Skip to content

சொல் பொருள்

(பெ) 1. கடவுள், முன்னோர் ஆகியோருக்குப் படைக்கப்படும் படையல், 2. காக்கைக்கு இடும் இரத்தம் கலந்த சோறு, 3. நெற்களத்தில் பிச்சைக்காரர்களுக்கு வழங்கும் பிச்சையாகிய நெல், 4. இறைப்படைப்பாகச் செய்யப்படும் விலங்குக்கொலை, அந்த விலங்கு, 5. போர்மேல் செல்லும் வேந்தர் முரசுக்குப் படைக்கும் படையல்

சொல் பொருள் விளக்கம்

1. கடவுள், முன்னோர் ஆகியோருக்குப் படைக்கப்படும் படையல்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

offering given to god, manes etc., food mixed with blood offered to crows, sacrificial offering of an animal, the offered animal

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மத வலி நிலைஇய மா தாள் கொழு விடை
குருதியொடு விரைஇய தூ வெள் அரிசி
சில் பலி செய்து பல் பிரப்பு இரீஇ – திரு 232-234

மிகுந்த வலிமை நிலைபெற்ற பெரிய காலையுடைய கொழுவிய கிடாயின்
உதிரத்தோடு பிசைந்த தூய வெள்ளரிசியை
சிறு பலியாக இட்டு, பல குறுணிப் படையல்களையும் வைத்து,

செம் சோற்ற பலி மாந்திய
கரும் காக்கை – பொரு 183,184

(உதிரத்தால்)சிவந்த சோற்றையுடைய படையலை விழுங்கின
கரிய காக்கை

பைது அற விளைந்த பெரும் செந்நெல்லின்
தூம்பு உடை திரள் தாள் துமித்த வினைஞர்
பாம்பு உறை மருதின் ஓங்கு சினை நீழல்
பலி பெறு வியன் களம் மலிய ஏற்றி
கணம் கொள் சுற்றமொடு கை புணர்ந்து ஆடும்
துணங்கை – பெரும் 230-235

பசுமை அறும்படி முற்றின பெரிய செந்நெல்லின்
உள்துளை உடைய திரண்ட தாளை அறுத்த வினைஞர்,
பாம்பு கிடக்கின்ற மருதமரத்தின் உயர்ந்த கிளையால் உண்டாகிய நிழலில்(உள்ள)
பிச்சை பெறும் அகன்ற களங்களில் நிறைய ஏற்றி,
கூட்டம் கொண்ட (தம்)சுற்றத்தோடு கைகோர்த்து ஆடுகின்ற
துணங்கைக் கூத்தில்

தோப்பி கள்ளொடு துரூஉ பலி கொடுக்கும் – அகம் 35/9

நெல்லால் ஆக்கிய கள்ளோடு செம்மறிக்குட்டியைப் பலி கொடுக்கும்

பலி பெறு முரசம் பாசறை சிலைப்ப – புறம் 362/3

பலி செலுத்தப்பட்ட முரசம் பாசறைக்கண் ஒலிக்க

இந்தப் பலியில் அரிசி, கள், குருதிதோய்ந்த சோறு, விலங்குகள்
முதலிய பலவகைப் பொருள்கள் படைக்கப்படுவதுண்டு

வால் அரிசி பலி சிதறி – பட் 165

மல்லல் மூதூர் மலர் பலி உணீஇய – நற் 73/3

பலி கள் ஆர்கை பார் முது குயவன் – நற் 293/2

நெய்த்தோர் தூஉய நிறை மகிழ் இரும் பலி – பதி 30/37 (நெய்த்தோர் = இரத்தம்)

நனை முதிர் நறவின் நாள் பலி கொடுக்கும் – அகம் 213/7 (நறவு = கள்)

போகு பலி வெண் சோறு போல – புறம் 331/12

பன் மலர் சிதறி பரவு_உறு பலிக்கே – நற் 322/12

குருதி பலிய முரசு முழக்கு ஆக – புறம் 369/5

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *