Skip to content

சொல் பொருள்

(பெ) 1. மூடுபனி, தாழ்ந்து வரும் மேகம், 2. இருள், 3. மேகமூட்டம்,

சொல் பொருள் விளக்கம்

மூடுபனி, தாழ்ந்து வரும் மேகம்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

fog, low lying clouds, darkness, sky overcast with clouds

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

குரூஉ குய் புகை மழை மங்குலின்
பரந்து தோன்றா வியல் நகரால் – மது 757,758

நிறத்தையுடைய தாளிப்புப் புகை கருமையான மூடுபனியைப் போலப்
பரந்து தோன்றவும், அகன்ற (இம் மதுரை மா)நகரத்தே

சாரல்
அகில் சுடு கானவன் உவல் சுடு கமழ் புகை
ஆடு மழை மங்குலின் மறைக்கும் – நற் 282/6-8

மலைச் சாரலில்
அகில் கட்டையை எரிக்கும் குறவன், முதலில் சருகளைக் கொளுத்துவதால் எழுகின்ற புகை
அசைகின்ற மழையின் மேகமூட்டம் போலப் பரந்து மறைக்கும்

கார் எதிர் கலி ஒலி கடி இடி உருமின் இயம் கறங்க
ஊர்பு எழு கிளர்பு உளர் புயல் மங்குலின் நறை பொங்க – கலி 105/24,25

கார்காலத்தில் தோன்றிய மிகுந்த ஒலியினையுடைய கடுமையான பேரிடியைப் போன்று இசைக்கருவிகள் முழங்க,
பரந்து உயர்ந்து எழுந்து அசைவாடும் மூடுபனியைப் போல நறுமணப்புகை மேலெழ,

திரு உடை திரு மனை ஐது தோன்று கமழ் புகை
வரு மழை மங்குலின் மறுகு உடன் மறைக்கும் – புறம் 379/16,17

செல்வமுடைய நின் திருமனைக்கண் மெல்லிதாகத் தோன்றும் நறிய புகை
பெய்தற்கு வரும் மழை முகில் படிந்து மறைப்பது போல தெருவெல்லாம் ஒருங்கு மறைக்கும்

புடை நடுகல்லின் நாட்பலி ஊட்டி
நன்னீராட்டி நெய் நறை கொளீஇய
மங்குல் மா புகை மறுகு உடன் கமழும் – புறம் 329/2-4

பக்கத்தே நடப்பட்ட நடுகல்லுக்கு விடியற்காலத்துப் பலியை ஊட்டி
நல்ல நீரையாட்டி, நெய்விளக்கேற்றுதலால் உண்டாகிய
மேகம் போலும் புகை எழுந்து தெருவில் மணக்கும்

முனை சுட எழுந்த மங்குல் மா புகை
மலை சூழ் மஞ்சின் மழ களிறு அணியும் – புறம் 103/6,7

பகைவரின் முனைப்புலத்தைச் சுடுதலான் எழுந்த மங்குலாகிய கரிய புகை
மலையைச் சூழும் முகில் போல இளம் களிற்றைச் சூழும்

கங்குல் ஓதை கலி மகிழ் உழவர்
பொங்கழி முகந்த தா இல் நுண் துகள்
மங்குல் வானின் மாதிரம் மறைப்ப – அகம் 37/2-4

பின்னிருட்டில் ஆரவாரத்தை உடைய மிகுந்த மகிழ்ச்சியுள்ள உழவர்
தூற்றாப் பொலியை முகந்து தூற்ற எழும் கனமற்ற நுண்ணிய தூசுகள்
மூடுபனி வானத்தைப் போன்று நாற்புரத்தையும் மறைக்க –

மா கழி மணி பூ கூம்ப தூ திரை
பொங்கு பிதிர் துவலையொடு மங்குல் தைஇ
கையற வந்த தைவரல் ஊதையொடு – குறு 55/1-3

பெரிய கழியின் நீலமணி போன்ற பூக்கள் கூம்ப, தூவுகின்ற அலைகளினின்றும்
பொங்கி வரும் சிதறல்கள் கொண்ட துவலையோடு, தாழ்ந்த முகில்களையும் சேர்த்துக்கொண்டு
செயலற்றுப்போக வந்த தடவிச்செல்லும் வாடைக்காற்றோடு

தொடை மடி களைந்த சிலை உடை மறவர்
பொங்கு பிசிர் புணரி மங்குலொடு மயங்கி
வரும் கடல் ஊதையின் பனிக்கும் – பதி 60/9-11

அம்பினைத் தொடுப்பதில் சோம்பலைக் களைந்த வில்லையுடைய மறவர்கள்
பொங்குகின்ற சிறு திவலைகளைச் சிதறும் அலைகளோடு, தாழ்ந்து வரும் மேகங்கள் கலந்து
வரும் கடலின் குளிர்ந்த காற்றில் மிகவும் நடுக்கம்கொள்ளும்,

மங்குல் வானத்து திங்கள் ஏய்க்கும்
ஆடு வண்டு இமிரா அழல் அவிர் தாமரை
நீடு இரும் பித்தை பொலிய சூட்டி – பெரும் 480-482

இருண்ட வானத்தின்கண் திங்களைப் போன்று
உலாவும் வண்டுகள் ஒலியாத, தீயில் மலர்ந்த வெண்பொற்றாமரையை
நீண்ட கரிய மயிரில் அழகுபெறச் சூட்டி;

சொல்லிய பருவம் கழிந்தன்று எல்லையும்
மயங்கு இருள் நடுநாள் மங்குலோடு ஒன்றி
ஆர் கலி வானம் நீர் பொதிந்து இயங்க – நற் 364/1-3

திரும்புவேன் என்று தலைவர் சொல்லிச் சென்ற பருவமும் வந்துசென்றுவிட்டது; பகற்போதிலும்
இருள் கலந்த நள்ளிரவைப் போல மேகமூட்டத்துடன் சேர்ந்து
ஆரவாரத்தையுடைய மேகங்கள் நீர் நிறைந்து வானத்தில் இயங்க

மங்குல் என்பதற்குப் பல பொருள்கள் கூறப்பட்டாலும், மிகப்பெரும்பாலும் இது புகை மூட்டத்திற்கு
ஒப்பிடப்படுவதால், மங்குல் என்பது மேகங்கள் தாழ்ந்துவருவதால் ஏற்படும் மூட்டமான நிலை
என்பது பெறப்படும்.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *