Skip to content

சொல் பொருள்

(வி) 1. பாராட்டு, புகழ்,  2. பாதுகா, பேணு, காப்பாற்று, 3. ஒரு பொருட்டாக நினை,  4. கடைப்பிடி, பின்பற்று,  5. கவனத்தில் கொள், 6. விரும்பு, 7. கருது, கருத்தில்கொள், 8. உய்த்துணர்,

சொல் பொருள் விளக்கம்

பாராட்டு, புகழ், 

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

praise, acclaim, protect, cherish, keep with great care;, consider as matter of importance, observe, adhere to, hold fast to, pay attention to, mind, desire, consider, infer

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

போற்றார் உயிரினும் போற்றுநர் உயிரினும்
மாற்று ஏமாற்றல் இலையே நினக்கு – பரி 4/52,53

உன்னைப் புகழாதார் உயிரிடத்திலும், புகழுவாருடைய உயிரிடத்திலும்
முறையே மாற்றுதலும் காப்பாற்றுதலும் செய்வதில்லை, உனக்கு

போற்று-மின் மறவீர் சாற்றுதும் நும்மை – புறம் 104/1

நும்மைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள் வீரர்களே! நுமக்கு நாங்கள் அறிவிப்பேம்

உயிர் போற்றலையே செருவத்தானே
கொடை போற்றலையே இரவலர் நடுவண் – பதி 79/1,2

உயிரை ஒரு பொருட்டாக எண்ணியதில்லை, போர்க்களத்தில்;
கொடுக்கின்ற பொருள்களின் அளவை ஒரு பொருட்டாக எண்ணியதில்லை, இரவலர்களின் நடுவில்;

போற்றாய் பெரும நீ காமம் புகர்பட
வேற்றுமை கொண்டு பொருள்_வயின் போகுவாய்
கூற்றமும் மூப்பும் மறந்தாரோடு ஓராஅங்கு
மாற்றுமை கொண்ட வழி – கலி 12/16-19

பின்பற்றாதிருப்பாயாக, பெருமானே நீ! காம இன்பம் கெட்டுப்போகும்படி
அதனுடன் மாறுபட்டு பொருளைத் தேடிச் செல்கின்றவனே!
இறப்பும் முதுமையும் எல்லாருக்கும் உண்டு என்பதனை மறந்துவிட்டவரோடு ஒன்றுசேர்ந்து
உலகியலுக்கு ஒவ்வாத மாறுபட்ட வழியை

வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇ
செம் கண் எருமை இனம் பிரி ஒருத்தல்
கனை செலல் முன்பொடு கதழ்ந்து வரல் போற்றி – மலை 471-473

வெண்ணெல்லை அறுப்போரின் முழவு(எழுப்பும் ஓசை)க்குப் பயந்து,
சிவந்த கண்களையுடைய எருமைகளின் கூட்டத்தினைப் பிரிந்த (ஒற்றை)எருமைக்கடா,
உறுமிக்கொண்டு(வரும்) ஓட்டத்தின் வலிமையோடு (உம்மேல்)விரைவாக வரலாம் என்பதைக் கவனத்திற்கொண்டு

போற்றி கேள்-மதி புகழ் மேம்படுந – பொரு 60

விரும்பிக் கேட்பாயாக, புகழை மேம்படுத்த வல்லோய்,

பிறர் நோயும் தம் நோய் போல் போற்றி அறன் அறிதல்
சான்றவர்க்கு எல்லாம் கடன் ஆனால் – கலி 139/2,3

பிறருடைய துன்பத்தையும் தம் துன்பம் போல் கருதி, அதனால் வரும் அறப்பயனை அறிந்து வாழ்தல்
சான்றோர்கள் எல்லாருடைய இயல்பு என்பதால்,

அனையவை போற்றி நினைஇயன நாடி காண் – கலி 15/23

நான் கூறியவற்றின் நன்மைகளைக் கருத்திற்கொண்டு, நீ நினைக்கின்றவற்றையும் எண்ணிப் பார்!

சுருங்கையின் ஆயத்தார் சுற்றும் எறிந்து
குரும்பையின் முலை பட்ட பூ நீர் துடையாள்
பெருந்தகை மீளி வருவானை கண்டே
இரும் துகில் தானையின் ஒற்றி பொருந்தலை
பூத்தனள் நீங்கு என பொய் ஆற்றால் தோழியர்
தோற்றம் ஓர் ஒத்த மலர் கமழ் தண் சாந்தின்
நாற்றத்தின் போற்றி நகையொடும் போத்தந்து – பரி 16/20-26

பீச்சாங்குழலைக் கொண்ட தோழியர் சுற்றிலும் வளைத்துக்கொண்டு ஒரு பரத்தையின் மீது சாய நீரைப் பாய்ச்ச,
அதனால், சிறிய இளநீரைப் போன்ற முலைகளில் பட்ட அந்தச் சாயநீரைத் துடைக்காமலிருந்தவள்,
பெருந்தகையான தலைவன் வருவதனைக் கண்டு,
நீண்ட துகிலின் முந்தானையால் நீத்துளிகளை ஒற்றியெடுக்க, “கிட்டே வராதீர்,
அவள் பூப்பெய்தியிருக்கிறாள், நீங்குக என்று தோழியர் பொய்யாகக் கூறினராக,
பூப்பெய்திய தோற்றத்தைப் போலிருந்தும், அவள் மீதிருந்த மலர் போன்று மணங்கமழும் சந்தனத்தின்
மணத்தால் பூப்பின்மையையை உய்த்தறிந்து, அவரின் பொய்யாடலுக்காக நகைத்து அவ்விடத்தை விட்டு நீங்கி

ஒன்றனில் போற்றிய விசும்பும் நீயே – பரி 13/18

முதற்புலனாகிய ஓசையினால் உணரப்படும் வானமும் நீயே!

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *