சொல் பொருள்

மேற்கடற்கரையிலுள்ள பழைய துறைமுகப்பட்டினம்,

சொல் பொருள் விளக்கம்

முசிறி சேர நாட்டின் துறைமுகப் பட்டினம். இது பெரியாறு கடலோடு கலக்குமிடத்தில் இருந்தது. கி.பி. முதல் நூற்றாண்டில் இந்தியாவைப் பற்றிய பெரிப்ளஸ் குறிப்பில் பத்தி 54-ல் இது முசிறிஸ் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தாலமி (இரண்டாம் நூற்றாண்டு) என்னும் கிரேக்க மாலுமி இதனைக் குறிப்பிடுகிறார். Muziris என்பது அவர் குறிப்பிடும் பெயர். ரோமானியர் இந்தியா வந்தபோது இந்தத் துறைமுகத்தைப் பயன்படுத்திக் கொண்டனர்.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Muziris, an ancient sea-port, near Cranganore

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

இந்நகரின் வணிக முக்கியத்துவத்திற்காகப் பாண்டியன் இதனைக் கைப்பற்றினான் என்று ஓர் அகப்பாடல்
குறிப்பிடுகிறது.

கொய் சுவல் புரவி கொடி தேர் செழியன்
முதுநீர் முன்துறை முசிறி முற்றி
களிறுபட எருக்கிய கல்லென் ஞாட்பின் – அகம் 57/14-16

கொய்த பிடரிமயிரினையுடைய குதிரைகளையுடைய கொடி கட்டிய தேரினையுடைய பாண்டியன்
பழமையான கடலின் துறைமுகத்தையுடைய முசிறியை வளைத்து
யானைகள் மடியக் கொன்ற கல்லென்னும் ஒலியையுடைய போரில்

சேரலர்
சுள்ளியம் பேரியாற்று வெண் நுரை கலங்க
யவனர் தந்த வினை மாண் நன் கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளம் கெழு முசிறி ஆர்ப்பு எழ வளைஇ
அரும் சமம் கடந்து படிமம் வவ்விய
நெடு நல் யானை அடுபோர் செழியன் – அகம் 149/7-13

சேர அரசரது
சுள்ளியாகிய பேர் யாற்றினது வெள்ளிய நுரை சிதற
யவனர்கள் கொண்டுவந்த தொழில் மாட்சிமைப்பட்ட நல்ல மரக்கலம்
பொன்னுடன் வந்து மிளகொடு மீளும்
வளம் பொருந்திய முசிறி என்னும் பட்டினத்தை ஆரவாரம் மிக வளைத்து
அரிய போரை வென்று அங்குள்ள பொற்வாவையினைக் கவர்ந்துகொண்ட
நெடிய நல்ல யானைகளையும் வெல்லும் போரினையுமுடைய செழியனது

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.