Skip to content

சொல் பொருள்

1 (வி) 1. கோபம்கொள், 2. வற்றிப்போ, 3. கொல், 4. உள்ளடங்கச்செய், 5. தடு, 2. (பெ) 1. வயல்

செறிவுள்ள முட்காட்டை வெட்டியழித்து விளை நிலம் ஆக்கப்பட்டதைப் பொதுமக்கள் செறு என வழங்கினர்

சொல் பொருள் விளக்கம்

செறிவுள்ள முட்காட்டை வெட்டியழித்து விளை நிலம் ஆக்கப்பட்டதைப் பொதுமக்கள் செறு என வழங்கினர். அது ஒரு குறித்த நில அளவையும் ஆயது. “நூறு செறு” என்பது புறநானூறு. “செறுவாய்” என்னும் பெயரொடு ஊர்கள் உள்ளமை தொழுதூர், திட்டக்குடி வட்டாரங்களில் காணலாம்.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

be angry with, become dried out, kill, destroy, include, comprise, stop, prevent, field

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

செற்ற தெவ்வர் கலங்க தலைச்சென்று
அஞ்சுவர தட்கும் அணங்கு உடை துப்பின் – மது 139,140

(தம்மால்)செறப்பட்ட பகைவர் மனம் கலங்கும்படி அவரிடம் சென்று (அவர்க்கு)அச்சம் தோன்றத் தங்கும், வருத்தத்தை உடைய வலிமையினையும்

வேம்பின் ஒண் பழம் முணைஇ இருப்பை
தேம் பால் செற்ற தீம் பழம் நசைஇ
வைகு பனி உழந்த வாவல் – நற் 279/1-3

வேம்பின் ஒள்ளிய பழத்தை உண்டு வெறுத்து, இருப்பையின் தேனுள்ள, பால் வற்றிய இனிய பழத்தை விரும்பி, நிலைகொண்டிருக்கும் பனியில் வருந்திய வௌவாலின் மேல்

செறு தீ நெஞ்சத்து சினம் நீடினோரும் – பரி 5/73

கொல்லுகின்ற தீய நெஞ்சத்தில் சினத்தை நீட்டித்திருப்போரும்

செறுத்த செய்யுள் செய் செம் நாவின்
வெறுத்த கேள்வி விளங்கு புகழ் கபிலன் – புறம் 53/11,12

பல பொருள்களையும் உள்ளடக்கிய செய்யுளைச் செய்யும் செவ்விய நாவினையும் மிக்க கேள்வியையும் விளங்கிய புகழையும் உடைய கபிலன்

நீரை செறுத்து நிறைவு உற ஓம்பு-மின் – கலி 146/43

நீரையெல்லாம் தடுத்து நிறுத்தி நிறைந்து வழியும்படி சேமித்துவையுங்கள்

ஏறு பொருத செறு உழாது வித்துநவும் – பதி 13/2

காளைமாடுகள் சண்டையிட்ட சேறுபட்ட வயல்களில் உழாமலே விதைவிதைக்கவும்,

அழல் நுதி அன்ன தோகை ஈன்ற
கழனி நெல் ஈன் கவை முதல் அலங்கல்
நிரம்பு அகன் செறுவில் வரம்பு அணையா துயல்வர – அகம் 13/17-20

என்ற அகநானூற்று அடிகளில் வயல், கழனி, செறு ஆகிய மூன்று சொற்களும் கையாளப்பட்டுள்ளன, இதற்கு வளம் மிக்க வயலில் தீயின் கொழுந்தினை ஒத்த தோடுகளை ஈன்ற வயல் நெல்லின் பலவாகக் கிளைத்த முதலிலிருந்து தோன்றிய நெற்கதிர் நிரம்பிய அகன்ற வயலினிடத்து வரப்புகளை அணையாகக் கொண்டு கிடந்து அசைய

என்பது வே.நாட்டார் உரை. இங்கே வயல், கழனி, செறு ஆகிய மூன்று சொற்களுக்கும் வயல் என்றே பொருள்
கொள்ளப்பட்டிருக்கிறது. இவற்றுக்குள்ள நுட்பமான வேறுபாடு ஆய்விற்குரியது.

இவற்றுள், கழனி என்ற சொல் எதைக் குறிக்கிறது என்பதைப் பற்றிய ஆய்வு, கழனி என்ற சொல்லின் அடியில்
கொடுக்கப்பட்டுள்ளது. அதனைப் பார்க்க இங்கே சொடுக்கவும். கழனி

கழனி என்பது வயல்பரப்பு அல்லது வயல்வெளி என்பதைக் குறிக்கும் என்று அங்கு கண்டோம்.

ஏர் பரந்த வயல் நீர் பரந்த செறுவின்
நெல் மலிந்த மனை பொன் மலிந்த மறுகின் – புறம் 338/1,2

ஆகிய அடிகளுக்கு உரைவிளக்கம் தந்த ஔவை.சு.து.அவர்கள், ‘பள்ளப்பாங்கான நன்செய் வயலென்றும், மேட்டுப்
பாங்கு செறுவென்றும் தெரிந்துணர்க’ என்கிறார்.

ஆனால், செறு என்பது வரப்புடன் கூடிய வயல் என்றும், வயல் என்பது வரப்பு இல்லாத செறு என்றும் கொள்வதற்கு
இடமிருக்கிறது. அதாவது ஒரு நெல்விளையும் இடத்தை அதன் வரப்புடன் குறித்தால் அது செறு. வரப்பும் அதன் உள்ளே இருக்கும் இடமும் சேர்ந்தது செறு. வரப்பு இல்லாமல் நெல் விளையும் உள்பரப்பை மட்டும் பார்த்தால் அது
வயல். மேலே காட்டப்பட்ட அகநானூற்றுப் பகுதியில்,

நிரம்பு அகன் செறுவில் வரம்பு அணையா துயல்வர

என்ற அடியில் செறு, வரப்புடன் சேர்ந்து பேசப்படுவதைக் கூர்ந்து நோக்குக.

ஞெண்டு ஆடு செறுவில் தராய்_கண் வைத்த – மலை 460

நண்டுகள் ஓடித்திரியும் வயல்களின்(அருகே) களத்துமேட்டில் வைத்த,

என்ற அடியும் இதனையே குறிப்பால் உணர்த்துகிறது ஒரு வயலில் நண்டுகள் வரப்போரத்தில் வளை தோண்டி,
வரப்புகளின் மீது ஓடியாடித்திரியும் அல்லவா!

படை மாண் பெரும் குள மடை நீர் விட்டு என
கால் அணைந்து எதிரிய கணை கோட்டு வாளை
அள்ளல் அம் கழனி உள்வாய் ஓடி
பகடு சேறு உதைத்த புள்ளி வெண் புறத்து
செம் சால் உழவர் கோல் புடை மதரி
பைம் கால் செறுவின் அணை முதல் பிறழும் – நற் 340/3-8

சிறப்பாகச் செய்யப்பெற்ற பெரிய குளத்தின் மடை நீரைத் திறந்துவிட, வாய்க்காலை ஒட்டிச் சென்று மடைநீரை எதிர்கொண்ட திரண்ட கொம்பினையுடைய வாளை மீன் சேற்றையுடைய அழகிய கழனியின் உட்பக்கம் ஓடி
காளைகள் சேற்றை மிதித்தலால் எழுந்த சேற்றுத்துகள் படிந்த தம் வெள்ளையான முதுகுடன், செம்மையாக நீள உழும் உழவர் தம் காளையைக் கோலா ல் அடிப்பதற்கும் அஞ்சாது செருக்குக்கொண்டு பசுமையான வாய்க்காலையுடைய வயல் வரப்பின் அணையினடியில் பிறழும்

என்ற அடிகளிலும் செறு என்பது வரப்பைச் சேர்த்துப் பேசப்படுவதைப் பார்க்கிறோம்.

மேலே காட்டப்பட்ட,

ஏர் பரந்த வயல் நீர் பரந்த செறுவின்

என்ற அடிக்கு ’ஏர் உழுத வயலையும் நீர் பரவிய வரப்பையும்’ என்று ச.வே.சு உரைகொள்கிறார். ஆனால் பல இடங்களில் செறு என்பது நெல்விளையும் இடத்தையும் குறிப்பதால் செறு என்பது வரப்புடன் சேர்ந்த வயல் என்று கொள்ளல் தகும் எனத் தோன்றுகிறது.

செறுவும் வாவியும் மயங்கி நீர் அற்று – பட் 244

(வாவி – குளம்)
என்ற பட்டினபாலை அடியும் இதனை உறுதிப்படுத்தும். வாவி என்பது குளம், அதாவது கரையுடன் சேர்ந்த நீர்நிலை.
அதைப்போலவே செறு என்பது வரப்புடன் சேர்ந்த விளைநிலம். மேலும், செறு என்பதற்குப் பாத்தி என்ற பொருள் உண்டு. பாத்தி என்றாலே சுற்றிலும் அடைப்பு உள்ள பகுதிதானே. அதைப் போலவே சுற்றிலும் வரப்பு உள்ள வயல்தான் செறு. வயல் என்பது நெல் விளையும் இடம் மட்டுமே.

ஒரு வீட்டின் பரப்பைக் குறிக்கும்போது plinth area என்றும், carpet area என்றும் குறிப்பிடுவர். இவற்றில் plinth area என்பது area with the boundary. carpet area என்பது area without the boundary. இதையே கணிதத்தில் closed set என்றும், open set என்றும் கூறுவர்.

plinth area – closed set – செறு
carpet area – open set – வயல்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

இது ஒரு வழக்குச் சொல்

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *