Skip to content

சொல் பொருள்

(வி) 1. உவ, மனம் மகிழ்ச்சிகொள், 2. குடித்துவிட்டு மகிழ்ச்சியாயிரு, 3. உண், அருந்து, 4. குரை,

2. (பெ) 1. மகிழ்ச்சி, உவகை,  2. மது அருந்துவதால் ஏர்படும் களிப்பு, 3. கள்,

சொல் பொருள் விளக்கம்

உவ, மனம் மகிழ்ச்சிகொள்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

be happy, rejoice, revel, take in, drink, bark, joy, happiness, intoxication, toddy

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே – புறம் 192/4,5

வாழ்தலை
இனிதென்று உவந்ததும் இலம்

நறவு உண் செம் வாய் நா திறம் பெயர்ப்ப
உண்டும் தின்றும் இரப்போர்க்கு ஈந்தும்
மகிழ்கம் வம்மோ மற போரோயே – புறம் 364/6-8

கள்ளுண்ணும் சிவந்த வாயிலிட்டு நாவானது இரு மருங்கும் புரட்டிக்கொடுக்க
தின்றும் உண்டும் இரவலரை உண்பித்தும்
மகிழ்வோம் வருவாயாக மறம் பொருந்திய போரைச் செய்பவனே!

இரும் பன தீம் பிழி உண்போர் மகிழும்
ஆர் கலி யாணர்த்து ஆயினும் – நற் 38/3,4

கரிய பனையின் இனிய கள்ளினை உண்போர் மகிழ்ச்சியோடிருக்கும்
பெருத்த ஆரவாரம் மிக்க புதியவரவுகளைக் கொண்டிருப்பினும்,

வானம் நீங்கிய நீல் நிற விசும்பின்
மின்னு நிமிர்ந்து அனையர் ஆகி நறவு மகிழ்ந்து
மாண் இழை மகளிர் புலந்தனர் – மது 678-680

வானத்தில் கடந்து செல்லும் நீல நிறமுடைய முகிலினில்
மின்னுக்கொடி நுடங்கின தன்மையுடையவராய், மதுவை உண்டு,
மாட்சிமைப்பட்ட அணிகலன்களையுடைய மகளிர் (கணவரோடு)புலந்தனராய்,

இலங்கு வேல் இளையர் துஞ்சின் வை எயிற்று
வலம் சுரி தோகை ஞாளி மகிழும்
அரவ வாய் ஞமலி மகிழாது மடியின்
பகல் உரு உறழ நிலவு கான்று விசும்பின்
அகல் வாய் மண்டிலம் நின்று விரியும்மே – அகம் 122/7-11

விளங்கும் வேலினராகிய காவலர்கள் துஞ்சினும், கூரிய பல்லினையும்
வலமாகச் சுரிதலையுடைய வாலினையுமுடைய நாய் குரைக்கும்
ஒலி மிக்க வாயினையுடைய நாய் குரையாது உறங்கினும்
பகலின் ஒளியினை ஒக்க நிலவினைத் தந்து
வானின்கண் அகற்சி வாய்ந்த மதியம் விளங்கிப் பரவும்

மகிழ்தல் மகிழ்ந்து குரைத்தல் என்பார் வேங்கடசாமி நாட்டார். ஒருவேளை வெறித்தனமாகக்
குரைப்பதை அவ்வாறு குறிப்பிட்டார் போலும்.

தமிழ் நிலைபெற்ற தாங்க அரு மரபின்
மகிழ் நனை மறுகின் மதுரையும் வறிதே – சிறு 66,67

தமிழ் வீற்றிருந்த, (தானே)தாங்க முடியாத பாரம்பரியத்தையுடைய,
மகிழ்ச்சியைத் தோற்றுகின்ற தெருவினையுடைய மதுரை(யைத் தரும் கொடை)யும் சிறிதே

வண்டு மூசு தேறல் மாந்தி மகிழ் சிறந்து – நெடு 33

வண்டுகள் மொய்க்கும் கள்ளினை மிகுதியாக உண்டு, களிப்பு மிக்கு,

பிழி மகிழ் வல்சி வேண்ட மற்று இது
கொள்ளாய் என்ப கள்ளின் வாழ்த்தி – புறம் 269/7,8

வடித்த கள்ளை ஏந்தி உண்க என்று வேண்டியும், அதனைக்
வேண்டா என்று கொள்ளாய், கள்ளினை வாழ்த்தி

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *