Skip to content

சொல் பொருள்

1. (வி) 1. தட்டையாக்கு, 2. அச்சில் வார், 3. திருத்தமாகச் செய், ஆக்கு, 4. கிள்ளியெடு, 5. யாழ் நரம்பைத் தடவு, 6. ஒழுகு, வழி, 7. அழகுபெறு, 8. வடியச் செய், பிழிந்துவிடு, 9. தலைமுடியை வாரிவிடு, 10. திருந்து,

2. (பெ) 1. மாவடு, மாம்பிஞ்சு, 2. தேன், 3. தலைமுடியை வாரி முடித்தல், 4. கூர்மை,

சொல் பொருள் விளக்கம்

தட்டையாக்கு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

flatten out, cast, mould, make perfectly, pluck, nip, stroke with the fingers over the strings of yazh, the lute, drip, trickle, become beautiful, drain, squeeze out, comb and tie up the hair, be perfected, tender green mango, honey, combing and tying up the hair, sharpness

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

இரும்பு வடித்து அன்ன மடியா மென் தோல் – பெரும் 222

இரும்பைத் தகடாக்கினாற் போல் சுருக்கமில்லாத மெல்லிய தோலினையும் உடைய

இரும்பு வடித்து அன்ன கரும் கை கானவன் – அகம் 172/6

இரும்பினை வார்த்துச் செய்தாற் போன்ற வலிய கையினையுடைய வேட்டுவன்

வடி மணி பலகையொடு நிரைஇ முடி நாண்
சாபம் சார்த்திய கணை துஞ்சு வியல் நகர் – பெரும் 120,121

வார்த்த மணி (கட்டின)பலகைகளோடு வரிசையில் வைத்து, (தலையில்)முடிந்த நாணையுடைய
வில்லைச் சார்த்தி வைத்த அம்புகள் தங்கும் அகன்ற வீடுகளையும்;

வேல் வடித்து கொடுத்தல் கொல்லற்கு கடனே – புறம் 312/3

வேல் முதலிய கருவிகளைத் திருத்தமாகச் செய்து கொடுத்தல் கொல்லர்களின் கடமை

மாஅத்து
கிளி போல் காய கிளை துணர் வடித்து
புளி_பதன் அமைத்த புது குட மலிர் நிறை – அகம் 37/7-9

மாமரத்தில்
கிளி(மூக்கு) போன்ற காய்களைக் கொண்ட கிளை(யில் தொங்கும்) கொத்துக்களைக் கிள்ளி எடுத்து
புளிப்புச் சுவை சேர்த்துப் புதுக்குடங்களில் விளிம்புதட்ட நிறைத்ததை,

ஆறலை கள்வர் படை விட அருளின்
மாறு தலைபெயர்க்கும் மருவு இன் பாலை
வாரியும் வடித்தும் உந்தியும் உறழ்ந்தும்
சீர் உடை நன் மொழி நீரொடு சிதறி – பொரு 21-24

வழி(ப்போவாரை) அலைக்கின்ற கள்வர் (தம்)படைக்கலங்களைக் கைவிடும்படி செய்து, அருளின்
மாறாகிய மறப்பண்பினை (அவரிடத்திலிருந்து)அகற்றுகின்ற மருவுதல் இனிய பாலை யாழை –
(நரம்புகளை)(சுட்டுவிரலால்)தெறித்தும், (பெருவிரலும் சேர்த்து)உருவியும், உந்திவிட்டும், ஒன்றுவிட்டுத் தெறித்தும்,
சீர்களை உடைய பண்ணை நீர்மையுடன் பரப்பி –

நெடியோன்_மகன் நயந்து தந்து ஆங்கு அனைய
வடிய வடிந்த வனப்பின் என் நெஞ்சம்
இடிய இடை கொள்ளும் சாயல் ஒருத்திக்கு – கலி 140/8-10

திருமால் மகனாகிய மன்மதன் விரும்பித் தந்ததைப் போன்று அப்படிப்பட்ட
ஒழுக ஒழுகும் பேரழகினையுடைய, என் நெஞ்சம் என்ற அரண்
இடிந்துபோகும்படி நடுவே வந்து என்னை ஆட்கொள்ளும் சாயலையுடைய ஒருத்திக்கு
– வடிய வடிந்த வனப்பு – ஒழுக ஒழுகும் பேரழகு – நச். உரைக்கு, பொ.வே.சோ. விளக்கம்

வடு இன்றி வடிந்த யாக்கையன் கொடை எதிர்ந்து – புறம் 180/6

ஆண்மைக் குறைபாடு இன்மையின் வசை இன்றி அழகுபெற்ற உடம்பை உடையனாய்

நீர் அலை கலைஇய கூழை வடியா
சாஅய் அம் வயிறு அலைப்ப உடன் இயைந்து
ஓரை மகளிரும் ஊர் எய்தினரே – நற் 398/3-5

நீராடியதால் அலைக்கப்பட்டுக் கலைந்துபோன கூந்தலின் நீரைப் பிழிந்து வடித்துவிட்டு
சுருக்கி முடித்து, அழகிய வயிறு குலுங்க ஒன்றுசேர்ந்து
ஓரை விளையாடிய மகளிரும் ஊருக்குத் திரும்பிவிட்டனர்;

வணர்சுரி
வடியா பித்தை வன்கண் ஆடவர் – அகம் 161/1,2

வளைந்து சுருண்ட
கோதப்பெறாத மயிரினையுடைய கொடிய மறவர்

வள்ளியோர் படர்ந்து புள்ளின் போகி
நெடிய என்னாது சுரம் பல கடந்து
வடியா நாவின் வல்லாங்கு பாடி
பெற்றது மகிழ்ந்து சுற்றம் அருத்தி
ஓம்பாது உண்டு கூம்பாது வீசி
வரிசைக்கு வருந்தும் இ பரிசில் வாழ்க்கை – புறம் 47/1-6

வண்மையுடையோரை நினைத்து பழுமரம் தேரும் பறவை போலப் போகி
நெடிய என்று கருதாது அரிய வழி பலவற்றையும் கடந்து
திருந்தாத நாவால் தம் வல்லபடி பாடி
ஆண்டுப் பெற்ற பரிசிலால் மகிழ்ந்து சுற்றத்தை ஊட்டி
தாமும் பொருளைப் பாதுகாவாது உண்டு, உள்ளம் கூம்பாமல் வழங்கி
தம்மைப் புரப்போராற் பெறும் சிறப்பு ஏதுவாக வருந்தும் இப் பரிசிலால் வாழும் வாழ்க்கை

நெடு மர கொக்கின் நறு வடி விதிர்த்த
தகை மாண் காடியின் வகைபட பெறுகுவி – பெரும் 309,310

நெடிய மரமாகிய மாவின் நறிய வடுவினைத் துண்டாக்கிப்போட்ட,
ஊறவைத்தல் நன்கமைந்த ஊறுகாயோடும் வகை வகையாகப் பெறுவீர்

வடி சேறு விளைந்த தீம் பழ தாரம் – மலை 513

தேன் போன்ற சதைப்பற்று முதிர்ந்த இனிய பழங்களாகிய அரும்பண்டங்களும்,

வடி கொள் கூழை ஆயமோடு ஆடலின் – நற் 23/2

வாரி முடித்த கூந்தலையுடையவள் தோழியரோடு ஆடியதால்

வடி நவில் அம்பின் வினையர் – நற் 48/7

கூர்மை பயின்ற அம்பினால் செய்யும் கொடுந்தொழிலையுடையோராய்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *