Skip to content

சொல் பொருள்

(வி) 1. மன்னெனும் ஏவல், நிலைபெறு, 2. மன்னெனும் ஏவல், தங்கு,

2. (பெ) 1. அரசன், 2. நிலைபேறு, 3. பெருமை, 4. பன்மை, மிகுதி, 5. ஆக்கம், 6. தலைமை, 

3. (இ.சொ) 1. அசைநிலை, 2. ஆக்கக் குறிப்பு, 3. ஒழியிசை, 4. இரக்கக்குறிப்பு, 5. மிகுதிக்குறிப்பு, 6. கழிவுக்குறிப்பு, 

மன்

வேர்ச்சொல்லியல்

இது man என்னும் ஆங்கில சொல்லின் மூலம்

இது மநு என்னும் சமற்கிருத சொல்லின் மூலம்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

be fixed – V.Viswanatha Pillai, Tamil and English Dictionary, remain, be settled – V.Viswanatha Pillai, Tamil and English Dictionary, king, permanency, greatness – Tamil Lexicon, , உயர்வு, excellence – Pals Tamil Dictionery, multiplicity, plurality, abundance, prosperity, superiority, an expletive, an affix particle indicating change from one state to another, ellipsis, Indicating words omitted necessary for a full sense, an affix particle indicating pity, an affix particle indicating abundance, an affix particle indicating what is gone

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மலர் தலை உலகத்து மன் உயிர் காக்கும் – பெரும் 32

அகன்ற இடத்தையுடைய உலகத்தில் நிலைபெற்ற உயிர்களைப் புரக்கும்- நச்.உரை

விறல் வேல் மன்னர் மன் எயில் முருக்கி – சிறு 247

வெற்றியையுடைத்தாகிய வேலினையுடைய முடிவேந்தர் மன்னும் அரண்களை அழித்து – நச்.உரை
வெற்றியை உடைத்தாகிய வேலினையுடைய முடிவேந்தர் உறையும் அரண்களை அழித்து – பொ.வே.சோ.உரை

மன் மீக்கூறுநர் மறம் தப கடந்தே – பதி 11/25

மன்னர்களுள் செருக்குற்று மீக்கூறும் மன்னர்களின் மறம் கெட்டழியுமாறு வஞ்சியாது பொருது வென்று
– ஔ.சு.து.உரை

மன் மருங்கு அறுத்த மழு வாள் நெடியோன் – அகம் 220/5

மன்னர் வழியை அழித்த பரசுராமன் – ந.மு.வே.உரை

மன் மகளிர் சென்னியர் ஆடல் தொடங்க – பரி 7/80

அரசனால் தலைக்கோல் பெற்ற மகளிரும் பாணரும் கூத்தாடுதலைத் தொடங்க – பொ.வே.சோ.உரை

மன் உயிர் அறியா துன் அரும் பொதியில் – குறு 376/1

நிலைபெற்ற உயிர்த்தொகுதியினரால் முற்ற அறியப்படாத அணுகுதற்கு அரிய பொதியில் மலையிலுள்ள
– உ.வே.சா.உரை

மண் உடை ஞாலத்து மன் உயிர்க்கு எஞ்சாது – பதி 15/35

மண்ணுலகத்தில் வாழும் நிலைபெற்ற உயிர்கட்கு குறைவறக்கொடுத்து – ஔவை.சு.து.உரை

மன் உயிர் முதல்வனை ஆதலின் – பரி 1/56

நிலைபெற்ற உயிர்கட்கு தலைவனும் ஆக – பொ.வே.சோ.உரை

மன் எயில் உடையோர் போல – நற் 150/5

நிலைபெற்ற மதில்களையுடைய குறுநில மன்னர் போல – பின்.நா.உரை

தன் வரம்பு ஆகிய மன் எயில் இருக்கை – அகம் 392/23

தன்னைப் பற்றுக்கோடாகவுடைய நிலைபெற்ற மதில்களையுடைய அரண் – ந.மு.வே.உரை

ஒன்பதிற்று தட கை மன் பேராள – பரி 3/39

ஒன்பது பெருங்கைகளையுடைய நிலைபெற்ற புகழோனே – பொ.வே.சோ.உரை

மால் பெயல் தலைஇய மன் நெடும் குன்றத்து – நற் 268/2

மேகம் மழைபெய்துவிட்ட மிக்க நெடிய குன்றத்தின்கண் – பின்.நாரா.உரை

நீ உடன்றோர் மன் எயில் தோட்டி வையா – பதி 25/5

நின்னைப் பகைத்தோருடைய பெரிய நகர் மதில்கள் வாழ்வாரின்மையின் கதவு முதலிய காப்பு வைக்கப்படாது
அழிந்தன – ஔவை.சு.து.உரை

மன் உயிர் ஏமுற மலர் ஞாலம் புரவு ஈன்று – கலி 34/1

பெருமையையுடைய உயிர்கள் எல்லாம் உயிர் வாழும்படி அகன்ற உலகிடத்து பாதுகாத்தலை உண்டாக்கி
– நச்.உரை

தன் உயிர் போல தழீஇ உலகத்து
மன் உயிர் காக்கும் இ மன்னனும் – கலி 143/52,53

தன் உயிரைப் பாதுகாக்குமாறு போல உலகத்துப்
பெரிய உயிர்களை எல்லாம் தழீஇப் பாதுகாக்கும் இம் மன்னனும் – நச்.உரை

வணர் சுரி முச்சி முழுதும் மன் புரள – அகம் 390/5

வளைந்த சுரிந்த கூந்தலின் முடி முழுதும் பெரிதும் அலையக்கொண்டு – ந.மு.வே.உரை

நின் அளந்து அறிதல் மன் உயிர்க்கு அருமையின் – திரு 278

நின் தன்மையெல்லாம் முற்ற அளவிட்டறிதல் பல்லுயிர்க்கும் அரிதாகையினாலே – நச்.உரை

மன் உயிர் புரைஇய வலன் ஏர்பு இரங்கும் – பதி 24/27

மிக்குற்ற உயிர்களைப் புரத்தல் வேண்டி வலமாக எழுந்து முழங்கும் – ஔவை.சு.து.உரை

மன் உயிர் மடிந்தன்றால் பொழுதே – அகம் 68/10

மன்னுயிர் மடிந்தன்றால் பொழுது என்பதனால், ஊர், காவலர், நாய் முதலியவை துஞ்சுதலும் கூறினாள்
– ந.மு.வே.உரை

திரு நிலைஇய பெரு மன் எயில் – பட் 291

திருமகள் நிலைபெற்ற பெரிய ஆக்கத்தையுடைய உறந்தையின் மதிலினிடத்தே- நச்.உரை

திரு நிலைஇய பெரு மன் எயில் – பட் 291

வீரத்திருமகள் என்றும் நிலைபெற்ற பெரிய தலைமையினையுடைய மதில் – பொ.வே.சோ.உரை

தடவு நிமிர் முத்தீ பேணிய மன் எச்சில் – பரி 5/42

குண்டங்களில் எழுந்த முத்தீயும் கொள்ளுதலானே சேடமாகியவற்றை – பொ.வே.சோ
(மன் – பொருள் இல்லை)

அது-மன் எம் பரிசில் ஆவியர் கோவே – புறம் 147/9

அதுவாகும் எம்முடைய பரிசில் ஆவியருடைய வேந்தே – மன் – அசை

பொரி அரை ஞெமிர்ந்த புழல் காய் கொன்றை
நீடிய சடையோடு ஆடா மேனி
குன்று உறை தவசியர் போல பலவுடன்
என்றூழ் நீள் இடை பொற்ப தோன்றும்
அரும் சுரம் எளிய-மன் நினக்கே – நற் 141/3-7

பொரிந்தது போல் ஆகிய அடிமரத்தின் பட்டை தேய்ந்த, உள்ளே துளையுள்ள காய்களைக் கொண்ட கொன்றை
நீண்ட சடையும் நீராடாத மேனியுமுடைய
குன்றுகளில் வாழும் தவசிமாரைப் போல, பலவாக
வெயில் பரந்த நீண்ட இடைவேளி அழகுறத் தோன்றும்
அரிய காட்டுவழிகள் கடந்துசெல்ல எளிதானவை உனக்கு

எளியமன் என்புழி மன்னைச்சொல் ஆக்கம் குறித்து நின்றது – ஔ.சு.து.உரை

குடுமி நெற்றி நெடு மா தோகை
————— ———————
கிளிகடி மகளிரின் விளிபட பயிரும்
கார்-மன் இதுவால் தோழி – அகம் 194/11-16

குடுமி பொருந்திய தலையினையுடைய நீண்ட கரிய மயில்
—————— ——————-
கிளிகளை ஓட்டும் மகளிர் போல ஒலியுண்டாக அகவும்
கார்காலம் இதுவேயாகும், தோழி (அவர் இன்னும் வந்திலரே)

பெரும் பாழ் ஆகும்-மன் அளிய தாமே – பதி 22/38

பெரிய பாழ்நிலம் ஆகிவிடும் அவைதாம் அளிக்கத்தக்கன (மன் – இரக்கப்பொருட்டு)

வண்டன் அனையை-மன் நீயே – பதி 31/23

வண்டன் என்னும் வள்ளலை நீ பெரிதும் ஒத்திருக்கின்றாய் (மன் – மிகுதி குறித்து நின்றது)

வென் வேல் பொறையன் என்றலின் வெருவா
வெப்பு உடை ஆடூஉ செத்தனென்-மன் யான் – பதி 86/3,4

வெற்றி பொருந்திய வேலையுடைய பொறையன் என்று எல்லாரும் சொல்லுதலால், உளம் அஞ்சி
வெம்மையுடைய ஆண்மகன் என்றே முன்பெல்லாம் கருதினேன் நான் (அது இப்பொழுது கழிந்தது)

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

இது ஒரு வழக்குச் சொல்

இது ஒரு மூலச்சொல்

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *