Skip to content
புன்புலம்

புன்புலம் என்பதன் பொருள்தரிசு நிலம், புன்செய் நிலம்,சிறிய நிலம், புல்லிய அறிவு

1. சொல் பொருள் விளக்கம்

(பெ) 1. தரிசு நிலம், 2. புன்செய் நிலம், 3. சிறிய நிலம், 4. புல்லிய அறிவு

மொழிபெயர்ப்புகள்

2. ஆங்கிலம்

waste land, dry land

3. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

பரத்தை உறவால் தலைவியைப் பிரிந்து சென்றான் தலைவன். மீண்டும் வந்தவன் தோழியிடம் தலைவியை அமைதிப்படுத்தச் சொல்கிறான். தன்னிடம் வாயிலாக வந்த (தூது வந்த) தோழிக்குத் தலைவி மறுப்பு உரையாகச் சொல்கிறாள்.

நோம்என் நெஞ்சே ! நோம்என் நெஞ்சே!
புன்புலத்து அமன்ற சிறியிலை நெருஞ்சிக்
கட்குஇன் புதுமலர் முட்பயந் தாங்கு
இனிய செய்தநம் காதலர்
இன்னா செய்தல் நோம்என் நெஞ்சே ! - குறுந்தொகை - 202 : அள்ளூர்நன்முல்லை

 “தோழி ! என் நெஞ்சம் மிகவும் வருந்துகிறது. சிறிய நிலத்தில் நெருங்கி முளைத்த சிறிய இலைகளை உடைய நெருஞ்சியின்(தரிசு நிலத்தில் அடர்ந்து படர்ந்த சிறிய இலையைக் கொண்ட நெருஞ்சியின்) புதுமலர், முதலில் பார்வைக்கு இனியதாகத் தோன்றும்; பின்னர் முட்களைத் தந்து துன்பம் விளைவிக்கும். அதுபோல் தலைவர் முன்பு நமக்கு இனியன செய்தார். இப்போது பரத்தையிடம் சென்று நமக்குத் துன்பம் விளைவிக்கிறார். அதனை நினைத்து என் நெஞ்சம் மிகவும் வருந்துகிறது.” - என்பது இப்பாடலின் பொருள் ஆகும்.

இனிய, இன்னா என்ற முரண்பட்ட சொற்களால் தலைவன் உள்ளம் காலப் போக்கில் மாறுபட்டு விட்டதைச் சொல்கிறாள் தலைவி. இச்சொற்கள் அவளது வருத்தத்தை மட்டும் காட்டாமல் அவள் கொண்ட ஊடலைக் காட்டவும் பயன்படுகின்றன. தலைவனுக்கு வாயிலாக (தூதாக) வந்த தோழியிடம் தலைவி வாயில் மறுத்துக் கூறிய உரிப்பொருள் இப்பாடலில் அமைந்துள்ளது.

சென்ற நாட்ட கொன்றையம் பசு வீ
நம் போல் பசக்கும் காலைத் தம் போல்
சிறு தலை பிணையின் தீர்ந்த கோட்டு
இரலை மானையும் காண்பர் கொல் நமரே
புல்லென் காயாப் பூக்கெழு பெருஞ் சினை
மென் மயில் எருத்தில் தோன்றும்
கான வைப்பின் புன்புலத்தானே. - குறுந்தொகை 183, ஔவையார், முல்லைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது

புன்புல வரகின் சொன்றியொடு பெறூஉம் – புறம் 197/12

புன்செய்நிலத்தில் விளைந்த வரகினது சோற்றுடனே பெறுகின்ற

உண்டி முதற்றே உணவின் பிண்டம்;
உணவெனப் படுவது நிலத்தோடு நீரே;
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசி னோரே;
வித்திவான் நோக்கும் புன்புலம் கண்ணகன் - புறநானூறு பாடல் 18

திணை : பொதுவியல்; துறை: முதுமொழிக்காஞ்சி. பாண்டியன் நெடுஞ்செழியனைக் குடபுலவியனார் பாடியது.

உணவு கொடுத்தவர்கள் உயிரைக் கொடுத்தோர் ஆவர்
உணவை முதலாக வைத்து அவ்வுணவால் வளர்க்கப்பட்ட உடம்பு
ஆதலால் உணவென்று சொல்லப்படுவது நிலத்தோடு கூடிய நீர்
நீரில்லா இடத்தில் அந்நீரையும், நிலத்தையும் ஒன்றாக இணைத்துச் செயல் படுத்தியவர்கள்
இவ்வுலகத்தில் உடம்பையும் உயிரையும் படைத்தவர்களாவர்
நெல் முதலான தானியங்களை விதைத்து மழை வருவாய் ஒன்றையே பார்த்திருக்கும் வானவாரித் தரிசு நிலம்

பாடல் பாடப்பட்ட காலத்தில் வான்மழைப் பொய்த்து வேளாண்மை நொடிந்து போனக் காலம். இந்தக் காலக்கட்டத்தில் மன்னனுக்கு அறிவுரை கூறுவதாக அமைந்துள்ள பாடல்.

இறந்த பின் சேர்க்க வேண்டிய செல்வமானப் புண்ணியம் மண்ணிலே கிடைக்க என்ன வழி என்ன அறிவுரை கூறுகிறார். தன்னாட்டு நீர்நிலை மேம்பாடு செய்யாமல் உலகம் முழுதும் போர் கொண்டு வென்றாலும் புண்ணியமில்லை எனச் சாடவும் செய்கிறார். வேளாண் மக்களின் உளக்குமுறலாக அதிகாரம் கொண்ட மன்னனின் காதுகளில் ஓங்கி ஒலிக்கிறார்.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.