Skip to content
ஊகம்

ஊகம் என்பது குரங்கு, புல்.

1. சொல் பொருள்

(பெ) 1. குரங்கு – இதன் முகத்தைச் சுற்றி நரைமயிர்க் கற்றை தொங்குவதால் இதை நரைமுகஊகம் என்று கூறினர், 2. ஒருவகைப் புல், கூரையில் வேய உதவுவது, துடைப்பப்புல் 

பார்க்க குரங்கு மந்தி கடுவன் கலை முசு பெருங்கிளை கணக்கலை கிளை

2. சொல் பொருள் விளக்கம்

குரங்கு வகைகளில் முசுவிற்கு அடுத்துச் சங்க நூல்களில் குறிப்பிடப்படும் குரங்கு ஊகம் என்றழைக்கப்படுகிறது . செம்முகக் குரங்கையும் கருமுகக் குரங்கையும் கூறிய சங்கப் புலவர்கள் அவற்றினின்றும் பிரித்துக் காட்டவே அழகாக , பொருத்தமாக, நுட்பமாக நரைமுக ஊகம் என்று ஊகக் குரங்கை விளக்கினர் . தமிழ்நாட்டுக் காடுகளில் அடர்ந்த பகுதிகளில் கருமையான உடலுடன் முகத்தில் பிடரி மயிர் போன்று நீண்ட நரைத்த கற்றை மயிர்கள் உடைய ஒருவகைக் குரங்குகள் உண்டு . அவையே ஊகமெனச் சங்க நூல்களில் அழைக்கப்படுகின்றது . இதன் முகத்தைச் சுற்றி நரைமயிர்க் கற்றை ( Grey hairs ) தொங்கு வதால் இதை நரை முக ஊகம் என்று கூறினர். (சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம். 21.)

ஊகம்
ஊகம்

இனமயி லகவு மரம்பயில் கானத்து
நரைமுக இகம் பார்ப்பொடு பனிப்பப்
படுமழை பொழிந்த சார லவர் நாட்டுக்
குன்ற நோக்கினென் றோழி
பண்டை யற்றோ கண்டிசி னுதலே . – குறுந்தொகை , 249 .

” குறுமுலைக் கலமரும் பாலார் வெண்மறி
நரைமுக ஆகமொ டுகளும் வரையமல் …….. – புறம் , 383 .

மலையில் பெய்த மழையில் நனைந்த குட்டிகளோடு நரைமுக ஊகம் காட்டில் நடுங்கியதாகக் குறுந்தொகை கூறுகின்றது . புறநானூற்றிலும் நரை முக வூகம் என்று பயின்று வருவதைக் காணலாம் . இந்தக் குரங்கின் முகத்தில் உள்ள நரைத்த மயிரே இதைப் பிற குரங்கு வகைகளிலிருந்து தெளிவாகப் பிரித்துக் காட்டு வதாக விலங்கு நூலார் கூறுவர் . ( Distinguished from all other species of macaques firstly by a great mane of long dark grey or brownish grey hairs from the temples and cheeks and also by its glossy black coat . ) விலங்கு நூலார் எதைக் கொண்டு இதைப் பிரித்துணர்ந்தனரோ அதையே சங்க நூலாரும் கொண்டு பிரித்தறிந்ததையே நரை முக ஊகம் என்ற விளக்கம் தெளிவாக் குகின்றது. ஊகக் குரங்கு உயர்ந்த மலைகளிலும் குன்றுச்சிகளிலும் அடர்ந்த காடுகளிலும் காணப்பட்டதாகச் சங்க நூல்கள் கூறுகின்றன .

ஆசினி முதுகளை கலாவ மீமிசை நாக நறுமல ருதிர யூகமொடு மாமுக முசுக்கலை பனிப்பப் பூநுதல் -திருமுருகாற்றுப்படை , வரி 301-308 .

இருவெதி ரீர்ங்கழை தத்திக் கல்வெனக்
கருவிர லூகம் பார்ப்போ டிரிய . ” – மலைபடுகடாம் , வரி 207 – 208 .

வெருள்புடன் நோக்கி வியலறை யூகம்
இருடூங் கிற வரை யூர்பிழி பாடும் ” – கலித்தொகை 43

…………நீடுமயிர்க்
கடும்ப லூகக் கறைவிர லேற்றை
புடைத்தொடு புடைஇப் பூநாறு பலவுக்கனி
காந்தளஞ் சிறுகுடிக் கமழும்
ஓங்குமலை நாடனொ டமைந்தநந் தொடர்பே ” – குறுந்தொகை , 373 .

மேலே வரும் சங்க நூற் பாடல்களில் வாழும் சூழ்நிலை உயர்ந்த மலைக் காடுகளிலும் நீர் வீழ்ச்சி விழும் குன்றின் உச்சிகளிலும் இருள் தூங்கும் காடுடைய மலைகளிலும் ( கலி . 43) கூறப்படுவதைக் காணலாம் . விலங்கு நூலாரும் 2,000 அடியிலிருந்து 3,500 அடிவரை உள்ள அடர்ந்த , தனித்த பசுங்காடு களில் மலைக்காடுகளில் ஊகக் குரங்குகள் காணப்படுவதாகக் கூறுவர். ( The lion tailed macaque inhabits the dense lonelier forests where it keeps to the evergreen belt between 2,000 to 3,500 ft . with its dark colouring and shy and seclusive habits there is little wonder it is seldom seep in these dimly lit forests ) செம்முகக் குரங்குகளும் முசுக் குரங்குகளும் ஒருங்கே காணப்பட்டதைச் சங்கப் பாடல்கள் கூறுவது ஏற்கனவே விளக்கப்பட்டது . அதுபோன்றே ஊகமும் முசுவும் ஒருங்கே காணப்பட்ட செய்தியும் வருகின்றது .

ஆசினி முதுகளை கலாவ மீமிசை
நாக நறுமலர் உதிர யூகமொடு
மாமுக முசுக்கலை பனிப்பப் ………. – திருமுருகாற்றுப்படை வரிகள் 308 – 308

ஊகத்துடன் முசுக்கலை அருவி நீரின் குளிர்ச்சியில் நடுங்கியதாகக் கூறப்பட்டுள்ளது . புறநானூறு 383ஆம் பாடல் கூறும் ஒரு செய்தியிலிருந்து ஊகம் வாழும் சூழ்நிலை , இடத்தின் உயர மட்டம் ஆகியவைகளை உய்த்துணரலாம் .

குறு முலைக் கலமரும் பாலார் வெண்மறி
நரைமுக ஆகமொ டுகளும் வரையமல்

குன்றுபல கெழீஇய
கான்கெழு நாடன் கடுந்தே ரவியனென ” -புறம், 383 .

பாட்டில் ஒருவரி மறைந்து போய்விட்டது . இருப்பினும் பொருளை உணர முடிகின்றது . குறுமுலைக் கலமரும் பாலார் வெண்மறி என்றது வருடையாட்டின் குட்டிகளே யாகும் . மலையில் குதிக்கும் ஊகக் குரங்குகளுடன் காணப்படக்கூடிய ஆட்டுக்குட்டிகள் வருடையாட்டின் குட்டிகளாகவே இருக்க முடியும் . மற்ற ஆட்டினத்தை மலையில் இயற்கையாகக் காணமுடி

ஊகம்
ஊகம்

வருடையாடு வரையாடு என்றும் மலை ஆடு என்றும் வழங்கும் . இந்த வரையாடு ( Nilgiris Tahr ) விலங்கு நூலார் கண்டறிந்து எழுதியுள்ள செய்திப்படி 2,000 அடியிலிருந்து 3,000 அடி உயரத்தில் மலையில் காணப்படும் . ஆதலின் நரைமுக ஊகமும் அதே சூழ் நிலையில் , அதே உயர மட்டத்தில் மலையில் காணப்படும் என்பதை உய்த்துணரலாம். இதே உயரத்தில் தான் ஊகம் வாழ்வதாக விலங்கு நூலாரும் கூறுகின்றனர். உயர்ந்த மலைச் சூழ்நிலைகளில் கூட எந்த விலங்குகள் எந்தச் சூழலில் காணப்பட்டன என்பதைக் கண்டு கூறிய சங்கப் புலவர் களின் அறிவுக் கூர்மை மிகவும் போற்றத் தக்கது . ஊகக் குரங்குகளைத் தனித்துக் காணப்படும் மலைக்காடுகளில் மனிதர் காண்பது அரிதாகையால் சங்க நூல்களிலும் இக்குரங்குகளைப்பற்றிச் சில செய்திகளே வருகின்றன . ஊகக் குரங்கிற்கு முகத்திலிருக்கும் நீண்ட மயிரை நீடுமயிர்க் கடும்பலூகம் என்று வரும் வரியில் குறிக்கப்பட்டுள்ளது . இதன் விரல் மிகக் கருமையாக இருப்பதால் கறைவிரல் என்
றும் இதன் ஆண் குரங்கு ஏற்றை என்றும் கூறப்பட்டுள்ளது . இது மிகவும் அஞ்சி மிரளுந் தன்மையுடையதாதலால் வெருள்புடன் நோக்கி என்று கலித்தொகை கூறிற்று . இருள் தூங்கு இறுவரையில் ஊகத்தைக் கண்டு கலித்தொகை கூறியதையே விலங்கு நூலார் ( In dimly lit dense forests ) என்று கூறினர். ஊகக் குரங்குகள் குட்டிகளுடன் இருப்பதைத் திருமுரு காற்றுப்படை கூறுகின்றது . ஊகக் குரங்குகள் கூட்டமாகவே காணப்படும் என்பர். மரங்களின் உச்சிகளிலேயே பயிலும் ஊகக் குரங்குகளைக் காண்பது எளிதன்று.

ஊகம் உகளும் உயர்பெருஞ் சினைய -இலாவாண காண்டம் , 15 : 5 என்று பெருங்கதை கூறுகின்றது .

குரங்குகளுக்குப் பாம்பைக் கண்டால் மிகவும் அச்சம் என்று விலங்கு நூலார் கூறுவர் . மலைப்பாம்புகள் மரத்தில் விழுதுகள் போல் தொங்கிக் குரங்குகளைப் பிடித்துக் கொன்று உண்டுவிடு மென்பர் . இதன் காரணமாகவே குரங்குகளுக்குப் பாம்பைக் கண்டால் உள் நடுக்கமும் அச்சமும் ஏற்படுகின்றன என்று கூறுவர் . ( Monkeys – and apes recognise and have an instinctive dread of snake, a recognition and fear not displayed by other wild animals ) இச்செய்தி சங்க நூலார்க்குப் புதியதன்று .

பைங்கண் ஊகம் பாம்புபிடித் தன்ன
அங்கோட்டுச் செறிந்த அவிழ்ந்துவீங்கு திவவின் – சிறுபாணாற்றுப் படை , 221-222 .

ஊகக் குரங்கு பாம்பிற்கு அஞ்சிப் பாம்பைப் பிடித்துக் கொண்டு , விட்டுவிட்டால் கடித்து விடுமோ என்று அஞ்சிப் பிடித்த பிடியைத் தளர விடாமல் இறுக்கிப் பிடித்துக் கொள்ளுமாம் . குரங்கு பாம்பைப் பிடித்துக் கொண்டு அல்லற்படும் காட்சியொன்று விசயநகர் மன்னர்களின் அழிந்த தலைநகரான அம்பியில் ( Hampi ) இன்றும் காணலாம் . சிறுபாணாற்றுப்படை கையாண்ட உவமைச் செய்தி பிற்காலத்துச் சிலையாகக் காணப்படுவது வியப்பே . குரங்கின் இந்த இறுக்கிய பிடியைக் கருதியே குரங்குப்பிடி என்ற வழக்குத் தோன்றிற்றுப் போலும் . பாம்பிற்குக் குரங்குகள் அஞ்சும் என்பதை வேருெரு சங்கநூற் பாடலும் குறிப்பிட்டுள்ளது .

அருவரை யிழி தரும் வெருவரு படாஅர்க்
கயந்தலை மந்தி உயங்குபசி களை இயர்
பார்ப்பின் தந்தை பழச்சுளை தொடினும்
நனிநோய் ஏய்க்கும் பனிகூர் அடுக்கத்து – அகம், 288 .

பாம்பைப் போன்று போலி உருவுடைய பாம்புச் செடியைக் கண்டு பயந்த குரங்கு பலாப்பழச்சுளையைத் தாண்டினும் பாம்பென்று பயந்து துன்புறும் என்று அகநானூறு கூறுகின்றது . பாம்பைக் கண்டு அஞ்சும் குரங்கின் அச்ச உணர்வைச் சங்கநூற் புலவர்கள் நன்கு தெரிந்திருந்தனர் . குரங்கிற்குப் பாம்பின் நஞ்சைக் கூடக் கண்டுபிடிக்கக் கூடிய சக்தி உண்டு என்று சிந்தாமணி கூறுவதைக்கவனிக்கவேண்டும் . இச்செய்தி உண்மையா என்பதை ஆராய்தல் வேண்டும் . இஃது உண்மையான செய்தி என்றே தோன்றுகின்றது .


வண்ணப்பூ மாலை சாந்தம்
வாலணி கலன்களாடைக்
கண்முகத் துறுத்தித் தூய்மை

காண்டலாற் கொள்ள வேண்டா
அண்ணலம் புள்ளோ டல்லா
வாயிரம் பேடைச் சேவல்
உண்ணு நீ ரமிழ்தங் காக்க
யூகமோ டாய்க வென்றான் – சீவகசிந்தாமணி , 1893 .

நஞ்சையுடைய நீரையோ உணவையோ ஊகக் குரங்கின் முகத்தில் காட்டினால் உண்ணாது என்றும் , அதைக் கொண்டு நஞ்சறியலாம் என்றும் சீவக சிந்தா மணி கூறுகின்றது . இதே செய்தியைப் பெருங்கதை யும் கூறுகின்றது.

“ மறுப்பிய லூகமும் மந்திப் பிணையொடு ” – பெருங்கதை , உஞ்சைக் காண்டம் , 58 : 87-88 .

ஊகம்
ஊகம்

மறுப்பியல் ஊகம் என்பதற்கு மறுவைப் பிடரி யிலே யுடைய கருங்குரங்கு என்று உரை கூறப்பட்டுள்ளது . இது தவறான உரையாகும் . சிந்தாமணிச் செய்தியை நோக்கின் நஞ்சை மறுக்கும் இயல்புடைய ஊகம் என்றே பொருள் கொள்ள வேண்டும் . ஊகக் குரங்கிற்குப் பிடரியிலே மறுவொன்றுமி லை . பெருங் கதையில் ஊகத்துடன் கூறப்பட்டுள்ள மந்திப்பிணை செம்முகக் குரங்கு வகையைக் குறிப்பதாகும் . பெருங்கதையில் பின்னரும் யூகமும் மந்தியும் என்று கூறப் பட்டுள்ளது . மந்தி என்ற சொல் பிற்காலத்தில் செம்முகக் குரங்கிற்குப் பொதுப் பெயராக வழங்கியதைக் காணலாம் . ஊகம் என்ற சொற்குப் பொருள் கூறிய உரையாசிரியர்கள் , நிகண்டாசிரியர்கள் கருங்குரங்கனக் கூறினர் . ஊகம் கருமையான நிறமுடைய தென்பதைத் தெளிந்திருந்தனர் . ஆனால் சங்க நூல்களிற் குறிப்பிடப்படும் கருங்குரங்கு ஊகக் குருங்கு அன்று , அது தனிப்பட்ட பிறிதொரு வகைக் குரங்காகும் . ஊகக் குரங்கு மனிதருடன் பழகும் குண முடையதன்று . வளர்த்தாலும் கடிக்கும் கொடிய தன்மை வாய்ந்தது . சிலப்பதிகாரத்தில் எதிரிகளை இறுக்கிப் பிடிக்கும் ஒரு பொறிக்கு ஊகப்பொறி என்று பெயர் கூறப்பட்டுள்ளது . பிற்காலத்தில் ஊகத்தைக் கருங்குரங்கு என்று கருதி மயங்கினரேனும் , சங்க காலத்தில் குரங்கைக் கருங்குரங்கு என்று கருதவில்லை என்பது தெரிகின்றது . சங்க நூல்களில் மிக அருமையாகச் சில செய்திகள் நீலகிரியில் வாழுங் கருங் குரங்கைப் பற்றிக் காணப்படுகின்றன . ஆனால் இச் செய்திகள் வருமிடங்களில் பாடல் வரிகளுக்குப் பிற்காலத்தில் உரை யெழுதிய ஆசிரியர்கள் பொருந்தாப் பொருளைக் கூறிச் சென்றனர் . இயற்கையில் வாழும் விலங்குகள் , பறவைகள் , செடி கொடி மரங்கள் ஆகியவை பற்றிய அறிவு பிற்காலத்தில் புலவர்களிடையே குறைந்துவிட்டதால் இத்தகைய பொருந்தா உரைகள் எழலாயின. நற்றிணை 119 ஆம் பாடலில் கருங்கலை என்ற பெயரில் குறிப்பிடப்படும் நீலகிரிக் கருங் குரங்கைக் கரிய கலைமான் என்று கொண்டு பொருள் எழுதி யுள்ளனர் .

படப்பை
இன்முசுப் பெருங்கலை நன்மேயல் ஆரும்
பன்மலர்க் கான்யாற்று உம்பர்க் கருங்கலை
கடும்பாட்டு வருடையொடு தாவன உகளும்
பெருவரை நீழல் வருதவன் குழவியொடு
கூவிளந் ததைந்த கண்ணியன் யாவதும் ” – நற்றிணை, 119 .

நற்றிணை 119 ஆம் பாட்டில் மலையில் காணப்பட்டதாக இன் முசுப் பெருங்கலையும் , கருங் கலையும் , கடும்பாட்டு வருடையும் கூறப்பட்டுள்ளன . இன்முசுப் பெருங்கலை யென்பது கருமுகமுசுவின் ஆண் குரங்கு என்பது தெரிந்ததே . கருமுக முசுக்கலையானது குறிஞ்சி நிலத்தூரில் கொல்லையில் மேயும் கான் யாற்றுக்கும் மேலே , உயரத்தில் கருங்கலை கடும் பாட்டு வருடையொடு தாவிப் பாயும் பெரிய மலை என்று நற்றிணை கூறுகின்றது . அத்தகைய மலையுய ரத்தில் கலைமான்களைக் காண முடியாது. கலைமான்கள் கரிய நிறமுடையன அல்ல . மற்றும் வருடையாடு தன் சுற்றத்தோடு தாவி உகளும் என்று கூறியிருப் பதால் வருடை வாழும் சூழ்நிலையில் கருங்கலை காணப் பட்டதைச் சங்கப் புலவர் தெளிவாகச் சுட்டிக் காட்டி யுள்ளார் . வருடை என்பது நீலகிரி மலையில் வாழும் ஆட்டினத்தைச் சார்ந்த ஒருவகை விலங்காகும் . இந்த வருடை பெரும்பாலும் நீலகிரி மலையில் மலையுச்சி களிலும் செங்குத்தான மலைச்சரிவுகளிலும் வாழு மென்று விலங்கு நூலார் கூறுவர். நீலகிரி , ஆனைமலை களில் 4,000 அடியிலிருந்து 6,000 அடிவரை உள்ள உயரத்தில் நீலகிரித் தகர் ( Nilgris tahr ) எனப்படும் இவ் வருடை வாழ்கின்றதென்று விலங்கு நூலார் கூறுவர் . ஆகவே கருங்கலை என்ற விலங்கும் அதே உயரத்தில் வருடையுடன் வாழும் விலங்கு என்று கூறப்பட்டிருப்பதால் அது கலைமானாக இருக்க முடியாது . கலை என்ற சொல் முசுக்குரங்கின் ஆணிற்கும் வழங்குமாதலால் முசுக் குரங்காக இருக்கலாம் . ஆனால் அதே பாட்டில் முசுக் குரங்கின் ஆண் ஏற்கனவே முசுப்பெருங்கலை என்று கூறப்பட்டு விட்டதால் , இது வேறு ஒரு குரங்கு வகையாகத் தான் இருக்க வேண்டும் . அந்தச் சூழ்நிலையில் காணக் கூடிய குரங்கு ஊகமாகவும் இருக்கலாம் . ஆனால் ஊகத்திற்குக் கலை என்ற சொல் வழக்கு இல்லை . ஆதலின் கருங்கலை என்பது முசுவு மன்று . ஊகமுமன்று . செம்முகக் குரங்குமன்று . ஆதலின் கருங்கலை என்பது தமிழ்நாட்டின் மலைகளில் காணப்படும் வேறொருவகைக் குரங்காகவே இருக்க வேண்டும் . நீலகிரி மலையிலும் பிற உயர்ந்த மலைகளிலும் அரிதாகக் காணப்படும் வேறொருவகைக் குரங்கு , கருங் குரங்கு என்று தற்காலம் அழைக்கப்படும் நீலகிரிக் கருங் குரங்கே யாகும் . இதை விலங்கு நூலார் நீலகிரி முசுக் குரங்கு ( Nilgris langur ) என்று அழைப்பர் . முசுவின் இனத்தைச் ( langur ) சேர்ந்தது . ஆனால் முசுக் குரங் கிற்கு முகத்தில் மட்டும் கருமை யுண்டு . நீலகிரிக் குரங் கிற்கு உடல் முழுவதும் கருமையானது . முசுச்சாதிக்கு உருவிலும் தோற்றத்திலும் நெருங்கிய கருங் குரங்கின் ஆணை முசுவின் ஆணிற்கு உரிய கலை என்ற பெயரொடு கருமையைக் குறிக்கும் அடைமொழி கொடுத்துக் கருங்கலை யென்று சங்கப் புலவர்கள் நுட்பமாகக் கூறியதை உணராது , பிற்காலத்தார் தடுமாறிப் பொருள் கூறினர் . தற்காலத்தில் தமிழிலும் மலையாளத்திலும் கடப மொழியிலும் பேச்சு வழக்கில் கருங் குரங்கு என்று குறிப்பிடுவது இந்த நீலகிரிக் குரங்கையே . ஆனால் உரையாசிரியர்கள் ஊகத்தைக் கருங் குரங்கு என்று கொண்டு பொருள் கூறினர் . ஊகமும் உடலில் கருமை யானதுதான் . ஆனால் ஊகத்திற்கு நரைமுகம் உண்டு. நீலகிரிக் கருங் குரங்கிற்கு நரைமுகம் இல்லை . கரிய முகமே உண்டு . ஆதலின் உரையாசிரியர்கள் காலத்தில் ஊகத்திற்கும் கருங் குரங்கிற்கும் வேற்றுமை தெரியாது போகவே ஊகத்தைக் கருங்குரங்கு என்று தவறாகக் கூறினர் . ஆனால் தற்காலம் கருங் குரங்கு இரசாயனம் , லேகியம் ஆகியவைகளில் குறிப்பிடும் கருங்குரங்கு நீலகிரிக் கருங் குரங்கே யாகும் . ஊகமன்று ஆதலின் தற்காலப் பேச்சு வழக்கில் வழங்கும் கருங் குரங்கே சங்க காலக் கருங் குரங்கு . அதுவே சங்க காலக் கருங்கலை . ஊகம் செம்முகக் குரங்கின் சாதியைச் ( Macaque ) சேர்ந்தது . ஆதலின் விலங்கு நூற்படி ஊகம் நீலகிரிக் கருங் குரங்கோடு சேர்க்க முடியாத குரங்காகும் . முசுக் குரங்கிற்கு இனமானது கருங் குரங்கு என் பதை விலங்கு நூலார் கண்டறிந்தது போன்றே சங்க நூலாரும் ஒற்றுமையைத் தெளிந்தே முசுக்கலை , கருங் கலை என்று கலைப்பெயர் கொடுத்துக் கூறினதின் நுண் மாணுழை புலத்தைப் போற்றிப் புகழ வேண்டும் . விலங்கு நூலாரும் கருங் குரங்கு ஊகக் குரங்கு போல உடல் முழுவதும் கருமைநிற மாயினும் . நரை முகத்தைக் கொண்டு ஊகக் குரங்கைப் பிரித்து உணர லாம் என்று கூறுவர் . இந்த நீலகிரிக் கருங் குரங்கு 3,000 அடியிலிருந்து 7,000 அடிவரை உள்ள மலைக்காடு களிலும் சோலைகளிலும் வாழ்வதாக விலங்கு – நூலார் கூறுவர் . அஃதாவது வருடை வாழும் சூழ்நிலையே. இந்த நீலகிரிக் கருங் குரங்கைத் தமிழில் நீலகிரி முசு என்று விலங்கு நூலார் ( Nilgris langur } கூறுவதுபோல் தமிழிலும் பெயரிட்டழைக்கலாம் .இந்த நீலகிரி முசுவைப் பற்றி இரு குறிப்புகள் சங்க நூல்களில் காணப்படுகின்றன . ஆனால் உரை யாசிரியர்கள் அவைகளுக்குப் புரியாதுபொருளெழு தினர் ,

” நான்கே , அணிநிற வோரி பாய்தலின் மீதழிந்து
திணிநெடுங் குன் றந் தேன்சொரி யும்மே ” -புறம் , 109 .

” நீனிற வோரி பாய்ந்தென நெடுவரை
நேமியிற் செல்லு நெய்க்க ணிறாஅல் –மலைபடுகடாம் , வரி 524-525 .

மலையில் கட்டிய தேன் கூடுகள் ஓரி பாய்ந்து. தேன் சொரிந்தன என்ற செய்தி மேலே காட்டிய பாடல்களில் கூறப்பட்டுள்ளது . ஓரி என்ற சொற்குத் தேன் முதிர்ந்தாற் பரக்கும் நீலநிறம் என்று பொருள் கொண்டு உரை எழுதினர் பழைய உரையாசிரியர்கள் . முசுக்கலை எனினும் அமையும் என்றும் கூறினர் . முசுக்கலை என்று கூறியது ஓரளவு பொருத்த மெனலாம் . ஆனால் நீலநிறம் என்று பொருள் கொண் டது சங்கநூல் வழக்குப்படியோ அறிவியற்படியோ ஆராய்ந்து பார்த்தால் பொருத்தமாகத் தோன்றவில்லைதேன் முதிர்ந்தால் நீலநிறம் பாயுமென்பதோ , அழிந்து தேன் சொரியுமென்பதோ அறிவியற்படி காணப்பட்ட தன்று . மலைபடுகடாத்தில் நெய்க்கண் தேனிறாலே சக்கரம்போல நெடிய மலையில் உருண்டு சென்றதாகக் குறிப்பிட்டிருப்பதைக் காணலாம் . நீலநிறம் பரவினால் தேனிறாலே உருண்டு விழுவதாக அறிவியலார் கண்டு கூறவில்லை . ஆதலின் இச்செய்தி உரைகூறினாரின் கற்பனையே . ஆனால் ஓரியென்பது குரங்கைக் குறிக்கும் என்று கொண்டால் புறப்பாட்டு 109- ம் , மலைபடுகடா மும் கூறும் செய்தி பொருத்தமான தாக அமையும் . குரங்குகள் மலைகளில் தேனிறாலை அழித்து உண்ணும் . சங்க நூல்களும் பிற நூல்களும் குரங்குகள் தேனிறாலைத் தேடுவதைப்பற்றிச் சில செய்திகள் கூறுகின்றன.

கலைகை யற்ற காண்பி னெடுவரை
நிலைபெய் திட்ட மால்புநெறி யாகப்
பெரும்பயன் றொகுத்த தேங்கொள் கொள்ளை – மலைபடுகடாம் , வரி . 315-317 .

கருவிரன் மந்திக் கல்லா வான்பறழ்
அருவரைத் தீந்தே னெடுப்பி யயல
துருகெழு நெடுஞ்சினைப் பாயு நாடன் – ஐங்குறு நூறு, 272 .

இனக்கலை தேன்கிழிக்கு மேகல்சூழ் வெற்ப – பழமொழி , 187 .

தீந்தேன் முசுகுத்தி நக்கும் மலைநாட ” – பழமொழி , 57 .

மேற்காட்டிய பாடல்களில் குரங்கு மலையில் கட்டிய தேனிறாலைக் கிழிக்கும் என்பதுவும் , குத்தும் என்பதுவும் , தேனீயை எழுப்பிவிட்டுப் பாயுமென்பது வும் கூறப்பட்டுள்ளன. முசுக்கலை கையால் அழித்துப் பெற முடியாத தேனிறாலைக் கண்ணேணி மூலமாகக் குறவர் ஏறிக் கொள்ளுவர் என்று மலைபடுகடாம் கூறு வதைக் காண்க . ஆதலின் மலைபடுகடாத்தில் 524 , 525 ஆம் வரிகளில் ஓரி பாய்ந்தென என்ற தொடர்க்கு ஓரிக்குரங்கு பாய்ந்து கைக்கு எட்டி வாய்க்கு எட்டாது போன தேனிறால் மலையில் உருண்டு சென்றதையே பொருளாகக் கொள்ளவேண்டும் . அதுபோன்றே புற நானூற்றுப் பாடலில் அணிநிற ஓரி பாய்ந்து மீதழிந்து தேன் சொரிந்தது என்பது அழகிய நிறமுடைய ஓரிக் குரங்கு பாய்ந்து தேனிறால் அழிந்ததையே குறிக்கும் என்பதை உணரவேண்டும் . சங்க நூல் வழக்குப்படி யும் ஓரியென்பதற்கு இந்த இரு பாடல்களிலும் குரங்கு என்றே பொருள் கொள்ள வேண்டும் என்பது தெளிவு . ஐங்குறு நூற்றில் ( 272 ) செம்முகக் குரங்கு தேனீயைக் கிளப்பி மரக்கிளைமேல் பாய்வதாகக் கூறப் பட்டுள்ளது . பழமொழியிலும் , மலைபடுகடாத்திலும் முசுக்குரங்குகள் தேனிறாலைக் கவர்வதாகக் கூறப்பட்டுள்ளது . இச்செய்திகளை நுண்ணிதின் ஆராய்ந்து பார்த்தால் ஓரி என்பது நீலகிரிக் கருங்குரங்கே என்று தெரிகின்றது .

ஓரி என்ற சொல் முசுவின் ஆணிற்கு வழங்கும் என்று சேந்தன் திவாகரமும் பிங்கலந்தையும் கூறுகின்றன . நரிக்கும் வழங்குமாயினும் இங்கு அது கருதவேண்டியதில்லை . முசுவின் ஆணிற்கு ஓரி என்ற பெயர் ஓரளவே பொருந்தும் . அணிநிற ஓரி நீனிற ஓரி என்று அழைக்கப்பட்டதிலிருந்து ஓரியின் உடல் அணிநிறம் உடையதென்றும் , நீலநிறமுடைய தென்றும் தெளிவாக்கப்பட்டுள்ளது . அழகிய முடைய , அழகிய மயிர்த்தோலையுடைய முசுப்போன்ற குரங்கு நீலகிரிக் கருங்குரங்கேயாகும் . இதன் அழகிய மயிர்த் தோலுக்காகவே இதை மிகவும் வேட்டையாடிச் சில அழித்து வந்தனர் . ( The beauty of their fur and the supposed medicinal value of their flesh , blood and organs have caused them to be hunted more than any other species of Indian monkey and have made them the most wary and unapproachable of all their tribe ) நீலநிறமென்பது நீலகிரிக் குரங்கின் பள பளப்பான கருநிறத்தையே குறிக்கின்றது. நீலத்தைக் கருநிறமென்றும் கருநிறத்தை நீலநிறமென்றும் குறிப் பிடுவது சங்க நூல் வழக்கு . விலங்கு நூலார் இதன் தோலின் கருநிறத்தை ( glossy jet black) என்று கூறுவர் . அணிநிற ஓரி யென்பது கருங்குரங்கின் ஆண் என்பது தெளிவாகும் . ஆண்கருங் குரங்குகளைப் பற்றியே இரண்டு பாடல்களிலும் கூறப்பட்டிருப்பது ஏன் என்று ஆராய்ந்தால் விலங்கு நூலார் கூறிய ஒரு செய்தி துணை புரிகின்றது . இக் கருங்குரங்குகளின் ஆண்கள் தனியாக மலைக்காடுகளில் காணப்படுவதை விலங்கு நூலார் கண்டு கூறியுள்ளனர். ( From the fact that solitary males much scarred with fighting are sometimes
observed it may be deduced that their social organisation is based on the usual principle of male dominance ) இப்படித் தனியாகக் கண்ட ஆண் கருங்குரங்குகளையே ஒரியென்று சங்கநூற் புலவர்கள் குறிப்பிட்டதாகத் தெரி கின்றது . ஓரி என்ற சொல் தனிமை என்ற பொருளில் சங்க நூல்களில் வழங்கியுள்ளது . ஓர் என்ற வேர்ச்சொல் அடிப்படையில் தோன்றியது பிற் காலத்துத் திவாகரம் , பிங்கலந்தை போன்ற நிகண்டுகள் அச் சொல் வழக்கை உணர்ந்து முசுவின் ஆண் ஒரி என்று கூறப்படும் என்றன . ஆனால் முசுவின் ஆண் அன்று ஓரிமுசுப்போன்ற நீலகிரி முசுவின் ஆணே ஓரி என்பதாகும் . இதே நிகண்டுகளில் கார் என்ற சொல்லால் கருங்குரங்கின் பெயராகக் காட்டப்பட்டிருக் கார் என்ற சொல் கருமையைக் குறிக்கும் . சங்க காலத்தில் கார் என்ற பெயரே கருங்குரங்கிற்கு வழங்கியிருக்கலாம் அதனடிப்படையாகவே கருங்கலை என்ற சொல் கருங்குரங்கின் ஆணைக் குறித்துச் சங்க நூல்களில் வழங்கியிருக்கும் . குறுந்தொகை 69 ஆம் பாட்டில் ‘ கருங்கட்டாக் கலை என்று வரும் பெயர் இந்தக் கருங்கலையையே குறிப்பதாகத் தோன்று கின்றது . ஆனால் அதைக் குரங்காகக் கொண்டு பேரா சிரியர் பொருள் கூறியுள்ளார் . கலை என்ற சொல் முசுவிற்கு நிலைபெற்ற தெனவே அத்துணை நிலை பேறின்றிக் குரங்கிற்கு வருவனவும் கொள்க என்று கூறி , அவ்வாறு வருவதற்கே கருங்கட்டாக்கலை என்று வரும் வரியைப் பேராசிரியர் காட்டியிருக்கின்றார் . இதிலிருந்து பேராசிரியரும் ‘ கருங்கட்டாக்கலை முசுக் கலை அன்று என்பதை உணர்ந்தே எழுதியுள்ளது தெளிவாகின்றது . ஆனால் அவர் கருங்கட்டாக்கலை செம்முகக் குரங்கிற்கு வரும் என்று கூறியது தவறு. அதற்குக் காரணம் கருங்கலை கருங்குரங்கைக் குறிப் பதையும் , கருங்குரங்கு சங்க நூலார் அறிந்த குரங்கென் பதையும் பேராசிரியர் அறியாததே . ஓரி என்பதே கருங்கலை கருங்கட்டாக்கலை என்பதை வேண்டும் . கருங்கட்டாக்கலை என்ற சொற்றொடர் கருங்கண் தாக்கலை என்று பிரிக்கப்படும் . தாக்கலை என்பது தாக்கணங்கு என்பதுபோல் அதே பொருளில் வருவது . கருங்குரங்கின் முதிய ஆண்கள் தனியாக இருப்பதுவும் , போரிட்டுப் புண்ணுற்றுக் காணப்படு வதும் ( Solitary male much scarred with fighting ) விலங்கு நூலார் கூறிய செய்தியே . அத்தகைய கருங்குரங்கின் முதிய ஆணே தாக்கலை என் றழைக்கப்பட்டது . கருங் கண் என்பதிலிருந்து இக்குரங்கு கரியதென்பதையும் உய்த்துணர முடிகின்றது .

நிகண்டுகள் காருகம் , ஊகம் கருங்குரங்காகும் என்று கூறின . ஊகத்தையும் கருங்குரங்காகக் கொண்டது இதிலிருந்து தெரிகின்றது . ஊகத்தை ஒருவகைக் கருங்குரங்காகவும் , நீலகிரிக் கருங்குரங்கை மற்றொரு வகைக் கருங்குரங்காகவும் கொண்டு அதற்குக் காருகம் என்று பெயர் வழங்கியதாகத் தெரிகின்றது . ஆனால் கார் என்பதே பொருத்தமான பெயராகத் தெரி கின்றது . கருங்குரங்கை ஓரளவுநிகண்டாசிரியர்களும் தெரிந்திருந்தனர் . சங்க இலக்கியத்தில் தமிழ் நாட்டில் உள்ள நான்கு வகைக் குரங்குகளே சொல்லப்பட்டுள்ளன . இந்தியா வில் உள்ள ஏனைய குரங்குகளைப்பற்றிச் சங்க நூல்கள் யாதொரு செய்தியும் சொல்லவில்லை. ஆனால் தொல் காப்பிய உரைகளிலும் பிற இலக்கணங்களின் உரை களிலும் வடநாட்டில் வாழும் ஒருவகைக் குரங்குபற்றி அரிய செய்தி காணப்படுகின்றது . தொல்காப்பியச் சொல்லதிகாரச் சூத்திரம் அவையல் கிளவி மறைத் தனர் கிளத்தல் என்பதற்கு எடுத்துக்காட்டாகக் , கரு முகமந்தி செம்பினேற்றை என்ற வரி கூறப்பட்டுள் ளது . பேராசிரியரும் மரபியலில் (சூ . 622 ) முசுவின் பெண்பால் மந்தி எனப்படும் என்பதற்கு இதே வரி யைக் காட்டினார் . இவ் வரி பழைய பாட்டின் வரியாக இருக்கலாம் . ஆனால் பேராசிரியர் முசு என்று கொண்டது பொருத்தமில்லை . ஏனென்றால் முசுவிற்கு ( Common langur ) சிவப்பான பின்பாகம் ( பிருட்டபாகம் ) கிடையாது . இருந்தால் சங்க நூல்களிலும் , விலங்கு நூல்களிலும் சொல்லப்படாமல் இருக்காது . ஆதலின் செம்பின் உடைய குரங்கு தமிழ்நாட்டில் உள்ள நான்கு குரங்கு வகைகளில் எதுவுமில்லை . ஆனால் கோதாவரிக்கப்பால் வடநாடு முழுவதும் ஊர்களிலும் நகர்ப்புறங்களிலும் எளிதாக , மிகுதியாகக் காணப்படும் ஒரு குரங்கு வகைக்குச்செம்பின் ( Red Rumps ) இருக் கின்றது . இக்குரங்கு Rhesus macaque என்று விலங்கு நூலார் அழைப்பர் . இக்குரங்கு தமிழ்
நாட்டில் எங்கும் காணப்படும் செம்முகக் குரங்கின் சாதியைச் சேர்ந்தது . வடநாட்டில் குரங்கென்றால் (Bandar) இதையே குறிக்கும் . இந்தக் குரங்கின் மந் . திக்கு இணை கூடும் காலத்தில் ( Mating Season ) பின் பாகம் நல்ல சிவப்பு நிறமாக மாறுகின்றது . குரங்கிற்கு அழைப்பு விடுக்கவே விளம்பரமாகச் செம் பின் ஏற்படுகிறது என்று விலங்கு நூலார் கூறுகின் றனர் . ( The Rhesus macaque females advertise their condition by bright red rumps ) விலங்கு நூலார் கூறும் இந்தச் செம்பின் பாகத்தையே கருமுக மந்தி செம்பின் என்றனர் . கருமுக மந்தியின் ‘ செம்பின்னை ப் பார்த்துக் கவரப்பட்ட ஏற்றை ( ஆண் ) என்பதே பாட்டின் பொருள் . மொழிபெயர் தேயத்தில் கண்ட ஓர் இடக்கர் அவயவத்தின்பெயரை அவையல் கிளவியாகக் கொண்டது வியப்பை யூட்டுவதாகும் . தற்காலப் பேச்சு வழக்கில் கூட இஃது க்கர்ச் சொல்லே .
இன்றும் இடக்கரை அடக்கும் சொற்களாக வட மொழிச் சொற்களையும் பிறமொழிச் சொற்களையும் தமிழில் பயன்படுத்துவதைக் காணலாம் . நீரல் ஈரத்தை மூத்திரம் என்று சொல்வதைக் காணலாம். மந்தியின் செம்பின் இடக்கர்ச் சொல்லாகவும் அவையல் கிளவியாகவும் கருதப்பட்டதுபோலவே அமெரிக்காவிலே இன்று குரங்கின் செம்பின் இடக்கர் மொழியாகக் ( Slang ) கையாளப்படுகின்றது நகைப்பை யும் வியப்பையும் தருகின்றது . ( Monkey s piak butt ) பழந்தமிழ்ப் புலவர்கள் மந்தியின் செம்பின்னைக் குறிப் பிட்டுக் கூறியதுபோலத் தற்கால அமெரிக்க எழுத் தாளர் ஒருவரும் கூறியுள்ளது கவனிக்கத் தக்கதாகும் . குரங்குகளைப் பற்றிச் சில பொதுவான செய்தி களும் சங்க நூல்களில் சொல்லப்பட்டுள்ளன . குரங்கு கள் சைவ உணவையே விரும்பி உண்ணுமென்பர் . முசுக்குரங்குகள் சைவ உணவைத் தவிர வேறெவற் றையும் உண்ணுவதில்லை . செம்முகக் குரங்குகள் உணவே மிகுதியாகக் கொண்டாலும் புழுப் பூச்சிகளையும் பறவை முட்டைகளையும் உண்ணும் .

கறிவள ரடுக்கத் தாங்கண் முறியருந்து
குரங்கொருங் கிருக்கும் பெருங்கல் நாடன் “
— குறுந்தொகை, 288 .

” அதிர்குரல் முதுகலை கறிமுறி முனை இ
உயர்சிமை நெடுங் கோட் டுகள உக்க
கமழிதழ் அலரி தாஅய் வேலன்
வெறியயர் வியன்களம் கடுக்கும் . ” — அகம் , 182 .

குளவி மேய்ந்த மந்தி துணையொடு – ஐங்குறு நூறு 279

மந்திக் காதலன் முறிமேய் கடுவன்
தண்கமழ் நறைக்கொடி கொண்டு வியலறைப்
பொங்க விளமழை புடைக்கு நாட -ஐங்குறு நூறு, 278

முறிமே யாக்கைக் கிளையொடு துவன்றிச் – மலைபடுகடாம் , வரி 313 .

அத்தச் செயலைத் துப்புற ழொண்டளிர்
புன் றலை மந்தி வன்பற ழாரும் – ஐங்குறு நூறு, 273 .

அசோகு , மிளகின் கொழுந்துகளை உண்பதாகவும் மரஞ் செடிகளின் தளிர்களை மேய்வதாகவும் சங்கப் பாடல்கள் கூறுவதைக் காணலாம் . ( Monkeys eat leaves , flowers and fruit . This is their chief food ) சங்கப் பாடல்களில் குரங்குகள் மரங்களில் மேயும்போது பூக் களையும் , தளிர்களையும் , பழங்களையும் உதிர்ப்பதாகவும் கூறியிருப்பதைக் கவனிக்கலாம் . புலிக்கேழ் உற்ற பூவிடைப் பெருஞ்சினை நரந்த நறும்பூ நாண்மலர் உதிரக் கலைபாய்ந்து உகளும் கல்சேர் வேங்கைத் தேங்கமழ் நெடுவரை பிறங்கிய வேங்கட வைப்பிற் சுரன் இறந் தோரே – அகம்.

ஆய்சுளைப் பலவின் மேய்கலை உதிர்த்த
துய்த்தலை வெண் காழ் பெறூஉங்
கற்கெழு சிறுகுடிக் கானவன் மகளே ! -அகம் 7.

கடுவன்
ஊழுறு தீங்கனி யுதிர்ப்பக் கீழிருந்
தேற்பன வேற்பன வுண்ணும்
பார்ப்புடை மந்திய மலையிறந் தோரே – குறுந்தொகை 278.

குரங்குகள் தளிர் , பூ , காய் ஆகியவைகளை உதிர்த்து மான்களை ஊட்டும் ( Commensal ) என்று அறிஞர் சிலர் கருதுகின்றனர் . மரத்தில் மேயுங் குரங்குக் கூட்டங்களை நிலத்திலிருக்கும் மான் கூட்டங்கள் , உணவுக் காகப் பின் தொடருமாம் . மேலே காட்டிய பாடல் களிற் குரங்குகள் பூக்களை உதிர்ப்பதாகவும் , பலாப் பழத்தின் கொட்டையை உதிர்ப்பதாகவும் , கீழே இருந்த தன் குட்டிகளுக்கு முற்றிய மாம்பழத்தை உதிர்க்க , அவை தின்றதாகவும் கூறியிருப்பதை நோக்குக .

கான மஞ்ஞை யறையின் முட்டை வெயிலாடு முசுவின் குருளை யுருட்டும் குன்ற நாடன் கேண்மை யென்றும் ” –குறுந்தொகை 38 .

குறுந்தொகை 38 ஆம் பாட்டில் முசுக்குரங்கு காட்டுமயில் இட்ட முட்டையை விளையாட்டாக ருட்டும் என்று கூறியதைக் கவனிக்கவேண்டும் . முசுக்கள் முற்றிலும் சைவ உணவையே உண்ணுவன . அதனால் மயில் முட்டையை உண்ணவில்லை . அதுவே செம்முகக் குரங்காயின்முட்டையை உண்டுவிடும் . குரங்குகள் மழைக் காலத்தில் குளிரில் நடுங்கு மெனச் சங்க நூல்கள் கூறுகின்றன .

மாமேயன் மறப்ப மந்தி கூர –நெடுநல் வாடை , 9.

நரைமுக ஊகம் பார்ப்பொடு பனிப்ப – குறுந்தொகை , 249.

… ஊகமொடு
மாமுக முசுக்கலை பனிப்ப ” – திருமுருகாற்றுப்படை , 302-303 .

சங்க நூல்களில் மூவகைக் குரங்குகளும் மழையில் குறுகி யொடுங்கி நடுங்குவதாகக் கூறப்பட்டுள்ளது . குரங்குக் குட்டிகள் தாய்க் குரங்கைத் தழுவிக்கொண்டு போகும் . குரங்குகள் உயரக் குதித்தாலும் குட்டிகள் விழாதபடி தழுவிப் பிடித்துக் கொள்ளும் . இத்தன்மையை அடிப்படையாகக் கொண்டு தத்துவ நூலில் மர்க்கட நியாயம் என்ற ஒரு கொள்கை கடவுள் வழிபாட்டில் கூறப்படுகின்றது .

” பெரிதா லம்மதின் பூச லுயர்கோட்டு
மகவுடை மந்தி போல
அகனுறத் தழீ இக் கேட்குநர்ப் பெறினே
— குறுந்தொகை, 29 .

குட்டியால் தழுவப் பெற்றுச் செல்லும் மந்தியைக் குறிப்பாகக் காட்டியிருப்பதைக் காணலாம் . குரங்கின் குடும்ப வாழ்க்கையைப் பற்றிச் சங்கப் புலவர்கள் சில செய்திகள் கூறியுள்ளனர் . விலங்கு நூலார் குரங்குகள் ஆண் , பெண்ணாக இணைவதையும் ஆணும் பெண்ணுமாக வாழ்வதையும் கூறியுள்ளனர். ஆனால் ஓர் ஆண் பல பெண் குரங்குகளைத் துணையாக வைத்திருப்பதையும் கண்டுள்ளனர் . குரங்கினத்தில் ஒருதார மணமும், பலதார மணமும் நிலவுகின்றது என்பர் .

மந்திக் காதலன் முறிமேய் கடுவன் – ஐங்குறு நூறு , 276 .

மந்திக் கணவன் கல்லாக் கடுவன் – ஐங்குறுநூறு , 274 .

ஐங்குறு நூற்றிலும் பிற சங்க நூல்களிலும் பெண்குரங்கு கணவனுடன் , காதலனுடன் இருப்பதாகக் கூறுவதைக் காணலாம் . ஆனால் பெரும்பாலும் குரங்குகள் ஒருதார மணவாழ்க்கையைப் ( Monogamy ) பின்பற்றுவ தில்லை . குரங்குக் கூட்டம் என்பது சில பெண் குரங்குகள், குட்டிகள் இளமையான ஆண் குரங் குகள் சேர்ந்த கூட்டமாகக் காணப்படும் ( Troops ) என்று கூறுவர் . இந்தக் கூட்டத்திற்கு வலிமையும் ஆற்றலும் பொருந்திய ஆண்குரங்கு தலைமை தாங்குமாம் . இந்தத் தலைமைக் குரங்கு மற்ற ஆண் குரங்குகளை அடக்கி ஆளும் . அல்லது கூட்டத்தை விட்டு விரட்டி ஓட்டும் .அவ்வாறு விரட்டப்பட்ட ஆண்குரங்குகள் தனியாகவோ அல்லது ஆண் குரங்குகளாலாகிய கூட்டமாகவோ காணப்படும் . தலைமை தாங்கும் இந்த ஆண் குரங்கைப் பற்றிச் சங்க நூலார் தெரிந்திருந்தனர் .

குரங்கின் தலைவன் குறுமயிர்க் கடுவன் – ஐங்குறு நூறு , 275 .

பல்கினத் தலைவன் கல்லாக் கடுவன் -அகம் , 352 .

குரங்குக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கும் ஆண் குரங்கை (Dominant Male ) அறிந்தே கூறியுள்ளனர் . சங்க நூல்களிற் குாங்குகளிடையே காணப்படும் இத் தகைய கூட்டங்களைக் கிளை என்று கூறியுள்ளனர் .

கருவிரல் மந்திச் செம்முகப் பெருங்கிளை- நற்றிணை , 334 .

செம்முகப் பெருங்கிளை யிழைப்பொலிந் தா அங்கு ” –புறம் , 378 .

பல்கிளைத் தலைவன் கல்லாக் கடுவன் – அகம் , 352 ,

முறிமே யாக்கைக் கிளையொடு துவன்றிச் – மலைபடுகடாம் , வரி 313.

கல்லா வன்பறழ் கிளை முதற் சேர்த்தி – குறுந்தொகை , 89 .

மேலே காட்டிய சங்கப்பாடல்களிற் கிளை என்ற சொல் குரங்குக் கூட்டத்தைக் குறித்து வருகின்றது . கிளை என்ற சொல் பொருட் செறிவுடன் குரங்குக் கூட்டத்தைக் குறிக்க வழங்கியுள்ளது . கூட்டத்தில் உள்ள குரங்குகள் உறவின் முறை யாரைப் போன்று பிறப்பிலே உறவுடையன என்பதையும் கிளை என்ற சொல் சுட்டிக் காட்டுகின்றது . இக்குரங்குக் கூட்டங்களின் உறவின் நெருக்கத்தையும் கட்டுப்பாட்டையும் உணர்ந்தே முறிமேய் யாக்கைக் கிளை மலைப்பிளப்பில் விழுந்த குட்டியைக் காப்பாற்ற முடியாமல் கையற்றுக் கூக்குரலிட்டன என்று மலைபடுகடாம் கூறிற்று . யாக்கை என்ற சொல் குரங்குகளுக் குள் இருந்த நெருக்கமான உறவுத் தொடர்பையும் கட்டுப்பாட்டையும் குறிக்கின்றது . இம் முறையாகக் கூட்டங்கள் ஊர்ப்புறங்களிலும் உணவு நிறையக் கிடைக்கும் சூழலிலுமே குரங்குகளிடையே உண்டாகின்றன என்று விலங்கு நூலார் கண்டுள்ளனர் . சங்க நூல்களிலும் ஊர்களின் சூழ்நிலையில் காணப்படும் செம்முகக் குரங்குகளுக்கே கிளை என்ற பெயர் கூறி யிருப்பதைக் காணலாம் . குறுந்தொகை 69 ஆம் பாட்டில் மட்டும் கருங்குரங்குகளுக்குக் கிளை என்ற பெயர் கூறியதாகத் தெரிகின்றது . வலிய குரங்கு ஒன்று கூட்டத்திற்குத் தலைமை தாங்குவது இயல்பு . ஆனால் சில சமயங்களில் போரிட்டு வென்று பல கூட்டங்களையும் தன்னதாக்கி ஒரே குரங்கு அதற்குத் தலைமை தாங்குவதுண்டு என்பதை விலங்கு நூலார் எழுதியுள்னளர் .( The temporary assemblage of families may live as n dependant unit, distinct in all essential relationship and mingling with the other members of the Colony only for purposes of feeding or participating in communal quarrel, the extent of such association depending upon the relationship of the dominant overlord . ) பல கூட்டங்களின் தலைமைக் குரங்குகளைத் தாக்கிப் போரிட்டு வென்று பல கிளைகளுக்கும் தலைவனான குரங்கையே , ‘ பல்கிளைத் தலைவன் (Dominant overlord ) என்று அகநானூற்றுப் பாடல் , 352 கூறுவதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும் . குறுந்தொகை 69 ஆம் பாட்டில் கருங்குரங்குகளின் தலைவனையே தாக்கலை என்று கூறியதாகத் தெரிகின்றது . தாக்கும் கலைக் குரங்கு இறந்துபோகவே அதன் மந்தி தன் குட்டி யைக் கிளை முதற் சேர்த்து உயிரை மாய்த்ததாகக் கூறப்பட்டுள்ளது. தன்னுயிரை மாய்த்துக் கொள்ளு முன் தன் குட்டியை அதற்குரிய கிளையில் சேர்த்ததாகக் கூறியது அரிய செய்தி . கிளையின் அடிப்படைத் தன்மையைச் சங்கப்புலவர்கள் நன்கு உணர்ந்தே பாடி யுள்ளனர் . ஆனால் பெண்குரங்கு ஆண்குரங்கின் இழப்பைத் தாங்காது உயிர்விட்டது என்பது கற்பனை யாக மனித உணர்ச்சியைக் குரங்கின் மேல் ஏற்றிக் கூறியதே யாகும் . குரங்குகளுக்கு அத்தகைய முதிர்ந்த அன்புணர்ச்சி கிடையாது . குரங்குகளிடையே உள்ள உறவுகள் பாலுணர்ச்சி ( Sex instinct ) முதலிய அடிப் படை உணர்வுகளில் ( Basic instincts ) தோன்றியவையே . குட்டிகளோடு கூடிய மந்திகளைப் பற்றிய செய்திகள் சங்க நூல்களில் வருகின்றன . ஊகம் பார்ப்பொடு ( குறுந்தொகை 249 ) இருப்பதையும் செம்முக மந்தி யும் கடுவனும் பார்ப்பொடு காணப்பட்டதையும் ( குறுந்தொகை 278 ) கூறியுள்ளனர் . உணவு தேடி

உண்ணும் காலத்தில் கூட்டமாக இருப்பதையும் , முறியருந்து குரங்கு ஒருங்கு இருக்கும் என்று குறுந்தொகை ( 288 ) கூறியதிலிருந்து தெரிந்து கொள்ளலாம் . குரங்குக் கூட்டங்களில் ஆண்களே தனியாக அமைந்த கூட்டத்தையும் கண்டு விலங்கு நூலார் எழுதியுள்ளனர் . இவை பெரும்பாலும் கூட்டத்திவிருந்து விரட்டப்பட்ட ஆண் குரங்குகள் என்று கூறுவர் . இத்தகைய ஆண் குரங்குக் கூட்டங்களை முசுக்குரங்குகளிடையே சங்க நூலார் அடிக்கடி கண்டதன் காரணமாகவே இந்த முசுத் திரளுக்குக் கணக்கலை , இனக்கலை என்று பெயரிட்டனர் . இத்தகைய ஆண் முசுக் கூட்டத்தைக் கண்டதினால் முசுவின் ஆணிற்கு அதற்கே உரிய பெயராகக் கலை என்ற சொல்தோன்றிற்றுப் போலும் . பேராசிரியர் மரபியலுரையில் கலை என்ற பெயர் முசுவிற்கு நிலைபேறுடையது என்று கூறியதைக் காணலாம் . குரங்குகளில் தனியாகவே
மேய்ந்து வாழும் ஆண் குரங்குகளையும் விலங்கு நூலார் கண்டுள்ளனர் . இவை குரங்குக் கூட்டத்தின் தலைமைப் பதவியிலிருந்து போரிட்டு விரட்டப்பட்ட முதிய ஆண் குரங்குகளாக இருக்கலாம் என்று விலங்கு நூலார் கூறுவர் . ஏன் எனின் இவை கடிபட்ட புண் காயங்களுடனும் காணப்படுகின் றன . இந்தத் தனித்த ஆண் குரங்குகளை முசுக்குரங்கு வகையிலும் , கருங் குரங்கிலும் சங்க நூலார் கண்டதாகத் தெரிகின்றது . கலைக் குரங்குகளைத் தனியாகச் சங்க நூல்கள் குறிப்பிடுகின் றன . அதிர்குரல் முதுகலையைப் பற்றி அகநானூறு ( 182 ) கூறுவதிலிருந்து முதிய கலையே தனித்து வாழ்ந்ததாகத் தோன்று கின்றது . கருங்குரங்குகளில் இம்முறையாகத் தனியாகத் திரியும் வயது மிக்க ஆண் குரங்குகளை விலங்கு நூலார் கண்டுள்ளனர் . இதையே சங்க நூலார் ஓரியென்றும் தாக்கலை என்றும் குறிப்பிட்டனர் என்பது முன்னர் விளக்கப்பட்டது . ஓரியென்ற பெயர் முதுநரிக்கும் வழங்கியுள்ளது . கலையும் ஓரியும் நரியையும் முசுவையும் குறிக்குமென நிகண்டுகள் கூறும் ஓரி என்ற பெயர் முதுகலையைக் குறித்தே சங்க நூல்களில் வழங்கியதாகத் தெரிகின்றது . ஓரி என்ற பெயர் சூடாமணியில் கிழ நரியையும் ஆண் முசுவையும் குறித்து வழங்குவதைக் காணலாம் . தொல்காப்பியத்தில் மூன்று வகைக் குரங்குகளைப் பற்றியும் மரபியல் சூத்திரம் கூறுவதைக் கவனிக்க வேண்டும் . தொல்காப்பியர் காலத்திலேயே இந்த மூன்று வகைக் குரங்குகளையும் மிகத் தெளிவாகப் பிரித்து உணர்ந்திருந்தனரென்பதில் சிறிதும் ஐயமில்லை . ஆனால் பிற்கால நூல்களில் இந்த மூன்று வகைக் குரங்குகளையும் பிரித்து உணர்ந்ததாகத் தெரியவில்லை . எல்லா வகைக் குரங்குகளையும் பொதுவாகக் குரங்கென்றே கூறிச் சென்றனர் . கோடுவாழ் குரங்கும் குட்டி கூறுப் என்று வரும் மரபியல் – கு . ஆம் சூத்திரத்தில் தொல்காப்பியர் குரங்கு என்ற சொல்லைக் குரங்கினத்தையே குறிக்கும் பொதுச் சொல்லாகக் கொண்டுள்ளது தெரிகின்றது . பேராசிரியர் குரங்கின் பிறப்புப் பகுதியாகக் குரங்குக் குட்டி , முசுக்குட்டி , ஊகக் குட்டி என்று கொண்டுள்ளார் .

குரங்கு முசுவும் ஊகமு மூன்றும்
நிரம்ப நாடி னப்பெயர்க் குரிய ” –தொல் – மரபியல் . 22

குரங்கு முசுவும் ஊகமு மந்தி ” – தொல் – மரபியல் . சு அ

இந்த இரண்டு மரபியில் சூத்திரங்களும் குரங்கினத்தின் மூன்று வகைக் குரங்குகளைத் தெளிவாகக் கூறியுள்ளன. மந்தியென்பது மூன்று வகைக் குரங்கு களின் பெண்பாலைக் குறித்தது என்று மரபியலில் கூறப்பட்டிருப்பினும் சங்க காலத்திலேயே மந்தி என்ற சொல் செம்முகக் குரங்கின் பெண்பாலிற்கே பெரும் பாலும் வழங்கியுள்ளது . பிற்காலத்தில் நூல்களிலும் நிகண்டுகளிலும் மந்தி என்ற சொல் பெண்பாலை மட்டு மின்றிப் பொதுவாகச் செம்முகக் குரங்கு வகையையே குறிப்பிட்டு வழங்கிற்று . மரபியல் நூற்பா சுக ‘ குரங்கி னேற்றினைக் கடுவனென்றலும் என்று செம் முகக் குரங்கின் ஆணைக் கடுவன் என்று கூறும் வழக்கு ஏற்றுக் கொள்ளக் கூடியதென்று கூறிற்று . முசுவின் ஆணிற்குப் பெயராகக் கலையென்ற சொல் நிலைபேறு டையதென்பதை நிலையிற்றப் பெயர் முசுவின் கண்ணும் என்று வரும் சஎஆம் நூற்பா விளக்குகின்றது . நீலகிரிக் கருங்குரங்கு சில மலைகளிலேயே மிக அரிதாகக் காணப்பட்டதால் அதைப் பற்றித் தொல் காப்பியர் கூறவில்லை போலும். நிகண்டாசிரியர்கள் கருங்குரங்கை உணர்ந்திருந்தாலும் ஊகத்தையும் கருங் குரங்கையும் ஒன்றாகச் சிலவிடங்களில் கருதினர் . ஆனால் ‘ யூகம் என்ற பெயரை நிகண்டுகளில் பெண் குரங்கின் பெயராகக் கொண்டது மிகவும் தவறு . குரங்கின் பெயராக நிகண்டுகளில் வழங்கும் பெயர்களில் சிலவே தமிழ்ப் பெயர் . பிற வடமொழிப் பெயர்கள் . வலிமுகம் முகத்தின் கடுமை காரணமாக வந்தது . ‘ கவி என்ற சொல் கன்னடத்தில் மட்டும் இன்று வழங்குகின்றது . டரம் என்ற சொல் மரக் கோட்டில் வாழும் விலங்கு என்று கருதிய தால் வந்த பெயர் . முசுவின் பெயராக மைம்முகன் என்ற புதிய பெயர் காணப்படுகின்றது . கோலாங்கூலம் என்று வரும் முசுவின் பெயர் வடமொழிப் பெயர் . இதுவே லங்கர் என்று ஆங்கிலத்திலும் இந்தி மொழியிலும் வழங்குகின்றது . சங்க இலக்கியத்தில் நான்கு வகைக் குரங்குகளைப் பற்றிச் செய்திகள் கண்டோம் . ஆனால் இந்த நான்கு வகைக் குரங்குகளையும் ஒரே சங்க நூற் பாட்டுக் கூறி யிருப்பது மிக்க வியப்பை அளிக்கின்றது . மலைபடுகடாம் மலையையும் மலைசார்ந்த காடுகளையும் ஆராய்ந்து அவற்றின் இயற்கை நிலையைப் படம் பிடித்துக் காட்டுவது போன்று பாடப்பட்டுள்ளது . ஆதலின் மலைப்படுகடாத்தில் இந்த நால்வகைக் குரங்குகளும் கூறப்பட் டிருப்பது எதிர்பார்க்கக்கூடியதே .

இருவெதி ரீர்ங்கழை தத்திக்கல்லெனக்
கருவிர லூ கம் பார்ப்போ டிரிய -வரிகள் 207-208 ..

கடும்பறைக் கோடியர் மகாஅ ரன்ன
நெடுங்கழைக் கொம்பர்க் கடுவ னுகளினு –வரிகள் 286-287 ..

கலைதொடு பெரும்பழம் புண்கூர்ந் தூறலின்
மலை முழுதுங் கமழு மாதிரந் தோறும் – வரிகள் 292-298 ..

கைக்கோண் மறந்த கருவிரன் மந்தி
பெருவிடர் வீழ்ந்ததன் கல்லாப் பார்ப்பிற்கு
முறிமே யாக்கைக் கிளையொடு துவன்றிச்
சிறுமை யுற்ற களையாப் பூசல் ” – வரிகள் 311-314 .

நீனிற வோரி பாய்ந்தென நெடுவரை
நேமியிற் செல்லு நெய்க்க ணிறாஅல் ” – வரிகள் 524-525 .

மேலே எடுத்தாளப்பட்ட மலைபடுகடாம் பாட்டு வரிகளில் முதலில் ஊகக் குரங்கும் , அதற்கடுத்துச் செம் முகக் குரங்கும் , அதற்கும் பிறகு முசுக் குரங்கும் , பின்னர்த் திரும்பவும் செம்முகக் குரங்கும் , இறுதி யாகக் கருங்குரங்கும் சொல்லப்பட்டிருப்பது மிக அரிய செய்தியாகும் . சங்கப் புலவர்களின் விலங்கியல் அறிவு நுண்மாணுழைபுலம் , அறிவாற்றல் எல்லாம் காட்ட மலைபடுகடாத்தில் வரும் இச்செய்தியே மானது . இதுவரை விளக்கியதிலிருந்து சங்க நூல்களில் தமிழ்நாட்டில் உள்ள நான்கு வகைக் குரங்குகளும் சொல்லப்பட்டுள்ளன – என்பது தெரிந்ததே . நான்கைத் தவிரத் தமிழ் நாட்டில் வேறு குரங்குகள் விலங்கு நூற்படி கிடையாது. சங்க நூல் வழியாக நாம் அறியும் செம்முகக் குரங்கும் , மாமுகமுசுவும், நரைமுக ஊகமும் , கருங்கலையுமே ( அணிநிற ஓரி ) விலங்கு நூலாரும் தமிழ் நாட்டில் கண்டவை . விலங்கு நூற்படி முறையே The Macaque (Macaca radiata ), The Common langur (Presbytus entellus ), The Lion -tailed Macaque ( Macaca Silenus ) The Nilgris Langur ( Presbytis Johnii ) எனப்படும் .

ஊகம்
ஊகம்

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

Macaca Silenus, lion-tailed macaque (Macaca silenus)

black monkey

a kind of grass, Broomstick-grass, Aristida setacca, Aristida_purpurea?,  a kind of a Broom grass

presumption, conjecture, guess, speculate, assume

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

குரங்கும் முசுவும் ஊகமும் மூன்றும் – பொருள். மரபி:22/1

குரங்கும் முசுவும் ஊகமும் மந்தி – பொருள். மரபி:67/1

வலிமையான பற்களைக் கொண்டது, விரல்களில் கறை படிந்திருக்கும்

கடும் பல் ஊக கறை விரல் ஏற்றை – குறு 373/5

கரு விரல் ஊகம் பார்ப்போடு இரிய – மலை 208

கடிய பல்லினையும் கொண்ட கருங்குரங்கின் கறைவாய்ந்த கரிய நிற விரல்களையுடைய ஆண்குரங்கு
பசிய கண்களை உடையது

பைம் கண் ஊகம் பாம்பு பிடித்து அன்ன – சிறு 221

பசிய கண்களையுடைய கரிய குரங்கு பாம்பு(த் தலையைப்) பிடித்தாற் போன்று

முகம் வெளுத்திருக்கும்

நரை முக ஊகம் பார்ப்பொடு பனிப்ப – குறு 249/2

வெள்ளிய முகத்தையுடைய கருங்குரங்குகள் குட்டிகளோடு குளிரால் நடுங்க,

ஊகம் வேய்ந்த உயர் நிலை வரைப்பின் – பெரும் 122

ஊகம் புல்லால் வேய்ந்த உயர்ந்த நிலையையுடைய மதிலையும்,

ஊகம்
ஊகம்

கரு விரல் ஊகமும் கல் உமிழ் கவணும் – மது:15/208

கான மான் வெரு உற கரு விரல் ஊகம் கடுவனோடு உகளும் ஊர் கல் கடும் சாரல் – தேவா-சம்:824/3

வேய் உயர் சாரல் கரு விரல் ஊகம் விளையாடும் – தேவா-சம்:1064/1

ஊகம் முகில் உரிஞ்சு சோலை சூழ்ந்த உயர் பொழில் அண்ணாவில் உறைகின்றாரும் – தேவா-அப்:2248/1

சில் உருவில் குறி இருத்தி நித்தல் பற்றி செழும் கணால் நோக்கும் இது ஊகம் அன்று – தேவா-அப்:2356/1

ஊகமொடு ஆடு மந்தி உகளும் சிலம்ப அகில் உந்தி ஒண் பொன் இடறி – தேவா-சம்:2382/3

ஊகம் உகளும் உயர் பெரும் சினைய – இலாவாண:15/5

நாகமும் நறையும் ஊகமும் உழுவையும் – உஞ்ஞை:46/278

பொறி புலி தோலும் மறுப்பு இயல் ஊகமும்
மந்தி பிணையொடு மற்றவை பிறவும் – உஞ்ஞை:58/87,88

ஊக வெம் சேனை சூழ அறம் தொடர்ந்து உவந்து வாழ்த்த – கிட்:3 30/2

ஊகங்களின் நாயகர் வெம் கண் உமிழ்ந்த தீயால் – கிட்:7 50/1

ஒல்வதே இ ஒருவன் இ ஊகத்தை
கொல்வதே நின்று குன்று அன யாம் எலாம் – யுத்3:31 128/1,2

ஊகம் எங்கு உயிரொடு நின்றனவும் ஓட வானவர்கள் உள்ளமும் – யுத்2:19 84/1

பைம் கண் ஊகம் பாம்பு பிடித்து அன்ன – சிறு 221

ஊகம் வேய்ந்த உயர் நிலை வரைப்பின் – பெரும் 122

கரு விரல் ஊகம் பார்ப்போடு இரிய – மலை 208

நரை முக ஊகம் பார்ப்பொடு பனிப்ப – குறு 249/2

நரை முக ஊகமொடு உகளும் வரை அமல் – புறம் 383/21

ஊகம்
ஊகம்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *