Skip to content

சொல் பொருள்

(வி) 1. சுழற்று, 2. பறையை வட்டமாகச் சுற்றியடித்து இயக்கு, இசை, 3. வட்டமாகச் சுற்றிவா,  4. (சூதாட்டக்காய்களை)உருட்டு,

2. (பெ) 1. வட்டில், தட்டு, கிண்ணம், 2. கடகம், பனை நாரால் செய்யப்பட்ட பெட்டி,

முதற்பொருளுக்கு ஊதியமாகக் கிடைக்கும் தொகை

முதற்கண் வட்டப் பெட்டியைக் குறித்து, பின்னர் பெட்டி என்னும் பொதுப் பொருளுக்கு ஆகியிருக்கும்.

சொல் பொருள் விளக்கம்

வட்டி என்பது முதற்பொருளுக்கு ஊதியமாகக் கிடைக்கும் தொகையைக் குறிப்பது பொது வழக்கு. அது பெட்டி என்னும் பொருள் தருவது அகத்தீசுவர வட்டார வழக்காகும். முதற்கண் வட்டப் பெட்டியைக் குறித்து, பின்னர் பெட்டி என்னும் பொதுப் பொருளுக்கு ஆகியிருக்கும்.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

swing round, play (a drum by beating its face circularly), move around in a circular fashion, roll, throw (as dice), bowl, porringer, basket made of palm stem fibre

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

காம கணிச்சியால் கையறவு வட்டித்து
சேம திரை வீழ்த்து சென்று அமளி சேர்குவோர் – பரி 10/33,34

காமம் என்னும் கோடரியால் தமது ஊடலால் ஏற்பட்ட செயலற்ற நிலையைச் சுழற்றி எறிந்துவிட்டு
பாதுகாவலான திரையைச் சூழப்போட்டு தன் கணவருடன் மலர்ப்படுக்கையில் கூடிக்களிப்போருமாய்,

மணம் வரு மாலையின் வட்டிப்போரை
துணி பிணர் மருப்பின் நீர் எக்குவோரும் – பரி 11/56,57

மணம்தருகின்ற மாலையினால் சுழற்றியடிப்போரின்மேல்
அறுக்கப்பட்ட சொரசொரப்பான கொம்பில் நீரை மொண்டு வீசுவோரும்,

மதியத்து அன்ன என் அரிகுரல் தடாரி
இரவுரை நெடுவார் அரிப்ப வட்டித்து
உள்ளி வருநர் கொள்கலம் நிறைப்போய் – புறம் 398/12-14

முழுமதி போன்ற வடிவினதாகிய அரித்த ஓசையையுடைய என் தடாரிப் பறையை
தனது இரப்புரை புலப்படுமாறு அதன் நெடிய வார்கள் அரித்த குரல் எடுத்தியம்ப இசைத்து
நின்னை நினைந்துவரும் பரிசிலருடைய கொள்கலம் நிரம்ப அரிய பொருள்களை வழங்குபவனே

– வட்டித்தல் – இசைத்தல் – சிறுகோல் கொண்டு அதன் தலை வட்டமிடச் சுற்றியடித்தல் பற்றி
வட்டித்து என்றார் – வட்டம் என்னும் பெயர் அடியாகப் பிறந்த வினை – ஔவை.சு.து.உரை, விளக்கம்

வாள் நிற உருவின் ஒளிறுபு மின்னி
பரூஉ உறை பஃறுளி சிதறி வான் நவின்று
பெரு வரை நளிர் சிமை அதிர வட்டித்து
புயல்ஏறு உரைஇய வியல் இருள் நடுநாள் – அகம் 218/3-6

வாளின் நிறம் போலும் உருவுடன் ஒளிறுமாறு மின்னி
பரிய பலவாகிய மழைத்துளிகளைச் சிதறி, வானிலே பயின்று
பெரிய மலையின் குளிர்ந்த உச்சி அதிரச் சூழ்ந்துகொண்டு

இவர் திமில் எறி திரை ஈண்டி வந்து அலைத்த_கால்
உவறு நீர் உயர் எக்கர் அலவன் ஆடு அளை வரி
தவல் இல் தண் கழகத்து தவிராது வட்டிப்ப
கவறு உற்ற வடு ஏய்க்கும் காமரு பூ கடல் சேர்ப்ப – கலி 136/1-4

ஊர்ந்து செல்லும் மீன்படகுகளை ஓங்கியடிக்கும் அலைகள் ஒன்றுசேர்ந்து வந்து கரையினில் மோதும்போது
நீர் சுரக்கும் உயர்ந்த மணல்மேடுகளில் தன் வளையிலிருந்து வந்த நண்டு ஓடித்திரிவதால் ஏற்பட்ட வரிகள்,
தடையின்றி விளையாடும் ஈரமான சூதாடு களத்தில் ஆர்வம் குறையாமல் சூதாட்டக்காயை உருட்ட,
அந்தக் சூதாட்டக்காய் ஏற்படுத்திய கோடுகளைப் போன்றிருக்கும் காண்பவர் விரும்பும் அழகினையுடைய
கடல் நாட்டுச் சேர்ப்பனே!

வரி மென் முகைய நுண் கொடி அதிரல்
மல்கு அகல் வட்டியர் – அகம் 391/2,3

மெல்லிய வரிகளையுடைய அரும்புகளுடன் கூடிய நுண்ணிய கொடியாகிய காட்டு மல்லிகையின் பூக்கள்
நிறைந்த அகன்ற வட்டியை உடையோராகிய பூ விற்போர்

வட்டி
மலர் பெய்யும் செப்பு – நாட்டார் உரை விளக்கம்

தேனினர் கிழங்கினர் ஊன் ஆர் வட்டியர் – மலை 152

தேனினையுடையராய், கிழங்கினையுடையராய், தசை நிறைந்த கடகத்தையுடையராய்

வட்டி, கடகம் – பனை அகணியாற் செய்த பெரிய பெட்டி – நச். உரை, விளக்கம்
(அகணி – பனை, தெங்கு ஆகியவற்றின் புற நார் – palm fibre)

கான் உறை வாழ்க்கை கத நாய் வேட்டுவன்
மான் தசை சொரிந்த வட்டியும் – புறம் 33/1,2

காட்டின்கண்ணே தங்கும் வாழ்க்கையையுடைய சினம் பொருந்திய நாயையுடைய வேட்டுவன்
மானினது தசையைச் சொரிந்த கடகமும்

– கடகம் – ஓலையாற் செய்யப்பட்ட கடகப்பெட்டி – ஔவை.சு.து.உரை, விளக்கம்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

இது ஒரு வழக்குச் சொல்

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *