Skip to content

சொல் பொருள்

(பெ) 1. தொகுதி, திரள், 2. இறைவனுக்குப் படைக்கப்படும் பெரும் சோற்றுத்திரள், 3. உருண்டை, 4. உடல், உடம்பு, 5. நீத்தாருக்குப் படைக்கப்படும் சோற்று உருண்டை, 6. உருவம் பெறாத கரு,

சொல் பொருள் விளக்கம்

1. தொகுதி, திரள்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

collection, mass, multitude, Anything globular or round, lump or mass, body, Ball of cooked rice, offered to the manes at a funeral ceremony, Embryo, foetus

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பிண்ட நெல்லின் அள்ளூர் அன்ன என்
ஒண் தொடி நெகிழினும் நெகிழ்க – அகம் 46/14,15

திரண்ட நெல்பொலி கொண்ட அள்ளூர் நகரைப் போன்ற, எனது
ஒளிரும் வளையணிந்த தலைவியின் அழகு குன்றினும் குன்றுக;

பண்டைத் தமிழகத்துப் பெரு வீரர்கள் போர்க்களம் புகுவதன் முன்னர்ப் போரில் தங்களுக்கு வெற்றி தருமாறு,
வெற்றித் திருமகளாம் கொற்றவையை வேண்டி வழிபாடாற்றிச் செல்வதும்,
வெற்றி கொண்டு மீண்டபின்னர், அவ்வெற்றித் திருமகள் கோயில் புகுந்து, தம் விழுப்புண் சோரும் குருதி கலந்த
செஞ்சோற்றுப் படையல் இட்டு வழிபாடாற்றி வணங்குவதும் செய்வர். அவ்வாறு, வெற்றி கொண்ட வீரர்கள்
கொற்றவை கோயிலில் பலியாகப் படையல் இடும் பெருஞ் சோற்றுத் திரளையே இது குறிக்கும்.

முழங்கும் மந்திரத்து
அரும் திறல் மரபின் கடவுள் பேணியர்
உயர்ந்தோன் ஏந்திய அரும் பெறல் பிண்டம்
கரும் கண் பேய்_மகள் கை புடையூஉ நடுங்க – பதி 30/33-36

முழங்குகின்ற மந்திரவொலியால்
அரிய திறல் படைத்த மரபினையுடைய கடவுளை வாழ்த்தும்பொருட்டு,
வழிபாட்டினைச் செய்யும் உயர்ந்தோன் படைத்த பெறுவதற்கரிய பலியினைக் கண்டு,
கரிய கண்களையுடைய பேய்மகள் கைகளை அடித்துக்கொண்டு நடுங்க,

நீலத்து அன்ன அகல் இலை சேம்பின்
பிண்டம் அன்ன கொழும் கிழங்கு மாந்தி – அகம் 178/4,5

நீலமணியை ஒத்த நிறத்தினையுடைய அகன்ற இலையினையுடைய சேம்பின்
உருண்டையாகிவைத்தாற் போன்ற வளவிய கிழங்கினை நிறையத் தின்று

உண்டி முதற்றே உணவின் பிண்டம் – புறம் 18/20

உணவை முதலாக உடையது அவ் உணவால் உளதாகிய உடம்பு

தன் அமர் காதலி புல் மேல் வைத்த
இன் சிறு பிண்டம் யாங்கு உண்டனன்-கொல் – புறம் 234/3,4

தன்னால் விரும்பப்பட்ட காதலி புல்லின் மேல் வைத்த
இனிய சிறிய சோற்றுருண்டையை எவ்வாறு உண்டானோ?

வழுவ பிண்டம் நாப்பண் ஏமுற்று
இரு வெதிர் ஈன்ற வேல் தலை கொழு முளை
சூல் முதிர் மட பிடி நாள்_மேயல் ஆரும் – நற் 116/3-5

தன் வயிற்றிலுள்ள கருவாகிய பிண்டம் அழிந்து வெளியேவந்து விழும்படியாக
பெரிய மூங்கிலில் முளைத்த வேல்முனையைப் போன்ற தலையைக் கொண்ட கொழுத்த முளைகளை
சூல் முதிர்ந்த இளம்பெண்யானை காலையில் மேய்ந்துண்ணும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *