Skip to content

சொல் பொருள்

(பெ) கள்விற்போர்

சொல் பொருள் விளக்கம்

பார்க்க : பொருள்பிணி

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

toddy-sellers

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பழையர் என்போர் தமிழ்நாட்டுப் பழங்குடிமக்கள். தமிழ்நாட்டின் பலபகுதிகளிலும் அவர்கள்வாழ்ந்து வந்தனர். மலைபடுகடாம் வயல்வெளிகளில் வேலைபார்க்கும் பழையர் மகளிரைப் பற்றிக் கூறுகிறது.

அகம் – பாடல் 201-இல் இந்தப் பழையர் கொற்கைத்துறையில் வாழ்பவராகக் கட்டப்படுகின்றனர்.
அகம் -பாடல் 331 – இல் இவர்கள் தமிழ்நாட்டு எல்லையோரச் சிற்றூர்களில் வாழ்பவராகக் காட்டப்படுகின்ரார்.

வயலில் நெல்லறுத்துக் கதிரடித்த பின்னர் மீந்துபோன வைக்கோலைக் களத்துமேட்டில் அடுக்கிவைக்கும் வேலையைச் செய்பவராக மலைபடுகடாம் பழையர் மகளிரைப் பற்றிக் கூறுகிறது.. இந்த மகளிர் பகன்றை மலரால் தொடுக்கப்பட்ட மாலையைத் தலையில் கண்ணியாகச் சூடிக்கொள்வர்.

பகன்றை கண்ணி பழையர் மகளிர்
ஞெண்டு ஆடு செறுவில் தராய்க்கண் வைத்த
விலங்கல் அன்ன போர் முதல் தொலைஇ – மலை 459-461

பகன்றைப்பூ மாலை(சூடிய) கள்விற்கும் பழையர்வீட்டுப் பெண்கள்
நண்டுகள் ஓடித்திரியும் வயல்களின்(அருகே) களத்துமேட்டில் வைத்த,
மலை போன்ற (நெற்கதிர்)போர்களின் அடிப்பாகத்தை இழுத்து (அவற்றைச்)சரித்து,

புகழ்பெற்ற கொற்கைத் துறையில் அந்தி வேளையில் முத்துக்களையும் சங்குகளையும் சொரிந்து, இந்தப் பழையர் மகளிர் தெய்வத்தை வணங்கினர் என்று அகம் 201 கூறுகிறது.

புகழ் மலி சிறப்பின் கொற்கை முன்துறை
அவிர் கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்து
தழை அணி பொலிந்த கோடு ஏந்து அல்குல்
பழையர் மகளிர் பனி துறை பரவ
பகலோன் மறைந்த அந்தி ஆரிடை – அகம் 201/4-8

புகழ்மிக்க சிறப்பினையுடைய கொற்கைப்பதியின் கடல் துறையிலே
விளங்கும் ஒளியினையுடைய முத்துக்களுடன் வலம்புரிச் சங்கினையும் சொரிந்து
தழையுடை அணிதலால் பொலிவுற்ற பக்கம் உயர்ந்த அல்குலினையுடைய
பழையரது மகளிர் குளிர்ந்த துறைக்கண் தெய்வத்தினைப் பராவி நிற்க
ஞாயிறு மறைந்த அந்தியாகிய அரியபோழ்திலே

இருப்பை மரத்துப்பூக்களைச் சேகரித்து, மூங்கில் குழாய்களில் அடைத்துவைத்து சிற்றூர்களின் தெருக்களில் இந்தப் பழையர் மகளிர் கூவி விற்பர் என்று அகம் 331 கூறுகிறது. இவர்கள் அவ்வேளையில் தங்கள் இடுப்பு ஆடையின் மேல் தழையாடைகளையும் உடுத்தியிருந்ததாக அப்பாடல் குறிப்பிடுகிறது.

நீடு நிலை அரைய செம் குழை இருப்பை
கோடு கடைந்து அன்ன கொள்ளை வான் பூ
ஆடு பரந்து அன்ன ஈனல் எண்கின்
தோடு சினை உரீஇ உண்ட மிச்சில்
பைம் குழை தழையர் பழையர் மகளிர்
கண் திரள் நீள் அமை கடிப்பின் தொகுத்து
குன்றக சிறுகுடி மறுகு-தொறும் மறுகும் – அகம் 331/1-7

நீண்ட நிலையாகிய அடிமரத்தினையுடைய சிவந்த தளிர்களையுடைய இருப்பை மரங்களின்
தந்தத்தினைக் கடைந்தாற்போன்ற மிகுதியான வெள்ளிய பூக்களில்
ஆடுகள் பரந்தால் ஒத்த ஈன்ற பெண்கரடிகளின்
கூட்டம், கிளைகளில் பரந்து சென்று உண்ட மிச்சிலாயவற்றை
பசிய தளிர்களாலாய தழையுடையராகிய எயினர் மகளிர்
கணுக்கள் திரண்டு நீண்ட மூங்கில் குழாயில் திரட்டி
குன்றின் கண்ணவாகிய சீறூரின் தெருக்கள்தோறும் சுழன்று விற்றுத்திரியும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

1 thought on “பழையர்”

  1. நன்றி அண்ணா
    எங்கள் ஊரின் பெயர் பழையாபுரம்
    நான் ஒரு தே.கு.வே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *