Skip to content

சொல் பொருள்

(வி) 1. வளை, மடி, கோணு,  2. ஒடுங்கு, 3. சுருங்கு, அடங்கு, 4. இணங்கு, கீழடங்கு, 5. தீய்ந்துபோ, கருகிப்போ, 6. குறைவுபடு, 7. மீள், திரும்பிச்செல், 8. உக்கிரம் அடங்கு,

சொல் பொருள் விளக்கம்

வளை, மடி, கோணு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

become bend, be absorbed, shrink, be contained, yield, submit, be burnt, be diminished, go back, return, be decreased in force

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மாண்ட எறித்த படை போல் முடங்கி மடங்கி
நெறித்துவிட்டு அன்ன நிறை ஏரால் என்னை
பொறுக்கல்லா நோய் செய்தாய் பொறீஇ நிறுக்கல்லேன் – கலி 94/9-11

“சிறப்பான கலப்பையில் இறுக்கப்பட்ட கொழுவினைப் போல் முடங்கியும், வளைந்தும்
சுருட்டிவிட்டதைப் போன்ற நிறைந்த அழகால், எனக்குப்
பொறுக்க முடியாத காம நோயை ஏற்படுத்தினாய்! நான் பொறுத்திருக்கமாட்டேன்,

தொல் ஊழி தடுமாறி தொகல் வேண்டும் பருவத்தால்
பல் வயின் உயிர் எல்லாம் படைத்தான்_கண் பெயர்ப்பான் போல்
எல் உறு தெறு கதிர் மடங்கி தன் கதிர் மாய – கலி 129/1-3

பழைய ஊழிக்காலத்தில் உயிர்கள் தோன்றி, பின் முறைகெட்டு, ஒன்றாகச் சேர்ந்து ஒடுங்கக்கூடிய ஊழி முடிவில்,
பல அண்டங்களில் வாழும் அந்த உயிர்கள் அனைத்தையும் படைத்த தன்னிடமே அடக்கிக்கொள்ளும்
இறைவனைப் போல,
பகற்பொழுதைச் செய்யும் சுடுகின்ற கதிர்களைத் தன்னிடத்தில் மீட்டுக்கொண்டு ஞாயிறு மறைய,

பலர்க்கு நிழல் ஆகி உலகம் மீக்கூறி
தலைப்போகு அன்மையின் சிறு வழி மடங்கி
நிலை பெறு நடுகல் ஆகிய கண்ணும் – புறம் 223/1-3

பலருக்கும் நிழல் போல் இனியனவனாக இருந்து உயர்ந்தோர் பாராட்ட
அரசாளும் கடமையை நிறைவேற்றமுடியாமல், சிறிய வழியிடத்தில் அடங்கி
என்றும் நிலைபெறும் நடுகல்லாக நீ ஆனபோதும்

புரிபு மேற்சென்ற நூற்றுவர் மடங்க
வரி புனை வல் வில் ஐவர் அட்ட
பொரு_களம் போலும் தொழூஉ – கலி 104/57-59

போரினை விரும்பி அதனை மேற்கொண்ட நூற்றுவர்கள் கீழடங்க
வரிந்து கட்டப்பட்ட வலிமை பொருந்திய வில்லினையுடைய ஐவர் போரிட்ட
போர்க்களம் போன்று இருந்தது தொழுவம்;

நெருப்பு என சிவந்த உருப்பு அவிர் மண்டிலம்
புலம்_கடை மடங்க தெறுதலின் ஞொள்கி – அகம் 31/1,2

தீயைப்போலச் சினந்து விளங்கும் வெம்மை ஒளிரும் ஞாயிறு
விளைநிலங்களின் கடைசிமட்டும் கருகிப்போகத் தக்கதாகச் சுட்டுப்பொசுக்குவதால் சுருங்கிப்போய்

அடங்கா மன்னரை அடக்கும்
மடங்கா விளையுள் நாடு கிழவோயே – புறம் 200/16,17

உனக்கு அடங்கிநடக்காத மன்னரை அடக்கிவைக்கும்
குறையாத மிக்க விளைதலையுடைய நாட்டையுடையோய்

மடங்கா விளையுள்’

என்பதற்கு ‘மடக்கப்படாத மிக்க விளையுள் – போகம் பல தலையாப் பல்கிப் பெருகலின்,
மடக்குதல் “போகம் ஒருக்குதல்” – ஒருக்குதல் வரையறுத்தல் என்பார் ஔவை.துரைசாமியார்.

மடங்கலின் சினைஇ மடங்கா உள்ளத்து
அடங்கா தானை வேந்தர் – புறம் 71/1,2

சிங்கம் போல் சினந்து, மீளாத மேற்கோள் பொருந்திய உள்ளத்தினையும்
மிகைத்துச் செல்லும் படையையும் உடைய வேந்தர்

குறியவும் நெடியவும் குன்று தலைமணந்த
சுரன் இறந்து அகன்றனர் ஆயினும் மிக நனி
மடங்கா உள்ளமொடு மதி மயக்கு_உறாஅ
பொருள்_வயின் நீடலோ இலர் – அகம் 233/10-13

குறியனவும் நெடியனவுமாய குன்றுகள் இடந்தோறும் உள்ள
சுரத்தினைக் கடந்து சென்றவராயினும் மிகப்பெரிதும்
அடங்காத உள்ளமுடையவராய் அறிவு மயங்குதலுற்று
பொருள் ஈட்டுதலைக் கருதி தாழ்த்திருத்தல் இலராவர்.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *