Skip to content
முசு

முசு என்பது கருங்குரங்கு

1. சொல் பொருள்

கருங்குரங்கு வகை

2. சொல் பொருள் விளக்கம்

கருங்குரங்குவகை – இதன் முகம் கருப்பாக இருக்கும்.

பார்க்க குரங்கு மந்தி கடுவன் கலை ஊகம் பெருங்கிளை கணக்கலை கிளை

சங்க நூல்களில் செம்முகக் குரங்கு வகைக்கு அடுத்துப் பல பாடல்களிலும் பேசப்படும் குரங்கு வகை முசு என்றழைக்கப்பட்டுள்ளது . முசு என்ற சங்ககாலப் பெயர் இன்றும் திராவிட மொழிகளில் மறையவில்லை. கன்னடத்தில் முசூ ” என்றும் ” முசுவா ” என்றும் , தெலுங்கில் குமுத முசு என்றும் இக்குரங்கு வகை அழைக்கப்படுகின்றது . திவ்யப் பிரபந்த விளக்கத்தில் மாட்டுவால் போன்ற வால் உள்ள குரங்கு என்றும் கொண்ட முசுரு என் றும் மலைக் குரங்குகள் என்றும் இது கூறப்பட்டுள்ளது . இக்குரங்கின் பெயர் இன்றும் மறையவில்லையாதலால் விலங்கு நூற்படி எது அறிவது எளிதேயாகும் . முசுக்குரங்குகளைப் பற்றிச் சங்க நூல்களில் தெளிவான செய்திகள் வருவதைக் காணலாம் .

மைபட் டன்ன மா முக முசுக்கலை
ஆற்றப் பாயாத் தப்ப லேற்ற
கோட்டொடு போகி யாங்கு நாடன் – குறுந்தொகை . 121.

” மைபட் டன்ன மாமுக முசுக்கலை
பைதறு நெடுங்கழை பாய்தலின் ஒய்யென -அகம் . 267 .

சினி முதுகளை கலாவ மீமிசை
நாக நறுமலர் உதிர யூகமொடு
மாமுக முசுக்கலை பனிப்ப -திருமுருகாற்றுப் படை . 303 .

கருமுக முசுவின் கானத்தானே -அகம் . 121 .

கருமுக முசுக்கலை கது மெனத் தோன்ற – பெருங்கதை 2 : 16 : 109-110 .

முசு
முசு

மைபூசியது போல முசுக்குரங்கின் முகம் இருப்பதாகக் கூறப்பட்டதிலிருந்து பிறவகைக் குரங்கு வகைகளிலிருந்து முசுவினத்தைப் பிரித்துணரலாம் . முகத்தில் மட்டும் கருமையாக இருப்பதைக் குறிப்பிட்டுச் சொல்லி யிருப்பதைக் காணலாம் . முசுக்குரங்கை விலங்கு நூலார் ( The common langur ) என்று அழைப்பர் . இதற்குச் சிறிது மெலிந்த உடலும் , மிக நீண்ட வாலும் கைகால்களும் உண்டு என்பர் . முசுக்குரங்கு
கள் பெரும்பாலும் காடுகளில் வாழும் . ஊர்க்கருகாமை யிலும் காணப்படுவதுண்டு . மரங்களிலேயே பயின்று வாழும் தன்மையது . சில பகுதிகளில் குன்றுகளிலும் மலை உச்சியிலும் பாறைகளிலும் ( rocks and clifts ) வாழ்வதுண்டு. முசுக்குரங்குகள் கிளைக்குக்கிளை தாவிப்
பாய்வதும் குதிப்பதும் பார்ப்போருக்கு வியப்பை யூட்டும் என்று விலங்கு நூலார் கூறுவர் .

( The agility of the langur in the tree tops , its stupendous leaps and bounds and the precision with which it makes are astonishing )

பலவிற் சேர்ந்த பழமா ரினக்கலை
சிலைவிற் கானவன் செந்தொடை வெரீஇச்
செருவுறு குதிரையிற் பொங்கிச் சாரல்
இரு வெதிர் நீடமை தயங்கப் பாயும்
பெருவரை யடுக்கத்துக் கிழவ னென்றும் – குறுந்தொகை . 385 .

குன் றக் கூகை குழறினு முன்றிற்
பலவி னிருஞ்சினைக் கலைபாய்ந் துகளினும் – குறுந்தொகை . 153 .

மேலே காட்டிய 385 ஆம் குறுந்தொகைப் பாட்டிலும் 121 , 153 ஆம் குறுந்தொகைப் பாடல்களிலும் கிளை முறியும்படி பாய்ந்த முசுக் குரங்கைப் பற்றியும் , மூங்கிலை வனத்துக் குதித்துப் பாயும் முசுக்கலையைப் பற்றியும் , கிளையில் பாய்ந்து குதிக்கும் கலையைப் பற்றியும் கூறியிருப்பதைக் காணலாம் . முசுக்குரங்குகள் மகிழ்ச்சியுடன் இருக்கும்போது கிளைக்குக்கிளை தாவி ( whoomp / என்ற ஓசையுடன் குரலிடும் என்று விலங்கு நூலார் கூறுவர் .

கணக்கலை இருக்குங் கடுங்குரல் தூம்பொடு
மலைப்பூஞ் சாரல் வண்டி யாழாக
இன்பல் இமிழிசை கேட்டுக் கலிசி றந்து
மந்தி நல்லவை மருள்வன நோக்க -அகம் . 82 .

அகநானூற்றுப் பாடலில் ஆண் முசுக் குரங்குகள் மகிழ்ச்சியால் வெளியிடும் தூம்புக் குரலொடு வண்டொலியையும் அருவியோசையையும் கேட்டுப் பெண்முசுக் குரங்குகள் மருண்டு நோக்கின என்று கூறப்பட்டிருப்பது நோக்குக . ஆண்முசு வெளியிடும் குரல் ” தூம்பு ” என்று ஒலிக்குறிப்புச் சொல்லாகக் குறிப்பிடப்பட்டது whoomp என்று வேட்டையாளர் கூறும் முசுக்குரங்குகளின் மகிழ்ச்சிக்குரலை ஓசையில் ஒத்திருப்பது எண்ணி இன்புறத்தக்கது . இந்த முசுக்குரங்கு களின் ஆண் கலை யென்று அழைக்கப்படும் என்று தொல்காப்பியம் மரபியல் சூத்திரம் 601 கூறுகின்றது இந்தக் கலையெனும் ஆண் முசு பற்றிய செய்திகள் சங்க நூல்களில் வருகின்றன . இதைக் கலை யென்றும் முசுக்கலை யென்றும் கணக்கலை யென்றும் சங்க நூல் கள் அழைக்கின்றன . முசுக்குரங்குகள் காடுகளில் பெரும்பாலும் காணப்படுவதைச் சங்க நூல்களிலிருந்து வரும் செய்திகள் வழி அறியலாம் . ஆனால் இக்குரங்குகள் எப்போதும் நீரருகாமையிலே வாழும் என்று விலங்கு நூலார் கூறுவர் .

முசு
முசு

படப்பை
இன்முசுப் பெருங்கலை நன் மேயல் ஆரும்
பன்மலர் கான்யாற்று உம்பர்க் கருங்கலை – நற்றிணை . 119 .

நற்றிணைப் பாடலில் மலைநாட்டு ஊரில் கொல்லையில் முசுக்குரங்கு மேய்வதாகவும் கான்யாற்று அருகில் காணப்பட்டதாகவும் கூறப்பட்டதைக் கவனிக்க வேண்டும் . இந்தக் கலைக்குரங்குகள் காடுகளில் பலாப் பழத்தை மிகவும் விரும்பிக் கவர்ந்து உண்டதாகச் சங்கப் பாடல்கள் கூறுகின் றன .

கலைகை தொட்ட கமழ்களைப் பெரும்பழம்
காவல் மறந்த கானவன் ஞாங்கர்க்
கடியுடை மரந்தொறு படுவலை மாட்டும்
குன்ற நாட தகுமோ பைஞ்சுனை – குறுந்தொகை . 342

கறிவள ரடுக்கத் திரவின் முழங்கிய
மங்குன் மா மழை வீழ்ந்தெனப் பொங்கு மயிர்க்
கலைதொட விழுக்கிய பூநாம பலவுக்கனி – குறுந்தொகை . 90 ,

ஆய்சுளைப் பலவின் மேய்களை யுதிர்த்த
துய்த்தலை வெண்காழ் பெறூ உங்
கற்கெழு சிறுகுடிக் கானவன் மகளே – அகம் . 7 .

கலையுணக் கிழித்த முழவுமருள் பெரும்பழம்
சிலைகெழு குறவர்க் கல்குமிசை வாகும்
மலை கெழு நாட மாவண் பாரி -புறம் . 236 .

மேற்காட்டிய பாடல்களில் முசுக்குரங்குகள் பலாப் பழத்தை விரும்பிக் கவர்வதும் அதைத் தடுக்கக் கானவர் மரத்தில் வலை போட்டுப் பாதுகாப்பதுவும் பலாப்பழத்தைக் கிழித்துக் கொட்டைகளை உதிர்ப்பது வும் சுளைகளை விட்டுவிடுவதும் ஆகிய செய்திகள் கூறப் பட்டுள்ளன . முசுக்குரங்கினம் கானத்திலும் , மலை கெழு நாட்டிலும் , கற்கெழு சிறுகுடியருகிலும் , ‘ குன்ற நாட்டிலும் இருப்பதாகக் கூறியது விலங்கு நூலார் முசுக்குரங்குகள் மலைக்காடுகளிலும் , காடு களிலும் , பாறைகளிலும், குன்றுகளிலும் பெரும்பாலும் காணப்படுமென்று கூறிய தொடு ஒத்திருக்கின்றது .

முசுக்குரங்குகளைப் பற்றி மிக அரிய சிறந்த செய்தியொன்று சங்க நூல்களில் கூறப்பட்டுள்ளது மிக்க வியப்பை அளிக்கின்றது . காடுகளில் வாழும் குரங்கு களுக்கு முக்கிய எதிரி சிறுத்தைப் புலியாகும் . சிறுத்தைப்புலி ( Panther ) குரங்குகளைத் திடீரென்று மரத்தின் மேல் ஏறிப்பிடித்து உண்ணும் . ஆதலின் சிறுத்தைப் புலி , வேங்கைப்புலி ஆகிய விலங்குகளுக்குக் குரங்குகள் மிகவும் அஞ்சுமென விலங்கு நூலாரும் வேட்டை யாளரும் ( Hunters ) கூறுவர் . குரங்குகள் கடிய உரப்பான ஓசை கேட்டாலும் அஞ்சி ஓடுமெனக் கூறுவர் . ( In India the arch enemy of the monkey is the panther which waits in hiding for or rushes up a tree to seize its victim .. ..Highly strung creatures they are obviously affected by loud and sudden sounds …… The alarm calls of langurs and macaques when fear or suspicion is aroused by the sight of a tiger, leopard of other animals are well – known and are used by human hunters to locate a tiger. A warning cry from any langur will send the whole troop bolting , none stopping to discuss the cause of disturbance . )

முசு
முசு

அலங்குகழை நரலத் தாக்கி விலங்கெழுந்து
கடுவளி உருத்திய கொடிவிடு கூரெரி
விடர் முகை அடுக்கம் பாய்தலின் உடனியைந்து
அமைக்கண் விடுகொடி கணக்கலை அகற்றும்
வெம்முனை அருஞ்சுரம் நீந்திக் கைம்மிக
-அகம் . 47 .

உறுகண மழவர் உருள்கீண் டிட்ட
ஆறுசெல் மாக்கள் சோறு பொதி வெண்குடைக்
கனைவிசைக் கடுவளி யெடுத்த வின் துணை செத்து
வெருளேறு பயிரும் ஆங்கண்
கருமுக முசுவின் கானத் தானே – அகம் . 121 .

அகம் 47 ஆம் பாட்டில் சூறாவளிக் காற்று எழுந்து மூங்கிலில் தீ பற்றி எரிவதைக் கண்டு முசுக்குரங்குகள் ஒன்று கூடி உடனியைந்து மூங்கிலை வளைத்துப் பாயும்போது ஓசையெழுப்பி அவ்விடத்தை விட்டு விரைவில் விலகிய காட்சி விளக்கப்பட்டுள்ளது .கடிய ஓசைக்கும் திடீர் ஒலிக்கும் அஞ்சுமென்று ( affected by loud and sudden ounds ) விலங்கு நூலார் கூறிய அதே செய்தியை அகநானூறு 121 ஆம் பாடல் கூறுகின்றது .வழிபோக்கர்கள் போட்ட சோற்றுப்பொதிகளின் வெறும் ஓலைக் கூடை கள் சூறாவளிக காற்றில் எழுந்து செல்லும் விரைவை யும் ஓசையையும் கேட்டுப் பயந்து போய்த் தன் துணைக் குரங்கை நினைத்து ஆண் முசுக்குரங்கு கூப்பிடும் கானம் என்று கூறியிருப்பது நேரில் கண்டு கூறிய செய்தி போலத் தோன்றுகின்றது . வெருளேறு என்று குறிப்பாகக் கூறியது கவனிக்கத்தக்கது . இதைவிட அரிய செய்தியும் சங்க நூல்களில் காணப்படுகின்றது .

” புலியுரி வரியதள் கடுப்பக் கலிசிறந்து
நாட்பூ வேங்கை நறுமலர் உதிர
மேக்கெழு பெருஞ்சினை யேறிக் கணக்கலை
கூப்பிடூஉ உகளுங் குன்றகச் சிறுநெறி ” -அகம் . 205

“ ஈன்றணி வயவுப்பிணப் பசித்தென மறப்புலி
ஒளிறேந்து மருப்பின் களிறட்டுக் குழுமும்
கணக்கலை இருக்கும் கறியிவர் சிலம்பின்
மணப்பருங் காமம் புணர்ந்தமை அறியார் ” -அகம் . 112.

கலக்கணம்
வேங்கை வெரூஉம் நெறிசெலிய போலும் என்
பூம்பாவை செய்த குறி –நாலடியார் . 399 .

மந்திக் கணவன் கல்லாக் கடுவன்
ஒண்கேழ் வயப்புலி குழுமலின் விரைத்துடன்
குன்றுய ரடுக்கங் கொள்ளு நாடன் . – ஐங்குறு நூறு . 274 .

முசு
முசு

அன்று பூத்த மஞ்சள் நிறமான வேங்கைப் பூக்கள் கரிய பாறையில் உதிர்ந்து கிடப்பது வரியுடைய புலித்தோல் போலத் தோன்றவே புலி என்று எண்ணி ஆண்முசுக் கூட்டம் மேலே எழும்பிக் கிளைகளில் ஏறி மற்றக் குரங்குகளையும் கூப்பிட்டுத் தாவுமென்று அகநானூறு 205 ஆம் பாடலில் சொல்லியிருப்பது வேட்டையாளரும் விலங்கு நூலாரும் கூறிய உண்மைச் செய்திகளுடன் ஒத்திருக்கின்றது . புலியைப் பார்த்தாலோ புலி வெகு தொலைவில் உருமும் குரல் கேட்டாலோ ஒரு குரங்கு எச்சரிக்கையாகக் கூக்குரலிடும் . உடனே மற்றக் குரங்குகள் எல்லாம் மேய்வதை விட்டுக் கிளைகளின் உச்சிக்குத் தாவி வேறு குரங்குகளை அழைக்கக் கூக்குரலிடும் . வேட்டையாளர் கூறிய இதே செய்தியைச் சங்க நூல் கூறுவது எண்ணி இன்புறத்தக்கதாகும் . புலி வெகுதாலைவில் வருவதைக்கூட அல்லது புலி நெருங்கிப் பதுங்கி வருவதைக் கூடக் காட்டில் முசுக்குரங்குகளின் கூப்பிடும் எச்சரிக்கைக் குரலிலிருந்து ( Alarm call ) வேட்டையாளர் கண்டு கொண்டு புலியை வேட்டையாடுவார்களாம் . அகநானூறு 112 ஆம் பாட்டுப் புலி உருமும் ஒலியைக் கேட்டு , முசுக்குரங்குக் கூட்டம் மிளகுக் கொடியில் தாவி மலைக்கு ஏறுவதைக் கூறுவதைக் காணலாம் . நாலடியார் பாடலிலும் முசுக் கூட்டம் பூத்த வேங்கையைக் கண்டு வேங்கைப் புலி யென்று அஞ்சி வெருளும் என்று சொல்லியிருப்பதைக் காணலாம் .

விலங்கு நூலார் முசுக்குரங்குகளுக்கும் ( Langurs) செம்முகக் குரங்குகளுக்கும் ( Macaques ) இந்த அச்சம் இருப்பதைக் கண்டுள்ளனர் . ஐங்குறு நூறு 274ஆம் பாடல் இந்த அச்சம் செம்முகக் குரங்குகளுக் கும் இருப்பதைக் குறிப்பிடுகின்றது . புலியின் உருமலைக் கேட்டுக் குன்றுயர்ந்த அடுக்கத்தில் விரைந்து ஏறிய கடுவன் குரங்கைப் பற்றிக் கூறியுள்ளது .

ஒண்கேழ் வயப்புலி பாய்ந்தெனக் கிளையொடு
நெடுவரை யியம்பு மிடியுமிழ் தழங்குகுரல்
கைக்கோண் மறந்த கருவிரன் மந்தி
யருவிடர் வீழ்ந்ததன் கல்லாப் பார்ப்பிற்கு
முறிமே யாக்கைக் கிளையொடு துவன்றிச்
சிறுமை யுற்ற களையாப் பூசல் – மலைபடுகடாம் வரி. 311-314 .

மலைபடுகடாத்தில் குரங்கின் அச்சத்தைக் காட்டும் ஓர் அரிய செய்தி வருகின்றது . யானையைப் புலிதாக் கிற்று அதனால் யானை இடிபோல் பிளிறச் சடுதியில் புலி பாய்வதையும் யானையின் இடியோசையையும் கண்டு கேட்டுக் குட்டியைக் கையில் வைத்திருந்த மந்தி கை விட்டுவிடக் கீழே மலைப்பிளப்பில் விழுந்த குட்டியைக் காப்பாற்ற முடியாமல் மரத்தில் மேய்ந்து கொண்டிருந்த குரங்குக் கூட்டம் ஒன்றுகூடிக் கூக்குர லிட்டதாக மலைபடுகடாம் விளக்கும் காட்சி உண்மை யான செய்தியாகவே தெரிகின்றது . திடீர் ஓசையைக் கேட்டாலும் புலி பாய்வதைப் பார்த்தாலும் குரங்கு தன் கைப்பிடியை விட்டுக் கீழே விழும் என்று விலங்கு நூலார் கூறியிருப்பதையே மலைபடுகடாம் நிகழ்ந்த ஒரு செய்தியாகக் கூறியுள்ளது . ( Even the sudden roar of panther may send a monkey hurtling down its perch) புலி பாய்ந்ததும் ( Sudden rush of panther ) யானையின் இடிக்குரல் கேட்டதும் கைப்பிடியிலிருந்து விடுபட்ட குட்டி வீழ்ந்ததாகச் சங்க நூல் கூறியது அரிய செய்தியாகும் . முசுக்குரங்குகளைச் சங்க நூல்களில் கணக்கலை என்று கூறியிருப்பதைக் காணலாம் .

முசு
முசு

மேக்கெழு பெருஞ்சினை யேறிக் கணக்கலை -அகம் , 205 .

கணக்கலை இருக்கும் கறியிவர் சிலம்பின் -அகம் , 112

அமைக்கண் விடுநொடி கணக்கலை அகற்றும் -அகம் , 47 .

கணக்கலை இருக்கும் கடுங்குரல் தூம்பொடு ” -அகம் , 82 .

பலவிற் சேர்ந்த பழமா ரினக்கலை – குறுந்தொகை , 385 .

கணக்கலை என்ற சொல் ஆண் முசுக்களின் திரளையே , கூட்டத்தையே குறிக்கின்றது . முசுக்குரங்கின் மந்தியைவிட, பெண் முசுவைவிட ஆண் முசுக் கூட்டத்தைப் பற்றியே சங்கப் பாடல்கள் குறிப்பிடுவதன் காரணம் என்ன ? விலங்கு நூலார் பல சமயங்களில் முசுக் குரங்குகளின் கூட்டத்தை ஆராய்ந்து பார்த்ததில் சில கூட்டங்கள் ஆண் முசுக்களின் கூட்டமாகவே இருப்பதைப் பார்த்திருக்கின்றனர் . ஆண் முசுக்கள் முசுக்குரங்குகளின் கலப்புக் கூட்டத்தி லிருந்து விரட்டியடிக்கப்பட்டு ஆண் முசுக்களாகவே அமைந்த கூட்டமெனக் கருதுகின்றனர். ( Finally there in the troop consisting only of males , probably animals which have been driven out of the harems on attaining maturity ) . இந்த ஆண் முசுக்களால் அமைந்த கூட்டத் தைக் கண்டு பட்டறிவால் அறிந்த சங்கப் புலவர்கள் தெளிவாகக் கணக்கலை என்று பெயரிட்டனர் .
இதுவே குறுந்தொகையில் இனக்கலை அழைக்கப்பட்டது. நாலடியார் ( 199 ) ‘ கலைக்கணம் என்று அழைத்தது . • கலைக்கணம் என்ற சொல்லின் பொருளாழத்தை நன்கு உணராத பிற்கால உரையாசிரியர்கள் , அகநானூறு 82 ஆம் பாடலிலும் நற்றிணை யிலும் கலைமான் கூட்டம் என்று பொருள் கொண்டு உரை எழுதினர் . கணக்கலை இருக்கும் தூம்புக் குரல் கலைமானுக்கு இல்லை என்பதுவும் கலைமானை மந்தி நல்லவை பார்க்க வேண்டிய பொருத்தம் இல்லை என்ப தையும் உணர்ந்தோர் அகம் 82 ஆம் பாட்டில் கலைமான் என்று பொருள் கொள்ளார் . இகுக்கும் என்ற சொல் அகப் பாடல்களில் ( 82 , 112 ) கணக்கலையின் குரலைக் குறிக்கத் தனியாகச் சங்க நூல்களில் வழங்கு வதைக் காணலாம் . பிங்கலந்தை அழைத்தலுக்கு * இகுத்தல் என்று பொருள் கூறியுள்ளது . சங்க நூல்களே இகுத்தல் என்ற சொல்லைப் போலவே கூப்பிடூஉ , பயிரும் என்ற சொற்களையும் பயன் படுத்தியதிலிருந்து இதன் பொருள் தெளிவாகின்றது . முசுக் குரங்குகள் ஆணும் பெண்ணும் குட்டிகளும் சேர்ந்த கூட்டங்களாகவும் காண்பதுண்டு . “கருமுகக் கணம் என்று இக் கூட்டத்தைப் பரிபாடல் ( 19 : 39) அழைக்கிறது . மற்றும் முதிய ஆண் முசுவும் கூட்டத்திலிருந்து விரட்டப்பட்டுத் தனியாக வாழ்வதுண்டு. சங்கப் பாடல்கள் பலவற்றிலும் கலையென்ற தனியான ஆண் முசுவின் செய்திகளைக் கூறுவதைக் காணலாம் . முசுக்குரங்குகள் காடுகளில் மரங்களில் மேயும்போது செம்முகக் குரங்குகளோடு சேர்ந்து கலந்து மேயும் என்றும் , ஆனால் இரவில் தனித் தனிக் கூட்டமாகப் பிரிந்து செல்லும் என்றும் விலங்கு நூலார் கண்டுள் ளனர் .

” கருவிரல் மந்திச் செம்முகப் பெருங்கிளை
பெருவரை அடுக்கத்து அருவி ஆடி
ஓங்குகழை ஊசல் தூங்கி வேங்கை
வெற்பணி நறுவீ கற்சுனை உறைப்பக்
கலையொடு திளைக்கும் வரையக நாடன் ” – நற்றிணை, 334

மேலே காட்டிய நற்றிணைப் பாடலில் செம்முகக் குரங்குக் கூட்டமும் , ஆண் முசுக்கலையும் வேங்கை மரத்தில் விளையாடித் திளைத்ததாகக் கூறியதிலிருந்து இந்த இரண்டு வகைக் குரங்குகளையும் சங்கப் புலவர்கள் சில சமயங்களில் ஒரே இடத்தில் கண்டனர் என்பது தெளிவு . முசுக்குரங்குகள் வடநாட்டில் மனிதருடன் நெருங்கிப் பழகுகின் றன . ஊர்களிலும் – கோயில்களிலும் குளங்களிலும் காணப்படுகின்றன . வடநாட்டில் இதை அனுமான் குரங்கு என் றழைக்கின் றனர் . இந்தியில் அனுமான் என்றே பெயர் வழங்குகிறது. இதைத் துன்புறுத்துவதில்லை . வடநாட்டில் கடவுளாக வழங்கும் அனுமானின் உருவத்திற்கு முகத்தில் கருமை பூசுகிறார்கள் . ஆனால் தமிழ்நாட்டில் அனுமான் உருவிற்கு முகத்தில் சிவப்பைப் பூசுகிறார்கள் . வடநாட்டில் அனுமானை மாமுக முசுவாகக் காண்டனர் . தமிழ்நாட்டில் செம்முகக் குரங்காகக் கொண்டனர் . காரணம் தமிழ்நாட்டில் நெருங்கிப் பழகும் குரங்கு செம்முகக் குரங்கே யாகும் . ஆனால் பரிபாடல் காலத்திலேயே இந்த இரு குரங்கு வகைகளும் மனித ருடன் பழகினதாகத் தெரிகின்றது .

குரங்கருந்து பண்ணியங் கொடுப் போரும்
கரும்பு கருமுகக் கணக்களிப் போரும் . –பரிபாடல் , 19 : 38 — 39 .

குரங்குக்குப் பண்டங் கொடுத்ததாகவும் , கரும்பை முசுத்திரளுக்கு உண்ணக் கொடுத்ததாகவும் , செம் முகக் குரங்கையும் முசுவையும் தனித் தனியாகப் பரி பாடல் கூறுவதைக் காணலாம் . முசுக் குரங்கிற்குக் கை கால்கள் நீண்ட தென்றும் , வால் மிக நீண்டதென்றும் விலங்கு நூலார் கூறுவர் . சங்க இலக்கியத் தில் இதன் கையைப் பற்றியும் , பொங்கு மயிர் போர்த்திய தன்மையைப் பற்றியும் கூறப்பட்டுள்ளது . இது தன் நீண்ட வாலை மேலாக வளைத்துத் தொங்கவிட்டிருப்பதைக் குறிப்பாக உணர்ந்தே முசுரு வாலெடுத்தாற் போலக் கிளர்ந்து என்று திவ்யப் பிரபந்த உரையில் கூறினர் . கிளர்ந்த வால் என்று முசுவின் வாலை அழைக்கலாம் . மாட்டு வால் போன்ற வாலுள்ள குரங்கு என்றது நீண்ட வாலைக் குறித்ததாகலாம் . முசுக்கணங்கள் முசுகு என்றும் திவ்யப்பிரபந்தத்தில் பயில்கின்றது . உரையில் முசுரு என்று பொருள் கூறப்பட்டுள்ளது . இது பேச்சு வழக்குச் சொல்லாகும் . இந்த முசுக்குரங்கை ஆங்கிலத்தில் The langur அல்லது Hanuman Monkey என்பர் , அறிவியற் பெயர் Presbytis entellus என்பதாகும் .

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

Langur, Semnopithecus priamus, Hanuman Monkey, Presbytis entellus

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

இதன் முகம் கருப்பாக இருக்கும்.

மை பட்டு அன்ன மா முக முசு கலை – குறு 121/2

மையை ஊற்றியதைப் போன்ற கரிய முகத்தைக்கொண்ட ஆண்குரங்கு

கரு முக முசுவின் கானத்தானே – அகம் 121/15

மா முக முசு கலை பனிப்ப பூ நுதல் – திரு 303

இன் முசு பெரும் கலை நன் மேயல் ஆரும் – நற் 119/5

மை பட்டு அன்ன மா முக முசு இனம் – அகம் 267/9

வெயில் ஆடு முசுவின் குருளை உருட்டும் – குறு 38/2

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *