Skip to content

சொல் பொருள்

(வி) 1. நிறை, நிரம்பியிரு, உள்ளமைந்திரு, 2. உள்ளடக்கு, 3. மூடு, மறை, 4. கொத்தாகப்படிந்திரு,

2. (பெ) 1. பெரியமூட்டை, 2. கொத்து, 3. முளை, பீள், இளங்கதிர், 4. தளை, கட்டு, பிணிப்பு, 5. பருமன், 6. மறைப்பு, 7. பட்டை, மேல்தோல், 8. நிறைவு, 9. பந்தயப்பொருள், 10 உடம்பு, 11. அரும்பு, 12. உள்ளே பெறுதல், 13. பொதிகை மலை, 14. பொதியில், பொது அரங்கம், அம்பலம்

சொல் பொருள் விளக்கம்

நிறை, நிரம்பியிரு, உள்ளமைந்திரு

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

be full, hold, contain, cover up, conceal, settle heavily, bundle, load, cluster, tender shoot as of paddy, tender ears of corn, tie, fastening, stoutness, covering up, bark, fullness, perfection, gambling material/money, body, flower bud, getting inside, the pothigai hills, public hall

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

அம் பொதி புட்டில் விரைஇ குளவியொடு
வெண்கூதாளம் தொடுத்த கண்ணியன் – திரு 191,192

அழகு நிரம்பிய தக்கோலக் காயைக் கலந்து, காட்டு மல்லிகையுடன்
வெண்டாளியையும் கட்டின கண்ணியினை உடைய;

பொல்லம் பொத்திய பொதி_உறு போர்வை – பொரு 8

இரண்டு தலைப்பையும் கூட்டித் தைத்த (மரத்தைத் தன் அகத்தே)உள்ளடக்கிய போர்வையினையும்;

ஐது அகல் அல்குல் மகளிர் இவன்
பொய் பொதி கொடும் சொல் ஓம்பு-மின் எனவே – நற் 200/10,11

மெல்லிதாக அகன்ற அல்குலையும் கொண்ட மகளிரே! இவனுடைய
பொய்களை உள்ளடக்கிய கொடிய சொற்களினின்றும் உங்களைக் காத்துக்கொள்வீராக என்று

பச்சூன் பெய்த சுவல் பிணி பைம் தோல்
கோள் வல் பாண்மகன் தலை வலித்து யாத்த
நெடும் கழை தூண்டில் நடுங்க நாண் கொளீஇ
கொடு வாய் இரும்பின் மடி தலை புலம்ப
பொதி இரை கதுவிய போழ் வாய் வாளை – பெரும் 283-287

பச்சை இறைச்சியை வைத்த, தோளில் மாட்டிய, பதப்படுத்தாத தோலினால் செய்த பையையுடைய
(மீனைக்)கொள்ளுதலில் வல்ல பாண்மகனுடைய தலையில் வலித்துக் கட்டின
நெடிய மூங்கில் கோலாகிய தூண்டில் நடுங்கும்படியும், கயிற்றிலே கொளுவப்பட்ட
வளைந்த வாயினையுடைய தூண்டில் முள்ளின் மடித்த தலை (இரையின்றித்)தனிக்கும்படியும்,
முள்ளை மறைத்திருக்கும் இரையைக் கௌவி (அகப்படாதுபோன)பிளந்த வாயையுடைய வாளை மீன்,

முயங்கி பொதிவேம் முயங்கி பொதிவேம்
முலை வேதின் ஒற்றி முயங்கி பொதிவேம்
கொலை ஏறு சாடிய புண்ணை எம் கேளே – கலி 106/34-36

கட்டியணைத்து மூடிக்கொள்வோம், கட்டியணைத்து மூடிக்கொள்வோம்,
எம்முடைய முலையால் வேதுகொடுத்து ஒற்றியெடுத்துக் கட்டியணைத்து மூடிக்கொள்வோம்,
கொலைகாரக் காளை குத்திய புண்ணை, என் தோழியே!

நிணம் பொதி கழலொடு நிலம் சேர்ந்தனனே – புறம் 285/12

பிணங்களிடையே நின்று பொருதலால், நிணம் கொத்தாகப்படிந்த கழலுடன் நிலத்தில் வீழ்ந்தான்.

மிகுத்து பதம் கொண்ட பரூஉ கண் பொதியினிர் – மலை 252

மீதம்வைத்த தசையைக் கொண்ட பருத்த வடிவுடைய மூட்டையுடையராய்

அவல் பதம் கொண்டன அம் பொதி தோரை – மலை 121

அவல் இடிக்கும் பக்குவம் பெற்றன, அழகிய கொத்துக்கொத்தான மூங்கில்நெல்;

துளங்கு தசும்பு வாக்கிய பசும் பொதி தேறல் – மலை 463

(வேகும்போது கொதிப்பதால்)குலுங்கும் பானையிலிருந்து வடித்த (நெல்லின்)இளம் முளைகளாலான தெளிந்த கள்ளை

வாள் வடித்து அன்ன வயிறு உடை பொதிய – அகம் 335/16

வாளை வடித்துவைத்தாற் போன்ற வயிற்றினையுடைய இளங்குருத்தின்கண்ணவாய

போது பொதி உடைந்த ஒண் செம்_காந்தள் – நற் 176/6

மொட்டுகள் தளையவிழ்ந்த ஒளிவிடும் செங்காந்தள்,

தாழி முதல் கலித்த கோழ் இலை பருத்தி
பொதி வயிற்று இளம் காய் பேடை ஊட்டி – அகம் 129/7,8

தாழியிடத்தே தழைத்த கொழுவிய இலையையுடைய பருத்திச்செடியின்
பருமனான வயிற்றினையுடைய இளங்காயைப் பேடைகட்கு அருத்தி

வேங்கை வெறி தழை வேறு வகுத்து அன்ன
ஊன் பொதி அவிழா கோட்டு உகிர் குருளை – அகம் 147/2,3

வேங்கை மரத்தின் வெறி கமழும் பூவுடன் கூடிய தழையை வேருவேறாக வகுத்துவைத்ததைப் போன்ற
தசையின் மறைப்பு நீங்காத வளைந்த நகத்தினையுடைய (புலிக்)குட்டிகள்

எழா நெல்
பைம் கழை பொதி களைந்து அன்ன விளர்ப்பின்
வளை இல் வரும் கை ஓச்சி – புறம் 253/2-4

நெல் எழாத
பசிய மூங்கில் பட்டை ஒழித்தாற்போன்ற வெளுத்திருந்த
வளையல் இல்லாத வறிய கையைத் தலைமேலே ஏற்றிக்கொண்டு

புனைந்த என்
பொதி மாண் முச்சி காண்-தொறும் பண்டை
பழ அணி உள்ளப்படுமால் தோழி – அகம் 391/6-8

ஒப்பனைசெய்யப்பட்ட என
நிறைவான மாண்பினையுடைய கூந்தல் குடியைக் காணுந்தோறும் முன்புள்ள
எனது பழைய அழகு நினைக்கப்படுகின்றது தோழி

முட தாழை முடுக்கருள் அளித்த_கால் வித்தாயம்
இடை தங்க கண்டவன் மனம் போல நந்தியாள்
கொடை தக்காய் நீ ஆயின் நெறி அல்லா கதி ஓடி
உடை பொதி இழந்தான் போல் உறு துயர் உழப்பவோ – கலி 136/9-12

வளைந்து கிடக்கும் தாழையின் குறுகிய வெளியில் நீ இவளிடம் அன்புசெய்தபோது, சிறு தாயம் வேண்ட
உருட்டும்போது அதனையே கிடைக்கக் கண்டவனின் மனத்தைப் போல மகிழ்ந்து சிறந்தவள்,
கொடுப்பதில் சிறந்தவனே! நீ பிரிய எண்ணினால், சிறு தாயம் வேண்டியபோது பெரும் எண்ணிக்கை பெற்று
கட்டிவைத்த பந்தயப் பொருளை இழந்தவனைப் போலப் பெரும் துயரில் வருந்தமாட்டாளோ?

மா வதி சேர மாலை வாள் கொள
அந்தி அந்தணர் எதிர்கொள அயர்ந்து
செம் தீ செ அழல் தொடங்க வந்ததை
வால் இழை மகளிர் உயிர் பொதி அவிழ்க்கும்
காலை ஆவது அறியார்
மாலை என்மனார் மயங்கியோரே – கலி 119/11-16

விலங்குகள் தாம் தங்குமிடங்களை அடைய, மாலைக்காலம் பலவகையிலும் ஒளிபெற்று விளங்க,
அந்திக்காலத்தை அந்தணர்கள் தமக்குரிய சடங்குகளைச் செய்து எதிர்கொள்ள,
மகளிர் செந்தீயால் உண்டான விளக்கை ஏற்றத் தொடங்க, இவ்வாறாக வந்த பொழுது
தூய்மையான அணிகலன் அணிந்த, பிரிந்து வாழும் மகளிரின் உயிரை அவர் உடலிலிருந்து போக்கும்
தருணமாக இருப்பதை அறியமாட்டாதவராய்
மாலைக் காலம் என்கின்றனர் மனமயக்கம் கொண்டவர்கள்.

அதனால் பொதி அவிழ் வைகறை வந்து நீ குறைகூறி
வதுவை அயர்தல் வேண்டுவல் – கலி 52/22,23

அதனால், அரும்புகள் மலரும் அதிகாலையில் வந்து நீ உன் விருப்பத்தைக் கூறி
மணம் பேசி முடிக்க வேண்டும்,

புகை என புதல் சூழ்ந்து பூ அம் கள் பொதி செய்யா
முகை வெண் பல் நுதி பொர முற்றிய கடும் பனி – கலி 31/19,20

புகை படிந்தது போல் புதர்கள்தோறும் படர்ந்து, இனிய தேன் உள்ளே பெறுதல் அற்ற
அரும்பாகிய வெள்ளிய பற்களின் முனை ஒன்றோடொன்று அடித்துக்கொள்ளும்படி சூழ்ந்துகொண்ட கடும் பனி?

தேம் பொதி கொண்ட தீம் கழை கரும்பின் – குறு 85/4

தேன் உள்ளே இருத்தலைக் கொண்ட இனிய கோலையுடைய கரும்பினது

பொதியின் செல்வன் பொலம் தேர் திதியன் – அகம் 25/20

பொதிகை மலைத் தலைவன் – பொன்னால் ஆன தேரை உடைய – திதியனின்

அவை இருந்த பெரும் பொதியில்
கவை அடி கடு நோக்கத்து
பேய்மகளிர் பெயர்பு ஆட – மது 161-163

அவையத்தோர் இருந்த பெரிய அம்பலத்தில்
இரட்டையான அடிகளையும் கடிய பார்வையினையும் உடைய
பேய்மகளிர் உலாவி ஆட

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *