டுப் பறக்க, அதனால்)சிதறிய தேன் கலந்த, பலாமரத்தின்
(நன்கு பழுத்து)கட்டு விட்டு உதிர்ந்த நறிய பழத்தில் உண்டான தெளிந்த கள்ளை
நீரென்று கருதிப் பருகிய மயில்

மேற்கண்ட குறிப்புகளால், தேறல் என்பது போதைதரும் ஒரு தெளிந்த பானத்துக்குரிய
பொதுச்சொல்லாக இருந்திருக்கிறது எனத் தெரியவரும்.

அது இயற்கையாகக் கிடைக்கும் பனங்கள், அல்லது தென்னங்கள்ளாகவோ, செயற்கை முறையில் காய்ச்சி
வடிகட்டிய பானமாகவோ இருக்கலாம்.

இயற்கையாகக் கிடைக்கும் கள்ளை, ஒரு மூங்கில் குழாயினுள் ஊற்றிப் பல நாள் ஊறவைத்துப் பின்னர்
கிடைக்கும் தெளிவு தேக்கள் தேறல் எனப்பட்டது.

நீடு அமை விளைந்த தே கள் தேறல் – திரு 195

வேய் பெயல் விளையுள் தே கள் தேறல் – மலை 171

திருந்து அமை விளைந்த தே கள் தேறல் – மலை 522

அம் பணை விளைந்த தே கள் தேறல் – அகம் 368/14

வாங்கு அமை பழுனிய தேறல் மகிழ்ந்து – புறம் 129/2

அமை, வேய், பணை ஆகியவை மூங்கிலைக் குறிப்பன.

மட்டு எனப்படும் ஒருவகை மதுவை, ஒரு மண்கலத்தில் இட்டு, மண்ணுக்குள் புதைத்து நொதிக்க வைத்து
அதினின்றும் கிடைக்கும் தெளிவும் தேறல் எனப்பட்டது.

நிலம் புதை பழுனிய மட்டின் தேறல்
புல் வேய் குரம்பை குடி-தொறும் பகர்ந்து – புறம் 120/12,13

என்ற புறநானூற்று அடிகளால் இதனைத் தெரியலாம்.

போதை தரக்கூடிய சில பொருள்களைச் சேர்த்து ஊறவத்துப் பானையிலிட்டுக் காய்ச்சி வடித்த தெளிவும்
தேறல் எனப்பட்டது.

துளங்கு தசும்பு வாக்கிய பசும் பொதி தேறல்
இளம் கதிர் ஞாயிற்று களங்கள்-தொறும் பெறுகுவிர் – மலை 463,464

(வேகும்போது கொதிப்பதால்)குலுங்கும் பானையிலிருந்து வடித்த (நெல்லின்)இளம் முளைகளாலான
தெளிந்த கள்ளை,
இள வெயில் சூரியனையுடைய(காலைவேளையில்) (நெற்)களங்கள்தோறும் பெறுவீர்

காட்டில், பலாப்பழங்கள் பழுத்துக் கனிந்து அவற்றினின்றும் வெடித்து ஒழுகும் நொதித்துப்போன பழச்சாறு,
கள்ளின் தன்மையை அடைவதால் அதுவும் தேறல் எனப்பட்டது.

பலவின்
நெகிழ்ந்து உகு நறும் பழம் விளைந்த தேறல் – குறி 188-189

பலாமரத்தின்
(நன்கு பழுத்து)கட்டு விட்டு உதிர்ந்த நறிய பழத்தில் உண்டான தெளிந்த கள்ளை

கோழ் இலை வாழை கோள் முதிர் பெரும் குலை
ஊழ்_உறு தீம் கனி உண்ணுநர் தடுத்த
சாரல் பலவின் சுளையொடு ஊழ் படு
பாறை நெடும் சுனை விளைந்த தேறல் – அகம் 2/1-4

கொழுத்த இலைகளைக் கொண்ட வாழையின், அடுக்குகள் முற்றிய பெரிய குலையின்
நன்கு பழுத்த இனிய கனிகள், (மிக்க இனிமையால்)உண்பவருக்குத் திகட்டும்,
மலைச்சரிவின் பலாச் சுளைகளுடன் (கலந்ததால்), நாட்பட்டு,
பாறையின் குழிந்த பகுதியில் சுனை போல் உண்டாகிய தெளிந்த சாறை

தீம் பழ பலவின் சுளை விளை தேறல் – அகம் 182/3

மரக்கலங்களில் வந்த வெளிநாட்டு மதுவகைகளும் தேறல் எனப்பட்டன.

யவனர் நன் கலம் தந்த தண் கமழ் தேறல்
பொன் செய் புனை கலத்து ஏந்தி – புறம் 56/18,19

தேனைப் பதப்படுத்தி அதினின்றும் கிடைக்கும் மதுவும் தேறல் எனப்பட்டது.

இரும் கடற்கு ஊங்கு இவரும் யாறு என தங்கான்
மகிழ களி பட்ட தேன் தேறல் மாற்றி – பரி 16/27,28

பெரிய கடலை நோக்கி விரைந்து செல்லும் ஆற்றினைப் போல சிறிதும் தங்காமல் விரைந்து கரையேற
அவன் மகிழும்படி, களிப்பு மிக்க தேனால் சமைக்கப்பட்ட தேறலை அவனுக்குத் தர, அவன் அதனை மறுத்து

நொதிக்கவைக்கப்பட்ட கள்ளில் இஞ்சிப்பூ முதலியவற்றின் அரும்புகளை இட்டுப் பக்குவம் செய்து
தெளிவிக்கப்பட்டதும் தேறல் எனப்பட்டது.

நனை விளை நறவின் தேறல் மாந்தி – அகம் 221/1

நனை முதிர் தேறல் நுளையர்க்கு ஈயும் – அகம் 366/11

நனை அமை கள்ளின் தேறலொடு மாந்தி – பதி 12/18

பூ கமழ் தேறல் வாக்குபு தர_தர – பொரு 157

நனை என்பது பூவின் அரும்பு.

கள்ளினை நெடுநாட்கள் நொதிக்கவைத்தால் அதன் கடுப்பு மிகும் என்பதால் நெடுநாள்பட்ட கள்
தேறல் எனப்பட்டது.

பழம்படு தேறல் பரதவர் மடுப்ப – சிறு 159

தேள் கடுப்பு அன்ன நாட்படு தேறல்
கோள்_மீன் அன்ன பொலம் கலத்து அளைஇ – புறம் 392/16,17

பாம்பு வெகுண்டு அன்ன தேறல் நல்கி – சிறு 237

அரவு வெகுண்டு அன்ன தேறலொடு சூடு தருபு – புறம் 376/14

கள்ளில் இருக்கும் கசடுகளை அகற்ற, நார்க்கூடையால் வடிகட்டித் தெளியவைத்திருக்கின்றனர்.

நார் பிழி கொண்ட வெம் கள் தேறல் – புறம் 170/12,13

நார் அரி தேறல் மாந்தி மகிழ் சிறந்து – புறம் 367/7

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *