சொல் பொருள்
(பெ) 1. தெப்பம், 2. ஒரு வகை உணவுப்பொருள்,
சொல் பொருள் விளக்கம்
1. தெப்பம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
float, a kind of preparation of food
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வெண் கிடை மிதவையர் நன் கிடை தேரினர் – பரி 6/35 வெண்மையான சாரம் அமைத்த தெப்பத்தினையுடையவரும், நல்ல இருக்கைகள் கொண்ட தேரில் வருபவர்களும் செ வீ வேங்கை பூவின் அன்ன வேய் கொள் அரிசி மிதவை சொரிந்த சுவல் விளை நெல்லின் அவரை அம் புளிங்கூழ் – மலை 434-436 இதனைப் பலவாறாகத் திரித்தும், மாற்றி எழுதியும் நச்சினார்க்கினியர் பொருள்கொள்வார். செ வீ வேங்கை பூவின் அன்ன அவரை சிவந்த பூக்களையுடைய வேங்கைப் பூவினையொத்த நிறத்தையுடைய அவரை விதை வேய் கொள் அரிசி மூங்கில் தன்னிடத்தே கொண்ட அரிசி சுவல் விளை நெல்லின் அரிசி மேட்டுநிலத்தே விளைந்த நெல்லின் அரிசி சொரிந்த மிதவை புளிங்கூழ் இவற்றைப் புளிக்கரைத்த உலையிலே சொரிந்து ஆக்கின குழைந்த புளியங்கூழை இவர் மிதவை என்பதற்குக் குழைவான (சோறு) என்று பொருள்கொள்கிறார். இதனை ஆற்றொழுக்காகவே, இருக்கிறபடியே, பொருள்கொள்வார் பொ.வே.சோமசுந்தரனார் சிவந்த பூக்களையுடைய வேங்கைப் பூவினை ஒத்த மூங்கில் தன்னிடத்தே கொண்ட அரிசியினாலாய சோற்றின்கண் சொரிந்த மேட்டு நிலத்தின் விளைந்த நெல்லின் அரிசியை விரவி அவரை விதையினாற் சமைத்த புளிக்கரைத்த புளியங்கூழை இவர் மிதவை என்பதற்குச் சோறு என்று பொருள்கொள்கிறார் சிவந்த பூக்களையுடைய வேங்கைப் பூவினைப்போன்ற மூங்கில் அரிசிச் சோற்றில், மேட்டு நிலத்தில் விளைந்த நெல்லின் அரிசியை விரவி அவரை விதையாற் புளியைக் கரைத்துச் செய்த புளிங்கூழை – ச.வே.சு – உரை இவரும் மிதவை என்பதற்குச் சோறு என்றே பொருள்கொள்கிறார். இங்கு நாம் கவனிக்கவேண்டியது, இந்தப்பகுதி, புல் வேய் குரம்பை -களில், அதாவது குடிசைகளில் வாழும் முல்லை நில மக்களின் விருந்தோம்பலைச் சிறப்பித்துக்கூறும் வகையில் அவர்களின் வீட்டுக்கு இரவில் சென்றால் கிடைக்கக்கூடியது என்று புலவர் குறிப்பிடுவது. கொள்ளொடு பயறு பால் விரைஇ வெள்ளி கோல் வரைந்து அன்ன வால் அவிழ் மிதவை வாங்கு கை தடுத்த பின்றை – அகம் 37/12-14 கொள்ளும் பயறும் அழகு பொருந்தப் பாலுடன் கலந்து ஆக்கிய, வெள்ளிக் கம்பியை ஓர் அளவாக நறுக்கிய வெள்ளிய அவிழ்க் கஞ்சியை வளைத்துண்ட கை போதும் எனத் தடுத்த பின்னர் – ந.மு.வே.நாட்டார் உரை. இவர் மிதவை என்பதற்குக் கஞ்சி என்று பொருள்கொள்வார். பின்னர் மிதவை – கூழ் என்று விளக்குவார். கொள்ளும் பயறும் பாலோடு விரவிச் சமைத்த, வெள்ளிக்கம்பியை ஓரளவாகத் துணித்துப்போகட்டாற் போன்ற வெள்ளிய பருக்கைகளைக் கொண்ட கூழையும் வயிறாரப் பருகி, இனி வேண்டா என்று வளைந்த கையால் தடுத்த பின்றை – பொ.வே.சோமசுந்தரனார் உரை இவரும் மிதவை என்பதற்குக் கூழ் என்று பொருள்கொள்வார். இங்கு நாம் கவனிக்கவேண்டியது, இது பாலைத்திணைப் பாடலாயினும், உழவர்கள் ’வைகு புலர் விடியலாகிய’ அதிகாலையில் நெல் கதிரடிக்கும் களத்தில் வேலை செய்கையில், இந்தக் கஞ்சியை வாங்கிக் குடித்துவிட்டுத் தம் பணியைத் தொடர்வர் என்று பாடல் கூறுகிறது. உழுந்து தலைப்பெய்த கொழும் களி மிதவை பெரும் சோற்று அமலை நிற்ப – அகம் 86/1,2 உழுத்தம் பருப்புடன் கூட்டிச்சமைத்த செவ்விய குழைதலையுடைய பொங்கலோடு பெரிய சோற்றுத் திரளையுடைய உண்டல் இடையறாது நிகழ – ந.மு.வே.நாட்டார் உரை உழுத்தம் பருப்புப் பெய்து சமைத்த கொழுவிய களியாகிய மிதவையோடு மிக்க சோற்றினையும் சுற்றத்தாரும் பிறரும் உண்ணுதலாலே உண்டாகும் ஆரவாரமும் இடையறாது நிற்பவும் – பொ.வே.சோமசுந்தரனார் உரை விளக்கம் – உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவை என்பது ஒருவகைத் துணை உணவு; அஃதாவது உழுத்தம் பருப்புப் பொங்கல் என்றவாறு. எனவே இருவரும் மிதவை என்பதற்குப் பொங்கல் என்றேபொருள் கொண்டிருக்கின்றனர். இங்கு நாம் கவனிக்கவேண்டியது, இந்த நிகழ்ச்சி, பாடலில், ’கனை இருள் அகன்ற கவின்பெறு காலை’-யில் நடப்பதாகக் கூறப்பட்டுள்ளது. பசு மீன் நொடுத்த வெண்ணெல் மாஅ தயிர் மிதி மிதவை ஆர்த்துவம் நினக்கே – அகம் 340/14,15 பசிய மீனை விற்று மாற்றிய வெண்ணெல்லின் மாவைத் தயிரிட்டுப் பிசைந்த கூழினைக் கொடுப்போம் உனக்கு – ந.மு.வே.நாட்டார் உரை இங்கு, தயிர் மிதி மிதவை மா ஆர்குநவே என்று பாடங்கொண்டு, கூழினை உன் குதிரைகள் உண்பனவாகும் என்று பொருள்கொள்கிறார். தயிர் மிதி மிதவை gruel mixed with curds – வைதேகி ஹெர்பர்ட் மொழிபெயர்ப்பு பச்சையான மீனை விற்றுப் பெற்ற வெண் நெல்லினது மாவைத் தயிர்விட்டுப் பிசைந்து ஆக்கிய கூழினை உன் குதிரைகள் உண்ணத் தருவோம். ச.வே.சு – உரை. இவர், தயிர் மிதி மிதவை ஆர்த்துவம் நினக்கே என்று பாடங்கொண்டும் ,குதிரைகளுக்கு என்று வலிந்து பொருள்கொள்கிறார். இங்கும் மிதவை என்பதற்குக் கூழ் என்றே பொருள்கொள்ளப்பட்டிருக்கிறது. இங்கும் நாம் கவனிக்கவேண்டியது, தலைவன் இரவில் தங்கினால் இரவு உணவாகத் தலைவன் தனக்கோ, தன் குதிரைக்கோ தலைவியிடம் பெறும் உணவாகவே இந்த நெய்தல் திணைப் பாடலில் குறிக்கப்பட்டுள்ளது. கவை கதிர் வரகின் அவைப்பு_உறு வாக்கல் தாது எரு மறுகின் போதொடு பொதுளிய வேளை வெண் பூ வெண் தயிர் கொளீஇ ஆய்_மகள் அட்ட அம் புளி மிதவை அவரை கொய்யுநர் ஆர மாந்தும் – புறம் 215/1-5 கவர்த்த கதிரினையுடைய வரகினது குற்றுதலுற்ற வடிக்கப்பட்ட சோற்றையும் தாதாக உதிர்ந்த எருவையுடைய தெருவின்கண் போதொடு தழைத்த வேளையினது வெள்ளிய பூவை வெள்ளிய தயிரின்கண் பெய்து, இடைமகள் அடப்பட்ட அழகிய புளிங்கூழையும் அவரை கொய்வார் நிறைய உண்ணும் ஔவை.சு.து. உரை விளக்கம் – வேளைப்பூவை உப்பிட்டு வேகவைத்து வெள்ளிய தயிர் கலந்து நன்கு பிசைந்து மிளகுத்தூளிட்டுத் தாளிதம் செய்யப்பட்ட புளிங்கூழ் ஈண்டு அம்புளி மிதவை யெனப்பட்டது. பிளவைக் கொண்ட வரகுக் கதிரின் அரிசியைக் குற்றி வடிக்கப்பெற்ற சோற்றையும் பூப்பொடி எருப்போலக் கிடக்கும் தெருவில் புழுதியில் மலர்ந்த வேளைப் பூவினைத் தயிரில் கலந்து ஆயர்மகள் ஆக்கிய இனிய புளிங்குழையும் அவரை பறிப்பார் நிரம்ப உண்ணும் ச.வே.சு – உரை. இங்கும் நாம் கவனிக்கவேண்டியது இந்த மிதவை ’ஆய்மகள்’ சமைத்தது, அதாவது, இடையர் வீட்டு மக்கள் உண்ணுவது. பல் யாட்டு இன நிரை எல்லினிர் புகினே பாலும் மிதவையும் பண்ணாது பெறுகுவிர் – மலை 416,417 பல ஆட்டினங்களையுடைய திரள்களிலே இராக்காலத்தையுடையிராய்ச் செல்லின் பாலும் பாற்சோறும் நுமக்கு என்று சமையாமல் தமக்குச் சமைத்திருந்தவற்றைப் பெறுகுவீர் – நச்சினார்க்கினியர் உரை. பொ.வே.சோமசுந்தரனாரும் இதனையே பொருளாகக் கொள்வார். பின்னர், விளக்கத்தில், மிதவை – பாற்சோறு, இனி, மிதவை வெண்ணெயுமாம் என்பார் அவர். இங்கும் நாம் கவனிக்கவேண்டியது, இந்த மிதவை இடைக்குல மக்களின் இரவு உணவு என்பதை. இரவில் திடீரென்று அவர்கள் வீட்டுக்குப் போனாலும், உடனே கிடைப்பது. மேற்கண்ட குறிப்புகளினின்றும் நாம் பெறுவது : 1. மிதவை என்ற உணவுப்பொருள் குறிப்பது: 1) சோறு, 2) கூழ் அல்லது கஞ்சி, 3) பொங்கல், 4) பால்சோறு, 5) வெண்ணெய். 2. இது 1) அரிசியினால் செய்யப்படுவது, 2) கொள்ளும் பயறும் கலந்து செய்வது, 3) உழுந்தங்களியினால் ஆனது, 4) அரிசிமாவினால் ஆனது, 5) வரகுச்சோறு, வேளைப்பூ கடைந்தது ஆகியவை கலந்தது. 3. இது உழைப்பாளிகளான நடுத்தர, கீழ் நடுத்தர மக்களின் (middle/lower middle class people) உணவு. 4. இந்த உணவு காலையிலோ, இரவிலோ உண்னப்படுகிறது. 5. எதிர்பாராமல் திடீரென்று வீட்டுக்கு வருகிற விருந்தாளிகட்கு உடனடியாக எடுத்து உண்ணக்கொடுப்பது. எந்தவோர் உரையாசிரியரும் இந்த உணவுப் பொருள் ஏன் மிதவை எனப்படுகிறது என்பதற்கான விளக்கம் அளிக்கவில்லை. மிதவை என்பதன் அடிச் சொல் மித (float). மிதப்பது மிதவை என்ற பொருளில் நீரின் மேல் மிதக்கும் தெப்பம் போன்றவைகளை மிதவை எனலாம். பரிபாடலில் இவ்வாறு கூறப்பட்டிருப்பதைக் கண்டோம். ஆனால் இந்த உணவுப்பொருள் எதன் மீது மிதக்கிறது? பொதுவாகச் சிற்றூர்களில் உள்ள உழைப்பாளிகள் வீட்டில் ஒருநேரம் மட்டும்தான் சமையல் நடக்கும். அவரவர் தொழிலைப் பொருத்து, காலையிலோ, மாலையிலோ ஒருநேரம் சமைப்பர்கள். அவ்வாறு காலையில் சமைத்து மீந்ததை மாலையிலோ, மாலையில் சமைத்து மீந்ததைக் காலையிலோ உண்பார்கள். ஆக்கிய சோறு கெட்டுவிடாமல் இருக்க அதன்மேல் நீர் ஊற்றி வைப்பார்கள். சில இடங்களில் இதனை வெந்நிப்பழசு என்பார்கள். சில சமயங்களில் இந்தப் பழைய சோறும் கெட்டுப்போய்விடும். எனவே சோறைக் குழைவாக ஆக்கி, கைச்சூட்டில் உள்ளங்கையில் உருட்டி, உருண்டைகளாக ஆக்கி, ஒரு பெரிய சட்டியில் மோரிலோ, புளிச்சதண்ணி எனப்படும் புளித்த நீரிலோ போட்டுவிடுவார்கள். தேவைப்படும்போது ஒரு உருண்டை அல்லது ஒரு மிதவையை எடுத்து, பால், தயிர், மோர், புளிச்சதண்ணி அல்லது புளிப்பாகக் கடைந்த கீரை ஆகியவற்றை ஊற்றிகூழாகப் பிசைந்துகொண்டு உண்பார்கள். அந்தக் காலத்தில் மிகவும் ஏழைமக்கள் கேப்பைக் களியைக் கிண்டி, இவ்வாறு உருண்டைகளாக்கி ஏதாவது ஒரு நீர்மப்பொருளில் மிதக்கவிட்டு வைத்திருப்பார்கள். அதுவும் இடையர் வீடுகளில் பாலுக்கா பஞ்சம்? திடீரென்று இரவில் விருந்தாளிகள் வந்துவிட்டால், அந்த நேரத்தில் அடுப்புப் பற்றவைக்க மாட்டார்கள். இருக்கிறது பால், மிதக்கிறது களி மிதவை. பாலும், மிதவையும் பண்ணாது கொடுத்துவிடுவார்கள். பாலும் மிதவையும் பண்ணாது பெறுகுவிர் என்ற மலைபடுகடாம் வரிக்கு இதுதான் சிறந்த பொருளாகலாம். நித்தம் நித்தம் நெல்லுச்சோறு என்ற ஒரு பாடல் உண்டு. நெல்லை யாராவது சோறாக ஆக்குவார்களா? நெல்லைக் குற்றி அரிசியாக்கி, அதனை நீரிலிட்டு வேகவைத்த சோறுதான் நெல்லுச்சோறு. கேப்பைக்களி என்கிறோம். கேப்பையைத் (கேழ்வரகு) திரித்து,மாவாக்கி, நீரில் கரைத்து, கிண்டிவிட்டு வேகவைத்து, சற்று இறுகிய பின்னர் உருண்டையாக்கினால் அது கேப்பைக்களி. அதை மோரில் மிதக்கவிட்டால் களி மிதவை. வெண்ணெல் மாஅ தயிர் மிதி மிதவை’ என்ற அகநானூறு அடிக்கு இவ்வாறுதான் பொருள்கொள்ளவேண்டும். எனவே, பச்சரிசிச் சோற்றைக் குழைய ஆக்கியோ, அரிசி அல்லது பயறுகளின் மாவைக் களியாகக் கிண்டியோ, சூடாக முதலில் உண்டுவிட்டு, மீந்ததை உருண்டைகளாக்கி ஒரு நீர்ப்பொருளில் மிதக்கவிடுவதே மிதவை. பின்னர் இதனைப் பாலிலோ, தயிரிலோ, புளித்தநீரிலோபுளிப்பான கீரைக் கடைசலிலோ கரைத்துக் கூழாகக் குடிப்பது வழக்கம். இந்தப் பொருளில் மேலே கொடுக்கப்பட்டுள்ள மிதவை என்றசொல் வரும் பாடல்வரிகளைப் படித்தால் பாடல் அடிகளின் முழுப்பொருளையும் நுண்ணிதின் உணரலாம்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்